Wednesday 20 April 2016

மாதவம் - 1

'இந்த ரெண்டு பிள்ளைங்கள கூட்டிக்கிட்டு, ஒரு இடம் போக முடியுதா? வரமுடியுதா? இடுப்பில ஒன்னு, கையில ஒன்னு. ரெண்டும் லட்டு தான். ஆனா, சமாளிக்கத்தான் திராணி இல்ல. இதோ வீடு வந்தாச்சு! அம்மா வீடுனாலே சந்தோஷம் தான்!! இங்க வர, என்ன பாடு வேணும்னாலும் படலாம். இனி நாலு நாளைக்கு, மகாராணி உபசரிப்பு நமக்கு' என்று எண்ணப் பூரிப்பில், தாய் வீட்டினுள் நுழைந்தாள் கோதை. லதா, சுதா என்று முத்துமுத்தாய் அழகான குழந்தைகள், ஆனால் விஷமக்கார வாண்டுகள். 'என்ன!? அக்கா வந்திருக்கா போல! ஐயோ அழறாளே! எப்போ இவளுக்கு விமோசனம் கொடுக்கப்போற ஈஸ்வரா?!', என்று மனம் பதைபதைக்க, முத்தத்து தூண் மீது சாய்ந்து கொண்டு தேம்பும் அக்காவின் அருகில் சென்று அமர்ந்தாள், கோதை.

"என்ன அக்கா, எப்படி இருக்க? ஏன் அக்கா அழுவுற?? அழுது அழுது ஓஞ்சு போய்ட்ட" அரவணைப்பாய் பேசினாள் கோதை.
"அழுதழுது ஆயிசு கரைஞ்சு ஓடுதடி. இந்த காஞ்சி காமாட்சியும் மௌனம் சாதிக்கறாளே. வீடு குடுத்தா, காசு பணம், வாரி வாரி குடுத்தா. வசதி வாய்ப்புக்குப் பஞ்சம் இல்லாம பாத்துக்கறா. ஆனா, பத்து வருஷமா, நான் கேட்குற புள்ள வரம் மட்டும் தரலையேடி", என்று சொல்லி முடிப்பதற்குள், ‘ஓ!’ என்று மீண்டும் அழத்தொடங்கினாள், கோமதி.

சமையலறையில் காப்பி கலக்கும் அம்மாவைக் காணும்போது, ஏதோ ஒரு பரிதவிப்பு கோதையின் மனதில். 'இந்தப் பாவப்பட்ட ஆத்மா, இன்னும் எவ்வளவு வேதனைதான் சுமக்குமோ! இவ கடைசியா சிரிச்ச ஞாபகம் கூட இல்ல', என்று மனதுள் நொந்துகொண்டாள். தோட்டத்தில் அப்பா, கனகாம்பரப்பூக்களைப் பறித்து, சுதாவின் கூடைக்குள் போட்டுகொண்டிருக்கிறார். 'தாத்தா! தாத்தா!', என்ற லதாவின் குரல்கூட அவருக்குக் கேட்கவில்லை. இளமையின் கோலம் மொத்தமும் மறைந்து, வெறும் முதமை மட்டும் பூசிக்கொண்டு, புன்னைகையை தொலைத்து, மனதிற்குள் வேதனைகளை திணித்து திணித்து வாழும், மற்றுமொரு ஆன்மா.
'இந்த லதா, சுதா மாதிரி, நானும், கோமதியும் சின்ன பிள்ளைகளாவே இருந்திருக்கலாம். எதுவும் புரியாம, எந்த கவலையும் தெரியாம, கனகாம்பரம் வாசத்துல வாழ்ந்து முடிச்சிருக்கலாம்!’, என்று பெருமூச்சுவிட்டாள்.
"இந்தா கோதை, இந்த காப்பிய குடி" அம்மாவின் குரல், கோதையின் பொருளற்ற பகற்கனவினைக் கலைத்தது.

பிள்ளைகளை அக்காவிடம் விட்டுவிட்டு, கோதையும், அவள் அம்மாவும் மட்டும் கோவிலுக்குச் சென்றனர். அமைதி காத்த அம்மாவின் மௌனங்களை, சற்று உடைக்கத்தோன்றியது அவளுக்கு.
"அக்கா ஏன்மா ரொம்ப வருத்தத்துல இருக்கா? எப்போ வந்தா?", என்று வினவினாள்.
" என்னன்னு சொல்ல! காலைல கோலம் போட்டுட்டு நிமிர்ந்து பாத்தா, பெட்டியோட இவ நிக்கறா. ஒரு நிமிஷம் தூக்கி வாரி போட்டுடுச்சு. ‘என்ன  ஒரு போன் கூட பண்ணாம இப்படி வந்து நிக்கற?’னு கேட்டா, ‘ஓ’ன்னு அழுதா அழுதா, அப்படி அழுதா. மும்பைல மாமியார் கூட சண்ட போட்டுட்டு, தானே ரயில் ஏறி, காஞ்சிபுரம் வரைக்கும் தனியாவே வந்திருக்கா. அவ மாமியாருக்கு இவள விவாகரத்து பண்ணிட்டு, தன் பிள்ளைக்கு வேற பொண்ண கல்யாணம் பண்ணனும்னு வெறி பிடிச்சிருக்கு. இவ மேல பிரியமா இருந்த உன் மாமாவும், இப்ப அம்மா பேச்ச கேட்டு, தாண்டவம் ஆடறாராம். காசு மிதமிஞ்சி இருக்கு. அவங்கள யாரு தட்டிக் கேட்கறது. இந்த பாழாபோனவ ஒரு புள்ளைய பெத்தெடுத்துட்டா,  இந்த கதி வருமா? பத்து வருஷமா தூக்கம் இல்லடி, இவள நெனச்சு! வேண்டாத தெய்வமில்ல. நான் கோவிலுக்குள்ள நுழையும்போது, எல்லா சாமியும் கண்ணையும், காதையும் இறுக மூடிக்குது. இதுக்கு மேல நான் என்ன பண்ண?", என்று கண்கலங்கினாள்.
"ஏம்மா ஒரு நல்ல டாக்டரா பார்க்கலாமே?"
"மும்பைல இல்லாத டாக்டரா, இந்த கிராமத்தில இருந்திடப்போறாங்க?"
"அக்காகிட்ட தான் குறை இருக்கா? மாமாவையும் செக் அப் பண்ணணும்ல? இவள மட்டும் குறை பேசறது நியாயமில்லம்மா!"
"போராட யாருக்குத் தெம்பு இருக்கு? தைரியம் இருக்கு?"
"மாமாவுக்கு இன்னொரு கல்யாணம் பண்ணா மட்டும் குழந்தை பிறந்திடுமா? இன்னமும் அமைதியா இருக்கறதுல அர்த்தமில்ல. சென்னைல இருக்கற அவ மாமியாரோட அண்ணன போய் பார்த்து, இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க. பத்து வருஷமா குமுறி குமுறி நொந்து போனது தான் மிச்சம். நாலு பேர கூப்பிட்டு மத்தியசம் பண்றதால குடும்ப மானம் ஒன்னும் பறிபோயிடாதும்மா. அக்கா வாழ்க்கையவிட, குடும்ப கவுரவும் பெருசு இல்ல", என்று சரவெடியாய்ப் பொறிந்தாள், கோதை. அவள் சொல்வதெல்லாம் 'சரி' என்பதுபோல, மௌனமாய் சிந்தனையில் மூழ்கினாள், அவள் அம்மா.

தன் தாயிடம் கூறியதை, வீடு திரும்பிய பின், தந்தையிடமும், அக்காளிடமும் மீண்டும் விளக்கினாள், ஆனால் இம்முறை கண்ணியமாய்.
"என்னடி பேசற? என் புருஷன் மேல எந்த தப்பும் இல்ல. எல்லாம் என் மாமியாரோட வேல தான். அவருக்கு உடம்புல எந்த குறையும் இல்லடி. இப்படி பேசிக்கிட்டு இருக்காத", என்று பொங்கினாள், கோமதி.
"இவ்வளவு பாசம் வச்சிருக்க மாமா மேல! ஆனா பெட்டிய எடுத்துக்கிட்டு நீ கிளம்பறச்ச, ஏன் உன்னை தடுத்து நிறுத்தல? இன்னும் எத்தன காலத்துக்கு பைத்தியக்காரி போல வாழப்போற அக்கா?"
"நாலு பேருக்கு விஷயம் தெரிஞ்சா, அவரு சுத்தமா என்ன விலக்கிவச்சுட்டா நான் என்னடி செய்வேன்?", என்று குரல் தழுதழுக்க, மன்றாடினாள்.
"அம்மா, கலகம் பிறந்தாதான், வழி கிடைக்கும். கோதை சொல்றதுதான் சரி. அப்பா நான் இருக்கேன். கவலபடாதமா", என்று சாந்தமாய்க் கூறினார் அப்பா. அவர் குரலில் ஏதோ ஒரு நம்பிக்கை தென்பட்டதுபோல் தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள், கோதை.

மறுநாள் காலையில் அப்பா தொலைபேசியில், கோமதியின் மாமியாரின் அண்ணனிடம் பேசிக்கொண்டிருப்பதை, மற்ற மூவரும் கேட்டுக்கொண்டிருந்தனர். தூணில் சாய்ந்தபடியே அமர்ந்துகொண்டு, சுதாவை மடியில் வைத்துக்கொண்டு, அமைதியாய் அழுதிருந்தாள், கோமதி. லதா அவள் அருகில் உட்கார்ந்துகொண்டு, கண்ணீர் வடிய வடிய துடைத்துக்கொண்டிருந்தாள். அம்மாவும், கோதையும் ஆளுக்கொரு ஒரு தூணின் அருகில் சிலையாய் நின்றுகொண்டிருந்தனர். அப்பாவின் குரலும், கோமதியின் விசும்பலும் தவிர, உலகனைத்தும் அமைதியாய்ப் போனது அந்த வீட்டில்.

பேசி முடித்தவுடன், அப்பா நாற்காலியில் வந்து அமர்ந்தார். அவர் ஏதாவது கூறுவார் என்று எதிர்பார்த்து, பொறுமை இழந்து, கோதை அமைதியை உடைத்தாள்.
"அப்பா, பெரியப்பா என்ன சொன்னாங்க?"
"ஒன்னும் இல்ல. மாப்பிள்ளையையும், சம்மந்தியையும் சென்னைக்கு வரச் சொல்லி, பேசலாம்னு சொன்னார். அப்படியே, அவருக்கு தெரிஞ்ச டாக்டர்கிட்ட கோமதி, மாப்பிள்ளை ரெண்டு பேரையும் செக் அப் பண்ணிடலாம்னு சொன்னார்", என்று கூறி முடித்தார் அப்பா. பிறகு ஏதோ சிந்தனையில் மூழ்கியபடியே, அந்த நாற்காலியில், போட்டு வைத்த கல்லாய்க்கிடந்தார்.


