Sunday 25 February 2018

குழல்காரன்

அதோ, அந்த மலையின் உச்சியிலே, தனது புல்லாங்குழலின் துளை வழி, தனது உயிரில் ஊற்றெடுக்கும் இசையை, ஆகாயமெங்கும் அலையவிட்டான். ஒலியலைகள் தீண்டிய வெண்மேகங்கள் எல்லாம், ‘யாரோ அவன்?!’ என்று ஆர்வங்கொண்டு, அவன் எதிரே திரண்டனர். முதல் முறையாக, மேகங்கள் நனைந்தன மழையில்… இசை மழையில்! தூரத்து தேசத்திற்கு நீர் வார்க்க, தன்னுள் அடைகாத்து வைத்திருந்த நீர்த்துளிகளை, அவன் மேல் தூவி, இசை கசியும் உயிருக்கு, சில்லென சுகம் கூட்டினர். அதனை சப்புகொட்டி ருசித்துவிட்டு, புல்லாங்குழலை முண்டாசுக்குள் சொருகி வைத்து, மலையை விட்டு மெல்ல இறங்கி, ஆற்றங்கரையருகே வந்தான்.

சலசலக்கும் நீரோடையில், ஜொலிஜொலிக்கும் சூரியன், இவனை சிலுசிலுவென சீண்டியது. முண்டாசுக்காரனின் புல்லாங்குழல், அவனின் பெருமிதத்தை மொழி பெயர்த்துக் கொடுத்தது. ஓடையினோடே ஓடும் மீன் கூட்டம், தலை தூக்கி இவனைப் பார்த்துச் சென்றது. நாரைக் கூட்டத்தின் தலைவன், நன்றி மறவாமல், இவனுக்கு மீன்கள் இரண்டினைப் புசித்திடத் தந்தது.

உண்ட களைப்பில் உறங்கி எழுந்து, மெல்ல நடந்து வனத்துள்ளே சென்றான். காலின் நோவை நீக்க, நெடிய மரத்தின் அடியில் அமர்ந்தான். அந்த மந்தகாச வனத்தின் வதனம் அவனை மயக்கிட, மீண்டும் புல்லாங்குழழே அவனின் காதல் கவிதையை வாசித்தது. அவன் மேல் காதல் வயப்பட்ட அந்த மரம், அதன் கனிகளில் மிகவும் ருசியான ஒன்றை, அவன் மடியில் கிடத்தியது. அவன் தலை உயர்த்தி அந்த மரத்தினைக் கண்டு சிரிக்க, அதுவோ நாணத்தினால் தனது கிளை எனும் கைகளால், முகத்தை மூடிக்கொண்டது. அமுது சொட்டும் கனியை ருசித்துட்டு, மீண்டும் நடக்கலானான், சந்தையை நோக்கி.

பரபரப்பான சந்தையின் மத்தியில், தேனீக்களைப்போல பரபரக்கும் மனித கூட்டத்தைக் கண்டான். கவலை, அச்சம், சோர்வு, பதட்டம், சினம், பொறாமை, சோகம், வெற்றி, உழைப்பு, தோல்வி என்றனைத்தையும் அந்த முகங்களில் கண்டான். சட்டென சுணங்கிய அவன் மனம், புல்லாங்குழலை எடுக்கச் சொன்னது. இசை வழியே தனது கைகளை நீட்டி, சிலரது தோள்களில் தட்டிக் கொடுத்தான். சிலரோடு கை குலுக்கினான். சிலரின் தலையை கோதினான். சிலருக்கு, கை தட்டினான். வாடிய மனம் மெல்ல புத்துணர்வு பெற்றது. அந்த புத்துணர்வு முழுவதுமாய் அவனைக் கவரும் முன்னே, முண்டாசுக்காரனின் உரிமையாளன் அவனைக் கடிந்து பாடல் பாடலானான். அவன் கையிலிருந்த குழலைப் பிடிங்கிக்கொண்டு, கோலினைக் கொடுத்தான். அதோடு நில்லாது, அவனை தரதர வென இழுத்துச் சென்று, வெள்ளாட்டுப் பட்டிக்குள் தள்ளினான்.

தள்ளப்பட்ட வேகத்தில் தடுமாறி சருக்கியவனின் முழங்கையில் சிராய்ப்புகளும், ரத்தமும். மெல்ல எழுந்து தனது நிலையை உள்வாங்கி, ஆடுகளை மேய்க்கத் தொடங்கினான். மலையின் உச்சியில், விரும்பாத வெள்ளாடுகளும், விரக்தியாய் குழல்காரனும். வானில் ஒரு மேகம் கூட இல்லை. முழுதும் நீலம் மட்டுமே. இங்கும் அங்கும் ஓடியோடித் தேடி நின்றான். மேகத்தின் குழந்தைக்குட்டி கூட கண்ணில் அகப்படவில்லை. நொந்து சரிந்த மனதோடு, மலையினின்று உருண்டு நிலம் சேர்ந்தான்.

ஆற்றங்கரையில் ஆடுகள் தாகம் தீர்க்க, இவன் தாகம் மட்டும் தீர்ந்தபாடில்லை. முழங்கை குருதியினைக் கழுவினான். வலி விண்ணென்று தெறித்தது. ஒடுங்கிய வயிரோடு அமர்ந்திருந்தான். இவனைக் கண்டும் காணாதது போல் நாரைகள் இவனைக் கடந்து சென்றன.

அழுகின்ற மனதை தடவிக் கொடுத்தபடி, வனத்திற்குள் சென்று, காதலாகிய மரத்தின் நிழலில் அமர்ந்தான். இவனைக் கண்ட நொடியே, அந்த மரம், தனது கையெனும் கிளைகளை தனது நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றது. “பழம் தான் இல்லை… நிழல் கூட எனக்கு இல்லையா?” என்று மன்றாடினான். பதில் கூறாது மரமாய் நின்றது அந்த மரம். அவனின் மனதிற்குக் கூரான நகங்கள் முளைத்து, துடிக்கும் இதயத்தைக் கீரத்தொடங்கியது.

எழுந்தான். நடந்தான். ஆடுகளைப் பட்டியில் அடைத்தான். உரிமையாளன் அரைஞாண் கயிற்றில் சொருகியிருந்த குழலை உருவினான். அவன் தந்த கோலை உடைத்து, குப்பையில் வீசிவிட்டு, ஓடினான். அதிசயத்திலும் அதிசயமாய், அவன் கால்கள் நோகவில்லை. ஓடியோடி, நிலங்கள் அனைத்தையும் கடந்தான். அவன் முன்னே, இமயம் போன்றதொரு உயர்ந்த மலை எழும்பியது. அதன் மேலே ஏறினான். உச்சிக்கு ஓடிச்சென்று, ஆகாயத்திற்குள் தாவினான்.

