Sunday 9 December 2018

அனைத்தும் அழகு!!

சித்திரங்கள் ஏந்தி நிற்கும் ஒவியனின் முத்தம் 
மத்தளங்கள் வாய் திறந்து கொட்டுகின்ற சிரிப்பு 
ராட்டினத்து குதிரையின் மேல் அரசனாகும் பிள்ளை
ராத்திரியில் ரகசியம் பேசும் தென்னைகளின் ஓலை

காலையில் சிரித்து நிற்கும் நந்தவனத்து ரோஜா
காற்றலையை இசையாக்கும் துளையிட்ட மூங்கில்
மழைக்கரு சுமந்து செல்லும் தென்கிழக்கு மேகம்
அந்தியிலே அருள் சேர்க்கும் மாடத்து விளக்கு

மார்கழி வர்ணங்களை ரசித்திருக்கும் பூசணிப்பூ
மான்விழி கண்டு மகிழ்ந்து நெளியும் மீசைப்பூ
இனிப்பு நினைவுகள் தரும் கண்ணோரக் கசிவு
இனிய நாள் என குறி சொல்லும் நாள் காட்டி

எங்கும் எதிலும் அழகின் ஆடம்பரம்
காண்பவை யாவிலும் அவனின் தோரணம்
கண்களும் பழகட்டும் அழகினைத் தேடிட
உள்ளமும் வாழட்டும் அனைத்தையும் போற்றிட!!

Friday 7 December 2018

களிமண் கடவுள்கள்

அவன் களிமண் கடவுள். அவனது விரல்களின் சொல் கேட்டு, களிமண் சகதி பானைகளாய் ஒய்யார வளைவுகளோடு செழித்து நிற்கும். எத்தனை பானைகள் வடித்தாலும் ஒவ்வொன்றும் மற்ற ஒன்றோடு ரெட்டைப் பிறவியாய் பிசிறு வேறுபாடின்றி ஒன்றுபோல் இருக்கும். சிறிய வகை ஒன்று, பெரிய வகை ஒன்று - இரண்டே வகைகளின் ஜித்தன். அன்னையின் ஜாடையில் பிள்ளையைப் போல், சிறிய பானைகள், பெரியவைகளின் பால பருவம்.

இவனும் களிமண் கடவுள் தான். இவனது விரல்கள் இவன் சொல் கேட்பது அரிது. பானைகளை வடிக்கிறான்... வடிக்க முயல்கிறான்… ஏனோ ஒவ்வொன்றும் விநோதமாக வடிவெடுத்து நிற்கிறது, கண்களை மூடிக்கொண்டு இடக் கையால் தீட்டிய ஓவியம் போல்.

அவனது பானைகள் ஐந்து காசு என்றாலும், அள்ளிச் செல்ல ஜன அலை மோதும். தரத்தில் ஒத்திருந்தாலும் இவனது நெளிந்த பானைகள் இரண்டு காசு தான். பேரம் பேசினால் ஒரு காசு தள்ளுபடி செய்வான்.

எவனோ ஒருவன் வந்தான். அவன் வீட்டு திண்ணையில் சென்றமார்ந்தான். அலட்டிக்கொண்டான் அவன். தனது மூட்டைகளை எடுத்துக்கொண்டு இவன் வீட்டு திண்ணைக்கு இடம் பெயர்ந்தான். அரைக் குவளை கஞ்சி கொடுத்தான் இவன். என்றும் போல் இன்றும் பரந்தாமனை எண்ணிக்கொண்டு உறங்கிப்போனான், நாளையாவது சந்தையில் நெளிந்தவைகளுக்கு வாழ்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு.