சென்னையில் தன் வீட்டிற்கு திரும்புகையில், அம்மா, அப்பா, அக்கா அனைவரையும் உடன் அழைத்து வந்தாள் கோதை. லதா, சுதா தவிர, யார் முகத்திலும் சிரிப்பில்லை. பேருந்தின் ஜன்னலோரக்காற்றில், பிள்ளைகள் தூங்கிப்போயினர். மற்றவர்களுக்கு, அழுதழுது இமையும், இதயமும் கனத்துப்போய் இருந்தது.

"கவலைப்படாதீங்க மாமா! அண்ணிக்கு எந்த குறையும் வராது. கடவுள் கை விடமாட்டார்", என்று கோதையின் கணவன் முரளி, தன் தந்தையிடம் அன்பாய்ப் பேசுவதைக்கேட்டு பெருமிதம் கொண்டாள். 'ஒரே வீட்டில், இப்படியும் ஒரு மாப்பிள்ளை! அப்படியும்  ஒரு மாப்பிள்ளை!', என்று தனக்குத்தானே புலம்பிக்கொண்டாள். அம்மா எங்கு சென்றாலும், சமையலறையிலேயே தஞ்சம் கொள்வாள். யார் வீடாக இருந்தாலும், அடுக்களை மட்டும் அவள் பெயரில் பட்டா போட்டுவிட்டதுபோல், அவ்வளவு உரிமை எடுத்துக்கொள்வாள். அகண்ட உலகத்தில், அவளுக்கென்று ஒரு குட்டி உலகம் அது. “அம்மா போதும் வேலை செஞ்சது. போய் படும்மா. கலைப்பா இருப்ப", என்று கோதை கூற, 'சரி' என்பது போல் தலையை ஆட்டியவாறு நகர்ந்து சென்றாள்.

கோமதி, பிள்ளைகளோடு தூங்கிப்போனாள். நாளை ஏதோ தர்மயுத்தத்திற்கு ஆயத்தம் ஆவது போல, இனம் புரியா படபடப்பு, கோதைக்கு. ‘காலை அத்தையும், மாமாவும் மும்பையிலிருந்து வந்துடுவாங்க. மதியம் டாக்டரிடம் செக் அப் முடிந்துவிடும். நாளை மறுநாள், எல்லா ரிசல்ட்டும் வந்துடும். கடவுளே இனியாவது அக்கா மேல, இரக்கம் காட்டு',  என்று மௌனமாய் பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கிப்போனாள், கோதை.

மாதவம் - 2

மறுநாள் காலை, கோதை அனைவரையும் அழைத்துக்கொண்டு பெரியப்பா கூறியிருந்த ஆஸ்பத்தரிக்கு வந்தாள். ஒருவரோடு ஒருவர் பேசவும் இல்லை, பேச விரும்பவும் இல்லை. மௌனமும், மௌனமாய் பிரார்த்தனைகளும் மட்டும் சூழ்ந்திருந்தது. கோமதியின் கண்களில் கண்ணீர், குடம்குடமாய், அல்ல குளம்குளமாய் வழிந்தோடியது. அவளின் கணவனும், மாமியாளும், பெரியப்பாவுடன் வந்தனர்.
"வாங்க சம்மந்தியம்மா, வாங்க மாப்பிள்ளை, வாங்க அண்ணே", என்று கூறி, அப்பா அவர்களை எதிர் நோக்கினார்.
" என்னமோ உங்க பொண்ணு, ரெட்ட பிள்ளை பெத்தெடுத்துட்ட மாதிரி, அழைக்கறீங்க!? எல்லாம் எங்க தலையெழுத்து", என்று சீறினாள் மாமியாள். அவளைப் பார்க்கும்போதெல்லாம் ஒரு பாம்பைப் பார்ப்பதுபோல் இருக்கும், கோதைக்கு. நாவிலே விஷத்தைப் புதைத்து வைத்திருப்பாள்.

கோமதி தன் கணவனின் அருகில் சென்று கெஞ்சுவது போல் ஏதோ சொல்கிறாள். அவனோ, யாரோ யாரிடமோ எதையோ பேசுவதுபோல, முகத்தினை திருப்பிக்கொண்டு நிற்கிறான். இந்த காட்சியை கோதையால் ஏற்கவும் முடியவில்லை, நம்பவும் முடியவில்லை. 'இந்த மாமாவுக்கு என்ன வந்துது? ஏன் இப்படி அக்காவ நோகடிக்கிறார்?! எவ்வவளவு பிரியமா இருந்த மனுஷன், இப்போ இப்படி மாறிட்டாரே! இந்த பைத்தியக்காரி அவருக்காக உருகுறா. அவர் இவளுக்காக இரங்க கூட மாட்டேன்கறாரே. திடீர்னு அம்மா பிள்ளை ஆகிட்டாரே. அக்காவுக்கு கடைசி வரைக்கும் இவரு உறுதுணையா இருப்பார்னு நெனச்சோமே, இப்போ இவரு நடந்துக்கறதெல்லாம் புதுசா இருக்கு. அக்காவுக்கு தலைவலி வந்தாகூட, தங்கமா தாங்குற மனுஷன், இப்போ அவ கதறல கூட காதுல வாங்கலையே! இப்படியும் மனுஷங்க மாறுவாங்களா?! நேசம் கூட கரைஞ்சு போகுமா?!',  என்று தன் அக்காவின் கணவனின் மாற்றத்தை எண்ணி வருந்தினாள், கோதை.

பரிசோதனைகளும் மற்றும் பிற சம்பிரதாயங்களும் முடிந்த பின், கோமதியின் கணவனும், மாமியாரும், ஒரு வாய் வார்த்தை கூட பேசாமல் கிளம்பிச் சென்றனர். இப்படியும் சில மனிதர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்! மனிதநேயம் என்பது, எப்போதாவது எட்டிப்பார்க்கும் கடமையாய் மாறிவிட்ட கலிகாலம் இது. கோவில் உண்டியலில் சில்லறைகள் போடுவது, வருடம் ஒரு முறை அனாதை ஆசிரமத்திற்கு நன்கொடை தருவது, எப்போதாவது பிச்சைக்காரனுக்கு பணம் கொடுப்பது, தீபாவளிக்கு வீட்டில் வேலைசெய்யும் முனியம்மா, கண்ணம்மாவிற்கு புடவை வாங்கி கொடுப்பது, என்று பட்டியல் போட்டு, அட்டவணை போட்டு மனிதம் நேயம் வளர்க்கும் காலம் இது. நேயம் என்பது நம்மை சுற்றி இருப்போரை, வார்த்தையாலும், செயலாலும் காயப்படுத்தாமல் இருப்பதே ஆகும். அதுவே எதார்த்தமும் ஆகும்.

தன் கணவன், தன்னிடம் பேசாமல் சென்றதை எண்ணியெண்ணி மனம் நொந்தாள், கோமதி. தனது கூட்டிலிருந்து தவறி மண்ணில் விழுந்து, திசை மாறி, தடம் மாறிய சிறு பறவைபோல் துடிக்கிறாள், கோமதி . அவளின் அம்மா, அவளை வெறித்துப் பார்த்தபடியே நின்றிருந்தாள். ஆறுதல் சொல்ல கூட அவளுக்குத் தோணவில்லை. சிந்தனையுள் மூழ்கினாலோ! சிலையாய் மாறினாலோ! அந்த சிவனே அறிவான்!!


மறுநாள் காலை, பெரியப்பாவிடமிருந்து, அப்பாவிற்கு தொலைபேசியில் அழைப்பு வந்தது. பரிசோதனை முடிவுகளை தானே பெற்றுக்கொண்டு வந்துவிடுவதாகவும், மாலை முடிவுகளைப் பற்றி பேசவும், மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று முடிவு செய்யவும், அனைவரையும் தன் வீட்டிற்கு வரச்சொன்னதாய் கூறினார் அப்பா. ஏதோ ஒரு படபடப்பு கோதைக்கு. அவளது மனக்கலவரம், அவள் முகத்தில் தெரிந்தது. அன்று அவளின் செயல்கள் அனைத்திலுமே தடுமாற்றம் மட்டுமே நிறைந்திருந்தது. 
"கோதை, ஏன் இப்படி தடுமாற்றம் உனக்கு? எதுலயும் ஒரு நிதானம் காட்டுறவ நீ. உன் மனசு படற பாடு புரியுதுமா. கவலைப்படாத. நல்லதையே நினைச்சா நல்லதே நடக்கும். நானும் உங்களோட அவங்க வீட்டுக்கு வரேன். உங்களுக்காக பேச யாரும் இல்லன்னு ஆகிடக்கூடாது. சாமி கும்பிட்டுட்டு, எல்லாரும் கிளம்புங்க", என்று  கூறிச் சென்றான் முரளி. 'இப்படி ஒருத்தர கொடுத்ததற்கு கடவுளுக்கு நன்றி சொல்றதா, இல்ல அப்படி ஒருத்தர கொடுத்ததற்கு கடவுள நொந்துக்கறதா!', என்று பெருமூச்சு விட்டபடியே சாமி அறைக்குள் சென்றாள், கோதை.


பெரியப்பா வீட்டில் அனைவரும் கூடி இருந்தனர். உறவுகள் ஒன்று சேர்ந்த ஒரு சிறு ஆர்பரிப்பு கூட இல்லை. ஏதோ ஒரு வெறுமை மட்டும் அங்கு கொட்டிக்கிடந்தது. கையிலே பரிசோதனை முடிவுகளோடு, பெரியப்பா அமர்ந்திருந்தார். அனைவரின் கண்களும் அவரை மட்டும் பார்த்திருந்தன.
"இன்னைக்கு நான் மாட்டும் டாக்டர பார்த்துட்டு ரிசல்ட் வாங்கிட்டு வந்துட்டேன். நான் யார் சார்பாகவும் இல்லாம, நடுநிலையா நின்னு, இந்த விஷயத்தை கையாள விரும்பறேன். கோமதி, கிருஷ்ணன் ரெண்டு பேருக்குமே பிரச்சனை இருக்குனு டாக்டர் சொல்லிட்டாரு. கோமதிக்கு ஹார்மோனல் இம்பேலன்ஸ், நீர் கட்டி இருக்குனு சொல்லி இருக்காங்க. இது ஏற்கனவே நமக்கு தெரிஞ்ச விஷயம் . இது குணமாக பலதரப்பட்ட வழியும் இருக்கு. ஆனா, கிருஷ்ணனுக்கும் குறை இருக்குமோனு யாரும் யோசிக்கல. அதான் நாம எல்லாரும் பண்ண தப்பு. அவனுக்கு ஏற்பட்ட தற்காலிக ஆண்மைக்குறைவ சரியா கவனிக்காம விட்டதால, இப்போ விஸ்வரூபம் எடுத்திருக்கு. இதுக்கும் வைத்தியம் இருக்கு, அதே நேரத்துல அந்த வைத்தியம் பலன் அளிக்காம போக வாய்ப்பும் இருக்கு. கிருஷ்ணனோட மன அழுத்தம், வேலை சுமை, பிசினெஸ் டென்ஷன் , தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து பெரிய பிரச்சனையை உருவாக்கிடுச்சு. அதுக்கு மேல வயசும் ஆகிடுச்சு", என்று கூறி  சற்று நிதானித்தவர், தன் தங்கையை நோக்கி, "கமலா, இந்த விவாகரத்து பேச்செல்லாம் விட்டுட்டு, கோமதியையும் கிருஷ்ணனையும் அழைச்சுட்டு போ. மும்பைல ஸ்பெஷலிஸ்ட பார்த்து கிருஷ்ணனுக்கும் வைத்தியம் பண்ணு. எல்லாம் நல்லதே நடக்கும்", என்று கூறி முடித்தார்.