அவன் சிந்தையின் கூற்றோ! விந்தையின் விடியலோ! ஊழின் உதவியோ! அண்டம் சமைத்தவனின் அன்போ! தாவியவன் பறந்து சென்று வேறொரு உலகில் விழுந்தான். அகண்ட வெளியில் ஆயிரம் மனிதருக்கு மத்தியில் விழுந்தான். ஆயிரம் முகமும் கொண்ட கண்கள் அனைத்தும், இவனை நோக்கின. அவனது கை, குழலை அவனது இதழோடு உரச, உயிர் பெற்றது, அவனது ‘இசை’ உயிர். குழல் தந்த கானத்தில் மந்தைகளாய் மக்கள் மயங்கினர். பில்லி சூனியம் வைத்தது போலே, சின்ன சிணுங்கள் கூட இன்றி, இவனையே தொடர்ந்தனர் அனைவரும். இவன் கண்களில் பெருகிய நீர், கன்னத்தில் வழிந்து, நெஞ்சைக் குளுப்பாட்டிய பின்னரே வாசிப்பை நிறுத்தினான். மதி மயங்கி, கிறங்கிய கூட்டம், இரு கைகளையும் உயர்த்தி ஆர்ப்பரித்தது. தரையில் நின்றிருந்தவன், தோள்களின் மேல் ஏற்றப்பட்டான். அவன் தலையில் மட்டும் பொற்காசு மாரி பொழிந்தது. அவன் கந்தல் துணி, பட்டானது. அவன் நாவிற்கு அக்ரூட்டுகளும், தேனில் குழைத்த பிஸ்தாக்களும், பாலும், பழச்சாறும் படைக்கப்பட்டது. எங்கிருந்தோ பறந்து வந்து, இவன் கழுத்தில் விழுந்தது வைர மாலை. அந்த ஆரவாரம் தாலாட்டாய் அவன் செவி சேர, அந்த கூட்டத்தில் ஒரு மனிதரின் மடியில் உறங்கிப்போனான்!!

Tuesday 20 February 2018

ஆயுள் முழுதும்!!

மழையில் நடந்து செல்கிறேன். எங்கிருந்தோ வந்த நீ குடையொன்று நீட்டுகிறாய்!! இதுவரை உளர்ந்திருந்த ‘நான்’, இப்பொழுது உன் குடைக்குள்ளே முழுதும் நனைகின்றேன். போதும், விலக்கு உன் குடையை! எனது தோழியின் பரிகாசத்திற்கு, நான் என்ன பலி ஆடா? இல்லை, உன் விழி வழியும் அமுதத்திற்கு நான் தான் வடிகாலா? முழுதும் நனைந்தது நான் மட்டுமே. என் கண்களுக்குள் கனல் கங்குகள் இன்னும் புகைந்து கொண்டுதான் இருக்கின்றன. உன் மீது எறிந்திடவா?

இன்றும் வந்து நிற்கின்றாய். நேற்று ஊதா நிறக்குடை. இன்று பச்சை நிறம். நாளையும் வருவாயோ! என்ன நிறம் முடிவு செய்துள்ளாய்?! எனது கண்கள் அக்னிப் பந்துகளை இப்பொழுது தயார் நிலையில் வைத்துள்ளன. உன் மீது ஏவுகிறேன். பிடித்துக்கொள். என்ன ஆயிற்று? குடைகளில் பொத்தல்களா? இனியும் இச்சாலை வழி வராதே.

அடப்பாவி! இன்றும் வந்து நிற்கிறான். ஒன்றுக்கு இரண்டாக குடைகள் வேறு. பலே! பலே! என்ன, வாய் பிளந்து நிற்கிறான்? சிந்தித்தபடியே தலை கவிழ்ந்து பார்த்தால், என் இதழ்கள் சிரித்துக்கொண்டிருக்கின்றன. அட சதிகார செவ்விதழ்களா… உங்களுக்குத் தேனும், பாலும் கொடுத்தது இதற்குத்தானா?? அய்யோ, இனி எப்படி அவனை பார்ப்பேன்?!

விரிந்த குடைக்குள் நின்றுகொண்டு, இவன் நனைந்து கொண்டிருக்கிறான். முட்டாள் மன்மதன்!!! ஓடிவிடவா? நின்று கிடக்கவா? என்ன சத்தம்?! அவன் தான் என்னை நோக்கி வருகின்றான். இதழே, இப்பொழுதாவது என் பேச்சைக் கேளேன். விழியே, எங்கே உனது அனல் உருண்டைகள்? ம்ம்… எடுத்து வீசு… ஹ்ம்ம், நீங்களும் துரோகிகள் வர்க்கம் தானா? பனிப்பூவை அவன் மீது வீசிவிட்டு, அனல் குழம்பை என் காலடியில் ஊற்றுகிறீர்கள். என் கால்கள் நடுங்குகிறது. உங்களை இனி நம்பப்போவதில்லை. உங்களை (கண்களை) இறுக மூடப்போகிறேன். மூடிவிட்டேன். என்னது கையில் ஏதோ திணித்துவிட்டு, எங்கு செல்கிறான்? கண் விழித்துப் பார்த்தால், குடையை என்னிடம் கொடுத்துவிட்டு நடந்து செல்கிறான். ஏனடா உன்னோடு அழைத்துச் செல்ல மாட்டாயா? உன் குடைக்குள் எனக்கு இடம் இல்லையா? அழுகிறேன், போ!

மீண்டும் அதே இடத்தில் நிற்கிறேன். அவன் இல்லவே இல்லை. உன் விழி வீச்சைக் கண்டிட, ஆசை கொண்டுள்ளேன். ஆசை அல்ல, பேராசை! பேய் போல உருமாறி என்னை தின்னும், பேராசை. அந்த பேயிடம் இருந்து மீட்டுவிடடா. வந்து நிற்பாயா? நீ தந்த குடைக்குள் பதுங்கட்டுமா? நீ வரும் வரை உனது குடையே சரண். என்ன மாயம் இது! குடைக்குள், நேற்று நான் சிந்திய கண்ணீர் முத்துகள் தோரணமாய்த் தொங்குகிறது. அதைக் கூட சேமித்து வைத்தாயா? அட, மாயக்காரா… வித்தைக்காரா… ஜாலக்காரா… என் இனிய முட்டாள் மன்மதா!

