Wednesday 13 January 2021

வயலின் பேசியதே - 1

 மாநகராட்சியின் பிரதான சாலையின் வழியே, வாகன நெரிசலின் மத்தியிலே தவழ்ந்தும், ஊர்ந்தும் சென்றுகொண்டிருந்தது, அந்த மாநகரப் பேருந்து. பேருந்து ஜனசாகரமாய் இருந்த பொழுதிலும், அவளுக்கு அதிர்ஷ்டம் ஒரு சிட்டிகை அதிகமாகவே இருந்தது. ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவள், பரபரக்கும் முகங்களைப் புன்னகையோடு பார்த்திருந்தாள். சற்றே தலையைத் திருப்பி உள்ளே பார்த்தவளின் கவனத்தை ஈர்த்தது ஒருவன் தோளில் தொங்கிக்கொண்டிருந்த வயலின். 


அவளுக்கு சங்கீதம் மிகவும் பிடிக்கும். ஆனால், அதில் படிப்பினை இல்லை. இருப்பினும் காவடிச் சிந்து கொண்டு படைக்கப் பெற்ற கானங்கள் அனைத்தும் அவளுக்கு அத்துப்படி. வயலினும், வீணையும் கூட பிடிக்கும். அதிலும் படிப்பினை இல்லை. இருப்பினும் இசையின் மீது தீராக் காதல் கொண்டிருந்தாள்.


கோவிலில் சிறப்புக் கட்டணம் செலுத்தி காத்திருக்கும் அவசியமின்றி உடனே தரிசனம் செய்பவர்களைப் போல், இசைக் கலைஞர்கள் அனைவருமே கடவுளர்களால் கூடுதலாக ஆசீர்வதிக்கப்பட்டவர்கள் என்றொரு அனுமானம் அவளுள். 


திரும்பி நின்றிருந்தவனின் முகம் தெரியவில்லை. பழுப்பு நிறத்தில், தோலால் செய்யப்பட வயலின் பெட்டியைத் தாங்கி நின்ற படர்ந்த தோள்களைக் கண்டாள். வெள்ளை நிற டி-ஷர்ட்டை வெறித்துக்கொண்டிருந்தவள், தனது நிறுத்தம் வந்ததும் அவனது முகம் காணாமல் இறங்கிக் கொண்டாள். சிட்டிகை அதிர்ஷ்டம் போதவில்லை! குறைந்தது ஒரு தேக்கரண்டி தேவைப்பட்டது.


மறுநாள் அவளுக்கான அதிர்ஷ்டத்தின் அளவு தெரியவில்லை. ஆனால், அதே ஜன்னலோர இருக்கையை கிடைக்கப் பெற்றாள். இன்று அவளது விழி தயங்கித் தயங்கி, பேருந்தின் உள்ளே இருந்த பல முகங்களில் அவள் கண்டிராத அந்த ஒரு முகத்தினைத் தேடியது. பழுப்பு நிற வயலின் பெட்டி அவனைக் காட்டிக் கொடுத்தது. தெளிந்த வானத்தின் நீலத்தை மேனியெங்கும் படரச் செய்தது போல் நீல நிற டி-ஷர்ட் அணிந்திருந்தான். முதுகு காட்டி நின்றுகொண்டிருந்தவன், திடீரெனத் திரும்பி நின்று, குனிந்து, கடந்து சென்ற கட்டிடங்களை அவள் புறம் இருந்த ஜன்னலின் வழியே நெற்றி சுருங்கக் கண்டிருந்தான். அவன் திரும்பியதும் வெடுக்கென தலைக் கவிழ்ந்து அமர்ந்தவள், கை விரல்களை இறுக்கமாகப் பின்னிக்கொண்டு, வேக வேகமாய் மூச்சிரைத்தாள். அவளது விழி மூடும் இமைகளும் பதட்டம் தாளாமல் படபடத்தன. படபடப்பின் மத்தியில், அவனது முகத்தினை சரிவரக் காண முடியாமல் போன ஏமாற்றமும் அவளை வாட்டியது. 


பேருந்து நிறுத்தம் வந்ததும் அவன் இறங்கிக்கொள்ள, அதை உணராமல் இவள் தலைக் கவிழ்ந்தே அமர்ந்திருந்தாள். பேருந்தின் எதிர் திசையில் நடந்தவன் அவளது இருக்கை கொண்டிருந்த சாளரத்தைக் கடக்கையில் அவளது படபடக்கும் இமைகளுக்குள் அவன் பிம்பம் வந்து விழுந்தது. ஜன்னலின் வெளியே எட்டிப் பார்த்தவளுக்கு மீண்டும் ஏமாற்றமே… வாடிய முகத்துடன் அவன் செல்லும் திசையை அவள் பார்த்திருக்க, சட்டென நடையை நிறுத்தியவன், வெடுக்கென திரும்பி, தலையின் லேசாக தட்டிக்கொண்டு பேருந்து நின்றிருந்த திசையை நோக்கி நடக்கத் தொடங்கினான். அவனது முகத்தினைக் கண்டுவிட்ட பரவசத்தில் முகம் மலர்ந்தவள், வயிற்றினுள் ஏதோ குழைய மீண்டும் தனது இருக்கையில் தலைக் கவிழ்ந்து அமர்ந்து கொண்டாள். இருக்கையின் சாளரத்தின் வெளியே அவன் நடந்து செல்ல, அவன் வேகத்தை ஒத்து பேருந்தும் நகர, சுயம்வரத்திற்கு பரிவாரங்களோடு வருகைத் தரும் ராஜகுமாரனை உப்பரிகையிலிருந்து கடைக்கண் கொண்டு ராஜகுமாரி நோக்குவதுபோல், இவளும் பார்த்திருந்தாள்.    


“ஹே, ஏன் ஆபிஸ்க்கு லேட்டு?”

பரபரப்பாய் தனது இருக்கையில் வந்து அமர்ந்தவளின் எதிரே வந்து அமர்ந்தாள், அவளது தோழி, சுவாதி.

“ஸ்டாப்’அ மிஸ் பண்ணிட்டேன்…”

“காலங்கார்த்தாலயே பஸ்ல தூக்கமா?”

“ச்ச… ச்ச...” என்று உடனடியாக மறுத்தவள், அவனது முகத்தினைக் கண்டுவிட்ட களிப்பில், தன்னை மறந்து, தான் இறங்க வேண்டிய நிறுத்தத்தையும் மறந்து, பேருந்தில் அமர்ந்துகிடந்ததை எண்ணி சிரித்துக்கொண்டாள்.

“இப்போ எதுக்குடி சிரிக்கற?”

“அதில்லை…”

“பரவால்ல நல்லாவே சிரிச்சுக்கோ… இன்னைக்கு நீ சிரிக்கற கடைசி சிரிப்பு இதுதான்…”

“ஏன்டி?” 

கலவரமானாள், அவள்.

“நம்ம டைனோசர் பத்து நிமிஷத்துக்கு முன்னாடி இங்க வந்து நீ இன்னும் வரலையானு கேட்டு உறுமிட்டு போச்சு…”

எப்பொழுதும் கடுங்கோபத்தில் இருக்கும் மேலாளருக்கு, தோழிகள் வைத்த செல்லப் பெயர் ‘டமால் டுமீல் டைனோசர்’.

அவசர அவசரமாக தனது கையேட்டினை எடுத்துக்கொண்டு மேலாளர் அறைக்குச் சென்றவள், சிறிது நேரம் கழித்து, முகம் தொங்கி வெளிப்பட்டாள்.


“என்னடி ஆச்சு?” கேட்டுக்கொண்டு வந்துநின்றாள் சுவாதி.

“வேறென்ன, ஒரே டமால் டுமீல் தான்…” என்று பாவம் போல் இவள் முகத்தினை வைத்துக்கொண்டு சொல்ல, தோழிகளின் இதழோரம் சிரிப்பு துளிர்க்க, இருவரும் கண்களில் நீர் வரும் வரை சிரித்து ஓய்ந்தனர்.


“சனிக்கிழமை கூட ஆபிசுக்கு வர வேண்டியதா இருக்கு. முதல்ல ஒரு நல்ல ஈனா வானா மாப்பிள்ளையா பார்த்து கல்யாணம் பண்ணி, இந்த வேலையை ரிசைன் பண்ணனும்…” என்றாள் சுவாதி, தனது வண்டியை ஓட்டியபடி.

அன்று மதியம் அலுவலகம் முடிந்து, தோழிகள் இருவரும், உச்சி வெய்யிலில் உல்லாசமாகச் சென்றுகொண்டிருந்தனர். 

“விடுடி, அரை நாள் தானே ஆபிஸ் வைக்கறாங்க. அதுக்கே சலிச்சுக்கற? வீட்ல போர் அடிச்சுட்டு உட்கார்ந்திருக்கணும்…”

“ஏன் உட்கார்ந்திருக்கணும்… நிம்மதியா படுத்துத் தூங்கலாமே?!”

