விதிமீறல்கள்
-------------------
யாருமே எட்டிப்பார்க்காத பூங்காவனத்தில் தான் எத்தனை விதிமீறல்கள்?!
வீசும் காற்றுக்கு
வேகத் தடை இல்லை
பாடும் வண்டிற்கு
ஸ்ருதி சுத்தம் தேவையில்லை
படர்ந்து விரிந்த மரங்களுக்கு
நீள அகல அளவில்லை
சிந்திச் சிதறும் சருகுகளுக்கு
குப்பைத்தொட்டி தெரிவதில்லை
செடியின் கிளைகளில் மலர்ச்சவங்கள்
உடனே தரையிறங்கி புதைந்துபோவதில்லை…
நகரத்தின் எல்லையில்
பொதுமக்களின் பார்வைக்காக
அரியவகை தாவரவியல் பூங்கா
மாலை ஆறு மணி வரை!!
பூங்காவைச் சுற்றி
மேலெழுந்த சுவர்
ஒவ்வொரு செடியின் முன்னே
பெயர்ப் பலகை
தேடித் தீர்த்தாலும்
ஒரு சருகும் அகப்படுவதாய் இல்லை
கச்சிதமாய் நருக்கப்பட்ட
மரங்களின் கைகள்
கண்ணாடி மாளிகைக்குள்
நிரந்தர கைதிகளாய் சில தாவரங்கள்
காற்றுக்கு கூட அனுமதி இல்லை
காவலாளி நிற்பதனால்…
இதில் உண்மையிலேயே யார் விதிகளை மீறியது!!
- அர்ச்சனா நித்தியானந்தம்