ஏதோ ஒரு உருநிழல். திரும்பிட பயம். இருப்பினும் திரும்பினால் அவன்! போடா… இங்கு தான் ஒளிந்துகொண்டு என்னை பார்த்தபடி நின்றிருந்தாயா? எனது தவிப்பு உனக்கு தேனமுதோ! என்ன, கண்ணீர் முத்துக்களைப் பிடிக்க கை நீட்டுகிறாயா? இந்தா என் துப்பட்டாவை வைத்துக்கொள். இதுதான் உனக்கு நான் கொடுக்கும் தித்திக்கும் தண்டனை… ஆயுள் முழுதும்!!

Sunday 18 February 2018

வெள்ளை நிற வயலட் பூக்கள்!!

இதோ என் கண் முன்னே விரிந்திருக்கிறது, வயலட் நிற பூக்களின் தோட்டம். பூக்களின் வாசமெல்லாம் ஒன்று திரண்டு, என்னை தரையினின்று மெல்ல உயர்த்துகிறது, முகிலினம் போல். கண்களை மூடிக்கொண்டு, அந்த வாசத்தின் ரூபத்தை உணர கைகளால் துளாவுகின்றேன். அந்த வாசக்குவியல், என் கழுத்து மடிப்பில் கிச்சுகிச்சு மூட்டி, என் சுவாசத்தில் பதுங்கிக்கொண்டு, என் உள்ளத்துக் கதவினை தகர்த்துவிட்டு, உள்ளே சென்றது. சென்றதோடு நில்லாமல், என் உயிரின் அடித்தளம் வரை வருடிவிட்டு, அணுக்களில் அதன் துளிகளைக் கலந்துவிட்டது. கண்களை மூடி நிற்பதால், பகலும் தெரியவில்லை, இரவும் தெரியவில்லை. இரவில் நிலவு என்னை உலுக்கியபோது, கண்களைத் திறக்கிறேன். ஓடிச்சென்று என் கூட்டுக்குள் பதுங்கிக்கொண்டேன். இதோ என் ஜன்னலின் அருகே நிற்கின்றது பால்நிலா. என் முகம் காணவா?? சிவந்திருக்கும் என் கன்னங்களைக் கண்டு அது பரிகாசம் செய்திடும். நான் அறிவேன்!

மஞ்சளை அள்ளிப் பூசிக்கொண்டேன், கன்னத்துச் சிகப்பு மறையும் வரை. பொன்மேனியாள், மஞ்சள் பூசிக்கொண்டு தகதகவென ஜொலிக்கின்றேன். இப்பொழுது நிலவின் எதிரே சென்று நிற்கிறேன். என்னைக் கண்டு “பேதையடி நீ” என்று சிரிக்கிறது அந்த குறும்பு நிலவு. என்னவென்று புரியவில்லை. “உன் கன்னச்சிவப்புகள் பொங்கி, உன் தோள்களின் மேல் சிந்திக்கிடக்கின்றன... அதை மறந்துவிட்டாய்!” என்றது. அவசர அவசரமாக அந்த சிகப்புத் துகள்களை நான் தட்டிவிட, அவையெல்லாம் பறந்து வந்து என் கன்னங்களில் ஒட்டிக்கொண்டன. என் தடுமாற்றத்தைக் கண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்த வெண்ணிலா, “அழகியடி நீ!” என்று கூறி, எந்தன் இதழ்களில் முத்தம் வைத்தது.

தினமும் இதே அரங்கேற்றம். அந்த வயலட் மலர்கள் என்னை பகலில் அழைக்க, இந்த நிலவு என்னை இரவில் துரத்த, எனக்குள் என்னை விழுங்கும் மலர்கள் மலரத் தொடங்கின. அவ்வப்போது வீசிச்செல்லும் வாடைக்காற்று, அந்த மலர்களுக்குத் தண்ணீர் தெளிக்க மறக்கவில்லை. என் இதழோரப் புன்னகை தான் அனைத்திற்கும் ஒரே பதில். என் ஒற்றை பதில்!

இதோ ஓடிச் செல்கிறேன், அந்த வயலட் மலர்களின் தரிசனத்திற்கு. வனத்தின் நடுவே நிற்கிறேன், ஆனால் மலர்கள் எல்லாம் எங்கே? ஒன்றைக் கூட காணவில்லை. வாசம் மீண்டும் என்னைத் தீண்ட, அதன் வழியே தவழ்ந்து செல்கிறேன். சட்டென ஏதோ என் கழுத்தில் விழ, ஒரு நிமிடம் உயிர் நீங்கி திரும்பியது. அந்த சில்மிஷப் பூக்கள் ஒன்று கூடி மாலையாகி, இதோ என் தோள் மேல்!! இரண்டு மலர் பந்துகள் எங்கிருந்தோ பறந்து வந்து, என் உள்ளங்கைகளைப் பற்றி, என்னை ராட்டினம் போல் சுற்றின. எனது சிரிப்பொலி வான் முட்டி மீண்டது. அந்த பூவனம் முழுதும் என் காலடி ஓசைகள். என்னை, ஒளிந்துகொண்டு ரசிக்கும் பட்டாம்பூச்சிக் கூட்டம் என்ன முணுமுணுக்கின்றன!! ஓ! சிறகடிக்கும் என் விழியைக் கண்டு பொருமலோ! ஜொலிக்கும் என் நிறம் கண்டு பொறாமையோ!! அனைத்து அழகையும் நான் அப்பிக்கொண்டு நிற்கிறேன். “சபிப்பதை விட்டு, என் காதோடு கதைகள் பேசுங்கள்… கேட்கிறேன்!”

என் கழுத்தில் இருந்த மாலை மெல்ல இறங்கி, என் கால்களைச் சுற்றிக்கொண்டது. “அய்யோ விடுங்களேன், நகர முடியவில்லை.” மண் பார்த்து நொந்த என் விழிகள், உயர்ந்து விண் பார்க்க பயணித்தபோது, இடையே கண்ட உருவத்தில் என் விழிகள் பதிந்து போயின. அவன் தான்! அரூபமாய் என்னுள் சுற்றியவனின் ஸ்வரூபம்!! மலர் மாலை என் கால்களினின்று விலக, நான் கூறும்முன்னே, விடு பட்ட என் கால்கள் விரைந்தன அவனிடம்.