“போடி… திங்கட்கிழமை ஆரம்பிச்சா வெள்ளிக்கிழமை வரை வேலை சரியா இருக்கு. சனிக்கிழமை சீக்கிரம் ஆபிஸ் முடிஞ்சு இப்படி உன்கூட ஸ்கூட்டில ஒரு ரவுண்டு போக எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?”

“எனக்கும் உன் செலவுல ஐஸ்க்ரீம் சாப்பிட எவ்வளவு பிடிக்கும் தெரியுமா?” என்றவள், ஒரு ஐஸ்க்ரீம் கடையின் முன் வண்டியை நிறுத்தினாள். 

“எதுக்கு சுவாதி இப்போ ஐஸ்க்ரீம்?”

“இன்னைக்கு நம்ம டைனோ கிட்ட உனக்கு டமால் டுமீல் ஆச்சுல்ல? அதைக் கொண்டாடத்தான்…”

“கிராதகி…”

டமால் டுமீல் டைனோசரைப் பற்றி பேசிக்கொண்டே தோழிகள் சில பல ஐஸ்க்ரீம்களை உண்டு முடித்தனர்.


“அடுத்த வாரமாவது நாம அந்த டைனோகிட்ட சிக்கி சின்னாபின்னம் ஆகக்கூடாது…”

“என்னடி இப்படி சொல்லிட்ட? அப்புறம் நம்மள நம்பி கடையைப் போட்ட இந்த ஐஸ்க்ரீம் கடைக்காரர் நிலைமை என்ன ஆகுறது. வாரத்துல நாலு நாள் நாம இவருக்கு பிசினெஸ் கொடுக்கறோம்ல?”

“ஆமாடி, வாரத்துல நாலஞ்சு தடவை ரெண்டு பேர்ல ஒருத்தருக்கு திட்டு விழுது. அதுக்கு ஐஸ்க்ரீம் ட்ரீட்டு. இதெல்லாம் ஒரு பொழப்பா?”

“அதுக்குத்தான் சொல்றேன் காலாகாலத்துல கல்யாணம் பண்ணிக்கலாம்னு…”

“போடி அதுக்கு அந்த டைனோவே தேவலாம்…”

“என்னடி ரூட்டு மாறுது? அந்த டைனோக்கு கல்யாணம் ஆகி, ரெண்டு பசங்க இருக்காங்க. பெரியவன் பேரு டமாலு. சின்னவன் பேரு டுமீலு…”

சுவாதி கூறியதைக் கேட்டு இவள் சிரிக்க, இவளுடன் சேர்ந்து அவளும் சிரிக்க, கடையின் வாயிலில் நிறுத்தப்பட்டிருந்த வண்டியின் அருகே வந்த பின்னரே சிரிப்பலை ஓய்ந்தது.


சுவாதி வண்டியை அதன் நிறுத்துமிடத்திலிருந்து எடுக்க, அருகே காத்துக்கொண்டிருந்தவளின் கண்களில் அந்த சுவரொட்டி எதேச்சையாக விழுந்தது. காலை பேருந்தில் பார்த்தவனின் புகைப்படம் அதிலே இருந்தது. கையில் வயலினோடு சிரித்துக்கொண்டிருந்தவனைக் கண்டதும் அவளை போல் அவளது விழிகளும் உறைந்து போய் இமைக்க மறந்தன. 

‘சார் பேரு ராகவ்’ஆ? ராகவ்-ரித்திகா… பேர் பொருத்தமே நல்லாத்தான் இருக்கு…’ என்று தனது பெயரை, சுவரொட்டியில் அவள் கண்ட அவனது பெயரோடு ஒப்பிட்டுப் பார்த்தாள். உடனே தனது கைப்பேசியில் அச்சுவரொட்டியைப் படம் எடுத்தவள், அதற்குப்பிறகே அதனை வாசித்தாள். 

“கிளம்பலாமாடி?”

அருகில் வண்டியுடன் வந்து நின்ற சுவாதியைக் கண்டவள்,

“நம்ம அடுத்த ஸ்டாப் இந்த மியூசிக் கான்சர்ட்…” என்றாள்.

“என்னடி திடீர்னு?”

“ப்ச்… இது சேரிட்டி ஷோ (Charity Show )... போலாம் வாடி…”

ரித்து கூற, மறுபேச்சின்றி அவளைக் கூட்டிக்கொண்டு வண்டியைக் கிளப்பினாள், சுவாதி.  


Tuesday 12 January 2021

வயலின் பேசியதே - 2

இசை நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்திற்கு ஒருவழியாக வந்து சேர்ந்த தோழிகள், நிகழ்ச்சி தொடங்கிவிட்டதை உணர்ந்து அவசர அவசரமாக வண்டியை நிறுத்திவிட்டு, அனுமதி சீட்டினை வாங்கிக்கொண்டு அரங்கத்தினுள் நுழைந்தனர். மேடையின் நடுநாயகமாய் ராகவ் நின்றுகொண்டு இசைத்திருக்க, மற்ற இசைக் கலைஞர்கள் அவனைச் சுற்றி அமர்ந்தபடி வாசித்திருந்தனர். மேடையிலிருந்து நான்கைந்து வரிசைகளைத் தாண்டி அவர்களுக்கு இருக்கை கிடைத்தபொழுதிலும், அவன் முகத்தினைத் தெளிவாய் அவளால் பார்க்க முடிந்தது. இசையில் லயித்து உலகை மறந்து வாசித்து நின்றிருந்தவனின் முகத்தில் அமைதியும், அழகியதொரு புன்னகையும் நீங்காமல் நிறைந்திருந்தது. அவனது வயலினிலிருந்து எழும்பிய மந்திர இசை அவ்வரங்கத்தைச் சூழ, அனைவைரும் கட்டுண்டிருந்தனர்.


“ரித்து, அந்தப் பையன் செம ஸ்மார்ட்டா இருக்கான். ரொம்ப நல்லா வாசிக்கறான்…”

சுவாதி, ரித்திகாவின் காது கடித்தாள்.

“அண்ணனை ‘அவன்’, ‘இவன்’னு மரியாதை இல்லாம பேசக்கூடாது…” என்றாள் அவள் நிதானமாய்.

“அண்ணனா?!” 

அதிர்ந்தவள், சற்று நிதானம் கொண்டு, “சரி, ஓகே… அப்போ இனிமேல் நீ, சாரி, நீங்க எனக்கு அண்ணியா?” என்றாள் வடை போன சோகத்தில்.

“பரவால்ல… என்னை பேரு சொல்லியே கூப்பிட்டுக்கோ… நான் தப்பா நினைக்கல…”

“ரொம்ப தேங்க்ஸ் ரித்து அண்ணி…” என்றவள், அவளை முறைத்துவிட்டு நிகழ்ச்சியை கவனிக்கத் தொடங்கினாள்.


பதினைந்து வயதொத்த சிறு பெண்பிள்ளை ஒருவள், ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாட்டினை தனது குழந்தைக் குரலால் பாடிமுடிக்க, அரங்கமே கரகோஷத்தால் நிறைந்தது. நிகழ்ச்சி நிறைவுற, அக்குழந்தை ராகவ்வின் காலில் விழுந்து வணங்க, மற்ற இளையவர்களும் வணங்க, மூத்தோர் அவனை அரவணைத்துக்கொள்ள, அவனைக் காண முடியா அளவிற்கு கலைஞர்கள் சூழ்ந்துகொண்டனர். அனைத்தையும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளின் முகத்தில் அவளே அறியாமல் பெருமிதம் பொங்கியது. பார்வையாளர் அனைவரும் களைந்து செல்ல, இறுதியாய்த் தோழிகள் வெளிப்பட்டனர். 


“ரித்து, காது கேட்காத, வாய் பேச முடியாதவங்களுக்காக சேரிட்டி ஷோ நடத்தறான்னா ராகவ் எவ்வளவு நல்ல பையனா இருக்கணும்?”

ரித்து தோழியைக் கண்டு முறைக்க,

“இங்கப்பாருடி, என் அண்ணன் என் உரிமை. நான் ‘டா’ போட்டு கூட பேசுவேன். அண்ணன்-தங்கச்சிக்கு நடுவுல நீ வராத…” என்று திட்டவட்டமாகக் கூறினாள், சுவாதி.

தோழிகள் சிரித்துக்கொண்டே, வாகன நிறுத்தத்திற்கு வந்து சேர்ந்தனர்.


அவ்விடத்தில் நிரம்பியிருந்த மாற்றுத் திறனாளிகளை அமைதியாய் பார்த்தபடி இருவரும் நின்றிருந்தனர். 

“ரித்து, இவங்களைப் பார்க்கும்போது கடவுள் மேல நம்பிக்கை போயிடுது. ஆனா, ஒவ்வொருத்தர் முகத்தில இருக்கற சிரிப்பைப் பார்க்கும்போது வாழ்க்கை மேல நம்பிக்கை வருது.”