விடியற்காலை. அவன் எழுந்தான், சந்தையில் கடை விரிக்க, பானைகளை எடுத்துச் சென்றான். இவன் எழுந்தான். பராந்தாமனை எண்ணினான். திண்ணையில் உறங்கும் வழிப்போக்கனுக்காக இரவு பத்திரப்படுத்திய தனது பங்கு கஞ்சியை எடுத்துவந்தான். காலி திண்ணை வழிப்போக்கன் அவன் வழி சென்றுவிட்டதைக் கூறியது. நெளிந்த பானைகள் ஒவ்வொன்றும் வானவில் வர்ணங்களால் அலங்கரிக்கப்பட்டு சிரித்தபடி, வழிப்போக்கனின் நன்றியைக் கூச்சலிட்டன. அவனது பானைக்கூட்டத்தில், முதல் பானை விற்றது பத்து காசிற்கு, இறுதிப்பானை விற்கப்பட்டது இருவது காசிற்கு. மடியில் சில்லறை குலுங்க, இவன் சிரித்துகொண்டு வந்தான், பரந்தாமனை எண்ணியபடி!!

Wednesday 5 December 2018

மழைக்குருவி

மழைக்குருவி நீ மனதுள் சிலிர்க்க
சிறகு தெறிக்கும் சாரல் எனை நனைத்ததடி
சித்து விளையாட்டு உன் விழிகள் படைக்க
சுற்றும் பூமியும் ஸ்தம்பித்து நிற்குதடி
கார்த்திகைக் குளிரே நீ வருடிச் செல்ல
சருகும் இங்கே வண்ண சிறகானதடி
மோகனக் கொலுசுகள் மந்திரம் தூவ
கட்டுண்டு மனம் உன் பின்னே செல்லுதடி
உன்தன் நந்தவனத்தில் வாழ்ந்திடவே
என் வீட்டு ரோஜாக்கள் மதில் தாண்டுதடி
தாவணி வாசம் என் சுவாசம் சேர
அணுக்களிலெல்லாம் காதல் வழியுதடி
உதடு தெறித்த வார்த்தைகள் எல்லாம்
இதய குடுவைக்குள் உயிரோடு வாழுதடி
மகுடி கண்ட பாம்பினைப் போலே
உன் அசைவிற்கு என் உயிர் இசைக்குதடி!!

Monday 3 December 2018

என்னை அறிவாயோ??!

தூரத்து நிலவு கூட மனமிரங்கி
தரை சேர்ந்து என்னோடு துணை நடக்கும்
துப்பட்டா புது மலரே நீ மட்டும்
காத்திருக்கும் எனை கடந்து போவதென்ன?

தினம் நடக்கும் ஓராயிரம் ஒத்திகை
கண்ணாடியும் கை நீண்டு எனை அணைக்கும்
கருணை இல்லா பெண் பூவே நீ
கண்கொண்டு எனை பார்த்தால் என்ன?

வணக்கங்களோடு வாழ்த்துக்களும் கூறி
தினமும் குறுஞ்செய்தியில் உனை துரத்த
பன்னீர்ப்பூ விரல் கொண்டு நீயும்
ஒரு 'மின்'நகை பகிர்ந்தால் என்ன?

நேற்று கடலோரம் காதல் நட்டவர்
இன்று மணமுடித்து தொட்டில் ஆட்டுகிறார்
ஆண்டுகள் ஆறு ஓடியும் நீ
என் பெயராவது அறிந்துகொண்டால் என்ன?

Saturday 1 December 2018

நீ வா...

சித்திரை மேகங்களின்
சர்க்கரை நீர் பந்தலில்
சித்திரமே என் கைக்கோர்த்து
சித்தம் நனைந்திட வா!

சொப்பன விண்வெளியில்
சொர்கத்து பொன் விரிப்பில்
அற்புதமே என் தோள் சாய்ந்து
அமைதியைத் தந்திட வா!

பட்டாசு மொழிகளோடு
மத்தாப்பு மென்னகை சேர்த்து
கற்பகமே என் விழி பார்த்து
கவிதைகள் இயம்பிட வா!

நட்சத்திர மாலையிட்டு
நெற்றியில் தேன்முத்தம் பதித்து
உத்தமமே என் மனம் நிறைந்து
உயிரில் நீரூற்ற வா!!

உயிருள்ள சுருக்குப்பை!

மூப்பிடம் கைதாகி - நரை
சூடி, கோல் ஊன்றி
அழையா விருந்தாளி 
எமனை எதிர்நோக்கி
விடுதலை பெற காத்திருக்கும்
உயிருள்ள சுருக்குப்பை!

