Friday 29 November 2019

மதி மறந்த யோகம்

"ராம், எழுந்துக்கோடா, மணி எட்டாகுது. இன்னும் என்ன தூக்கம்?"
அம்மா ஜெயந்தி, பதின்மூன்றாவது முறையாக, தனது பத்து வயது மகனை எழுப்பிட முயற்சித்தும், எழாமல், ஆனந்த சயனத்தில் இருந்தான், ராம்.
"ஜெயந்தி, ஏதோ லீவுல தான் குழந்தை தூங்கறான். நாளைக்கு ஊருக்கு போனதும் காலைல அடிச்சு பிடிச்சு ஸ்கூலுக்கு கிளம்பிப்போகனும். விடேன், பாட்டி வீட்ல அவன் இஷ்டம் போல இருக்கட்டும்."
மகளை தடுத்தாள், ராமின் பாட்டி, லட்சுமி.
"கோவிலுக்கு அழைச்சுட்டு போகலாம்னு நினைச்சேன்…"
"நீ போய்ட்டு வா… வந்ததும் நான் மிஷினுக்கு போய் முறுக்கு மாவு அரச்சுட்டு வரணும்… ராம் செல்லத்துக்கு முறுக்குனா உசுரு… சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு இப்படி பிள்ளையையும் கூட்டிட்டு வருவனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா எல்லா பலகாரமும் முன்கூட்டியே செஞ்சு வச்சிருப்பேன்..."
"அவனுக்கு எதுதான் பிடிக்காது?! பழம், காய்கறி தவிர எல்லாமே பிடிக்கும்…" என்று நொந்துகொண்டவள், தாயின் அருகே சென்று,
"அம்மா, அவனுக்கு ஒபீஸிட்டி… டாக்டர் சொன்னாங்கன்னு சொன்னேன்ல? அவன் டயட்ல இருக்கணும்… இந்தப் பலகாரமெல்லாம் வேண்டாம்மா…"
"அடிபோடி, ஒபீஸிட்டியாம்… புள்ள கண்ணுக்கு நிறைவா, லட்சணமா இருக்கான். இந்த வயசுல சாப்பிடாம அப்புறம் எப்போ சாப்பிடுவான்?! நீ சும்மா இரு… எல்லாம் ஓடியாடி விளையாடுற வயசு, கல்லச் சாப்பிட்டாலும்  கரைஞ்சிடும்… முதல்ல கோவிலுக்கு போய்ட்டு வா, இந்நேரம் அபிஷேகம் முடிஞ்சிருக்கும்" என்று மகளை கிளப்பிவிட்டாள். 

மகனைப் பற்றிய சிந்தனையிலேயே கோவிலுக்குச் சென்றவளை, வழியில் பள்ளிக்கூட மணியோசை நிலைக்குத் திருப்பியது. தான் இளவயதில் பயின்ற பள்ளி, இன்றும் அதே கம்பீரத்துடன் உயர்ந்து நின்றது. மைதானத்தில் பிள்ளைகள் வரிசையாய் வந்து அணிவகுத்து நின்றதைக் காண, அவளும் இதே போல சிறு வயதில் தோழிகளோடு கதைபேசியபடியே காலை வழிபாட்டுக் கூட்டத்திற்கு வந்து நின்றது நினைவிற்கு வந்தது. தன்னையறியாமல் கோவில் செல்வதை மறந்து, அங்கே நடப்பதை பூட்டப்பட்ட இரும்புக் கதவின் வெளியே நின்றுகொண்டு, கம்பிகள் வழியே பார்த்திருந்தாள். 

வெள்ளை பாண்ட், வெள்ளை சட்டையில் நின்றிருந்த தலைமை ஆசிரியரைத் தவிர பெரும்பாலான ஆசிரியர்கள் மாறியிருந்தனர். ‘தியாகு சார் மட்டும் மாறவே இல்லை. இருபது வருஷத்துக்கு முன்னாடி பார்த்த மாதிரியே இருக்கார்…' என்று அதிசயித்துக்கொண்டாள்.
பிள்ளைகள் ஒன்று போல துதி பாட, அவளது இதழ்களும் வார்த்தை பிசகாமல் முணுமுணுத்தன. பாடல் முடிந்ததும் மாணவர்கள் முன்னே வந்து நின்ற தலைமை ஆசிரியர், 'ஒன்று, இரண்டு, மூன்று…' என்று எண்ணிக்கொண்டே சூரிய நமஸ்கார யோகாசன  முறையினை வரிசையாக செய்து வர, மாணவர்களும் அவரைப் பின்பற்றி அதையே செய்தனர். 
'சார், இன்னும் சூரிய நமஸ்காரத்த விடல…' என்று தன்னுள்ளே சிரித்துக்கொண்டவள், மீண்டும் சிறுவயதில் இந்த ஆசனங்களை தோழிகளோடு சேர்ந்து பழகியதை அவள் நினைவு கூர்ந்தாள். 'ஹ்ம்ம்… எல்லாம் ஸ்கூலோட முடிஞ்சு போச்சு… ஒரு தடவ இந்த ஆசனங்களை செஞ்சு பார்க்கணும்' என்று எண்ணியபடியே அவ்விடம் விட்டு நகர்ந்து, கோவிலை நோக்கி நடக்கத் தொடங்கினாள்.