“ம்ம்…”

“பாவம், இவங்களுக்கு இப்படி ஒரு குறை இருந்திருக்கக்கூடாது…”

“யாருகிட்ட குறை இல்லை? இவங்க குறைகள் வெளியே தெரியுது. பலருடையது தெரியறதில்லை…”

“??”

“உருவத்துல குறையிருக்கறவங்க வருத்தப்பட ஒண்ணுமில்ல. உள்ளத்துல குறையிருக்கறவங்க தான் வருத்தப்படணும். குணம் குன்றியவர்களைத்தான் இந்த உலகமே பழிக்கும், சபிக்கும். பிறரின் வேதனைக்கு காரணமா இருக்கறவங்க தான் பரிதாபத்திற்கு உரியவர்கள். இப்படிப்பட்ட மனக்குறை தான் மனித இனத்தோட சாபம்.”

“ஆமாடி… உண்மை தான்…”

ஏதோ யோசித்தவளாய்,

“நான் உள்ள போய் ராகவ் கிட்ட ஒரு ஆட்டோகிராஃப் வாங்கிட்டு வந்துடறேன்டி…” என்று ரித்து கூற,

“ஓஹோ…” என்று பரிகாசமாய் மண்டையாட்டியபடி சுவாதி சிரிக்க, அதற்குள்ளாக ரித்துவின் கைப்பேசி சிணுங்க, 

“அம்மா தான் போன்ல… இன்னும் ஏன் வீட்டுக்கு வரலனு கத்துவங்க. நாம இங்க வந்ததை சொல்ல மறந்துட்டேன். நீ சமாளி, நான் ஆட்டோகிராப் வாங்கிட்டு வந்துடறேன்” என்றுவிட்டு தனது கைப்பேசியினை சுவாதியின் கைகளில் திணித்துவிட்டு மீண்டும் அரங்கத்திற்குள் ஓடிச்சென்றாள், ரித்திகா.


அழைப்பினை ஏற்றாள், சுவாதி.

“ஹலோ ஆண்ட்டி…”

“ஹலோ… சுவாதி, நீயாமா? ரித்து எங்க? இன்னும் வீட்டுக்கு வரல?”

“அது… அவ… ஆள பார்க்கப் போயிருக்கா…”

தான் உளறிவிட்டதை எண்ணி நாக்கினைக் கடித்துக் கொண்டவள், மேற்கொண்டு  செய்வதறியாது முழித்திருந்தாள்.


“ஆளா??”

“இல்லை ஆண்ட்டி… வேலு!!”

அவசரமாக பதில் அளித்தாள்.

“வேலா??”

“அதான் ஆண்ட்டி முருகன் கைல இருக்குமே…”

“ஓ! உங்க ஆபிஸ் பக்கத்துல இருக்கற முருகன் கோவில்ல இருக்கீங்களா?”

‘நல்லவேளை ஆண்ட்டியே ஆன்சர் சொல்லிட்டாங்க…’

“ஆ… ஆமா ஆண்ட்டி…”

“சரி, அவகிட்ட போன கொடு…”

“அது… அவ 108 சுத்து சுத்திட்டு இருக்கா… அதான் போன் என்கிட்ட கொடுத்துட்டா…”

“அப்போ நீ என்ன பண்ணிட்டு இருக்க?”

சமாளிக்கத் தெரியாமல் தவித்துப்போனவளுக்கு, எதிரே இருந்த பானிபூரி கடையைப் பார்த்ததும் தலையில் பல்ப் எரிந்தது. 

“நான், பானிபூரி சாப்பிட வந்தேன் ஆண்ட்டி…”

“ஏன்மா, நீயும் அவளோட சேர்ந்து கோவிலை சுத்தாம இப்படி பானிபூரி சாப்பிட வந்திருக்கியே, அது நல்லாவா இருக்கு?”

“தெரில ஆண்ட்டி. நான் இன்னும் டேஸ்ட் பண்ணல. அதுக்குள்ள உங்க போன் வந்துடுச்சு.”

ரித்திகாவின் அம்மா என்ன நினைத்தாளோ தெரியவில்லை, சில நொடி அமைதிக்குப் பிறகு,

“சரிம்மா, ரித்து வந்ததும் போன் பண்ணச் சொல்லு” என்றுவிட்டு அழைப்பினைத் துண்டித்தாள்.


‘முருகா என்னை மன்னிச்சுடு முருகா… தெரியாம உன் பேரை மிஸ்யூஸ் பண்ணிட்டேன். என்னை மன்னிச்சுடுப்பா!!’ என்று கண்கள் மூடி அவள் தியானித்திருக்க, 

“என்னடி நின்னுக்கிட்டே தூங்கற?” என்றபடி வந்து நின்றாள், ரித்திகா.

“என்னது தூங்கறேனா? ஏன் பேசமாட்ட… ஆண்ட்டியை சமாளிக்கறதுக்குள்ள உயிர் போய் வந்துடுச்சு…”

“எதுக்கு சமாளிக்கணும்? மியூசிக் கான்சர்ட் வந்ததை சொல்லவேண்டியது தான?”

“அதை சொல்லப்போய் ராகவ் பத்தி சொல்லிடுவேனோனு பயந்து வேற மாதிரி சமாளிச்சேன்.”

“ஆமா, நாங்க ரெண்டு பேரும் வீட்டுக்குத் தெரியாம லவ் பண்றோம் பாரு… லூசு… எடு வண்டியைக் கிளம்பலாம்…”

“ஆமாமா முதல்ல கிளம்புவோம். உங்கம்மாவ பேசியாவது சமாளிக்கலாம். எங்கம்மா பேச்செல்லாம் கிடையாது. ஸ்ட்ரைட்டா சங்கு தான் எனக்கு…” என்றவள், வண்டியைக் கிளப்பினாள்.


Monday 11 January 2021

வயலின் பேசியதே - 3

 “மேடம், உங்கக்கிட்ட பேசணும், கொஞ்சம் அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்குமா?”

அலுவலகத்தில் பரபரத்துக் கொண்டிருந்த சுவாதியை நிறுத்தி வினவினாள், ரித்து.

“நீ ஏன் பேசமாட்ட? காலைலேர்ந்து அந்த டைனோ தொல்லை தாங்க முடியல…” 

“என்னடி ஆச்சு?”

“ரெண்டு நாள் லீவு போட்டேன்ல, அதுக்கு சேர்த்து வச்சு இன்னைக்கு ஒரே நாள்ல ஏகப்பட்ட வேலையைக் கொடுத்து அந்த டைனோ என்னைப் பழி வாங்கிடுச்சு…”

“சரி வருத்தப்படாதடி, இதெல்லாம் நமக்கு ஒன்னும் புதுசு இல்லையே…”

“எவன் இங்க வருத்தப்பட்டான்... ரெண்டு நிமிஷம் கூட ரெஸ்ட் இல்லை… செம டயர்ட்… சரி அது இருக்கட்டும், நீ ஏன் காலையிலிருந்து என்னவோ மாதிரி இருக்க? ரெண்டு நாளா சரியாக் கூட என்கிட்ட போன்ல பேசல?”

“அப்படி எல்லாம் ஒன்னும் இல்லையே…”

“எனக்குத் தெரியாதா உன்னைப் பத்தி... என்ன விஷயம்?”

“ஒன்னும் இல்லடி... ஒரு சின்ன குழப்பம்…”

“அந்த கான்சர்ட் போயிட்டு வந்ததுலிருந்தே நீ குழப்பத்தில தான் இருக்க…”

“இல்லை சுவாதி…”

“நடிக்காதடி உண்மைய சொல்லு…”

“அந்தக் கான்சர்ட் போறதுக்கு முன்னாடி ஒன்னு ரெண்டு தடவை ராகவ பஸ்ஸில பார்த்தேன். கடைசியா அன்னைக்கு கான்சர்ட்ல பார்த்த பிறகு பஸ்ல பார்க்க முடியல... அதான் யோசிச்சிட்டு இருந்தேன்…”

“பார்ரா... அதான் அன்னைக்கு கான்சர்ட் போயே ஆகணும்னு அடம் புடிச்சியா? ரைட்டு, நீ கவலைப்படாத. இனிமேல் எப்பவும் நீ வர பஸ்ஸில ராகவ் வரவே மாட்டான்…”

“என்னடி சொல்ற?” பதறினாள், ரித்து.

“அதுக்கு என்கிட்ட எவிடன்ஸ் இருக்கு!!” 

“உளறாம தயவு செஞ்சு விஷயத்தை சொல்றியா?”

“எனக்குக் கொடுக்க வேண்டிய கமிஷன கொடுத்தா, கண்டிப்பா சொல்றேன்!!”

கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு, திடமாகக் கூறினாள், சுவாதி.