ஆட்டம் ஆடும் வரை
ஓட்டம் ஒடுங்கும் வரை
சட்டைப்பை நிறையும் வரை
பூமிக்கு பாரமில்லை

நடை தளர்ந்து
ஓய்ந்து அமர்ந்தாள்
கட்டிலின் கால்களும்
கேலி பேசும்
கைகள் நடுங்க
கண்ணொளி மறைய
தானே தனக்கு
பாரமாகிப் போகும்

பிள்ளைகளின் ஒதுக்கம்
உறவுகளுக்கு ஒவ்வாமை
சீர் குலைவின் ஒப்புவமை
தனிமையின் ஒப்பனை

"யார் தந்தது எமனுக்கு
'தருமன்' என்ற பட்டத்தை?
மாற்று குறையாதவன் தருமன்!
கடமைத் தவறாதவன் தருமன்!
கிழப்பருவம் எய்தி, நான்
கிடப்பதன் அர்த்தம் என்ன?
அள்ளிச் செல்லாமல், எமனும்
எங்கோ அலைவதும் என்ன?"

வாழ்வு சிறக்கக் கல்வி
இளமை இனிக்கக் காதல்
பெயர் சொல்ல பிள்ளை
வறுமை ஒழிக்க செல்வம்
பசியில் சோறிட வேண்டும்
மட்டானால் தேனும் கசக்கும்
வாழ்வின் தேவைகள் வேண்டும்போது
தட்டினால் ஆர்வம் தீரும்
நேரத்தே வராது போனால்
மரணமும் மரியாதை இழக்கும்!!

தஞ்சம் வரவா?!!

விழியைத் திருப்பி என்னைப் பாரடா
எனை அள்ளி உன்தன் மனதுள் ஊற்றடா
உலகத்து மொழிகலெல்லாம் நமக்கு வேண்டுமோ?
என் மனதை உரைத்திடும் மொழியும் இருக்குமோ?

சிறகுகள் விரித்து நிற்கிறேன் பறந்திட
வானவில்லில் காதல் வண்ணம் சேர்த்திட
மலர்களைக் கையேந்தி என்மீது தூவடா
வளர்பிறை கொண்டு ஊஞ்சலும் செய்யடா

ஆலமரமாகிய காதலைத் தருகிறேன்
ஆணிவேராகி உயிரை சுரந்திடு
ஆளங்கட்டிகளைத் தூவிச் செல்லாதே
காதல் குமிழிகளை உடைத்துப் போகாதே

அரை நிறைவு சித்திரம் நான்தானோ?!
விரல் தூரிகை எனக்காகத் தாராயோ?!
பகல் நிலவு நான்தானே தெரியாதோ?!
உன் கனவுகளில் உலவிட நான் வரலாமோ??!!

நெஞ்சக்கதவைத் திறந்து எட்டிப்பார்த்திடு
வஞ்சி எந்தன் முகத்தை அங்கே தேடிடு
நெஞ்சம் கொண்ட காதலை உணர்ந்திடு
தஞ்சம் வர தவிப்பவளின் கைக்கோர்த்திடு!!

முத்தம் தந்திடு!!

முட்களோடு சொற்கள் செய்து
காயம் தந்தாய் - எனது
கண்ணீரும் சிகப்பாய் மாறி
சிறகு கிழிந்ததே!

தென்றல் எந்தன் வாசல் வர
காத்து நிற்கிறேன் - இன்றோ 
புயல் வீசி என் கூடு சிதைய
பார்த்திருக்கிறேன்!!

மருகி மருகி எந்தன் உள்ளம்
குழந்தை ஆனதே - நீயும்
விலகிச் சென்ற நொடியை எண்ணி
அழுது கரையுதே!!

பகலெல்லாம் காத்திருக்கும் 
மல்லி அல்லியும் - இரவில்
சந்திரனைக் கண்ட பின்னே 
மெல்ல அவிழுமே!

காலமெல்லாம் காத்திருப்பேன்
காதல் சேமித்து - நீயும்
காதல் சொல்ல தவம் கிடப்பேன்
எனது உயிர் காத்து!!

