Saturday 8 August 2020

சீரக மிட்டாய் - வெள்ளை ரோஜா




"காதலின் சின்னம் சிகப்பு ரோஜா, வெள்ளை அமைதியைக் குறிக்கும்" என்றேன், நான். "காதல் மட்டுமே எனக்கு உலகளவு அமைதியைக் கொடுக்கிறது, வெள்ளை ரோஜா தான் வேண்டும்" என்றாள், அவள். அன்று முதல் இன்று வரை தினமும் ஓர் வெள்ளை ரோஜா மட்டுமே நான் என்னவளுக்கு வழங்கும் காதல் பரிசு. இன்று எங்கள் காதலின் ஏழாவது பிறந்த நாள். ஒன்றல்ல, ஒரு நூறு வெள்ளை ரோஜாக்களைக் கொடுத்துவிட்டு முத்தம் வைக்கிறேன், அவளது கல்லறையில்.


Thursday 6 August 2020

சீரக மிட்டாய் - பிள்ளை வரம்

 


"இந்தாமா, வாங்குன கடனுக்கு வட்டி கொடுக்காம நாலு மாசமா உன் புருசன் ஏமாத்திட்டு திரியறான். இந்தக் கந்துவிட்டி கோவிந்தன் விவகாரமான ஆளு, காசு வரலனா இனியும் பேசிக்கிட்டு நிக்க மாட்டேன், அத்து போட்டு போய்கிட்டே இருப்பேன்." 

ஜன்னல் வழியே பதில் கூறுபவள், இன்று அவன் பேசியவற்றைக் கேட்டு ஈரக்கொலை நடுங்க அவன் காலடியில் வந்து விழுந்தாள். 

"அய்யா, எம்புருசன ஒன்னு செஞ்சுடாத சாமி, இந்தத் தாலிய வேணும்னா வச்சுக்க" என்று அவளிடம் எச்சம் இருந்த அரை பவுன் தங்கத்தாலியை நீட்டினாள், நிறைமாத வயிருடன், மண்டியிட்டபடி.

எதுவும் கூறாமல் வண்டியைக் கிளப்பியவன், கொன்னிமலைக்கோவிலில் பிள்ளை வேண்டி அவனது மனைவி ஏற்பாடு செய்திருந்த சிறப்புப் பூஜைக்கு வந்து சேர்ந்தான். 


சீரக மிட்டாய் - நெட்டையனும், குட்டையனும்





"ஏலே குட்டை, என்னை நம்பி எத்தனை சீவன் வாழுது தெரியுமாலே?!!"
"நெடு நெடுன்னு வளந்திருக்கியே தவிர விவரமில்லாத பய நீ. ஒதுங்க எடம் கொடுத்ததெல்லாம் பெருசில்லப்பு, நான் வயித்துக்கு உண்டி கொடுக்கேன். உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர் நெட்டையா..."
நெட்டையனும், குட்டையனும் தீவிரமாக தங்களின் அருமை பெருமைகளை என்றும் போல் அன்றும் விவாதித்துக்கொண்டிருக்க, ‘இவிங்களுக்கு வேற வேலையில்ல’ என்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டு அவர்களின் நண்பர்கள் சூழ்ந்திருக்க, கட கடவென பெருஞ்சப்தத்துடன் வந்த அந்த ராட்சச வண்டியின் இயந்திரக் கைகள், நெட்டையனையும், குட்டையனையும், அவர்களின் மற்ற நண்பர்களையும் வேரோடு பிடுங்கி வீசியது.

Tuesday 4 August 2020

சீரக மிட்டாய் - செவப்பியும், மஞ்சத்தாயும்




"அடியே செவப்பி, சீலைக்கு தோதா கையில நம்மள மாட்டிக்கிட்டு ஒய்யாரியா திரிவாளே அந்த அழகி எங்க பத்து நாளா காணல?"

"அதுதான் எனக்கும் தெரியல மஞ்சத்தாயி..."