“சரிடி ஐஸ்கிரீம் ஷாப் தானே? உடனே போலாம்” என்று ரித்திகா கூறியதுடன், கையோடு சுவாதியைக் கிளப்பிக்கொண்டு சுவாதியின் ஸ்கூட்டியில் இருவரும் வழக்கமாக செல்லும் ஐஸ்கிரீம் கடைக்கு வந்து சேர்ந்தனர். தனக்குப் பிடித்த ஐஸ் கிரீம் வகைகளை ஆர்டர் செய்து சுவாதி உண்டு முடிக்கும் வரை அமைதி காத்த ரித்திகா, பிறகு ராகவ் பற்றி அவள் கூற வந்ததை அவளுக்கு ஞாபகப்படுத்தினாள்.


“நேத்து கோயில்ல ராகவ பார்த்தேன்டி…”

“கோயில்லயா? எந்தக் கோயில்?”

“கருமாரியம்மன் கோயில்…”

“நீ வேற ஏதோ கோயில் போறதால ஃபோன்ல சொன்ன?”

“நான் ஒரு கோயிலுக்கு மட்டுமா போனேன்? ஊருல உள்ள அத்தனை கோயிலுக்கும் போனேன். உனக்குத்தான் எங்க வீட்டு ஆளுங்களைப் பத்தி தெரியுமே. திடீர்னு எல்லா பயலும் பக்திமானா மாறிட்டானுங்க. லீவ் போட்டு கோயில் கோயிலா கூட்டிட்டு போனானுங்க. என் வீட்டு ஆளுங்க எப்போ எப்படி மாறுவாங்கன்னே சொல்லமுடியாது. திடீர்னு பார்த்தா சக்திமானா மாறிவிடுவானுங்க. ரோட்டில சும்மா நிக்கிற பையனுக்கு டீ வாங்கிக் கொடுத்து சோசியல் சர்வீஸ் பண்ணுவானுங்க. தள்ளு வண்டிக்காரன்கிட்ட பேரம் பேசாம காய்கறி வாங்குவானுங்க. அண்ணாச்சி கடையில சில்லறைக்கு பதில் சாக்லேட் கொடுத்தா அதைத் தட்டிக் கேப்பானுங்க. அப்புறம் பார்த்தா திடீர்னு கவரிமானா மாறிடுவானுங்க. இவன் வீட்டு விசேஷத்தில சரியா கவனிக்கல, அவன் வீட்டு விசேஷத்தில சரியா கவனிக்கல, என் கௌரவம், மானம், மரியாதை எல்லாம் போச்சுனு சொல்லி விசேஷத்துக்கு கூப்ட்ட பயலுங்க கிட்ட சண்டைக்கு நிப்பானுங்க. ஆனா ஒண்ணு, புள்ளிமான் மாதிரி துள்ளித் திரியற என்னைப் பார்த்தா மட்டும் அத்தனை பயலுகளும் டாபர்மேன்’ஆ மாறிடறானுங்க. அதுதான் ஏன்னு எனக்குப் புரியவே இல்லை?!!”

அவள் கூறியதைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்த ரித்திகா, 

“அது ஒன்னுமில்ல சுவாதி, எல்லாம் உன் முகராசி அப்படி!!” என்றுவிட்டு மீண்டும் சிரித்திருக்க, தோழி கூறியதைக் கேட்டு தனது முகத்தினைத் தொட்டுபார்த்துகொண்ட சுவாதி, ரித்துவின் கைகளைப் பற்றிக்கொண்டு,

“அப்போ நாளைக்கே நான் பிளாஸ்டிக் சர்ஜரி பண்ணிக்கிட்டா?” என்க, 

“ப்ளீஸ்டி என்னால முடியல” என்றவள் சிரித்து ஓய சில நிமிடங்கள் ஆனது.


“அம்மா தாயே இப்பவாவது ராகவ் பத்தி நீ சொல்ல வந்ததைச் சொல்லு…”

“அந்த மேட்டரை மறந்துட்டேனே…” என்றவள், தனது கைப்பேசியை எடுத்து, அதில் சில புகைப்படங்களைக் காண்பித்தாள். 

“கருமாரியம்மன் கோயில்ல ராகவ் தன்னோட அம்மா அப்பா கூட வந்து, தன்னோட புது வண்டிக்கு பூஜை போட்டுட்டு இருந்தத நான் போட்டோ எடுத்துட்டேன். பைக் செமயா இருக்குல?”

சுவாதி கூறியதும் அவளிடமிருந்து கைப்பேசியை வாங்கிக் கொண்டு ஒவ்வொரு புகைப்படமாகப் பார்த்தாள், ரித்திகா. அனைத்திலும் ராகவ் சிரித்துக் கொண்டு நிற்க, அருகில் அவனது பெற்றோரும் நின்றிருந்தனர். 

“புது பைக் வாங்கியிருக்கான். இனி எதுக்குடி பஸ்ல வரப்போறான்?”

மெலிதாய் சிரித்துக்கொண்டாள், ரித்திகா. 


“ரித்து, நான் உன்கிட்ட ஒன்னு கேட்கட்டுமா?”

“சொல்லு சுவாதி…”

“நீ ஏன் இவ்வளவு டிஸ்டர்ப்டா இருக்க?”

சற்று யோசித்தவள், “எனக்குத் தெரியலடி” என்றாள், ஜீவனற்ற குரலில்.


“ஏதோ விளையாட்டுக்கு அன்னைக்கு அந்த ராகவ வச்சு கிண்டல் பண்ணி பேசினன்னு நினைச்சேன். அதான் நேத்து அவனை கோயில்ல பார்த்ததைக் கூட ஃபோன் பண்ணி உனக்குச் சொல்லல. கிண்டல் பண்றேன் பேர்விழினு சும்மா இருக்கற உன் மனசை சஞ்சலப் படுத்திடுவேனோனு பயம். அதான் சொல்லல. ஆனா இன்னைக்கு காலைலேர்ந்து பார்க்கறேன். நீ நீயாகவே இல்லையே?” 

“ச்சச்ச... அப்படியெல்லாம் எதுவுமில்லை சுவாதி…”

“எதுவும் இருக்கக்கூடாதுனு நான் வேண்டிக்கிறேன்…”

ரித்து கேள்வியாய்த் தோழியை நோக்க,

“இந்தக் காலத்துல நல்லா தெரிஞ்சவங்களையே நம்ப முடியல. இந்தப் பையன் யாரு? என்ன? எப்படிப்பட்டவன்? எதுவும் தெரியாது. அவனை நினைச்சு நீ இப்படி இருக்கறது எனக்கு சரின்னு படல…” என்று மனதில் நினைத்ததைக் கூறினாள்.

“அதை நானும் யோசிக்காம இல்லை, சுவாதி. எனக்கும் புரியுது. நம்ம வாழ்க்கையில எத்தனையோ ஆண்களைக் கடந்து வந்திருக்கோம். எத்தனை ஆண் நண்பர்கள் இருக்காங்க?!! ஆனா, இந்த மாதிரி நான் டிஸ்டர்ப் ஆனது இல்லை. எனக்கே கொஞ்சம் பைத்தியக்காரத்தனமாத்தான் தோணுது. என்ன பண்றதுன்னு தெரியல…” 

“ஆனா ரித்து, ஒருவேளை ராகவ் நல்ல பையனா இருந்தா? அவங்க அம்மா அப்பாவும் இந்த ஃபோட்டோவில இருக்கிற மாதிரி நிஜத்திலும் ரொம்ப ஸ்வீட்டான ஆளுங்களா இருந்தா உன் வாழ்க்கை நல்லா இருக்கும்ல?!!”

ரித்து அவளை விளங்காத பார்வை பார்க்க,

“எனக்குப் புரியுது நீ என்ன சொல்ல வரேன்னு. நானே இப்படியும் பேசுறேன், அப்படியும் பேசுறேன்னு நினைக்கற. அதானே? இங்கப் பாரு ரித்து, முதல்ல அவன் யோக்கியனா, அவன் குடும்பமும் நல்ல குடும்பமானு கண்டுபிடிப்போம். அதுக்கப்புறம் லவ் பண்ணலாமா வேண்டாமானு யோசிப்போம்.” 

ஆழ்ந்து யோசித்தவள்,

“இல்லைடி…” என்றபடி நெற்றியைப் பற்றிக்கொண்டு கண்கள் மூடி குழப்பமாய் அமர்ந்திருந்தாள். 

“இந்த ரியாக்ஷனுக்கு என்ன அர்த்தம்?” 

“நீ சொன்னது எதையும் செய்ய வேண்டாம். இதை இப்படியே விட்டுடுவோம்…” 

“நிஜமாத்தான் சொல்றியா? அவனைப் பத்தி எதுவும் தெரிஞ்சுக்க வேண்டாமா?”