மனம் இரங்கி விழிகளாலே
காதல் சொல்லிடு - இல்லை,
மரித்த பின்னே கல்லறைக்கு
முத்தம் தந்திடு!!

என் இமைகளில்...

தேடித் தேடிப் பார்க்கிறேன்
தொலைந்துவிட்ட என்னை
நிச்சயம் முயன்று முத்தமிடுவேன்
உனைக் காட்டிய கண்ணை 
தெவிட்டாமல் பார்த்திருப்பேன்
என் விழி குடிக்கும் உன்னை 
கண்ணாலா உன் கண்ணசைவில்
துளிர்க்கும் எந்தன் பெண்மை!!

காட்சிகள் அனைத்தும் திரிந்து
நீ மட்டுமே நிற்க,
காதல் தழலில் கசங்குகிறேன்
நான் என்ன செய்ய?!!
கண்ணுள்ளே கனவில் மட்டும்
வந்துபோவதை நிறுத்து
என்னை உனதாக்கிக்கொள்
என் இமைகளில் முத்தம் கொடுத்து!!!

கல்யாணம் ஓகே, ஆனா...

அதிகாலையில் நெற்றியில் முத்தம்
கூடவே காலை வணக்கம்
ஃபில்டர் காபி ரொம்ப பிடிக்கும்
அது சூடா இருக்க வேண்டும்

இட்லி, தோச, கெல்லாக்ஸ்
ஏதோ ஒன்னு, உன் இஷ்டம்
ப்ரேக்பாஸ்ட்டு மட்டும் செய்யல 
மவனே, உனக்கு தான் கஷ்டம்

லஞ்சுக்கு டப்பால சோறு
வேணாம்ப்பா செம போரு
கேண்டீன்ல சாப்பிட்டுப்பேன் பர்கரு
ஏன்னா, நான் சாப்ட்வேர் என்ஜினீயரு

ராத்திரி எட்டு மணிக்கு வருவேன்
சத்தியமா டயர்டா இருப்பேன்
உனக்கு பிடிச்ச சமையல் செய்
அதையே எனக்கும் வை

உன் சட்டைய நீயே துவச்சுக்கோ
உன் பேண்ட்டுக்கு இஸ்திரி போட்டுக்கோ
வீட்டை பெருக்கல், துடைத்தல்
முடிஞ்சா நீயே பார்த்துக்கோ

சனிக்கிழமை ஃபோரம்ல ஷாப்பிங்
ஞாயிறு சத்தியம்ல சினிமா
வீக்கெண்டு பிளானும் நீயே யோசி
ஏன்னா, நாங்கெல்லாம் ரொம்ப பிஸி!!

வீட்டு வேலையெல்லாம் சான்ஸே இல்ல
நான் தான் 'டாடி'ஸ் லிட்டில் பிரின்ஸஸ்'ல!!
கண்டிஷனுக்கு பயந்து நழுவாத
அப்புறம், 'வட போச்சே'னு அழுவாத!!

கல்யாணம் கட்டிக்கோ!!!

என்னை பார்த்துக்கோ
என் காதலை ஏத்துக்கோ
நான் எழுதும் கவிதையெல்லாம் 
பிடிக்கலனாலும் ரசிச்சுக்கோ!!

கொஞ்சம் சிரிச்சுக்கோ 
நிறைய முறைச்சுக்கோ
என் கன்னத்தை மாங்காவபோல்
தாராளமா கடிச்சுக்கோ!!

இம்சை பண்ணிக்கோ
லவ்ஸ பொழிஞ்சுக்கோ
குட் மார்னிங், குட் நைட்
என் நம்பருக்கு அனுப்பிக்கோ!!

டிரைவரா யூஸ் பண்ணிக்கோ
கிரெடிட் கார்டா வச்சுக்கோ
நான் ஜீரோவா இருந்தாலும் 
ஹீரோவா ஏத்துக்கோ!!

தூக்கி போட்டு மிதிச்சுக்கோ
துவச்சு தொங்க விட்டுக்கோ
ப்ளீஸ் ப்ளீஸ் பேபி என்னை
கல்யாணம் மட்டும் கட்டிக்கோ!!!