கண்கள் மூடி, கைகள் பரப்பி, விண்ணை நோக்கி நிற்கின்றான். நானோ நாணத்தால் அவன் முன்னே சென்று நில்லாது, அவன் பின்னே தயக்கத்தோடு மயங்குகிறேன். நொடியில் கண் விழித்து, என்னை திரும்பி நோக்கினான். அவனது முகம்… அந்த கந்தர்வ முகம்… என்னுள்ளே மலர்ந்த மலர்கள் ஒவ்வொன்றிலும் மின்னுகிறது. மாயவன்! என்னை ஆட்கொள்ளவந்த, என் மாயவன்!! என் சிந்தையை முடக்கி, சிந்தனைகள் பிறக்கும்முன்னே என்னை முழுதும் ஆட்கொண்டுவிட்ட என் மாயவன்!!!

என்னை துரத்தும் நிலவிற்காக நான் கால் நோகக் காத்திருந்தேன். உலா முடித்து மெல்ல வந்தது என்னிடம். “எனது இதழ்கள் இனி உனக்கல்ல” என்று கண்டித்தேன். மனம் வருந்தி, முகம் கருத்தது அந்த வெண்ணிலவிற்கு. “போடி” என்றுவிட்டு, விண்ணிலே ஏதோ ஒரு முகிலின் பின்னே மறைந்துகொண்டது. என்னுள் அவிழ்ந்த வாடா மோகன மலர்கள், அவனின் பிம்பத்தை என் கண்கள் நோக்கும் திசையெங்கும் ஒட்டிவைத்தன. கன்னங்கள் சிவக்க, இதழ்களும் சிவக்க, என் பொன்னிறம் செந்நிறமானது.

மறுநாள் காலை ஓடோடிச் சென்றேன், உறங்கிக்கிடக்கும் சூரியனை எழுப்பிவிட. அவன் எழுவதாய் இல்லை. குளிர்ந்த குளத்து நீரை அவன் மீது வாரி இறைக்க, முனகிக்கொண்டே எழும்பினான். உடனே பூ வனத்திற்கு விரைந்தேன். எனது சின்னஞ்சிறு வயலட் தோழிகள், குறும்பாய் என்னை நோக்க, என் நாணத்தை என்னுள் புதைத்து, அவனையே தேடி நின்றேன். அதோ! அங்கே நிற்கிறான். அவனது வனத்தில் நிற்கிறான். அவனின் வனம் முழுதும் செந்நிற பூக்கள். அதன் நடுவிலே, வெள்ளை மன்மதன் - என் மாயவன். என்னை நோக்கி, இரு கைகளையும் விரிக்கின்றான். நொடியில் பறந்து சென்று, அவன் நெஞ்செலும்புகளுக்குள் முகம் புதைத்தேன். அவன் நெஞ்செங்கும் என் முகம் ஏந்திய மோகன மலர்கள். பல பொழுதுகள், பல இரவுகள், பல பருவங்கள் அங்ஙனமே நின்றிருந்தோம்.

என்னை விலகி நின்றவன், அவனது கண்களால் என் கண்களை நோக்கியபடி கந்தர்வ மணம் புரிந்தான். செந்நிறப் பூக்களை அவன் கைகளில் ஏந்தி, என் மேலே தூவினான். அந்த மலர் மழையில் நனைகையிலே, உயிரும் கூட குளிர்ந்தது. கண்களை மூடிக்கொண்டு அந்த நொடியை உணர்வுகளில் இசைத்திருந்தேன். மீட்டிக்கொண்டிருந்த வீணையின் நரம்புகள் பட்டென பிய்ந்து போக, கண்களைத் திறந்து மாயவனைத் தேடி நின்றேன். எங்குமில்லை அவனின் முகம். ஓடினேன் அவனது வனத்திலே. செம்பூக்கள் மறைந்து, குருதி படிந்த நெருஞ்சி முட்கள் துளிர்த்தன. பசிகொண்ட பருந்தும், விஷம் கொண்ட பாம்பும் வஞ்சத்தோடு என்னை நோக்க, என் பாதங்களில் ரத்தம் கசிவதையும் பொறுத்து, அந்த முட்கள் மேலே ஓடோடிச் சென்று என் வனத்துள் நுழைந்தேன். என் நெஞ்சத்து வாடா மலர்கள் கருகி சாம்பலாகின. அந்த சாம்பலின் துகள்கள் காற்றெங்கும் கலந்திருக்க, எனது பூந்தோழிகள், வெள்ளை நிற வயலட் பூக்கள் ஆகினர்.

Saturday 17 February 2018

காதல் என்பது இதுதானோ!!

என் காதல் வானிலே
இரவிலும் வானவில் தோன்றுதே
என்னுள் பூத்த பூவொன்று
வாழ்வில் வாசம் வீசுதே
உள்ளங்கையில் புதிதாகக்
காதல் ரேகையும் தோன்றுதே
வெயிலிலும் ரகசியமாய்
மழைச்சாரல் என்னை நனைக்குதே
உன்னிடம் மட்டுமே சொல்லிட
கதைகள் கோடி உள்ளதே
உனக்காக மட்டுமே வாழ்ந்திட
உயிரும் உறுதி கொண்டதே
உன்னைக் காணாத பொழுதுகளில்
காதல் என்னுள் பெருகுதே
என் அருகே நீ இருந்தால்
தயக்கங்கள் தடமின்றி மறையுதே
நாம் சேர்ந்து போகும் பாதை
கண்முன்னே விரியுதே
உந்தன் எந்தன் நிழல் கூட
கைக் கோர்த்து நடக்குதே
சாலையோர மரங்களெல்லாம்
பூக்கள் தூவி வாழ்த்துதே
இதுவரைக் கண்டிராத அலையொன்று
என் இதயத்தை வருடிச் சென்றதே

காதல் என்பது இதுதானோ!
காற்றோடு கனவில் மிதப்பேனோ
உன் நினைவுகளை மாலையாக்கி
என் உயிருக்குச் சூட்டி மகிழ்வேனோ!!

Tuesday 13 February 2018

அன்பிற்கு நன்றி!!

ஈன்றபொழுதுனின்று இன்றுவரை
தினமும், என் நலன் வேண்டி
கடவுளிடம் மனு போடும்
என் பெற்றோரின் பாசத்திற்கு
நன்றி!!

உடன்பிறந்து, உறவாடி
சண்டைகள் போட்டு, சமரசம் பேசி
உயிருள்ளவரை தொடர்ந்துவரும்
என் உடன்பிறப்பின் நேசத்திற்கு
நன்றி!!

கண்களால் கதை பேசி
இறுதிவரை என் கரம் பற்றி
காதலால் வாழ்வை நிறப்பும்
என் மன்னவனின் காதலுக்கு
நன்றி!!