“எனக்கு பதில் சொல்லத் தெரியல சுவாதி, ரொம்ப ரொம்ப குழப்பமா இருக்கு…”

ரித்துவின் கலங்கிய கண்களைப் பார்த்த சுவாதி, 

“ரித்து, ரெண்டு நாள் ப்ரீயா விடு. எதையும் யோசிக்காம இருக்க முயற்சி பண்ணு. கொஞ்ச நாள் ஆகட்டும்…”

“ம்ம்…” என்றவள், தனது முகத்தினைத் துடைத்துக் கொண்டு தோழியைக் கண்டு புன்முறுவல் சிந்தினாள்.


அடுத்து வந்த நாட்களில், சுந்தர விமானமாக இருந்த பேருந்து பயணம் அவளுக்குக் கசந்தது. மனதின் சஞ்சலமும் அவளை வாட்டியது. வயலின் இசை மீது தீராக் காதல் கொண்டாள். அனைத்து இசையும் அவனது வயலின் பேசிய மொழியாகவே அவளுக்குத் தோன்றியது.


Sunday 10 January 2021

வயலின் பேசியதே - 4

 “சுவாதி, பெர்மிஷன் போட்டு போற அளவுக்கு அப்படி என்ன முக்கியமான விஷயம்?”

சுவாதி வண்டியை ஓட்ட, பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரித்து அவளைக் கேள்விகளால் துளைத்துக் கொண்டிருந்தாள்.

“உன்னை வயலின் க்ளாஸ்ல சேர்த்துவிடப் போறேன்.”

“என்னடி சொல்ற?”

“அன்னைக்கு கான்சர்ட் போற வழியில வயலின் கத்துக்கணும்னு ஆசையா இருக்குனு சொன்னியே. இப்போ அதுக்குத்தான் போயிட்டு இருக்கோம்.”

சுவாதி கூறியதைக் கேட்டு ரித்து அமைதியாக வர, வண்டி நின்ற இடத்தைக் கண்ட பிறகு ரித்துவின் மூச்சு நின்றுபோனது. ‘ராகவ் வயலின் பயிற்சி பள்ளி’ எனும் பதாகையைக் கண்டவளுக்கு கால்கள் நடுங்கத் தொடங்கின.

“என்னடி இங்க கூட்டிட்டு வந்திருக்க?”

“வா வா நீ வாழப்போற வீட்டைப் பார்க்க வேண்டாமா?”

“ப்ளீஸ்டி சுவாதி…”

“சும்மா வா ரித்து” என்றவள், அவளை வம்படியாக அழைத்துக்கொண்டு இரும்பு கேட்டினைத் திறந்துகொண்டு உள்ளே சென்றாள்.


அழைப்பு மணியை அவள் அடிக்க, கதவினைத் திறந்துகொண்டு வெளிப்பட்டாள் ஏறத்தாழ ஐம்பது வயது கொண்ட ராகவின் அம்மா. 

“வணக்கம் ஆண்ட்டி. என் பெயர் சுவாதி. இவ என் பிரெண்ட் ரித்து, ரித்திகா. இங்க வயலின் சொல்லித்தரதா கேள்விப்பட்டோம்.”

“ஆமாம்மா, என் பையன் ராகவ் தான் க்ளாஸ் எடுக்கறான்.”

“என் பிரெண்டை சேர்த்துவிடணும் ஆண்ட்டி. சார் இருக்காரா?”

“இல்லையே மா. அவன் வேலைக்குப் போயிருக்கான். சாயங்காலம் அஞ்சு மணிக்குத்தான் வருவான்.”

“ஓ அப்படியா ஆண்ட்டி… நாங்க பெர்மிஷன் போட்டு வந்திருக்கோம். அவ்வளவு நேரம் வெய்ட் பண்ணமுடியாது” என்றவள், திடீரென்று இருமி தொண்டையை சரி செய்துகொண்டு, “ஆண்ட்டி, குடிக்க கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?” என்றாள்.

“நீங்க ரெண்டு பேரும் உள்ள வந்து உட்காருங்க…”

“இல்லைங்க ஆண்ட்டி பரவால்ல, நாங்க வராந்தாலயே இருக்கோம். நீங்க தண்ணி எடுத்துட்டு வாங்க ஆண்ட்டி” என்று பதுவிசாக சுவாதி கூற, அவள் உள்ளே சென்றதும், 

“போட்டோவை விட நேர்ல உன் மாமியார் அழகா இருக்காங்கல்ல!!” என்று ரித்துவிடம் காதுகடித்துவிட்டு, தலையை மட்டும் வீட்டினுள் நீட்டி வரவேற்பறை சுவர்களைப் பார்த்தாள். 

“என்னடி பண்ற?” என்று ரித்து பதற, அவளருகே நெருங்கி வந்த சுவாதி,

“ராகவ்க்கு கல்யாணம் ஆயிடுச்சா இல்லையானு தெரிஞ்சுக்க வேண்டாமா? ஹால்ல கல்யாண போட்டோ இல்லை.”

“அதனால?”

“ப்ச்… உலகம் தெரியாத பொண்ணா இருக்கியே நீ… கல்யாண வயசுல புள்ளைங்க இருக்கற வீட்ல கல்யாணக்கோலத்துல அவங்க வீட்ல போட்டோ இல்லேனா, அந்தப் பிள்ளைக்கு இன்னும் கல்யாணம் ஆகலைனு அர்த்தம்.”

ரித்து முறைக்க,

“இப்ப ப்ரூவ் பண்றேன் பாரு…” என்று சுவாதி சொல்லிக்கொண்டிருக்க, ராகவின் அம்மா வெளிப்பட்டாள்.

“குடிங்கம்மா…” என்று அவள் கொடுத்ததை வாங்கிக்கொண்ட சுவாதி,

“என்ன ஆண்ட்டி மோர் கொண்டுவந்திருக்கீங்க?” என்றாள் ஆச்சர்யமாக.

“இந்த வெயில்ல வந்திருக்கீங்களே மா, அதான்…”

“இப்போ எங்களுக்கு ஆபிஸ்ல லஞ்ச் டைம். கூட அரைமணி நேரம் பெர்மிஷன் வாங்கிட்டு வந்தோம். சாயங்காலம் ஆபிஸ் முடிய ரொம்ப நாழி ஆயிடும். அப்புறம் வரமுடியாது…” என்றவள், மடமடவென மோரைப் பருகிவிட்டு,

“வாட்டர் கேன் விலை ஏறிடுச்சுனு தண்ணி கொடுக்கவே யோசிக்கற இந்த காலத்துல நீங்க மோர் கொடுத்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி!!” என்றாள் பதுவிசாக.

“அப்புறம் ஆண்ட்டி, நம்ம ராகவ் சாரோட வைஃப் கூட வயலின் க்ளாஸ் எடுக்கறாங்கன்னு கேள்விப்பட்டோம். அப்படியா?” 

ரித்து அதிர்ந்துபோக, அவளோ சாதுவாய் நின்றிருந்தாள்.

“ராகவ்’க்கு இன்னும் கல்யாணம் ஆகல மா…”

“அப்படியா ஆண்ட்டி?! யாரோ எங்கக்கிட்ட தப்பா சொல்லிட்டாங்க. எங்களுக்குக் கூட கல்யாணம் ஆகல ஆண்ட்டி…”

ராகவின் அம்மா என்ன கூறுவது என்று புரியாமல் ரித்துவைப் பார்க்க, அவள் சமாளிப்பாய் சிரித்து வைத்தாள்.

“ஆண்ட்டி ராகவ் சாரோட மொபைல் நம்பர் கிடைக்குமா?”

அவள் கூறியதைக் கேட்டு ரித்து பதறி அவளது கையைப் பிடிக்க, சுவாதியோ சளைக்காமல்,

“ஆண்ட்டி எங்களால திரும்ப பெர்மிஷன் போட்டு வரமுடியாது… அதான் க்ளாஸ் பத்தி போன்லையே கேட்டுக்கலாம்னு நம்பர் கேட்டோம்…”

“அவன் இந்த பேஸ்புக்ல இருக்கான் மா… அதுல க்ளாஸ் விவரம் இருக்குமே…”

“ஆண்ட்டி எங்களுக்கு இந்த பேஸ்புக், இன்ஸ்டாக்ராம், டிண்டர், சாரி சாரி, ட்விட்டர் இதுல எல்லாம் அக்கவுண்ட் இல்லை. அவ்வளவு ஏன் பேங்க்ல கூட அக்கவுண்ட் இல்லை, ஆண்ட்டி.”

அதிசயித்த ராகவின் அம்மா, “இந்தக் காலத்துல இப்படிப்பட்ட பிள்ளைங்களா?! நல்ல பிள்ளைங்க!” என்றவள், “அவன் நம்பரை சீட்டுல எழுதி எடுத்துட்டு வரேன்” என்றுவிட்டு உள்ளே சென்றுவிட,

“நான் தான் சொன்னேன்ல ராகவ் சிங்கிள் தான்னு… ராகவ் அம்மாவும் டபுள் ஓகே… தண்ணி கேட்டா மோர் கொடுக்கறாங்க… அவங்களுக்கும் நம்மள பிடிச்சுப்போச்சு!!” என்றாள் சுவாதி முகத்தில் பரவசத்தோடு. ரித்துவோ பயமும், பதட்டமுமாய் நின்றிருந்தாள்.