கோமதியின் மாமியாளுக்கு, எள்ளும் கொள்ளும் வெடிப்பதுபோல முகம் உர்ர்ர் என மாறியது. "அண்ணே, ரிசல்ட ஒழுங்கா பாத்து தான் வாங்கினியா? யார் பிள்ளைய என்ன சொல்ற? இந்த விளங்காம போனவ மேல  இரக்கப்பட்டு என் பிள்ளையை குறை சொல்லாத", என்று பொரிந்து தள்ளினாள். 

"நான் நடுநிலையா நின்னு தான் பேசறேன். யார் மேலயும் இரக்கமும் இல்ல. கிருஷ்ணன் மேல அபாண்டமா பழி போட ஆசையும் இல்ல. இதே மாதிரி கோமதிய மட்டும் குறை சொல்லி, அவன கவணிக்காம விட்டதால வந்த வினை."
"எல்லாம் இந்த ராசி கெட்டவ என் வீட்டுக்கு வந்த நேரம். என் பிள்ளையோட வாழ்க்கையே நாசமா போச்சு. முதல்ல இவள தலமுழுகிட்டு வேற நல்ல பொண்ண கல்யாணம் பண்ணாதான் எனக்கு மன நிம்மதி கிடைக்கும்."
"திரும்பவும் அதையே சொல்ற! யார கல்யாணம் பண்ணாலும் குழந்தை பிறக்க வாய்பில்லை. அதை புரிஞ்சுக்கோ."
"சரி, அப்படியே என் பிள்ளைகிட்ட குறை  இருந்தாலும், நான் அவன அமெரிக்கா கூட்டிக்கிட்டு போய் வைத்தியம் பார்த்து குணமாக்க முடியும். அவனுக்கும் பிள்ளைங்க பிறந்து வாழவச்சு காட்ட முடியம். ஆனா , அதெல்லாம் இந்த மூதேவிகூட மட்டும் நடக்காது", என்று சீறினாள் பாம்பைப்போல்.
'மூதேவி' என்ற வார்த்தையைக் கேட்டவுடன், கோதைக்கு தன் மாமியாரின் நினைவு வந்தது. அவளுக்கு பெற்றோர் இட்ட பெயர், 'கோதை'. ஆனால் மாமியார் இட்ட பெயர் 'மூதேவி'. அவளுக்கு தன் மாமியாள் கடைசியாய் 'கோதை’ என்று அழைத்தது எப்போது என்று கூட மறந்துவிட்டது. தனது மாமியாளும், அக்காவின் மாமியாளும் உறவல்ல. ஆனால் இருவரும் ஒட்டிப்பிறந்த ரெட்டைப்பிறவியாய்த் தோன்றினர், கோதைக்கு. அவர்களின் கோபம், மொழி, செயல் என்று அனைத்திலும் ஒற்றுமை தான்.

"ஏன்மா ஒரு பெண்ணை இப்படி பேசறீங்க? அவங்க, உங்க வீட்டு மருமகங்கறத  மறந்துடாதீங்க. பெரியவங்க உங்க மனப்பூர்வமான ஆசீர்வாதம் இருந்தாலே, அவங்க கஷ்டம் எல்லாம் காணாமல் போய்விடும். நீங்க அண்ணியையும் அழைச்சுட்டு போங்க", என்று கூறினான் முரளி.
"நல்லா இருக்குப்பா நீ பேசறது. உனக்கென்ன! லட்டு மாதிரி ரெண்டு குழந்தைங்க. நீ இதுவும் பேசுவ, இன்னமும் பேசுவ", என்று கூறி, முரளியை மேற்கொண்டு பேசவிடாமல் செய்தாள்.

தன் பிள்ளைகள், தன் அக்காவின் மாமியாளுக்கு லட்டாய் இனிக்கிறது. தன் மாமியாளுக்கோ, வேப்பங்காயாய் கசக்கிறது’ என்றெண்ணி சிரித்துக்கொண்டாள் கோதை. இவளுக்கு, பிள்ளை இல்லை என்று கோபம். அவளுக்கு, ஆண் பிள்ளை இல்லை என்று கோபம். இரண்டாவதும் பெண் பிள்ளையாய்ப் பிறந்தவுடன், தன் மாமியாள் ஆஸ்பத்திரியில் இவளை திட்டித்தீர்த்தது, இன்றும் பசுமரத்தாணியாய் கோதையின் நினைவில் இருந்தது. முரளியின் இரு அண்ணன்களுக்கும், ஒரு ஆண் பிள்ளை, ஒரு பெண் பிள்ளை. முரளிக்கு மட்டும், இரண்டுமே பெண் பிள்ளைகளானதால், கோதை வேண்டாத மருமகளாய்க் கசந்தாள், அவள் மாமியாளுக்கு. இதன் காரணமாகவே, முரளியும், கோதையும் கூட்டுக்குடும்பத்தை விட்டு வெளியேறி, தனிக் குடித்தனம் நடத்த நிர்பந்திக்கப்பட்டனர். தனது நெஞ்சின் வடுக்களை நினைவு கூர்ந்தவள், சட்டென்று நிகழ் காலத்திற்கு வந்தாள்.
"அத்தை, எனக்கொரு யோசனை", என்று கூறினாள் கோதை .
"என்ன யோசனை?"
"அத்தை, பெரியப்பா சொன்னது போல, நல்ல ஸ்பெஷலிஸ்டா பார்க்கலாம். நிச்சயம் நல்லது நடக்கும். அப்படி இல்லாம போனாலும், நீங்க ஒரு குழந்தைய தத்தெடுத்துக்கலாம், இல்லையா? உங்க ஆஸ்த்தி பலத்திற்கு, மூணு, நாலு, குழந்தைங்க கூட தத்தெடுத்துக்கலாம்", என்று கோதை கூறி முடிப்பதற்குள், அக்காளின் மாமியாளுக்கு, முகத்தில் சினம் பொங்குவதைக் கண்டாள் .
"என்ன வார்த்தை சொன்ன நீ? ஊரு பேரு தெரியாத, தெருவில கிடக்கறத எல்லாம் கூட்டிட்டுவந்து, நடுவீட்ல வச்சு, பாராட்டி, சீராட்ட சொல்றியா? எங்க பரம்பரை கவுரவத்த குழி தோண்டி புதைக்க, அக்காளும், தங்கச்சியும் கெளம்பிட்டீங்களா?", என்று கூறியவள், தலையை அண்ணாந்து மேலே நோக்கி, "ஈஸ்வரா, இந்த கொடுமையெல்லாம் கேட்டியா? எங்கயோ தெருவில கிடக்கறதுக்கா என் பிள்ளை மலை மலையா காசு சேர்த்துவச்சிருக்கான்? குலம் கெட்டு, கோத்திரம் கெட்டதெல்லாம் வீட்டுல விட்டா, வீடு விளங்குமா? இந்த அநியாயத்தைப் பார்க்கவா இன்னும் உயிரோட என்ன வச்சிருக்க??", என்று கூறி பெரிய ஒப்பாரியே அரங்கேற்றினாள்.

ஒரு நொடி, திகைப்பில் உறைந்தாள் கோதை. தான் என்ன தவறு செய்தோம் என்று அவளுக்கு விளங்கவில்லை. பெற்றோர் இல்லாத பிள்ளைகள், அந்த கடவுளின் பிள்ளைகள் அல்லவா? ஆதரவற்றோருக்கு ஆதரவு கரம் நீட்டுவதைவிட, பெரும் புண்ணிய காரியம் ஏதும் உண்டோ? வணங்கும் தெய்வத்தை கர்பக்ரஹத்தில் மட்டுமே பார்த்துப்பார்த்து பழகிப்போன கூட்டத்திற்கு, உயிர்களின் உள்ளே வசிக்கும் இறைவனைக் காண்பது கடினமே! குலமும், கோத்திரமும், வெளியே மனிதன் பூசிக்கொள்ளும் சாயமே. உள்ளே வாழும் ஜீவன், அனைத்து உயிர்க்கும் ஒன்றே! அது யானையானாலும் சரி, பூனையானாலும் சரி!

இறுதியாக, பல வாக்குவாதத்தின் முடிவாய், கோமதியின் மாமியாள், அவளை உடன் அழைத்துச்செல்ல ஒப்புக்கொண்டாள். தன் மகனுக்கும், மருமகளுக்கும் சிறந்த வைத்தியரிடம் கூட்டிச்சென்று, வைத்தியம் செய்ய ஏற்பாடு செய்வதாகவும் உறுதி அளித்தாள். அன்று  இரவு, பல நாட்களின் பரிதவிப்பிற்குப்பின் நிம்மதியாய் கண்ணயர்ந்தாள் கோதை .

மாதவம் - 3

நாட்களும், வாரங்களும், மாதங்களும் உருண்டோடின. ஆனால், கோமதிக்கு மட்டும் விடிவெள்ளி விடியவில்லை. அவள் கணவனுக்கு வைத்தியங்கள் பலனளிக்காமல் போகவே, வாழ்வதே விரக்தியாய் ஆனது அவளுக்கு. மேலும், அவள் மாமியாளும், கோமதியின் துரதிஷ்டமே இதற்கெல்லாம் காரணமென்றும், அவளை விவாகரத்து செய்யாமல் தன் பிள்ளையின் வாழ்வு செழிக்காது என்றும் பேசிவந்தாள். அவளுக்கு, தன் மகனின் வேதனையைக் காட்டிலும், அவளின் வெறுப்பே பெரிதாய் இருந்தது. காலை முதல் மாலை வரை அவளின் வசை மொழிகளைக் கேட்டுகேட்டு சலித்தே விட்டது, கோமதிக்கு. அவளின் கணவன் கிருஷ்ணனும் தன்னை நினைத்து மட்டுமே வருந்தினானே தவிர, கோமதி என்ற ஒரு ஜீவனைப் பற்றி அவன் யோசிக்கக் கூட இல்லை.