பொய்யாக அழுதாலும்
உடல் அயர்ந்து தளர்ந்தாலும்
முத்தங்களால் என்னை உயிர்பிக்கும்
என் பிள்ளையின் அன்பிற்கு
நன்றி!!

வீழ்கையில் தாங்கிடவும்
வாழ்கையில் வாழ்த்திடவும்
என்றும் என்னை சூழ்ந்திடும்
என் உறவுகளின் பரிவிற்கு
நன்றி!!

கதை பேசிக் களித்திடவும்
கவலைகளைப் பகிர்ந்திடவும்
தூண்டுகோலாய் வாழ்ந்திருக்கும்
என் தோழமைகளின் நேயத்திற்கு
நன்றி!!

என் அறிவெனும் விளக்கேற்றி
வழித்தடத்தை செம்மையாக்கி
பாடங்கள் அனைத்தும் புகுட்டிய
என் ஆசான்களின் ஆசிக்கு
நன்றி!!

குயிலோசையும் மலர் வாசமும்
மழை மேகமும் சூரிய சந்திரரும்
இயற்கையின் சாரங்களை அள்ளித் தந்த
என் பூமித்தாயின் கருணைக்கு
நன்றி!!

உயிர் தந்து உடல் தந்து
வாழ்வு தந்து பொருள் தந்து
வளம் தந்து எனைக் காக்கும்
என் ஈசனின் அருளுக்கு
நன்றி!!

என் எழுத்துக்களுக்குக் கைதட்டி
பிழையைச் சுட்டி, நம்பிக்கை ஊட்டி
எனது முன்னேற்றத்திற்கு வழிகாட்டும்
என் வாசக நெஞ்சங்களுக்கு
கோடானு கோடி நன்றிகள்!!!

உனக்காக...

குடைக்குள்ளே நின்றாலும்
மழை நீரில் நனைகின்றேன்
தரை மீது சென்றாலும்
முகிலோடு தவழ்கின்றேன்
அறியாத பூ ஒன்று
எனைக் கடந்து செல்கையிலே
தடுமாறி வீழ்கின்றேன்
எனை இழந்தாலும் வெல்கின்றேன்
கண்கள் உன்னைக் கண்டிட
கால்கள் தவம் செய்தன
மனதில் வழியும் தவிப்பினை
இதழின் சிரிப்புகள் மறைத்தன!!

இனம்புரியா உறவோ
நீ முற்பிறப்பின் தொடர்வோ
தெளிவான சுழலோ
என் தெவிட்டாத நிலவோ

என் இதயம் எடுத்து
உன்னிடம் கொடுக்கட்டுமா?
காதலின் ராகத்தை
உன் காதோடு பாடட்டுமா?

அழகே உன் முன்னே
கடலாக நான் விரிவேனே
அலையாக உன்னைத் தீண்டி
என் அன்பை உனக்குச் சொல்வேனே

அன்பே உன் சாலையில்
நான் மரமாக உயர்வேனே
உன் மீது மலர் தூவி
என் நேசத்தைப் பொழிவேனே

விழியே உன் திசையெங்கும்
நான் வானவில்லாய் எழுவேனே
வர்ணங்களாய் உன்னுள்ளே
நான் நிறைந்து வழிவேனே

உயிரே உன் அருகில்
நான் எரிதழலாய்ப் படர்வேனே
உன் குளிருக்கு இதம் கூட்டி
எனை தொலைத்து சிதைவேனே!!

Saturday 10 February 2018

எனது நீ...

என் உயிரை உலுக்கும் இடியோ
காற்றணுக்களின் உருவோ
என் நொடிக்கூறுகளின் விதியோ
தீ சூடும் பூவனமோ

உயிரைக் கொன்றிடும் அமுதோ
மனம் மயங்கும் மதுவோ
என் முதல் தொடங்கிடும் முதலோ
இறுதி நொடியின் முடிவோ

சிரிக்கும் இதழின் வளைவோ
தகிக்கும் குருதியின் வெப்பமோ
விரல் நுனியில் அவிழும் மலரோ
விழி வீச்சை முடக்கும் அணையோ

கொடும் நாக ரத்தின இனமோ
திரை மூடிய சூரியன் மகளோ
உனைக் காதல் செய்வதோ வரமோ
என் கோடி ஜென்மத்துத் தவமோ!!

Friday 9 February 2018

குரங்கு மனம்!!

தெரியாத கேள்வி
விடைத் தேடும் நெஞ்சம்
புரியாத பாதை
புரண்டெழுந்து ஓடும்

ஏதேதோ பார்க்கும்
பார்த்ததை ரசிக்கும்
ரசித்ததைப் பிடிக்கும்
பிடித்ததை ருசிக்கும்
ருசித்ததை ஒதுக்கும்
ஒதுக்கத்தை வெறுக்கும்!!

உணர்வுகள் மழைத் தூவ
முகம் நூறு மாறும்
மாயமான மயக்கத்தில்
சிக்கிச் சிலிர்க்கும்
விருதுகளின் ஒளி தேடி
மந்தை போல் ஓடும்
பரிகாசம் என்றாலோ
சாபங்கள் முழங்கும்
தேடுகிறேன் தேடுகிறேன்
கூரான ஆணி ஒன்றை
சுவரில் அதை அரைந்துவிட்டு
மாட்டிவைப்பேன் குரங்கு மனதை!!

மாறட்டும்!!

வாழ்க்கை என்பது போர்க்களமே!
நீ சிந்தும் ரத்தத்துளிகள்
அங்கே முளைக்கும் ரோஜாவிற்கு
உரமாகட்டும்!
போர்க்களம் ஓர் நாள்,
ரோஜாவனம் ஆகும்!
அதன் மணம்
காற்றில் கலந்த ரத்தவாடையை முறிக்கட்டும்
அதன் முட்கள்
இறுகிய மனத்தைக் கீற,
மனிதம் கசியட்டும்
அதன் இதழ்கள்
தென்றலோடு தவழ்ந்து
நாற்றோரை வாழ்த்தட்டும்
அதன் சருகுகள்
வனம் படர
எருகாகட்டும்
தூரத்து ஓர் நாளில்
முளைக்கும் வெள்ளி
புவியெங்கும் பூத்த பூவில்
பனியில் புகுந்து சிரிக்கட்டும்
மாறட்டும்,
நந்தவனமாய்
மனிதமனம்!!