வெளிப்பட்ட ராகவின் அம்மா,

“இந்த ப்ரோச்சர்ல க்ளாஸ் விவரமும், ராகவோட போன் நம்பரும் இருக்கு. அவனுக்கு மெசேஜ் போட்டீங்கன்னா, உங்களுக்கு எல்லா விவரமும் சொல்லிடுவான்.”

“மெசேஜ் எதுக்கு ஆண்ட்டி, நாங்க போன் பண்ணியே பேசிடறோம்” என்று சுவாதி கூற, அவளது கையை அழுத்திப் பிடித்து மேற்கொண்டு அவளை பேசவிடாமல் தடுத்த ரித்து, 

“ரொம்ப தேங்க்ஸ் ஆண்ட்டி, ஆபிஸ்க்கு நேரம் ஆயிடுச்சு…” என்றுவிட்டு நொடி தாமதிக்காது சுவாதியைக் கிளப்பிக்கொண்டு அவ்விடம் விட்டுச் சென்றாள்.  


இவர்களுக்காகவே காத்திருப்பது போல், இவர்கள் அலுவலகத்திற்கு திரும்பியதும் மேலாளர் பணிகளை அடுக்க, நின்று நிதானிக்க நேரமின்றி தோழிகள் பணியில் மூழ்கினர்.


“ஷப்பா… நாலு மாமியாரை சமாளிச்சுடலாம் போல் ஒரு டைனோவை சமாளிக்க முடியல…” என்று சலித்துக்கொண்டே ரித்துவின் எதிரே வந்து அமர்ந்தாள், சுவாதி. அவள் கூறியதைக் கேட்டு மெலிதாய் சிரித்துக்கொண்டாள், ரித்து.

“மிஸ்.புன்னகை பூவே, கிளம்புங்க, ஐஸ் கிரீம் கடைக்கு போவோம்…”

“எதுக்கு?”

“எதுக்கா… இன்னைக்கு டைனோ எனக்கு லட்சார்ச்சனை செய்ததுக்கு…” என்றவள், திடீரென யோசனை வந்தவளாய், “அடியே ராகவ்க்கு போன் பண்ணியா?” என்றாள்.

‘இல்லை’ என்று மறுப்பாய் தலையாட்டினாள், ரித்து.

“போன் பண்ணி பேச ரெண்டு நிமிஷம் ஆகுமா? அதுக்கு உனக்கு நேரம் இல்லையா?”

“ஒரே குழப்பமா இருக்கு…”

“என்னடி குழப்பம் உனக்கு? அன்னைக்கு என்ன சொன்ன நீ? இதப்பத்தி கொஞ்ச நாளைக்கு யோசிக்க போறது இல்லைன்னு சொன்ன. ஆனா, பத்து நாளா எப்படி இருக்க நீ?! பைத்தியக்காரி மாதிரி இருக்க. ஒழுங்கா பேசறது இல்ல, சிரிக்கிறது இல்ல... நேத்து உங்க அம்மா போன் பண்ணி உனக்கு என்ன பிரச்சனைனு என்கிட்ட விசாரிக்கறாங்க. நான் என்னன்னு பதில் சொல்றது? அவங்க வருத்தப்பட்டு பேசுனதைக் கேட்டு ரொம்ப மனசு கஷ்டமா ஆயிடுச்சு. அதனாலத்தான் ஒரு முடிவு கட்டணும்னு சொல்லி இன்னைக்கு நான் நேரா வீட்டுக்குக் கூட்டிட்டு போனேன்…

ரித்து முகம் வாடி, கண்கள் கலங்க, பதறிய சுவாதி, அவளது கைகளைப் பிடித்துக்கொண்டு, “அய்யோ ரித்து, என்னடா ஆச்சு? ஏன் அழற? நாங்க எல்லாரும் உனக்கு இருக்கோம். உனக்கு எது வேணும்னாலும் நான் செய்யறேன். அழாத ரித்து” என்று தாயாகிப்போனாள். மெல்ல தன்னை சமன் செய்துகொண்டவள், தனது மனதில் உள்ளவற்றை தோழியிடம் கூறத் தொடங்கினாள்.


Saturday 9 January 2021

வயலின் பேசியதே - 5

 “சுவாதி, அன்னைக்கு நான் ஆட்டோகிராஃப் வாங்கப்போன போது ஸ்டேஜ் பக்கத்துல ராகவ் நின்னுட்டு இருந்தார்.  அவர் பக்கத்துல யாரோ ஒருத்தர் என்னமோ பேசிட்டு இருந்தாரு. ராகவ் தலையை ஆட்டி ஆட்டி அதைக் கேட்டுட்டு இருந்தார். நான் தயங்கித்தயங்கி அவங்க எதிரில போய் நின்னேன். ராகவ அவ்வளவு பக்கத்துல பார்த்ததும் எனக்கு கை காலெல்லாம் நடுங்க ஆரம்பிச்சுடுச்சு. அவர் என்னைப் பார்த்து சிரிச்சாரு. ரொம்ப சந்தோஷமா இருந்தது. அப்புறம் சைகை பாஷையில ஏதோ கேட்டாரு. எனக்கு ஒண்ணுமே புரியல. ‘சாரி, நீங்க என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியல’னு சொன்னேன். உடனே அவருடைய முகம் சுருங்கிப் போச்சு. தலைகுனிஞ்சு திரும்பவும் ஏதோ சைகை காட்டிட்டு விலகிப் போயிட்டாரு. நான் எதுவும் தப்பா பேசிட்டேனோன்னு பயந்து கூட நின்னுட்டு இருந்த இன்னொருத்தரைப் பார்த்தேன். ‘நீங்க எங்களோட வாய் பேச முடியாதோர், காது கேளாதோர் சங்கத்தின் புதிய உறுப்பினர்னு நினைச்சு எப்போ எங்க சங்கத்துல சேர்ந்தீங்கன்னு ராகவ் கேட்டாரு. அப்புறம் நீங்க பேசினதும், உங்கள வாய் பேச முடியாதவர்னு நினைச்சதுக்காக மன்னிப்பு கேட்டுட்டு போறாரு’னு சொன்னாரு… ஒரு நிமிஷம் கலங்கிட்டேன். ‘அப்போ ராகவால பேச முடியாதா?’னு கேட்டேன். ‘இல்லமா, அவரால பேச முடியாதுனு சொல்லிட்டாரு…’"

பேயறைந்தார் போல் அதிர்ச்சியில் அமர்ந்திருந்தாள், சுவாதி.

"சுவாதி, என்னடி ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?"

"ரித்து, அவரால பேச முடியாதா?"

"ம்ம்…"

"இவ்வளவு பெரிய விஷயத்தை என்கிட்ட சொல்லவே இல்லை? அதனாலதான், ‘ஃபோன் பண்ணி ராகவ் கிட்ட பேசிக்கறோம்’னு நான் அவங்க அம்மா கிட்ட சொன்னபோது என் கையை அழுத்தினியா? எப்படி இதை நீ என்கிட்ட சொல்லாம விட்ட?”

“இதுல என்னடி இருக்கு?” 

“என்ன இருக்கா? லூசாடி நீ? உனக்கு என்ன குறைச்சல்? வீட்டுக்கு ஒரே பொண்ணு. அம்மா, அப்பா உன் மேல உயிரையே வச்சிருக்காங்க. வசதிக்கும் குறைச்சல் இல்லை. உனக்கு எதுக்குடி இந்த மாதிரி பையன்? குழப்பமே வேண்டாம். அவனை மறந்துடு. இது முன்னாடியே தெரிஞ்சிருந்தா, நான் உன்னைக் கூட்டிட்டே போயிருக்க மாட்டேன்.”

“சுவாதி…”

என்றும் கண்டிரா சினத்தினைத் தோழியின் முகத்திலும், குரலிலும் கண்டாள், சுவாதி. 

“உனக்கென்ன மனசுல பெரிய தியாகச் செம்மல்னு நினைப்பா?”

தோழியின் சினத்தினைப் பொருட்படுத்தாது வினவினாள்.

“இதுக்குமேல நீ ஒரு வார்த்தை பேசின, பிரெண்டுன்னு கூட பார்க்காம அறைஞ்சுடுவேன் சுவாதி…”

“ரித்து…”

“என்னென்னமோ பேசற? அவரால பேச முடியலைன்னா என்ன இப்போ? எந்த விதத்துல அவர் குறைஞ்சு போயிட்டாரு? நான் ஒன்னும் என்னை தியாகியா நினைக்கவே இல்லை. என் மனசுக்குப் பிடிச்சவரை கல்யாணம் செய்துக்கணும்னு நினைக்கறேன். அவ்வளவுதான். அவரால பேச முடியலைன்னா என்ன இப்போ? வேலைக்கு போய் சம்பாதிக்கறாரு. நிச்சயம் பொண்டாட்டி, புள்ளைய நல்லா வச்சுப்பாரு. வயலின் சொல்லிக்கொடுக்கிறார். எவ்வளவோ சேரிட்டி ஷோ நடத்தறார். இதை விட வேற என்ன வேணும்?!”