"இல்லடி, இதுக்கும் மேல எனக்கு நல்லது நடக்கும்னு நம்பிக்கை இல்லை. ஒரு நாளா? ரெண்டு நாளா? பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு", என்று தழுதழுக்கும் குரலில் கூறினாள், கோமதி .
அரை மணி நேரமாக தன் அக்காவுக்கு தன்னால் முடிந்தவரை தைரியம் கூறினாள், கோதை. தொலைபேசி சூடாகிப்போனதே தவிர, வேறு எந்த பலனும் இல்லை. 
"அக்கா, இவ்வளவு நாள் நம்பிக்கையோட இருந்த நீ, இப்போ எதுக்கு மனம்  தளர்ந்து பேசற? இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இரு", என்று கோதை கூறி முடிப்பதற்குள்,
"இல்ல கோதை, என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல. இவ்வளவு நாளா இவங்க என்னை விவாகரத்து பண்ணபோறதா பூச்சாண்டி காமிச்ச கதையெல்லாம் போதும். உறுதியா சொல்றேன், நான் விவாகரத்துக்குத் தயாராயிட்டேன். அவர், அவங்க அம்மா இஷ்டப்படி நடந்துக்கட்டும். எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் காஞ்சிபுரம் போய், அம்மா, அப்பா கூட இருந்துக்கறேன். ஏதோ எனக்கு தெரிஞ்ச தையல் வேலை பார்த்து, என் செலவுக்கு பணம் சம்பாதிச்சு கொடுத்திடறேன். இவங்க கிட்டயிருந்து செட்டில்மெண்ட்னு சொல்லி ஒரு ரூபா கூட எனக்கு வேண்டாம். ஒரு கைப்பிடி சோறு நிம்மதியா சாப்பிட்டு, ராத்திரி நிம்மதியா தூங்கினா போதும்ங்கற மன நிலைக்கு வந்துட்டேன். போராட இதுக்கு மேல தெம்பும் இல்ல, விருப்பமும் இல்ல. இதையெல்லாம் அம்மா, அப்பா கிட்ட சொல்ல எனக்கு தைரியம் இல்ல. நீ தான் அவங்க கிட்ட சொல்லி, சமாதானப்படுத்தணும். அதுக்கு தான் உனக்கு போன் பண்ணேன். என்ன சமாதானப்படுத்தறத நிறுத்திட்டு, நீ அம்மா, அப்பாகிட்ட பேசிட்டு, எனக்கு  போன் பண்ணு. நான் வச்சுடறேன்", என்று கூறி தொலைபேசி தொடர்பை துண்டித்தாள், கோமதி .
தொடர்பு துண்டித்ததைக் கூட உணராமல், தன் காதில் தொலைபேசியை வைத்தவாறு உறைந்து இருந்தாள், கோதை. தன் அக்கா கூறியது எதுவும் கோதையால் நம்ப முடியவில்லை. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன், தன் கணவனை எண்ணியெண்ணி உருகியவள், இன்று அவனைப் பிரிவதைப்பற்றி கூறுவது வியப்பாக இருந்தது. அப்படி ஒன்று நடக்கக்கூடாது என்று தோன்றியது, நடக்கவும் விடக்கூடாது என்று தோன்றியது கோதைக்கு.

இரவு, தனது கணவனிடம், தன் அக்கா கூறிய அனைத்தும் ஒப்புவித்தாள் கோதை. முரளிக்குக் கூட ஆச்சர்யமாக இருந்தது. அதே நேரத்தில், பரிதாபமாகவும் இருந்தது.
"கோதை, அக்கா வாழ்க்கை பாழாயிடக்கூடாதுனு யோசிக்கற, ஆனா அவங்க மனசுல இருக்கற வலிய பத்தி யோசிச்சியா? அவங்க எந்த அளவுக்கு மனம் நொந்திருந்தா இப்படி ஒரு முடிவெடுத்திருப்பாங்க? இனியும் அவங்கள பொறுத்துப்போக சொல்றதுல அர்த்தம் இல்லை."
"அப்போ, அவ எடுத்த முடிவு சரின்னு சொல்றீங்களா?"
"நான் அப்படி சொல்லல. அவங்க இருக்கற மன நிலையை நினைச்சாதான் கொஞ்சம் கவலையா இருக்கு. அவங்க வெறுத்துப்போன ஒரு விஷயத்தை, மேலும் மேலும் அவங்க மேல திணிக்கறதால, அவங்க மனசு இன்னும் பலவீனம் ஆகும். அவங்க வேற ஏதும் தப்பான முடிவு எடுத்துடக்கூடாது..."
"அய்யய்யோ! என்ன சொல்றீங்க?" பதறினாள் கோதை .
"பயப்படாதே கோதை. நல்லது நடக்கும், நல்லது நடக்கும்னு சொல்லி அவங்கல எல்லாத்தையும் அனுசரிக்க சொல்றதுக்கும் ஒரு அளவிருக்கு. மனசு சோர்ந்துபோய் இருக்கும்போது ஏற்படற நெருக்கடிகள் தான், ஒன்னு தற்கொலைய தூண்டும், இல்ல மனநல பாதிப்பு உண்டாக்கும். இதுக்கு மேல, ஒன்னு அவங்க சொல்றத செய்யணும். இல்ல அவங்க வாழ்க்கை மாறி ஒரு சந்தோஷம் பிறக்க வழி செய்யணும். அத விட்டிட்டு நாம எல்லாரும் எட்டி நின்னு வருத்தப்படறதுல, எந்த அர்த்தமும் இல்ல.”
"நாம என்னங்க செய்யமுடியும்?"
"அவங்களுக்கு பிரச்சனையே ஒரு குழந்தை தான். அவங்க வாழ்க்கைல ஒரு குழந்தை வந்துட்டா, எல்லா கஷ்டமும் தீர்ந்துடும்."
"உண்மைதாங்க. ஆனா, எந்த வைத்தியமும் பலன் தரல. டெஸ்ட் டியூப் பேபி கூட தங்கல. அவ மாமியாரும் தத்தெடுத்துக்கறத ஒரு கொலை குத்தமா நினைக்கறாங்களே!”

சற்று நேரம் மௌனமாய் சிந்தித்தவன், எதோ ஒரு பொறி தட்டியது போல, கோதையிடம், “கோதை, எனக்கு ஒரு யோசனை. மனசுல பட்டத சொல்றேன். நீ என்ன தப்பா நினைக்கக்கூடாது!", என்று தயங்கினான்.
"என்னது? சொல்லுங்க, நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்", என்று ஆர்வம் பொங்கக் கேட்டாள், கோதை.

"நாம ஒரு குழந்தைய பெத்தெடுத்து, அந்த குழந்தைய உன்னோட அக்கா, மாமாவுக்கு தத்து கொடுத்திடலாமா?"
கோதைக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"நானும் ரெண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். உங்க எல்லாரோட வலி, எனக்கு நல்லா புரியுது. இப்போ நான் சொன்னது ஒன்னும் சாமான்ய விஷயம் இல்ல. இதுலயும் ஆயிரம் சிக்கல் இருக்கு. எல்லாரோட சம்மதம் வாங்கறது ஒரு இமாலய சாதனை. அப்பறம், ஒரு குழந்தைய பெத்தெடுக்கற அந்த  ஒரு வருஷம், ஒரு பெரிய தவம். இதுல உன் மனசும், உடம்பும் பணயம் வைக்கணும். காலத்துக்கும், அந்த குழந்தை மேல நீ உரிமை எடுக்காம இருக்கணும். இன்னும் பல சிக்கல் இருக்கு. ஏதோ மனசுல தோணிச்சு. சொன்னேன். உனக்கும் வேற ஏதாவது நல்ல யோசனை வந்தா சொல்லு. இந்த விஷயத்துல ஏதாவது செஞ்சே ஆகணும். இப்படி புலம்பிக்கிட்டே இருக்கறதுல எந்த பலனும் இல்ல", என்று கூறி விட்டு கண்ணயர்ந்தான் முரளி.

அந்த இரவு முழுதும், கோதை உறங்காமல், முரளி கூறியதனைத்தையும், மனதுள் அசைப்போட்டுக்கொண்டிருந்தாள். மறுநாள் காலை, ஏதோ ஒரு இனம் புரியா பரவசம், கோதையிடம். முரளியின் வாக்கு, அவளுக்கு தெய்வ வாக்காய்த் தோன்றியது.
"நான் எல்லாரோடும் பேசி சம்மதம் வாங்கறேன். நாம இன்னைக்கே டாக்டர் கிட்ட ஒரு தடவ என்னை செக்-அப் பண்ணிடலாம். நான், ஒரு ஆரோக்கியமான குழந்தைய பெத்து, அக்கா கிட்ட கொடுக்கணும்", என்று பரவசம் குறையாது கூறினாள், முரளியிடம்.

சற்று யோசித்துவிட்டு, "சரி, நீ இப்போ வரைக்கும் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையா நீ கேட்கற. நிச்சயமா நான் உனக்கு துணையா இருக்கேன்", என்று உறுதியளித்தான், முரளி .

மாதவம் - 4

தன் மனதின் எண்ணங்களை தன் தாயிடம் கூறி முடித்தாள் கோதை. தாயின் அதிர்ச்சி அலைகள், தொலைபேசி வழியே இவளிடம் வந்தடைந்தது.
"அம்மா, இதுல பயப்பட ஒன்னும் இல்லை. என்கிட்ட இருக்கற ரெண்டு முத்துல, ஒன்ன தூக்கி கொடுக்க எனக்கு மனசு வரல. என் குழந்தைகள சுத்தி ஆயிரம் கோட்டை கட்டிட்டேன். அத உடைக்க எனக்கு மனசுல தெம்பில்லை. அதே நேரத்துல, அக்காவுக்காக, இன்னொரு குழந்தைய சுமக்கறது பாரம் இல்லை. ‘இது அக்காவோட சொத்துன்னு’ எண்ணம் வந்தபின்னே, பிரசவ வலிய தவிர வேற எந்த வலியும் எனக்கு இருக்காதும்மா. அப்பாகிட்ட நீ பேசு. அக்கா, மாமாகிட்ட நான் பேசறேன்."
"நீ சொல்றதெல்லாம் சரி. ஆனா, உன் மாமியாரை நினைச்சா பயமா இருக்கு. உன் அக்காவுக்கு வாழ்க்கை கொடுக்கப்போய், உன் வாழ்க்கைக்கு பங்கம் வந்துடக்கூடாது."
"அதெல்லாம் ஒன்னும் ஆகாதும்மா. இவங்க எனக்கு துணையா இருக்கும்போது, எனக்கு எந்த கவலையும் இல்ல. நீயும் மனசுல எந்த சங்கடத்தையும் வச்சுக்காத."
"எனக்கு அழுவறதா, சிரிக்கறதான்னு தெரியல. கடவுள நொந்துக்கத்தான் முடியும்."
"அம்மா, சிரிச்சுக்கிட்டே போய் கடவுளுக்கு நன்றி சொல்லு. இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன்", என்று நம்பிக்கை ஊட்டினாள், கோதை. தன் தாயிடம் பேசிவிட்டு, உடனே அக்காவை தொலைபேசியில் அழைத்தாள்.