Sunday 4 February 2018

பெண்டுலம் மனம்

விமானப் பயணிகளின் ஓய்வு அறையின் இறுதியில் போடப்பட்டிருந்த சோபாவின் உச்சகட்ட எல்லையில் வந்து அமர்ந்தேன். ஏதோ ஒரு சலசலப்பு. வெளியே அல்ல, உள்ளே. தறிகெட்டு மனம் ஓடிக்கொண்டிருந்தது. ‘என்ன விஷயம்?’ என்று கேட்டிட ஆசைதான். எதற்கு வம்பு. என்னோடு அவன் பேசிப் பல காலங்கள் ஆகிவிட்டது. அடிக்கடி அழுவான், எப்போதாவது சிரிப்பான். என்னவென்றால், என் மூஞ்சியில் காரி உமிழ்வான். என் முகம் அவனுக்கு மறந்தே போயிருக்கும். எனக்கும் தான்… எப்பொழுதும் முதுகைக் காட்டி உட்கார்ந்திருப்பவனை, என்ன சொல்வது. சமாதானங்கள் பேசிப்பேசி, அவனிடம் அவமானப்பட்டது தான் மிச்சம். ஏனோ! அமர்ந்திருப்பவன், அடிக்கடி காலைச் சுருக்கி, கையை தலைக்கு வைத்துப் படுத்துக்கொள்பவன், இன்று ஏன் இப்படி திக்கு தெரியாமல் ஓடுகிறான்! ‘என்ன தான் ஆச்சு, சொல்லித் தொலையேண்டா’ என்று அவன் உச்சியில் கொட்டு வைக்க வேண்டும் போல் இருந்தது. அய்யய்யோ! நான் சொன்னதைக் கேட்டுவிட்டான். எங்கே எனது கைக்குட்டை? யாரும் பார்க்கும் முன்னே, என் முகத்தை மூடிக்கொள்கிறேன். இவன் எச்சிற் அர்ச்சனையைத் தொடங்கப் போகிறான்.


இல்லை… இன்று என் முகத்தைப் பார்த்துக்கொண்டு நிற்கிறான். அவன் கண்கள் குளமாகி இருக்கின்றன. என் கண்களும் ஈரமானது. அவன் இதழ்கள் ஏதோ சொல்கின்றன. கேட்கவில்லை. ‘அடேய்! உரக்கச் சொல்’
“அ… அ… அவள்…” என்று அலறினான். என் காதுகளின் ஜவ்வுகள் கிழிந்து, என் விழி முன்னே அவை ஊஞ்சலாடின.


நான் அவனையே பார்த்திருந்தேன். அவன் முகம் மெல்ல மெல்ல சினம் கொண்டது. அருவி என அவன் விழியில் நீர் வழிந்தது. தனது தலையால் என் நெஞ்சை தொம், தொம் என்று முட்டத் தொடங்கினான். எனக்கு இருமல் வந்தது. அவன் முட்டுவது நிற்கவில்லை. மூச்சடைத்தது. அவன் மேலும் முட்டினான். அவன் மண்டையோடு பிளந்து, ரத்தம் கசிந்தது. என் நெஞ்செங்கும் ரத்த வாடை. என் கண்கள் சொருகின. “சரி, சரி, சரி” என்று சமரசம் பேசினேன். முட்டுவதை நிறுத்திவிட்டு, எம்பி எம்பி குதித்தான். அவன் முகமெங்கும் புன்னகை.


சுற்றும் முற்றும் பார்க்கிறேன், என்ன வென்று. அந்த நீளமான ஓய்வறையில் என்ன இருக்கும்? யார் இருப்பார்? எதுவும் இல்லை! பல முகங்கள் உண்டு, ஆனால் பழகிய முகம் எதுவும் இல்லை. அந்த அறையை சோதனை செய்த கண்கள், இறுதியாய் நான் அமர்ந்திருக்கும் சோபாவின் மறுமுனையை, ‘இந்த இடத்தையும் ஏன் விட்டு வைப்பானேன்’ என்று கூறிக்கொண்டே, நோட்டம் விட்டது. என்னுள்ளே குதித்துக்கொண்டிருந்தவன், மல்லாக்கப் படுத்துக்கொண்டு, வாய்விட்டுச் சிரிக்கிறான். அவன் கண்களில் நீர். துடைத்துக்கொண்டு, என் காதுகள் பிளக்கும் அளவிற்கு சிரிக்கிறான். “அவள்” என்று மென்மையாய்க் கூறிக்கொண்டே சிரிக்கிறான்.


என் விழிகள் அவள் மேல் ஒட்டிக்கொண்டன. என் உருவம் உறைந்து போனது. என் சுவாசம் உள்ளே சென்று, வெளியே வருவது மட்டுமே என் காதுகளுக்குள் கேட்டது.


அவள், சோபாவின் மறு கோடியில், எனது புறம் பார்த்தபடி, தலைசாய்த்துத் தூங்கிக்கொண்டிருக்கிறாள். அவளைத் தவிர மற்றனைத்தும் அங்கே சூனியமானது. ஒலிகளெல்லாம் அடங்கிப்போயின. ஒளிக்கற்றைகள் அவள் பின்னே சூழ்ந்துகொண்டன.


கண்களில் பெருகிய வெந்நீர், என் மீசையின் குளிரை நீக்கி, வெப்பம் கூட்ட விரைந்தன. என் தலையை, மேலே பார்த்தபடி, சோபாவின் மீது சாய்த்து வைத்தேன். அவளின் முகம் எங்கும் தோன்றியது. என் உள்ளே, அவன் அதற்குள் அவளின் படத்தை வரைந்துவிட்டு, என் கண்களுக்கு விருந்து படைத்தான். பத்து மீட்டர் நைலான் கயிற்றால் என் கழுத்தை, இறுக்கிக் கட்டியது போல் இருந்தது.


மெல்ல அவள் புறம் திரும்பினேன். அமைதி அவள் முகத்தில் துளி துளியாய் சிதறிக்கிடந்தது. என்னையே அறியாமல், எனது இடக்கையை சோபாவின் சாய்வுப்பகுதியின் விளிம்பின் மேல் வைத்தேன். மெல்ல மெல்ல என் கை நீண்டது. மெல்ல மெல்ல என் விரல்கள் மடங்கியது. முடிந்த மட்டும், என் கை நீண்டு நின்றது. முடங்கிய விரல்களிலிருந்து, இரண்டு மூன்று சென்டி மீட்டர் தொலைவில், “அவள்”.