“அதில்லடி…”

“ஏன், அவரைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு என்னால சந்தோஷமா வாழ முடியாதா? காதல்ங்கறது வாயத் தொறந்து பேசி வர்றதில்லை. வாழ்ந்து பார்த்து வர்றது. நிச்சயம் நாங்க அன்னியோன்யமா இருப்போம்னு எனக்குத் தோணுது. அவரோட குறையை நான் ஒரு பொருட்டாவே நினைக்கல. தெரியாமத்தான் கேட்கறேன், கல்யாணம் முடிஞ்சு ஒருவேளை கட்டிக்கிட்டவருக்கு ஏதோ ஒரு ஆக்சிடெண்ட்ல கையோ, காலோ போயிடுச்சுனா, ‘உங்கக்கிட்ட குறை இருக்கு, இனி உங்களோட வாழமாட்டேன்’னு சொல்லிட்டு விட்டுட்டு வந்துடுவோமா? இல்லைல? அங்கத்தையும் தாண்டி அகத்தைத் தொடறதுதான் காதல்.”

ரித்துவின் வாதம் சுவாதியின் நிலைப்பாட்டினை மாற்றியது.

“என்னை மன்னிச்சுடு ரித்து. உன்னைக் காயப்படுத்தணும்னு நான் இப்படி பேசல. என் மனசுல தோன்றியத யோசிக்காம பேசிட்டேன். நம்மள சுத்தி நடக்கற விஷயங்கள் அப்படி பேச வச்சிடுச்சு. எங்க வீட்டையே எடுத்துக்கோயேன். அநாதை இல்லத்துக்கும், முதியோர் இல்லத்துக்கும் காசு கொடுப்பாங்க. கண்ணு தெரியாதவங்க ரோட்டைக் க்ராஸ் பண்ண உதவி பண்ணுவாங்க. ஆனா, போன வாரம் என் பெரியம்மா பொண்ண பெண் பார்க்க வந்த மாப்பிள்ளைக்குக் கண்ணு கொஞ்சம் ஸ்குய்ன்ட் ஐஸா (squint eyes) இருக்குனு சொல்லி வேண்டாம்னு சொல்லிட்டாங்க. இத்தனைக்கும், அவர் நல்லா படிச்சு, நல்ல வேலைல இருக்காரு.”

“இப்போ என்னடி சொல்ல வர? குறையிருந்தா அவங்களுக்குக் கருணை கொடுத்தா போதும், காதலைக் கொடுக்க வேண்டாம்னு சொல்றியா?”

“சத்தியமா இல்லைடி. முட்டாள்தனமான மனநிலையைச் சொன்னேன். ரித்து, ராகவ விரும்பி கல்யாணம் செய்துக்கறதுன்னு முடிவு பண்ணிட்டியா?”

“முடிவுன்னு சொல்ல முடியாது. ஆனா, அந்த எண்ணம் நாளுக்கு நாள் வலுவாகிட்டே போகுது.”

“ரித்து, வீட்ல என்ன சொல்லுவாங்க?”

“என்னை முழுசா புரிஞ்சு வச்சிருக்காங்க. நிச்சயம் என் உணர்வை மதிப்பாங்கன்னு தோணுது.”

“அப்புறம் என்ன குழப்பம்?”

“அன்னைக்கு என்னைப் பார்த்ததும் சிரிச்சவர், என்னால பேச முடியும்னு தெரிஞ்சதும் அப்படியே முகம் சுருங்கிப்போயிட்டாரு. என் முகத்தைப் பார்க்கல. மன்னிப்பு கேட்டார். மன்னிப்பு கேட்கற அளவுக்கு அவர் எந்தத் தவறும் பண்ணல. என்னால பேச முடியாதுனு அவர் நினைச்சதுல எந்தத் தப்பும் இல்லை. அப்புறம் ஏன் அவர் முகத்துல அவ்வளவு வருத்தம்னு புரியல. அவர் தள்ளி நின்னு ரெண்டு பேர் கூட சைகை பாஷைல  பேசிக்கிட்டு இருந்தாரு. அந்த இடத்தை விட்டு நான் வரும்போது அவரைத் திரும்பிப் பார்த்துக்கிட்டே வந்தேன். மொத்தமா அந்த இடத்துலயே நாலஞ்சு  பேர் தான் இருந்திருப்பாங்க. நான் திரும்பிப்திரும்பி பார்க்கறத அவங்க எல்லாருமே ரெண்டொருதரம் பார்த்தாங்க. ஆனா அவர் எதேச்சையா கூட கண்ணை என் பக்கம் திருப்பல. இதுக்கு என்ன அர்த்தம்னு புரியல. எதுக்காக என்னை அவர் அவாய்ட் பண்ணாருன்னு புரியல… யோசிச்சு யோசிச்சு, ரொம்பக் குழம்பிப் போயிருக்கேன், சுவாதி…”

“சத்தியமா இதுக்கு என்ன சொல்றதுன்னே தெரியலடி. நீ என்னென்னவோ சொல்ற. என்னென்னவோ யோசிக்கற… ஒண்ணுமே புரியலடி… ஆனா, நீ சந்தோஷமா இருக்கணும். அதான் எனக்கு வேணும்.”

சுவாதியின் கைகளைப் பற்றிக்கொண்ட ரித்து, இதமாய் சிரித்தாள்.  


Thursday 7 January 2021

வயலின் பேசியதே - 6

 “கிளம்பலாம் ரித்து…” என்றுவிட்டு சுவாதி எழ,

“ஐஸ் க்ரீம் சாப்பிடத்தானே?” என்று வினவியபடி ரித்துவும் எழுந்தாள்.

“இல்லைடி… ஐஸ் க்ரீம் சாப்பிடற மூட் இல்லை. நான் உன்னை பஸ் ஸ்டாப்ல இறக்கி விட்டுட்டு கிளம்பறேன்…” 


சுவாதி அமைதியாய் வண்டியை ஓட்ட, ரித்துவிற்கும் அந்த மௌனம் தேவைப்பட்டதாய் இருந்தது. திடீரென வண்டியை சாலையோரம் நிறுத்திய சுவாதி,

“ரித்து, அன்னைக்கு கான்சர்ட்ல பாட்டு பாடின பொண்ணு இவ தானே?” என்றாள், சற்று தொலைவில் நின்றிருந்த சிறு பெண் ஒருவளைக் காட்டி.

“ஆமா, சுவாதி” என்று கூறிக்கொண்டே வண்டியிலிருந்து ரித்து இறங்க, இருவரும் அவளின் அருகே சென்று நின்றனர்.   


அவர்களைக் கண்ட அச்சிறுமியின் கண்களில் கொக்கிகள் மின்ன,

“நீதானே அன்னைக்கு சேரிட்டி ஷோல ‘ஒவ்வொரு பூக்களுமே’ பாடின?” என்று சுவாதி வினவ,

“ஆமா அக்கா. உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று வெள்ளந்தி சிரிப்போடு வினவினாள், அவள்.

“நாங்க அந்த ஷோவுக்கு வந்திருந்தோம். நீ ரொம்ப அழகா பாடின.”

“ரொம்ப தேங்க்ஸ் அக்கா…” என்றாள் அவள், முகம் மலர.

ரித்துவை ஒருமுறை பார்த்துவிட்டு மீண்டும் அச்சிறுமியிடம் திரும்பிய சுவாதி,

“ராகவ்’அ உனக்குத் தெரியுமா?” என்றாள்.

“அண்ணன் தான் எனக்கு எல்லாமே…” என்று விடுகதையாய் பதில் கூறினாள், அவள்.

“அப்படினா?”