"அக்கா! ஹலோ! இருக்கியா?"
"ஹலோ, இருக்கேன்டி", என்றாள் கோமதி, பதைபதைப்பாய்.
"என்னக்கா, நான் சொன்னதெல்லாம் உனக்கு புரிஞ்சுதா? உனக்கு சம்மதமா? மாமா கிட்ட பேச நான் தயாரா இருக்கேன். ஆனா... ஹலோ! அக்கா அழறியா? அழாதக்கா. உன் அழுகையை நிறுத்தத்தான் இதை சொன்னேன். உனக்கு விருப்பம் இல்லனா விட்டுடு. மனசுல எதுவும் வச்சுக்காத..."
"எனக்கு வரம் தரும் சாமிய, வெளியே தேடிக்கிட்டிருந்தேனடி. இவ்வளவு நாளா, அந்த காமாட்சி நீதான்னு தெரியாம பரிதவிச்சேனே. எனக்கு வரம் தரும் சாமி நீதான்டி", என்றுவிட்டு ‘ஓ!’ என்று அழுதாள், கோமதி.
வாயடைத்து நின்ற கோதை, தன் கண்கள் சிந்தும் நீரைக்கூட உணராமல், தன் அக்காவின் இறுதி ஒப்பாரியைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.

அன்றிரவு, முரளிக்கு கிருஷ்ணனிடமிருந்து அழைப்பு வந்தது. கிருஷ்ணனின் கோபத்தை உணர்ந்துகொண்டாள், கோதை. அரைமணிநேரமாக தன் கணவன், கிருஷ்ணனை சமாதானப்படுத்த முயல்வதை சகிக்க முடியாமல், முரளியிடமிருந்து தொலைபேசியை வெடுக்கென்று பறித்து, இவள் பேசத் தொடங்கினாள்.
"மாமா நல்லா இருக்கீங்களா? நான் கோதை பேசறேன்."
"அக்காவும், தங்கையும் ஏன் இப்படி உயிரை வாங்கறீங்க? இதுல 'நல்லா இருக்கீங்களா'னு, கேள்வி வேற. உன்னோட வாழ்கையை மட்டும் நீ கவனி.  எங்களுக்கு நீ படியளக்க வேணாம். அப்பவே உன் அக்காவை தலை முழுகி இருந்தா, இப்போ உன்கிட்ட எல்லாம் பேச தேவபட்டிருக்காது. நீ..."
"கொஞ்சம் நிறுத்துங்க மாமா", என்று குறுக்கிட்டாள் கோதை, "என்ன மாமா! நீங்க ஆளே மாறிட்டீங்க? மத்தவங்கள பத்தி எனக்கு கவலை இல்லை. நீங்க இப்படி எல்லாம் பேசறது, எனக்கு ரொம்ப ஆச்சர்யமா இருக்கு. நான் உங்க தங்கச்சி மாதிரினு சொல்லுவீங்க. இப்போ என்கிட்ட பேச கூட உங்க தகுதி இடம் கொடுக்கல இல்லை?"
"இங்க பாரு, நான்..."
"நான் இன்னும் பேசி முடிக்கல. அதுவரைக்கும், அமைதியா நான் பேசறதை கேளுங்க ப்ளீஸ்! நீங்க மறந்துபோன சில விஷயங்கள, ஞாபகப்படுத்த ஆசைப்படறேன், மாமா. பத்து வருஷம் முன்னாடி, உங்களை அக்கா கல்யாணம் பண்ணும்போது, உங்க தகுதி ஒரு மொபெட் வண்டியும், வாய்க்கும், வைத்துக்கும் இழுத்துப்பிடிக்கற மாத சம்பளமும் தான். அப்போ, எங்க அப்பா உங்க தகுதியை பார்க்காம, உங்க மனசையும், குணத்தையும் தான் பார்த்தாங்க. உங்களுக்கு வேலை போய், நீங்க உடைஞ்சு போய் இருந்த காலத்திலயும், உங்க தகுதியை யோசிக்காம, உங்க கஷ்டத்துல சந்தோஷமா பங்கு போட்டவ, என்னோட அக்கா. நீங்க தொழில் தொடங்க உங்கள ஊக்கப்படுத்தினது, என்னோட அக்கா. உங்க அம்மாவே உங்கள நம்பி பணம் கொடுக்க யோசிச்சபோது, உங்க கூட பிறந்தவங்க உங்களுக்கு உதவ தயங்கின போது, தன்கிட்ட இருந்த கடைசி குண்டுமணி தங்கத்தையும் கொடுத்து, உங்க மேல மலையளவு நம்பிக்கை வச்சது என்னோட அக்கா. நீங்க கை ஊணி, கால் ஊணி எழும்போது, தையல் மிஷினை கைரேகையும், கால் ரேகையும் தேயத்தேய ஓட்டி, குடும்ப பாரத்தை தூக்கினா, என்னோட அக்கா. தனக்குன்னு எந்த ஒரு ஆசையையும் வளர்த்துக்காம, இந்த பிறப்பே உங்களுக்குனு வாழற அவளை, இப்படி நோகடிக்க எப்படி உங்களால முடியுது? அக்காவோட ரத்தத்துல வந்ததுதான், இந்த பஞ்சு மெத்தையும், பட்டு பீதாம்பரமும். அதை உங்களால மறுக்க முடியாது. 'உன்னோட அக்கா, எனக்கு மனைவி மட்டுமில்ல, இன்னொரு தாயும் அவதான். தொப்புள்கொடில உயிர் வந்தது, தாலிக்கொடில வாழ்க்கை வந்தது'னு அடிக்கடி சொல்லுவீங்களே! அதெல்லாம் வெறும் வாய்வார்த்தைகள் தானா? நீங்க தொலைஞ்சுபோயிடாம தூக்கிப்பிடிச்ச தாலிக்கொடிய, இன்னைக்கு தொலைச்சுக்கட்டணும்னு நீங்க சொல்றது, உங்களுக்கே அருவருப்பா இல்லை? அவ அழறத பார்த்து, கூடப்பொறந்த பாசத்துக்கே எனக்கு மனசு நோகுது. உங்களுக்கு நியாயமா ரத்தக்கண்ணீர் வரணும், இல்லையா? வசதியும் தகுதியும் உயர உயர, மனுஷனோட குணமும்,பண்பும் உயரனும். அகந்தையும், செருக்கும் அட்டைப்பூச்சி மாதிரி. மெல்ல மெல்ல உங்க பகட்டையும், மரியாதையையும் உறிஞ்சிட்டு, உங்கள பாதாளத்துக்கு தள்ளிடும். இதுக்கு மேல உங்க விருப்பம். எல்லாம் அவ தலையெழுத்துனு கடவுள நொந்துக்கிட்டு, மனச தேத்திக்கறோம். நான் வச்சுடறேன்", என்று கூறி, மறுமுனை பதில் வரும்முன்னே, தொடர்பைத் துண்டித்தாள்.


சில பல தினங்கள் கழிந்தன. கோதைக்கு அக்காவிடம் பேச விருப்பமில்லை. அம்மாவிடம் பேச துணிச்சலில்லை. முரளியின் சமாதான வார்த்தைகளை, அவனுக்காக கேட்டுக்கொண்டாளே தவிர, அவளது நெஞ்சத்து வலிகளை, அது நீக்கவில்லை.

ஓர் நாள், இரவு சுமார் பத்து மணி இருக்கும். அழைப்பு மணி ஒலித்தது. யாரென்று, முரளிக்கும், கோதைக்கும் சிறு பதட்டம். முரளி வாயிலைத் திறக்க, கிருஷ்ணனும், கோமதியும் நின்றுகொண்டிருந்தனர். முரளிக்கு, அவர்களின் விஜயம் ஆச்சர்யமாய் இருந்தது.

"அக்கா, மாமா! என்ன இந்த நேரத்துல? உள்ள வாங்க", என்று எதிர்கொண்டு அழைத்தாள், கோதை.
உள்ளே சென்று நாற்காலியில் அமர்ந்த கிருஷ்ணன், "முரளி, எப்படி இருக்கீங்க? கோதை, நீயும் நல்லா இருக்கியா? குழந்தைங்க தூங்கிட்டாங்களா?", என்று வரிசையாய் நலம் விசாரிக்க, வாயடைத்து நின்றாள், கோதை .
"என்னமா அப்படி பார்க்கற? இவரா இப்படி பேசறாருனு நினைக்கிறியா? அக்கறையா, உன்னை 'நல்லா இருக்கியா’ன்னு கேட்டு, ரொம்ப நாளாச்சு. என்ன சுத்தி பணக்கட்டுகள் நிரம்பிட்டதால, நான் யாருனு, எனக்கே மறந்துபோச்சு. அன்னைக்கு நீ பேசினதுக்கு அப்பறம்தான், யோசிச்சேன். பழசையெல்லாம் யோசிச்சேன். நான் செஞ்ச தப்பையெல்லாம் யோசிச்சேன். என்னோட பணம், பதவி எல்லாத்தையும் விளக்கி வச்சுட்டு, கொஞ்சம தள்ளி நின்னு யோசிச்சேன். நான் எவ்வளவு பெரிய முட்டாள்னு அப்பதான் புரிஞ்சுது. நான் பணம் சம்பாதிக்கணும்னு போராடினதே, கோமதியை நல்லா வச்சுக்கணும்னு தான். ஆனா அத மறந்துட்டு, அவளை காயப்படுத்தறதையே தொழிலா இருந்திருக்கேன். எங்க வாழ்க்கையோட முற்பகுதி அவளுக்கு பணக்கஷ்டம், பிற்பகுதி மனக்கஷ்டம். மொத்தத்துல எந்த காலத்துலயும் அவ சந்தோஷமா இல்லை. நானும் இருக்க விடல", என்று  குரல் தழுதழுக்க, கண்களும் ஈரமானது கிருஷ்ணனுக்கு.
"எதுக்கு இப்போ இதெல்லாம் பேசிக்கிட்டு?", என்று கோமதி வினவ,
"பேசத்தானே வந்திருக்கோம்? ", என்று கூறியவன், முரளியை நோக்கி, "என்னை மன்னிச்சுடுங்க முரளி! உங்கள ரொம்ப காயப்படுத்திட்டேன். நீயும் என்னை மன்னிச்சுடு கோதை", என்றான்.
"அய்யோ என்ன மாமா நீங்க, மன்னிப்பெல்லாம் கேட்டுக்கிட்டு?!! நானும் கொஞ்சம் கடுமையா பேசிட்டேன். நீங்களும் என்னை மன்னிக்கணும். எனக்கு வேண்டியதெல்லாம், நீங்களும், அக்காவும் சந்தோஷமா இருக்கணும். அவ்வளவுதான் மாமா!", என்று கூறும்பொழுது, தன்னையும் அறியாமல் புன்னகை செய்த கோதை, தன் கனத்த இதயம்,லேசானதை உணர்ந்தாள்.
"ரொம்ப பசிக்குதுமா. ரெண்டு தோசை ஊத்திக்கொடுக்கறியா?", என்று உரிமையாய் கிருஷ்ணன் கேட்க, ஒரே நொடியில் தயார் செய்வதாய்க் கூறிவிட்டு, பரபரப்பானாள் கோதை.