என்னுள் அவனோ, ‘பொறுக்கி கையை எடு! இல்லை கொன்றுவிடுவேன்’ என்று ஒரு கத்தியைக் காட்டி மிரட்டுகிறான். எத்தனை முறை என்னை புறக்கணித்திருப்பான். இப்பொழுது நான் அவனை அசட்டை செய்தேன். என் விரல்கள் நீண்டன. அவள் முகத்தின் அருகே, சுருண்டிருந்த கூந்தல் கற்றை, விரல்களின் நுனியால் ஒரு முறை தொட்டுப்பார்த்தேன். என் தலை மேலே, வெண் மேகங்கள் ஒன்று கூடி, வானவில் வர்ணங்களில் மழைத் தூவி, என்னை நனைத்தன. முழுதும் நனைந்து சிலிர்த்துப் போனேன். இவ்வளவு நேரம் உறைந்திருந்த என் காலின் கட்டை விரல், மெல்ல அசைந்து கொடுத்தது.


அவள் மெல்ல தலை அசைக்க, கால் நொடியில் என் கை சுருண்டுக்கொண்டு என் மடி மீது பதுங்கியது. மழையோ நின்று விட்டது! கை சுருங்கிய வேகத்தில் என் தலையை கவிழ்த்துக்கொண்ட நான், மீண்டும் மழையில் நனைய ஆவல் கொண்டு, அவளைக் காண கண்களைப் பணித்தேன். அவள் விழித்திருந்தாள். அமைதி சொட்டிய அவள் முகத்தில், இப்பொழுது அருவருப்பு கொட்டுகிறது.


நான் அவள் முகத்தைக் கடைசியே கடைசி என்று நினைத்துக்கொண்டு பார்த்த நொடியில், அவள் முகத்தில் ஏக்கமும், தவிப்பும் வழிந்தோடின. எங்களின் பொம்மைக் கல்யாண நாடகத்திற்கு, அந்த கருப்புக் கோட்டு, கண்ணாடி அணிந்தவர், அந்த சிகப்புக் கட்டிடத்துள் முற்றுப்புள்ளி வைத்தபொழுது, பேரானந்தத்தையும் தாண்டிய பரமானந்தம் என்னுள். அன்று தான் என்னுள் இவனும் கடைசியே கடைசியாய்ப் பேசியது. மெல்ல மெல்ல புரிந்தது, எனது பரமானந்தம் எல்லாம் பகல் வேஷம். பச்சோந்தித்தனம்.


இன்று அவள் விழி வழியே, கோபக்கனலினை உருண்டைகளாக்கி, என் மேல் வீசுகிறாள். அவள் வீசிய பந்துகளெல்லாம் என் இதயத்துள் இறங்கின.


அவள் எழுந்து தனது கைப்பையை எடுத்துக்கொண்டு விரைகிறாள். அவள் செல்லச் செல்ல, என் கண்களில் நீர் கோர்த்து, என் விழிக்கு அணை கட்டியது. சதிகார கண்ணீர்! அணையை தகர்த்துவிட்டுப் பார்க்கிறேன், அவள் இல்லை. காற்றிலே மாயமான மாயம் என்னவோ! அவள் வீசிய அனல் கங்குகள், மலமலவென தீப்பற்றி என் மேனி எங்கும் பரவி, பற்றி எரிந்தது. மழையில் நனைந்த ஈரப்பதம், ஆவியாகி கண்முன்னே மறைந்தது.


எரியும் என்னை தூக்கிக்கொண்டு, எனது விமான அழைப்பென்று மூளை கூறியதைக் கேட்டுக்கொண்டே, விமானத்துள் என் இருக்கையில் சென்று அமர்ந்தேன். பூமி பிளந்து, நான் மட்டும் புதைந்து போக மாட்டேனோ!!


உள்ளே அவன், மூலையில். முடங்கிக்கொண்டான். சுவற்றில் ஏதோ சித்திரம் வரைகிறான். அவளின் சித்திரம் தான். கருப்பு ஜீன்ஸ், டி ஷர்ட், விரித்த தலை என்றிருந்தவளுக்கு, நெற்றிச்சுட்டி வரைந்து கொண்டிருக்கிறான். பைத்தியக்காரன். எதையோ தேடுகிறான். என்ன அது?
“ஓ! இந்த சிகப்பு மையைத் தான் தேடினாயோ! உனக்கு எதற்கடா அது?”
என்னைப் பார்த்து அழுகிறான்! பிறகு அவளின் நெற்றியில், நெற்றிச்சுட்டியின் கீழே, ஒரு வட்டம் வரைந்து, சிகப்பு மை பூசினான். அவளுக்குப் பொட்டு வைத்து ரசித்தவன், குடுவையில் மீதமிருந்த சிகப்பு மையை கையில் ஊற்றி, தன் முகத்தில் பூசிக்கொண்டு, எதிர் முனையில் படுத்துக்கொண்டு அழுகிறான். அழட்டும். அவனை சாந்திப்படுத்த என்னால் இயலாது. அழட்டும். நெருப்பில் மடிந்து கொண்டிருக்கிறேன். குளிர் காயும் அவனுக்கு எதற்கு சமாதானம்? முட்டி மோதி என்னை திரும்பச் செய்து, அமிலத்துள் மூழ்கி முத்தெடுக்கச் சொன்னவன் தானே. அழட்டும்.


எழுந்து வந்து என் முன்னே மீண்டும் நிற்கிறான். மீண்டும் சிரிக்கிறான். முகத்தைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் நெஞ்சினை முட்டினான். வேண்டாம்! இம்முறை நான் பார்க்க மாட்டேன், என்று கண்களை மூடிக்கொண்டேன். ‘அடேய் பைத்தியக்காரா கண்களைத் திற’ என்று அலறிக்கொண்டு முட்டினான்.


எரியும் உடல், பயத்தில் நடுங்க, கண்களைத் திறந்தேன். எனக்கு முன்னே, நடைப்பாதையின் அந்தப் பக்கம் இருந்த இருக்கையில், அவள். “வேண்டாம்! வேண்டாம்!” - நான் கத்துகிறேன்.
“அவளே தான்” - என்னுள் அவன் ஆனந்த நர்த்தனம் ஆடுகிறான்.