கோவிலில் ஒவ்வொரு சந்நிதானமாக வணங்கியவள், இறுதியாய் கல் மண்டபத்தில் சென்றமர்ந்தாள். 
"ஜெயந்தி, எப்படி இருக்க?" என்று வினவிக்கொண்டே அவளருகே வந்து அமர்ந்தாள், அவளது உறவுக்கார பெண்ணொருத்தி.
"நல்லா இருக்கேன் அக்கா, நீங்க எப்படி இருக்கீங்க?"
"நல்லா இருக்கேன்… ஆமா, என்ன தீவிர யோசனையில இருந்த?!! நான் வந்ததைக் கூட கவனிக்கலை…"
"எல்லாம் பையன நினைச்சு தான் அக்கா…"
"என்ன ஆச்சு?" என்று அவள் பதற,
"பயப்படற மாதிரி ஒன்னும் இல்லகா, பொதுவான கவலை தான். படிக்கறான்… நல்ல மார்க் வாங்குறான்… ஆனாலும், அவன் கிட்ட எந்தவொரு சுறுசுறுப்பும் இல்லை. வயசுக்கு மீறின எடையோட இருக்கான்னு டாக்டரும் சொல்லிட்டாரு… லேப்டாப் விட்டா ஃபோன், ஃபோன் விட்டா டி.வி.னு, வீடே கதினு கிடக்கறான். அதான் யோசனையா இருந்தேன்…" என்று அவளது கவலைகளை அடுக்கினாள்.
"எனக்கும் அதே கவலை தான், ஜெயந்தி. இந்த வயசுலையே என் பிள்ளைங்க ரெண்டும் கண்ணாடி மாட்டிட்டு இருக்கு. என் மாமியார் கூட இன்னும் கண்ணாடி போடல…"
"பிள்ளைங்க ரெண்டு பேரும் எங்க படிக்கறாங்க?"
"டவுனுக்கு போறாங்க… எனக்கு நம்ம தியாகு சார் ஸ்கூல்ல தான் சேர்க்கணும்னு ஆசை. ஆனா நம்ம பேச்சை யாரு கேட்கறா…"
"வர்ற வழியில, ஸ்கூல்ல தியாகு சார பார்த்தேன்…"
"பார்த்தியா!! இன்னும் அப்படியே இருக்காருல!!"
"ஆமாம்… வயசே ஏறல…"
"சும்மாவா பின்ன, எந்தத் தப்பான பழக்கமும் இல்லை, சுறுசுறுப்பும் குறையலை, எல்லாத்துக்கும் மேல இத்தனை வருஷமா யோகா பண்றார்…"
"உண்மை தான் அக்கா, நான் பார்க்கும்போது யோகாசனம் தான் சொல்லிக்கொடுத்துட்டு இருந்தார்."
"அவர் எவ்வளவு ஆர்வமா சொல்லிக்கொடுப்பார்!! ஆனா படிக்கிற காலத்துல எதையும் ஒழுங்கா கத்துக்கல… இப்போ என் பசங்க படிக்கிற ஸ்கூல்ல, யோகா சொல்லித்தறோம்னு சொல்லி மாசம் 500 ரூபாய் வாங்கிடறாங்க. அது போதாதுன்னு நீச்சல் கத்துக்க 500 ரூபாய், ஸ்கேட்டிங், அது இதுன்னு… கடுப்பா வருது…"
"நல்லது தானே அக்கா…"
"கத்துக்கறத பழகினாதானே நல்லது? வாரத்துல ரெண்டு நாள் தான் யோகா க்ளாஸ். மீதி நாளெல்லாம் பழகினா தானே பலன் கிடைக்கும். க்ளாசெல்லாம் பெருமைக்கும், கடமைக்கும் தான் போகுதுங்க. ஒரு பலனும் இல்லை… நாம படிக்கும்போது தியாகு சார் தவறாம தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வைப்பார். சரியா செய்யாதவங்களை தனியா கூப்பிட்டு சொல்லிக்கொடுப்பார். ஆனா, என் பசங்க போற க்ளாஸ்ல ஏதோ சிலபஸ் மாதிரி, லெவல் ஒன்னு, லெவல் ரெண்டுனு… என்னமோ ஒன்னும் திருப்தியா இல்லை… சரி நான் கிளம்பறேன், நேரமாயிடுச்சு" என்று உறவுக்கார பெண் கிளம்பிச் செல்ல, மீண்டும் யோசனையில் மூழ்கினாள், ஜெயந்தி.  