"கோதை, இருடி நான் செய்யறேன். இனிமேல் நீ நல்லா ஓய்வெடுக்கணும். குழந்தை பெத்தெடுக்கறது சாதாரண விஷயமா என்ன?", என்று கோமதி முகம் மலர்ந்து கூற,
"அக்கா என்ன சொல்ற?" என்று ஆச்சர்ய ஆனந்தம் கொண்டாள், கோதை. 
"ஆமாடி. நீ சொன்ன மாதிரி எனக்கு ஒரு புள்ளைய பெத்துக்குடுடி. நான் நல்லபடியா வளர்த்து ஆளாக்கிடறேன். அர்த்தமே இல்லாத வாழ்க்கைக்கு, ஒரு அர்த்தம் கிடைக்கும்", என்று கூறி, கண் கலங்கினாள்.
"அக்கா!?”
"உண்மையா தான் சொல்றேன்..."
"கண்டிப்பா அக்கா! உனக்காக நிச்சயம் பெத்துக்கொடுக்கறேன். நீயும், மாமாவும் சந்தோஷமா இருந்தா போதும்", என்று கூறி, கோதையும் கண் கலங்கினாள்.
"அம்மாகிட்ட மனசுவிட்டு பேசினேன். அவங்க என்ன மனசுல நினைச்சாங்கன்னு தெரியல. இந்த யோசனையைக் கேட்டதும், 'கோதையோட பிள்ளைய சுவீகாரம் பண்ணிக்க முழு சம்மதம். ஊரு பேரு தெரியாத பிள்ளைய கூட்டிட்டு வர விருப்பமில்ல. ஆனா, கோதை வைத்துப்பிள்ளைனா, எனக்கு எந்த ஆட்சேபமும் இல்ல'னு சொன்னாங்க. நாங்களும் உடனே உங்ககிட்ட இத சொல்லணும்னு புறப்பட்டு வந்துட்டோம்", என்று முரளியிடம் கிருஷ்ணன் பகிர, பல நாட்கள் கழித்து அவர்களின் முகத்திலும், மனதிலும் ஆனந்தம் பெருகியது!

மாதவம் - 5

இரண்டு மாதங்கள் உருண்டோடின. கோதையிடமிருந்து நற்செய்தி எதிர்நோக்கியே கோமதியின் நாட்கள் நகர்ந்தன. அவளின் தவிப்பும், ஆர்வமும் பொங்கி வழிந்தன. பல நாள் வேதனையின் பலனாய், அவள் எதிர்பார்த்த செய்தி வந்தது. கோமதியும், கிருஷ்ணனும் உடனே அவளைக் காண சென்றனர். உயர் ரக உலர் பழங்கள், பருப்பு வகைகள் முதல் குங்குமப்பூ வரை, கோதைக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிச் சென்றாள், கோமதி.

அக்காவின் ஆனந்த ஆர்ப்பாட்டம், கோதைக்கு இனிப்பாய் இனித்தது. அவள் மும்பை திரும்பச் சென்றும், தொலைபேசியில் அவளது பரிவும், பாசமும் தொடர்ந்தது. அனைவருக்கும், தொலைந்து போன நிம்மதியும்,சந்தோஷமும் கிட்டிவிட்டது. கோதைக்கும் தான். ஆனால், மனதில் மூலையில் ஒரு படபடப்பு. அவளின் மாமியாளுக்கு, கோதையின் இந்த செய்கையில், துளியும் இஷ்டமில்லை. தன் மீது கடுங்கோபத்தில் இருக்கும் மாமியாளை சந்தித்து, சமாதானம் செய்ய முடிவெடுத்தாள். முரளி, வேண்டாமென்று தடுத்தும் கேளாமல், அவனை பிடிவாதமாய் அழைத்துக்கொண்டு சென்றாள், கோதை .

இவளைக் காணக்கூட, மாமியாளுக்கு விருப்பமில்லை. பேசவும் இல்லை. நவகிரகங்களாய், அனைவரும் அமர்ந்திருந்தனர். பொறுமை இழந்த முரளி, 
"அம்மா, இப்படியே எவ்வளவு நேரம் அமைதியா இருக்கப்போற? எல்லாம் எடுத்துச்சொல்லியும் நீ புரிஞ்சுக்க மறுத்தா நான் என்ன செய்யறது?"
"நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். எட்ட இருந்தாளும், நீ என் பிள்ளையா இருந்த. இப்போ அதுவும் இல்லனு ஆயிடுச்சு."
"என்னமா இப்படி பேசற? உன் பிள்ளை தான்மா நான்!"
"இல்லடா. இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தா, என்கிட்ட முன்கூட்டியே ஒரு வார்த்தை கேட்டிருக்கணும். எல்லா முடிவும் எடுத்த பின்னாடி, தகவல் தானே சொல்ற."
"அம்மா நீ சம்மதிக்க மாட்டியோன்னு நினைச்சேன்..."
"அப்போ, இப்ப மட்டும் எதுக்கு வந்திருக்க? உனக்கு உன் மாமனார், மச்சினி எல்லாரும் இருக்காங்கல்ல, நான் எதுக்கு?"
"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்?"
"இல்லடா. ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்ட. இந்த குடும்ப சொத்தை எடுத்து, இன்னொருத்திக்கு படியளப்ப. அதுக்கு நான் பெருமை பட்டுக்கறேன்.”
"அம்மா?!"
"நிறுத்துடா. கோடி கோடியா காசு இல்லனாலும், இந்த குடும்ப கௌரவத்துக்கு குறைச்சல் இருந்ததில்லை. இப்ப, உன் பொண்டாட்டி மொத்தமா எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டா. கையாலாகாதவன் தான் பெத்த பிள்ளைய தத்து கொடுப்பான். நீ என்ன சோடைபோய்ட்டியா?"
"இந்த பிள்ளைய பெத்தெடுக்கறதே, தத்து கொடுக்கதான்மா..."
"உனக்கென்னப்பா! ஊரு உலகம் என்னதான் காறித்துப்பும்."
"இந்த உலகம், நாம என்ன பண்ணாலும் அதுல நாலு தப்பு சொல்லும். மனசாட்சிக்கு விரோதமில்லாம வாழ்ந்தாபோதும். ஊரை பத்தி கவலைப்பட்டா, நம்ம நிம்மதி போயிடும்."
"நாம ஒன்னும் ஊரு எல்லையில இருக்கற ஒத்த மரமில்லடா. தோப்புக்குள்ள இருக்கற மாமரம். பூச்சி படாம, கரையான் படராம இருந்தாதான் வாழமுடியும். இல்லேனா தீயள்ளி வச்சிடுவாங்க."
"அத்தை ஒரு நிமிஷம்", என்று கோதை குறுக்கிட்டாள்.
"நீ செத்தாலும் என்கிட்ட பேசாத. எனக்கில்லேனாலும், ஊருக்காக உன்னை மருமகளா நினைச்சேன். இப்போ அதுவும் இல்லனு ஆயிடுச்சு. உன் புருஷன கூட்டிக்கிட்டு, வெளிய போயிடு."

முரளி, கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விருட்டென எழுந்து  சென்றான். நிறைய பேச எண்ணியவளுக்கு ஒன்றும் பேச வார்த்தை இல்லாமல், கோதையும் பின்தொடர்ந்தாள்.
"இங்க பாருடி, கடைசியா ஒன்னு சொல்றேன். நீ பெத்தெடுக்கறது ஆண் பிள்ளையா இருந்தா, என் தலையே போனாலும், அத கொடுக்க விடமாட்டேன். இதுவே பொட்டயா இருந்தா, அந்த புள்ளயோட நீயும் உங்கக்கா வீட்டுக்கு போயிடு", என்று கர்ஜித்துவிட்டு உள்ளே சென்றாள், கோதையின் மாமியாள்.


முரளியின் மன வேதனை, அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. ஆயினும், அவன் கோதைக்கு சமாதானம் கூறிவிட்டு, உறங்கிப் போனான். மனதில் பதட்டம் குறையாமல், தூக்கமின்றி தவித்திருந்தாள், கோதை. தனது கணவணை எண்ணி வருந்தினாள். அவனை பணயமாய் வைத்ததையெண்ணி மனம் நொந்தாள். என்றுமில்லாத ஒரு மெல்லிய குற்ற உணர்வு சற்று எட்டிப்பார்த்தது. ஒரு புறம் கணவனையெண்ணி துன்பமும், மறுபுறம் அக்காளையெண்ணி இன்பமும், அவளை மத்தாய்க் கடைந்தது.

மறுநாள், எப்பொழுதும் போல தன் அக்காவிடம் இனிமையாய்ப் பேசினாள்,  கோதை. இவளின் சோகத்தை அவளுக்குச் சொல்லிட விரும்பவில்லை. அக்காளின் குரலில் தெறிக்கும் ஆனந்தக் கூச்சல், இவளுக்கு போதையாய் இருந்தது.

தன் தாய், அரசல் புரசலாக கோதையின் மாமியாளின் தாண்டவத்தைத் தெரிந்துகொண்டு வினவிய போதும், ஒன்றுமே பெரிதாய் நடக்காததைப் போல பாவனைகள் செய்தாள். தன் தாயிடம் மிளிரும் ஆனந்தத்திற்கும், இவள் அடிமைதானே!

கோமதியின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் பெருகின. முக்கிய மருத்துவ ஆய்வுகளின் போது, அவள் கோதையோடு இருந்தாள். ஸ்கேனில் குழந்தையைக் கண்டபோது, சிறு குழந்தையாய் தேம்பித் தேம்பி அழுதாள். தங்கையின் வயிறு மேடு தட்ட, இவளின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள். ஆயினும், தனக்கு இந்த இனிமையான அனுபவங்களை அனுபவிக்க ஆண்டவன் வழி வகுக்கவில்லை எனும் உண்மை, நிதர்சனமாக அவள் மனதில் தொத்திக்கொண்டிருந்தது. அந்த உண்மையின் காயங்கள் அவ்வப்போது வலிக்கத்தான் செய்தன. அந்த வலிகளோடு, மெல்ல மெல்ல வாழப் பழகிக்கொண்டாள்.

குழந்தைப் பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பே, அவள் கோதையின் வீட்டில் தங்கி, அவளுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்தாள். ஒரு நொடி மறவாது, கடவுளையெண்ணி பிரார்த்தனை செய்தாள். மருத்துவர் குறித்த நாள் நெருங்கநெருங்க, இவளுக்கு பிரசவ வலி வந்துவிடும்போல் இருந்தது.

குறித்த தேதியின் முன்தினம் மாலை, கோதைக்கு உண்மையாக பிரசவ வலி வர, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். கிருஷ்ணனுக்கும் செய்தி சொல்லப்பட்டு, அவனும் சில மணிநேரங்களில் சென்னை வந்து சேர்ந்தான். கோதையின் அலறலுக்கு மத்தியில், ஓர் மழழையின் அழுகுரல் கேட்டது. தனது கரங்களை நெஞ்சத்துள் இறுகிக்கொண்டு உறைந்துபோனாள், கோமதி. கண்கள் கலங்க, உடம்பு நடுங்க, உயிர் துடிக்க, இவள் பிரசவித்ததாய் ஒரு மாயை கவ்வியது.


"வாழ்த்துக்கள்! பெண் குழந்த பிறந்திருக்கா. தாயும், சேயும் நலமா  இருக்காங்க. அவங்க ரூம்ல போய் பாருங்க", என்று டாக்டர் கூறிவிட்டுச் செல்ல, அனைவருக்குமே பேரானந்தமாக இருந்தது.