முடிவில்லா தண்டவாளத்தில், சக்கரம் கட்டிய பலகையின் மேல் அவள் அமர்ந்திருக்கிறாள். என் கைகள் அவளைத் தீண்ட, நீண்டன. சக்கரங்கள் சுழல, அவள் விரைகிறாள். நான் ஓடுகிறேன். நீட்டிய கைகள் நீட்டிய படி, ஓடுகிறேன். அவளின் நெற்றிச்சுட்டி குலுங்கியது. அவளின் சிகப்புப் பொட்டு ஜொலித்தது. அவள் சம்மணமிட்டபடி, குலுங்கிக்குலுங்கிச் சிரிக்கிறாள். என் விசும்பலைக் கண்டு ரசிக்கிறாள். அவளின் சிரிப்பு எங்கும் எதிரொலிக்க, எங்கிருந்தோ ஒரு பூ மாலை அவள் கழுத்தில் வந்து விழுந்தது. அது திருமண மாலை. அவள் கன்னங்கள் சிவந்தன. நான் ஓடுகிறேன். அவளின் வேகத்திற்கு ஈடு செய்ய முடியவில்லை. அங்கே ஒரு மலை மேலே, மெல்ல எழும்பிய அவளின் சக்கரப்பலகை, மலையின் பின்னே மறைந்தது. அவள் மறைந்ததால் மனம் நொந்து, என் கால்கள் நின்றன. என்னருகே மரத்தில் ஏதோ ஒன்று தொங்க, அவளை விழிகள் தேட, அந்த தொங்கிக்கொண்டிருந்த ஒன்றை என் கைகள் இழுத்தது. பற்கள் நரநரவென கடிக்க, என் கைகள் அதை சின்னாப்பின்னமாக்கியது. என் கையில் ஏற்பட்ட காயம் என்னை திரும்ப வைத்தது. நான் சிதைத்தது என்னுடைய மணமாலையை. அந்த மாலையின் பூக்கள், என் கால்களைச் சுற்றி மடிந்து கிடந்தன. அவற்றைக் கண்டு, என் இதழ்கள் ஒப்பாரிப் பாடின. திடீரென நிலம் பிளந்து, அந்த பூக்கள் புதைந்தன. என் உள்ளங்காலில் ஏதோ கிச்சுக்கிச்சு மூட்ட, நீண்ட வேரொன்று தோன்றி, பூமியின் அடியில் கைகளைப் பரப்பித் துழாவியது. நான் சிரிக்கிறேன். கிச்சுக்கிச்சுகள் என்னை சிலிர்க்க வைத்தன. அவளின் வேரின் நுனியைப் பற்றிக்கொண்டு வாருங்கள், என்று கூறிவிட்டு, அண்ணாந்து பார்க்கிறேன், வானவில் மழை தேடி.


சேருமிடம் வந்ததென, விமான பணிப்பெண் என்னை எழுப்ப, என் அவளைக் கண்ட படியே அமர்ந்திருந்தேன். அவள் கூந்தலின் இடுக்கு வழியே தெரிந்த அவளின் கன்னங்களில், என் முகம் தெரிகிறதா என்று யோசிக்கிறேன்.


அனைவரும் இறங்கிவிட்டனர். மீண்டும் அவளைத் தொலைத்துவிட்டேன். ஆனால், ஏனோ பதட்டம் என்னை இம்முறை களவாடவில்லை. வெளியே வந்து நிற்கிறேன். இதோ என் முன்னே அவள். என்னுள்ளே அவன் உறங்கிப்போய்விட்டான். நல்ல உறக்கம் போல. மூன்றாண்டுகளின் தூக்கத்தை ஈடு செய்கிறான்.


அங்கே, யார் அவன்? அவனோடு ஏன் என்னவள் பேசுகிறாள்? எனது வேர்கள் மெல்ல என் கால்களைச் சுற்றின. அய்யோ! என் முகம் மிளிரும் அவளின் கன்னத்தில், அவன் முத்தமிடுகிறான். தடுக்க எத்தனிக்கிறேன். ஆனால் என் வேர்கள் என் இடுப்பு வரைச் சுற்றிக்கொண்டன. “காப்பாற்று, காப்பாற்று” என்று என்னுள் இருப்பவனை அழைக்கிறேன். அவன் எங்கே? எங்கே சென்றான்? கண்ணாமூச்சி ஆடுகிறான்? எங்கே அவன்?
என் வேர்கள் என் முகம் வரை எழுந்தது. அது வேர் இல்லை. மலைப்பாம்பு! வேர்கள் மலைப்பாம்பென உரு மாறிவிட்டது. அந்த பாம்பு, என்னை விழுங்க வாய் திறக்கிறது. அந்த முகம், அந்த பாம்பின் முகம், என்னுள் இருப்பவனின் முகமன்றோ?! “அடேய் நீயா?” என்று என் கேள்வி முடியும் முன், நான் விழுங்கப்பட்டேன்.


--- முற்றும்---

Saturday 3 February 2018

யாரோ!!

போர்க்களத்தின் நடுவே, யார்
வெண்புறாக்கூட்டை வைத்தது!
பூகம்பம் ஓய்ந்த பின்னே, யார்
பூவின் விதைகளை விதைத்தது!
எங்கோ பாயும் கங்கை, யார்
என் வீட்டின் முற்றத்தில் ஊற்றியது!
மல்லிகை மணக்கும் கொடியில், யார்
இடையிடையே விண்மீனை அவிழ்த்தது!
பிரமிடுகளுக்குப் பின் நின்றுகொண்டு, யார்
என்னோடு கண்ணாமூச்சி ஆடுவது!
மந்தார மலர்களுக்கு, யார்
கானல் நீர் ஊற்றி வளர்ப்பது!
கண் சிமிட்டும் நொடியில், யார்
என்னைக் கண்ணாடிக் கோட்டைக்குள் சிறைபிடித்தது!
தூங்கும் வேளையிலும், யார்
என்னை வெறித்து வெறித்துப் பார்ப்பது!

யாரோ அவன்!
யாரோ அவள்!
இல்லை, யாரோ அது!!
என் மூளை எனும் கசாப்புக்கடைக்காரன்
அவ்வப்போது கூறுபோடும்,
என் மனமே அது!!

Thursday 1 February 2018

ஏனோ?!!

நான் ரசித்த வெண்ணிலா
இரண்டாய்ப் பிளந்ததும் ஏனோ?!
ஜொலிக்கும் தாரகைகள்
தரைமேலே வீழ்ந்ததும் ஏனோ?!
நான் வளர்த்த ரோஜாக்கள்
கருப்பாய்ப் பூப்பதும் ஏனோ?!
நீ தீண்டிய வீணையை
தீயுண்டதும் ஏனோ?!
உன் குரலோசை, காற்றில்
எதிரொலிப்பதும் ஏனோ?!
என் மனம் பருகிய உன் முகம்
கண்கள் தொலைத்ததும் ஏனோ?!
உன் பெயர் சொல்லி அழைத்தால்
உள்ளம் குருதிக் குளமாவது ஏனோ?!
உனைக் களவாடியக் காலனும்
எனை மறந்ததும் ஏனோ?!!