இவர்கள் பேசிக்கொண்டிருக்க, பெட்டி திறக்கப்பட்டு மஞ்சள் மற்றும் சிகப்புக் கண்ணாடி வளையல்கள் மட்டும் வெளியேற்றப்பட்டன. அழகியின் கைகளில் அடுக்கப்பட்ட வளையல்கள் ஒருவரையொருவர் கண்டு சிரித்துக்கொண்டிருக்க, அடுத்த நொடியே ஒன்றோடொன்று படார் படாரென மோதப்பட்டு, உடைந்து சிதரின. ரத்தம் வடிய செவப்பியும், மஞ்சத்தாயும் கிடக்க, அழகியின் குங்குமம் அழிக்கப்பட்டு, கூந்தலில் சூடிய மல்லிகை பிய்க்கப்பட்டது.

Monday 3 August 2020

சீரக மிட்டாய் - ஒப்பாரிக் கிழவி

 


அந்தக் குப்பத்தின் அருகாமையில் நீண்டிருக்கும் ரயில்வே தண்டவாளத்தில் யாரோ அடிபட்டு இறந்து போன செய்தி அறிந்து ஒப்பாரி பாட்டெடுக்க வந்துவிட்டாள், கூன் விழுந்து, பார்வை மங்கி, பற்கள் தொலைத்த எண்பத்தி மூன்று வயதான, ஒப்பாரிக் கிழவி.  

"ஏ கிழவி, ஏதாவது எழவு வீட்ல பாடுனா நாலு காசு கிடைக்கும். வேவாத வெயில்ல இங்க ஏன் தொண்ட தண்ணி வத்த பாடிக்கிடக்கற?"

"எந்த உறவும் இல்லாம அம்பது வருசமா அனாதையா கிடக்கறவளுக்கு தான் இன்னொரு உசுரோட மதிப்பு தெரியும். என் கண்ணு முன்னாடி எந்த உசுரு போனாலும் என் சொந்தமா நெனச்சு அந்த சீவனுக்காக நாலு சொட்டு கண்ணீர சிந்தி, ஒப்பாரி வைப்பேன்…"


வானம் கருத்திருக்கு...

வட்டநிலா வாடிருக்கு...

எட்டருந்து பாடுறேனே...

ராசா நீ எங்க போன???



Sunday 2 August 2020

சீரக மிட்டாய் - சமாதான முத்தம்

 



அவளது அழுகை விசும்பலாகியும் கட்டில் மீதிருந்து எழாமல் கிடக்கிறாள். அவளது தேவையெல்லாம் நெற்றியில் ஓர் முத்தம் - சமாதான முத்தம். "எழுந்து வா, சாப்பிட" - காதில் விழுகிறது, ஆனால் ஒற்றை முத்தம் வேண்டி தவம் கிடக்கிறாள். "அடியே, புள்ளைங்களுக்கு பாடம் சொல்லித் தர வாத்தியாரா இருந்துகிட்டு, ஒரு வார்த்தை சொல்லிட்டேன்னு ஒரு மணி நேரமா அழுதுகிட்டு இருக்கியே?!!" என்று கூறிக்கொண்டே அவளருகே வந்த அவளது தாய், அவளது முன் நெற்றியில் விழுந்திருந்த கேசத்தை ஒதுக்கி முத்தம் வைத்து, முகத்தை அழுந்தத் துடைத்துவிட்டாள். விசும்பல் தொலைந்து பற்கள் மின்ன சிரித்தவள், "நான் கிழவியானாலும் உனக்கு எப்பவும் குழந்தை தான்" என்றுவிட்டு தாயை இழுத்து அருகே அமரச் செய்தவள், அன்னை மடி மீது தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

சீரக மிட்டாய் - இசையரசன்




அரங்கத்தின் வெளியே மக்களைக் கட்டுப்படுத்த பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 
உலகறிந்த இசையரசனுக்கு உள்ளூர் அரங்கில் பாராட்டு விழா.
தன்னை ஒரு முறை கண்ணாடியில் சரி பார்த்துக்கொண்டு, இறக்குமதி செய்யப்பட்ட பென்ஸ் காரில் ஏறி அமர்கிறான்.
"டேய், உனக்கு என்ன வருமோ, என்ன புடிக்குமோ அதை செய், அதை மட்டும் செய்" என்று அன்று தந்தை கூறியது, இன்று வரை அவனது நினைவில் உள்ளது.
"உங்க புள்ளைக்கு படிப்பெல்லாம் ஏறாது, இசை இசைனு கடைசில பீச்ல ஹார்மோனியத்தோட நிக்க போறான்" என்ற தலைமை ஆசிரியர் முன்பொரு நாள் அவனை பள்ளியிலிருந்து நீக்கினார்.