அறையில், கோதை மயக்க நிலையில் தளர்ந்திருந்தாள். அவள் அருகே, தொட்டிலில் ஓர் அழகிய வெந்தாமரை. கோமதி, ஒரு மெல்லிய தயக்கத்தோடும், பதட்டத்தோடும், குழந்தையை அள்ளினாள். பொங்கும் இன்பம் கட்டுக்கடங்கவில்லை, அவளுக்கு. கண் சிமிட்டாமல், அந்த அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளை சுற்றி அனைத்தும் சூனியமாய்ப் போனது. இந்த ஒரு ஜீவனை கையிலேந்திட, அந்த ஜீவன் தாங்கிய வலியெல்லாம் தரிசாய்ப் போனது. வெம்மைப் பூசிய வாழ்வில், புதிதாய் ஒரு வானவில்!

கோமதி, தனது விழியின் மணியான மகளை, கண்ணின் இமைப்போல பேணினாள். மூன்று மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பிறகு குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல எண்ணினாள். 

கிரிஷ்ணனுக்கு, தான் தந்தையாகிய உணர்வு மிகவும் புதிதாக இருந்தது. தன் செல்ல மகளை எண்ணி, அவ்வப்போது பூரித்துப்போனான். 

கோமதியின் மாமியாளுக்குக்கூட ஒருவித பூரிப்புதான். தனது பேத்தியின் ஜாதகம் மிகவும் அமோகமாக உள்ளதென ஜோசியர் கூற, அந்த மகாலட்சுமியே தன் வீட்டிற்கு வந்திவிட்டதாய் தோன்றியது அவளுக்கு. 'மகாலட்சுமி' என்று குழந்தைக்கு பெயரும் சூட்டினாள். அவளின் கோபமும், மூர்க்கமும் அடங்கி, தன்மையாய் அவள் இருப்பதைக்கண்டு, கோமதியின் பெற்றோரும், கோதையும் நிம்மதி கொண்டனர்.

மாதவம் - 6

அனைவரிடமும் இன்பம் பொங்க, கோதையின் மாமியாளுக்கு மட்டும், கோபம் பொங்கியது. முரளியின் சமரச முயற்சிகள் தோல்வியைத் தழுவின. கோதையின் நிலையை மனதில்கொண்டு, அவன் தன் தாயுடன் போராடும் தர்மயுத்தத்தை ஒத்தி வைத்தான். சில நேரங்களில், சில மனிதர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் வெறும் காலம் மட்டுமே. காலத்திற்கு மட்டுமே, காயங்களைப் போக்கவும், மனிதர்களை மாற்றவும், வலிகளை நீக்கவும், மனச்சுமைகளை மறக்கவும் செய்யும் சக்தி உள்ளது.

ஒவ்வொரு நாளும் கோமதிக்கு இனிப்பாய் ருசித்தது. சிறு விரல்களும், மென்மையான ஸ்பரிசமும், நெஞ்சைக் கிள்ளும் பார்வைகளும், உயிரைக் கொல்லும் புன்னகையும், தேனைப் போன்ற அழுகுரலும், தெவிட்டாத முனகல்களும், கோமதிக்குப் பரவசங்களை அள்ளியள்ளி வழங்கின. ஆயிரம் தேசங்களுக்கு ராணி போல தோன்றியது, அவளுக்கு.

தாய்ப்பால் அருந்தும் நொடிகளைத் தவிர, மற்ற அனைத்து  மணித்துளிகளும், மகா கோமதியிடமே இருந்தாள். தாய்ப்பால் அருந்தும் பொழுது, கோதையின் காலடியில் அமர்ந்துகொண்டு, வெறித்து வெறித்துப் பார்த்திருப்பாள், கோமதி. குழந்தைக்கு பசி ஆறியவுடன், வெடுக்கென்று அள்ளிக்கொண்டு ஓடிவிடுவாள். ஏதேனும் சாக்கு சொல்லி குழந்தையை தன்னிடம் வைத்துக்கொள்ள கோதை முயற்சி செய்தாலும், கோமதி இனங்காமலே இருந்தாள். இவர்களின் பாசப்போராட்டம், இரு பிள்ளைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவதுபோல இருந்தது.

மூன்று மாதங்கள், மூன்று நொடிகளாய்க் கரைந்தன. கிருஷ்ணனும், கோமதியும், தங்கள் செல்ல மகளை அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள். கோமதி மிகுந்த பரபரப்புடன் பம்பரமாய் சுழன்றாள். கோமதியின் ஆரவாரம், கோதைக்கு சற்று எரிச்சலைத் தந்தன. 'பிள்ளையைப் பெற்றவள்' என்ற உரிமை கூட அவளுக்குக் கிடைக்கவில்லையே என்கின்ற ஆதங்கம். வாரியணைத்து, பிள்ளையை ஆசைத்தீர கொஞ்சவில்லை என்கின்ற ஏக்கம். 'தனக்கு உரிமையில்லை' என்று தெரிந்தும்கூட, இதயத்தின் ஓலங்கள் ஓயவில்லை. 

கைகளில் பிள்ளையை ஏந்திக்கொண்டு கோதையருகே கோமதி வந்தாள். பிள்ளையைப் பார்த்தவாறு நின்றிந்தருந்த கோதையிடம், "கோதை! உன் உடம்ப நல்லா பார்த்துக்க. உலகத்துல யாரும் செய்யாததை, நீ எனக்கு செஞ்சிருக்க! இதை நான் சாகறவரைக்கும் மறக்கமாட்டேன். அதோட, நீ எனக்கு இன்னொரு உதவியும் செய்யணும்", என்று பீடிகைப்போட்டாள் கோமதி.
"என்னது அது?"
"நான் சாகரவரைக்கும், மகா'வ பெத்தெடுத்தவ நீதான்னு அவளுக்குத் தெரியவே கூடாது. நீ எனக்கு இதைமட்டும் செஞ்சா போதும்", என்று கூறிவிட்டு, குழந்தையை அள்ளிக்கொண்டு, சென்றுவிட்டாள்.

மவுனமாய் தன் மெத்தையின் மூலையில் அமர்ந்தபடி, ஜன்னலின் வழியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள், கோதை. யாருக்கும் அறியாதவாறு, ரகசியமாய் அழுதுகொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் வரை வள்ளலாய்  இருந்த மனம், குழந்தையின் முகம் பார்த்தபின், சுயநலம் சூழ்ந்துகொண்டது. பெற்ற நெஞ்சம் பித்தல்லவா!

இவளின் மனக்குமுறல்களை அறிந்தவளாய், இவளின் தாய் சிறிது நாட்கள் உடன் தங்க முடிவு செய்தாள். இவளின் மனதையும், உடலையும் முடிந்தளவு திடமாக்கினாள். ஆயினும், கோதைக்கு தன்னுடைய ஒரு பகுதியை யாரோ பறித்துக்கொண்டு போனது போல் இருந்தது.


மும்பையில், கோமதியின் வீட்டில், குழந்தையின் வருகையையொட்டி அமர்க்களப்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்னதானங்கள், கோவில்களில் அபிஷேகங்கள், உற்றார் சுற்றாருக்கு விருந்து உபசரிப்புகள் என, கிருஷ்ணன் அனைத்து ஏற்பாடுகளையும் அசத்திவிட்டான். கூச்சலும், குமுறலுமாய் இருந்த வீடு, இப்போது சிரிப்பொலியும், குதூகலமுமாய்க் கலைக்கட்டியது. கோமதிக்கும், மாமியாளுக்கும் இருந்த பனிப்போர் முறிந்து, அனைவரின் சிந்தனையும், செயலும், மகாவைச் சுற்றியே இருந்தது. 

கோமதி, தன் தங்கையிடம் உரையாடுவதைக் கூட வெகுவாகக் குறைத்துக்கொண்டாள். கோதையின் அழைப்புகளை அவ்வப்போது தவிர்த்தாள். ஒரு சில முறை பேசும்போது கூட, முன்பிருந்த நேசம் சற்று வற்றிப்போனதாய் உணர்ந்தாள், கோதை.

மகாவைப் பெற்றெடுக்க, கோதை பூண்டிருந்த ஒருவருடத் தவக்கோலம் களைந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்தாள். ஆயினும், ஒரு சிறிய ஏக்கம் இவளை அறுத்துக்கொண்டே இருந்தது . 


ஒரு நாள், கோதைக்கு, கோமதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"ஹலோ! கோதை எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன்கா. நீ எப்படி இருக்க? மகா எப்படி இருக்கா?"
"அவளுக்கென்ன?! இந்த வீட்டு ராஜகுமாரி. நல்லா இருக்கா. லதா, சுதா எப்படி இருக்காங்க? அண்ணன் வேலைக்குப் போய்ட்டாங்களா?", என்றாள் பரிவாய்.
"எல்லாரும் நல்லா இருக்காங்க."
"மகாவுக்கு முதல் பிறந்த நாள் வருதில்ல. அதை விமர்சையா கொண்டாடலாம்னு இருக்கோம். சென்னைல தான், ஒரு ஹோட்டல்ல செய்யலாம்னு இருக்கோம். இந்த வாரம் சனிக்கிழமை சென்னைக்கு எல்லாரும் வந்துடுவோம். ஞாயிற்றுக்கிழமை மதியம் தான் பிறந்தநாள் விழா. நீங்க எல்லாரும் நிச்சயமா வந்துடணும்."
"கண்டிப்பாகா. என் பிள்ளை பிறந்தநாளை விட, என்ன முக்கியமா வந்துடப்போகுது?"
சற்று அமைதியாய்ப்போன கோமதி, "சரிடி. என் பிள்ளை அழுவுறா. நான் அப்பறம் பேசறேன்", என்று கூறிவிட்டு, தொடர்பை துண்டித்தாள் .

கோதைக்கு அன்று முழுதும் வருத்தமாக இருந்தது. கோமதியின் மாற்றங்கள் இவளை மிகவும் வேதனைப்படுத்தின. ஆனால், தன் பிள்ளையை சில தினங்களில் காணப்போகிறோம் என்கின்ற ஆனந்தம், அவளின் வருத்தங்களை மறைத்தது.

தனது பிள்ளையின் வருகைக்காக கோதை பல ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். வீட்டை சுத்தம் செய்தாள். அவர்கள் தங்க ஏதுவாய், தனி அறை தயார் செய்தாள். பிள்ளைக்கு அழகாய் ஒரு பாவாடையும், மோதிரமும் வாங்கி வந்தாள். சனிக்கிழமை மதியம், பெரிய விருந்தே தயார் செய்திருந்தாள். 