“மூணு வருஷத்துக்கு முன்னாடி எங்க அப்பா எங்களை விட்டுட்டு எங்கயோ போயிடுச்சு. நான், அம்மா, பாப்பா மூணு பேரும் சாப்பாட்டுக்கு வழியில்லாம ரொம்பக் கஷ்டப்பட்டோம். அப்பா அடிக்கடி எங்கயாவது களவாண்டு போலீஸ் கிட்ட மாட்டிக்கும். அதனால என் அம்மாவுக்கு யாரும் வேலை கொடுக்கல. சிக்னல் கிட்ட நின்னு பாட்டு பாடுவேன். காசு கிடைக்கும். நான் பெரிய மனுஷி ஆயிட்டதால பல பேர் என்னைத் தப்பா தொடுவாங்க. அம்மாகிட்ட அழுவேன். அம்மாவும் அழும். அப்பத்தான் ஒருநாள் ஒருத்தன் என்கிட்ட… என்கிட்ட… தப்பா… அப்போ அண்ணன் தான் அவனை விரட்டிவிட்டுட்டு என் அம்மாகிட்ட பெர்மிஷன் வாங்கி ஒரு ட்ரூப்ல சேர்த்துவிட்டாங்க. ட்ரூப்ல ப்ரோக்ராம் வரும்போது நான் போவேன். காசு கிடைக்கும். அம்மாவுக்கும் ஒரு ஹோட்டல்ல பாத்திரம் தேய்க்கற வேலை அண்ணன் மூலமா கிடைச்சுது. அண்ணனால தான் நான் பத்திரமா இருக்கேன். அண்ணனால தான் நாங்க மூணு பேரும் நிம்மதியா இருக்கோம். இப்பக் கூட அசோசியேஷன் ஷோவுக்கு ரிகர்சல் பார்க்கத் தான் போகப்போறேன்…”

அவள் கூறியதைக் கேட்டு ஏறத்தாழ தோழிகள் கண்கள் கலங்கிவிட்டிருந்தனர்.

“ஸ்கூலுக்கு போறியா?” என்றாள் சுவாதி.

“போறேன் கா, பத்தாவது படிக்கறேன்.”

அவள் கூறி முடிக்க, அவளின் அருகே ஒரு பைக் வந்து நின்றது. அதில் வந்தவன் தலைக் கவசத்தைக் கழட்ட, ரித்துவின் நெஞ்சில் சில்லென சாரல் வீசும் முகம் வெளிப்பட்டது. 

“ராகவ் அண்ணா, இந்த அக்காங்க ரெண்டு பேரும் நம்ம அசோசியேஷன் சாரிட்டி ஷோக்கு வந்திருந்தாங்களாம். நான் ரொம்ப நல்லா பாடினேன்னு சொன்னாங்க…” 

சிறுமி கூறியதைக் கேட்டு தோழிகளைக் கண்டு ‘நன்றி’ என்பது போல் தலையசைத்து, சிறிதாய் ஒரு புன்னகை சிந்தினான், ராகவ். ரித்துவை இதற்குமுன் அவன் சந்தித்தது அவனது நினைவில் இல்லை போலும். அவளை முன்னமே சந்தித்த அறிகுறி எதுவும் அவனது முகத்தில் தென்படவில்லை.

 

அச்சிறுமியிடம் வண்டியில் அமரும்படி அவன் சைகை செய்ய, “டாட்டா அக்கா” என்று இருவருக்குமாய் கையசைத்துவிட்டு வண்டியில் அமர்ந்தாள். 

“நாங்க உன் படிப்புக்கு ஏதாவது உதவலாமா?” என்று தயக்கத்தோடு அச்சிறுமியிடம் வினவிய சுவாதி, ராகவை நோக்க, அவனோ நேரே சாலையைப் பார்த்தபடி கைகளை நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தான். சுவாதி, ‘இவன் ஏன் இப்படி இருக்கான்?’ என்பது போல் ரித்துவிடம் கண்களால் வினவ, அவளும் ‘தெரியவில்லை’ என்பது போல் தலைக்கவிழ்ந்து கொண்டாள்.

“அக்கா, எனக்கு உதவியெல்லாம் வேண்டாம் கா. எங்க அஸோஸியேஷனுக்கு கொடுங்க கா…” என்று அச்சிறுமி பதில் கொடுக்க, 

“சரி மா…” என்று சுவாதியின் குரல் வந்ததும், நொடி தாமதிக்காது வண்டி புறப்பட்டது.


“பையன் நல்லவனாத்தான் இருக்கான்… ஆனா ரொம்பத்தான் வெட்கப்படறான்…” என்று சுவாதி ரித்துவின் தோளைத் தனது தோளால் இடிக்க, மெலிதாய் சிரித்துக்கொண்டாள், அவள். அவளது உள்மனம் கூறியது, அவனிடம் கண்டது வெட்கம் அல்ல, ஒதுக்கம் என்று! இனம்புரியா உணர்வுகளின் இடையே பெண்டுலம் ஆடும் மனதினை நிறுத்தி வைக்க பெரும் பாடுபட்டாள்.


சோர்ந்து வீடு திரும்பிய ரித்து, வரவேற்பறையில், தொலைக்காட்சிப்பெட்டியில் செய்திகள் கேட்டுக்கொண்டிருந்த தந்தையைக் கண்டாள். அருகே, செய்திகள் கேட்கவிடாது, ஏதோ கூறிக்கொண்டிருந்த தாயைக் கண்டாள். அவளது உள்ளத்துத் தவிப்புகளை, அபிலாஷைகளை, மெல்லிய உணர்வுகளை, ரகசிய கனவுகளை இவ்வுலகில் இவர்களைத் தவிர வேறு யாரால் புரிந்து கொள்ள முடியும்!! அவள் மனமும் அதையே கூறியது. உள்ளே நுழைந்தவளைக் கண்டதும், “ஏன் ரித்து இவ்வளவு லேட்டு?” என்று கேட்டுக்கொண்டே அம்மா அவள் அருகே வர, “முதல்ல பாப்பாவுக்கு சாப்பாடு எடுத்து வை, அப்புறம் விசாரிக்கலாம்…” என்ற அப்பாவின் குரலால் அவள் அமைதியாகிப்போனாள்.


அப்பாவின் அருகே வந்தமர்ந்த ரித்து, “நான் பாப்பாவா?” என்றாள், மெலிதாய் சிரித்தபடி.

“எப்பவுமே டா…” என்ற அப்பா அவளது தலை வருட, தந்தையின் மடியில் தலை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

“எழுந்து வா ரித்து, சாப்டுட்டு படு” என்றபடி அம்மாவும் அருகே வந்து நிற்க,

“பசிக்கல மா…” என்றாள்.

“ஏன் பாப்பா கொஞ்ச நாளா சோர்ந்திருக்க? உடம்புக்கு என்ன பண்ணுது?”

அப்பாவின் குரலில் பொங்கிய பாசம், அவளையும் அறியாமல் அவளது கண்களில் நீர் மணிகளைக் கோர்க்கச் செய்தது.

“உடம்புக்கு ஒண்ணுமில்ல பா, மனசு தான்… என்னமோ குடையுது…”

அப்பாவும், அம்மாவும் அதிர்ச்சியும், கவலையுமாய் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

“என்னடாமா ஆச்சு? என்கிட்ட சொல்லு… உனக்கு நானும், அம்மாவும் இருக்கோம்…”

“தெரியும் பா, எனக்கு நீங்க ரெண்டு பேரும் இருக்கீங்க. என்னைப் புரிஞ்சுப்பீங்கன்னு தெரியும்…”

“என்ன ஆச்சு ரித்து?”

அமைதியாக இருக்க முயன்றாலும், முடியாமல் பரிதவித்தாள், அம்மா.

எழுந்து அமர்ந்த ரித்து, இருவரையும் பார்த்துவிட்டு, தலைக் கவிழ்ந்தபடி, 

“நான் ஒருத்தரை விரும்பறேன்…” என்றாள்.

சிரித்துக்கொண்ட அப்பா, “இதைச் சொல்ல ஏன்டா உனக்கு இவ்வளவு தயக்கம்? நானும், உன் அம்மாவுமே லவ் மேரேஜ் தானே. பையன் யாரு?” என்றார், நிதானமாக.

“அவர் பெயர் ராகவ். வயலினிஸ்ட். ரொம்ப நல்லா வாசிப்பாரு. எங்கேயோ வேலை செய்யறாரு. கச்சேரியும் பண்றாரு.”

“என்னடி நீ எங்கயோ வேலை செய்யறாருனு சொல்ற? அவரோட அம்மா, அப்பா, கூட பொறந்தவங்க, குடும்பம் இதெல்லாம் பத்தி உனக்குத் தெரியுமா தெரியாதா?” அம்மா கவலையானாள்.

“தெரியாது மா… இது என் விருப்பம் மட்டும் தான். அவருக்கு இதெல்லாம் தெரியாது. என்னையவே அவருக்குத் தெரியாது…”

“என்ன பாப்பா சொல்ற? அவரோட பேசிப் பழகினது கூட இல்லையா?”

“இல்லை பா…”

அடுத்த சில நிமிடங்கள் வீடு மௌனித்திருந்தது.


“பாப்பா, இந்த விஷயத்தை நாங்க எப்படி சீரியஸா எடுத்துக்கறதுன்னு தெரியல?”

கலங்கிய விழிகளோடு, முதன்முதலில் ராகவைக் கண்டது முதல், சற்று முன் அவனை சந்தித்தது வரை கூறி முடித்தாள்.

அப்பா யோசனையாகிப்போனார். அடுக்களைக்குள் சென்றுவிட்ட அம்மாவின் விசும்பல் மட்டும் எட்டிப் பார்த்தது.