அன்று மதியம், சுமார் இரண்டு மணி இருக்கும். ‘அக்கா இன்னும் வரவில்லையே’, என்று கவலையுற்ற கோதை, அவளை கைபேசியில் அழைத்தாள்.
"அக்கா! எப்படி இருக்க? சென்னைக்கு வந்துட்டீங்களா? உங்களுக்காக காத்துக்கிட்டிருக்கோம்"
"நாங்க காலைலயே சென்னைக்கு வந்துட்டோம்டி."
"காலையிலேயே வந்துட்டீங்களா? அப்ப வீட்டுக்கு வராம, எங்க  இருக்கீங்க?"
"நாங்க, உன் மாமாவோட தாய் மாமா வீட்ல இருக்கோம், கோதை."
"ஏன் அக்கா! இங்க வரக்கூடாதா?"
"அங்க வரலாம்னு தான் நினைச்சேன். ஆனா, அங்க ஏ.சி. இல்லையே. மகா ஏ.சி. இல்லாம தூங்கமாட்டா. மேலும், வீடு வசதி பத்தாது. அதான், இங்க வந்துட்டோம். நாளைக்கு மறக்காம வந்துடு. மகா தூங்கியெழுந்துட்டா. நான் அப்பறம் பேசறேன்", என்றுவிட்டு அழைப்பினைத் துண்டித்தாள், கோமதி.

கோதை சற்றும் இதனை எதிர்ப்பார்க்கவில்லை. தன் அக்காவின் பகட்டும், பேச்சும் கோதையால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதைத் தாங்க முடியாமல், 'ஓ' என்று கதறினாள், கோதை.

கோதை திடீரென்று அழுவதைக் கண்டு, பதறிப்போனான் முரளி.
"என்ன கோதை? என்ன ஆச்சு? ஏன் அழற? சொல்லுமா..."
கோதை தேம்பிக்கொண்டே, "அக்கா இங்க வரலயாம். மாமாவோட தாய் மாமா வீட்டுல இருக்காங்களாம். இங்க பிள்ளைக்கு வசதி பத்தாதாம். ஏ.சி. இல்லாம மகா இருக்கமாட்டாளாம். அதனால, இங்க வரலயாம்", என்று கூறிவிட்டு, மீண்டும் அழத்தொடங்கினாள்.
"இதுக்கா இப்படி அழற?”, என்று ஆச்சரியமாய் வினவினான்.
"என்ன பேசறீங்க? நான் பெத்த பிள்ளைக்கு, என் மடியவிட பெரிய வசதி இந்த உலகத்துல என்ன இருக்கு? என்னோட அக்கா, இப்படி மாறுவானு கொஞ்சம் கூட நினைக்கல. அவளோட பணமும், பகட்டும், அவளையும் மாத்திடுச்சு. என் பிள்ளைய, என் கண்ணுல கூட காட்டமாட்டேங்கறா..."
"நீ பேசறது எதுவும் சரி இல்ல."
"என்ன சரி இல்ல?"
"மகா, அவங்க குழந்தை. அவங்க இஷ்டப்படி அவங்க வளர்க்கறாங்க. அந்த வீட்டுல தங்குறது அவங்க இஷ்டம். அதுல எந்த தப்பும் இல்லை."
"அப்போ, பெத்த எனக்கு எந்த பந்தமும், பாசமும் இருக்கக்கூடாதா?"
"இதைத்தான் நான் ஆரம்பத்துலயே சொன்னேன். இந்த குழந்தை மேல ஆயுசுக்கும் நீ உரிமை கொண்டாடக்கூடாதுனு சொன்னேன். நீயும் சம்மதிச்சு, மகா’வ பெத்தெடுத்து, தத்தும் கொடுத்த. இப்போ திடீர்னு வந்து, ‘நான்தான் பெத்தவ’னு உரிமை கொண்டாடுறது நியாயமில்லை."
"நான் என்ன, ‘பிள்ளைய திருப்பிக்கொடு’னா கேட்டேன்? குழந்தையோட இரண்டு நாள் தங்க தானே ஆசைப்பட்டேன்?!!"
"நீ அதையும் கேட்கமாட்டேனு என்ன நிச்சயம்?"
"அப்போ, அக்கா பணக்கார புத்திய காட்டுறது, சரின்னு சொல்றீங்க. அதானே?"
"அவங்க எந்த புத்தியையும் காட்டல. அவங்க ரொம்ப பயப்படறாங்க. அவங்களுக்கு இன்னொரு பிறப்பு மாதிரி, இந்த வாழ்க்கை கிடைச்சிருக்கு. இது பறிபோயிடக்கூடாதேன்னு பயம். தன்கிட்ட பரிவு காட்டுற மாமியார் மாறிடக்கூடாதுனு பயம். மனம் மாறியிருக்குற கணவன், திரும்பவும் தன்னை வெறுத்துடக்கூடாதுனு பயம். தன் வாழ்க்கைல கிடைச்ச நிம்மதி, சந்தோஷம் எதுவும் கைவிட்டுப் போயிடக்கூடாதுனு பயம். எல்லாத்துக்கும் மேல, இது எல்லாம் கிடைக்கக் காரணமா இருக்கற மகா தன்னைவிட்டு போயிடக்கூடாதுனு பயம். மொத்ததுல அவங்களுக்கு உன்னைப் பார்த்து பயம். மகாவ பெத்தவங்கற உரிமையில, அவளை நீ பறிச்சுப்பியோனு பயம். அதான், உன்னைவிட்டு தூரமா ஓடிப்போக பார்க்கறாங்க. நீயும் அதுக்கு ஏத்தாப்ல, ‘என் குழந்தை’னு உறவாடப்பார்க்குற. ரொம்ப பக்குவமா இருந்த நீயா, இப்படியெல்லாம் பேசற?”

கோதைக்கு சுரீரென்று ஏதோ உச்சியில் விளங்கியது. அக்காவின் மாற்றத்திற்கு, தான் தான் காரணம் என்று விளங்கியது. செய்வதறியாது குழம்பிப்போனாள், கோதை!


மறுநாள், பிறந்தநாள் விழா, மிகவும் கோலாகலமாக இருந்தது. வெண்பட்டு ஆடையில், தங்கமும், வைரமும் ஜொலிக்க, உண்மையிலேயே மகாலட்சுமி போல மிளிர்ந்தாள், மகா. மேடையின் அருகே செல்ல தயங்கிக்கொண்டு, விருந்தினரோடு ஒருவராய், ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு, மகாவை ரசித்துக்கொண்டிருந்தாள், கோதை. குழந்தை சென்ற இடமெல்லாம், கோதையின் கண்களும் பின்தொடர்ந்தன. அவளை அள்ளி அணைத்திட, கோதைக்கு ஆசை பெருகியது. ஆயினும், அவள் குழந்தையை நெருங்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே அவள் நெருங்கினாலும், அவளின் அக்கா அடுத்த கணமே குழந்தையைக் கவர்ந்து செல்வாள் என்று அறிந்திருந்தாள். 

"என்ன கோதை, யாரோ மாதிரி இங்க மூலையில உட்கார்ந்திருக்க? நீ போய் மேடையில நில்லும்மா", என்றான் கிருஷ்ணன்.
"இல்ல பரவால்ல மாமா", என்று கோதை தயங்கினாள்.
"என்னம்மா நீ ! உன் பிள்ளை பிறந்த நாளு, நீ இப்படி தயங்கினா என்ன அர்த்தம்?"
கோதைக்கு , கிருஷ்ணன் கூறியது தேனாய் வந்து பாய்ந்தது. எழுந்து செல்ல கால்கள் எத்தனித்தது. சற்று தயங்கியவளாய், "நீங்க போங்க மாமா, நான் வரேன்", என்று கூறி, தப்பித்துக்கொண்டாள்.

அந்த அறையே விருந்தினரால் நிரம்பியது. வந்திருந்தோரில் பலரும்,  மிகவும் செழிப்பாகத் தோன்றினர். மகாவிற்கு வந்த பரிசுப்பொருட்கள், ஒரு பக்கம் மலையாய் குவிந்திருந்தன. பரிமாறிய விருந்தும், ராஜ விருந்தாய் இருந்தது.

அனைத்து கொண்டாட்டமும் ஓய்ந்த பின்னர், கோதை கோமதி அருகே சென்றாள். அவள் மடியில், மகா ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு சமர்த்தாய் அமர்ந்திருந்தாள். கோமதியின் அருகே கிருஷ்ணனும் அமர்ந்திருந்தான். தான் வாங்கி வந்த மோதிரத்தை குழந்தைக்கு அணிவித்து, பட்டாடையை அக்காவிடம் கொடுத்துவிட்டு, "மாமா, அக்கா நாங்க கிளம்பறோம். ரொம்ப நாழி ஆயிடுச்சு", என்றாள் மகாவை கண்களால் உச்சி முதல் உள்ளங்கால் வரை முகர்ந்தபடி.
"என்ன கோதை நீ? மேடை பக்கமே வரல. இப்போ உடனே கிளம்பறேன்னு சொல்ற?"
"இல்லை மாமா, சுதாவுக்கு உடம்பு சரி இல்லை. அதான் நான் முன்னாடி நின்னு, உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாம போயிடுச்சு", என்றாள் தயக்கமாய்.
"பரவால்லமா, இதுல என்ன இருக்கு? குழந்தைய பத்திரமா பார்த்துக்கோ!!"
"சரிங்க மாமா, முடிஞ்சா வீட்டுக்கு வாங்க மாமா..."
"இல்லமா. இன்னைக்கு 6 மணிக்கு மும்பைக்கு பிளைட்ல திரும்பறோம். இந்த வாரம் முக்கியமான வேலைகள் எல்லாம் இருக்கு. அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திரும்பவும் மகா குட்டிக்கு மும்பையில் வேண்டியவங்கள கூப்பிட்டு, பிறந்தநாள் கொண்டாடறோம். அதனால, அடுத்தமுறை சென்னை வரும்போது கண்டிப்பா வரேன். சரியா?"
"சரிங்க மாமா", என்று கூறிவிட்டு திரும்பிவிட்டாள். மகாவிற்கு ஒரு முத்தம் வைக்க ஆசைப்பட்டாள். ஆனால் கோமதியைக் கண்டவுடன் ஏதோ ஒரு வித பயமும், தயக்கமும் சூழ்ந்துகொள்ள, தன் ஆசைகளைக் கசக்கி தூர எறிந்துவிட்டு, கண்கள் ஈரமாக வீடு திரும்பினாள்.

மகாவை எண்ணியெண்ணி உருகினாள் கோதை. ஒரு புறம் சிறு மனவருத்தம் என்றாலும், மறுபுறம், அவளுக்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. இத்தகைய பெரிய பிறந்தநாள் விழாவை அவள் எதிர்பார்க்கவில்லை. 'எவ்வளவு ஆடம்பரம், எவ்வளவு ஏற்பாடுகள்! நிச்சயம் பல லட்சங்கள் செலவு செய்திருப்பார்கள். நம்மால் இதெல்லம் சாத்தியமில்லையே. சாதாரண க்ளார்க்கின் மனைவி, இதெல்லாம் கனவில் கூட நினைக்க முடியாது. மகா என்னிடமே இருந்திருந்தால், இதெல்லாம் நிச்சயம் இந்த பிறவியில் அவளுக்கு கிடைத்திருக்காது. அவள் அதிர்ஷ்டசாலி தான். என்னுடைய பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இனியாவது நிம்மதியா இருக்க வேண்டும்’, என்று தனுக்குத்தானே முனகிக்கொண்டாள்.