‘எல்லாம் ஓடியாடி விளையாடுற வயசு, கல்லச் சாப்பிட்டாலும்  கரைஞ்சிடும்’
‘கத்துக்கறத பழகினாதானே நல்லது?’
‘தியாகு சார் தவறாம தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வைப்பார்’
புத்தியில் பதிந்து போன சில வாக்கியங்கள், மீண்டும் மீண்டும் ரீங்கரித்தன.

ஒரு முடிவோடு வீட்டிற்குத் திரும்பியவள், வழியில் பள்ளி மைதானத்தில் யாருடனோ பேசிக்கொண்டு நின்றிருந்த தியாகு சாரைக் கண்டு நடையைத் தளர்த்தினாள்.

‘தியாகு சார் தவறாம தினமும் சூரிய நமஸ்காரம் செய்ய வைப்பார்’ 

“ராம்… ராம்…”
மகனை அழைத்தபடி உள்ளே நுழைந்தவள், தொலைக்காட்சியில் மூழ்கியிருந்த மகனிடம் சென்றாள்.
“வா ராம், நாம விளையாடலாம்”  என்றபடியே தொலைக்காட்சியை அணைத்தாள்.
“அம்மா, ப்ளீஸ் மா…” என்று அவன் அழ,
“ராம், அம்மா உனக்கு ஒன்னு சொல்லித்தருவேனாம்… அதை நீ அப்படியே செய்வியாம்…” என்றாள் ஆர்வமாய்.
“இவ்வளவு தானா?”    
“என்ன அப்படி சொல்லிட்ட… எழுந்து வந்து செய் பார்க்கலாம்!!”
“இதோ வரேன்” என்றபடியே ஆவலாய் எழுந்துவந்தான்.

அவள் சூரிய நமஸ்கார முறையை படிப்படியாக செய்து காண்பிக்க, அவனும் தாய்யைப் போல் முயற்சித்தான். குனிந்து, விரல் நுனியால் பாதத்தை மட்டும் தொட முடியாமல் போனவனுக்கு முகம் சிறுத்தது.
“கவலைப்படாத ராம், எனக்கும் இப்படி தான் முதல்ல கஷ்டமா இருந்தது. பழகப்பழக தானா வந்துடும்…” என்று மகனை ஊக்கப்படுத்தினாள். அவன் ஆர்வமாய் செய்வதைக் கண்டு அதிசயித்துப்போனவள், ‘இத்தனை நாளா இதை செய்யாம விட்டுட்டோமே…’ என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள். 

‘தியாகு சார் எனக்கு தினமும் தவறாம சொல்லிக்கொடுத்தது போல, நானும் தவறாம உனக்கு சொல்லித்தரேன்… உன்கூடவே சேர்ந்து நானும் செய்யறேன்…’ என்று மானசீகமாய் மகனுக்கு வாக்களித்தாள். 


** முற்றும் **

ஒரு முடிவில் ஒரு தொடக்கம் - 1

வசந்த காலத்தை வரவேற்றபடி ஆங்காங்கே பூத்திருக்கும் டாஃபோடில்  மலர்களையும், கான்க்ரீட் சாலையை பிளந்து கொண்டு எழுந்து நின்று தலையசைக்கும் ஜப்பான் செர்ரி மரங்களையும் ரசித்தபடி, உதட்டோர முறுவலோடு, மிதமான வேகத்தில் நடந்து வந்து கொண்டிருந்த ரம்யாவை, இரு கண்கள் வெறிக்க வெறிக்கப் பார்த்துக்கொண்டிருந்தன. அவள், தன் எதிரே, தன்னருகே நெருங்கி வருவதைக் கண்டு கண்களில் ஒரு பயமும், உள்ளுக்குள் பரவசமும் படர்ந்தது, சுனிலுக்கு.

அவன் மனம் பரபரவென்று, புதைந்து கிடந்த நினைவுகளை, கண் முன்னே அடுக்கிச் சென்றது. தன் தந்தையின் பேச்சால் காயமுற்று அன்று விலகிச் சென்ற ரம்யாவை நினைவுகூர்ந்தான். அவளின் வேதனை முகம் அவன் நினைவில் இன்றும் நீங்கவில்லை. அந்த அபலைக்கு அவன் செய்த அவலங்கள், இன்றும் அவன் இதயத்தைக் கீறிக்கொண்டிருந்தது. திருமணம்  நின்றுபோக, நண்பர்கள் விலகிப்போக, வாழ்வே சலித்துப்போன சுனிலுக்கு மாற்றம் வேண்டும் என மனம் ஏங்க, இடம் பெயர்ந்து இங்கு வந்தவனின் பொல்லாத விதி, ரம்யாவை மீண்டும் இவன் முன்னே இழுத்து வந்து நிற்க வைத்தது.

இவனைக் கண்ட நொடியில், ரம்யாவின் முகமும் வெளிறிப்போனது. எதை மறந்து மெல்ல மீண்டுவந்தாளோ, அந்தக் குழிக்குள்ளே மீண்டும் இவளை தள்ள முயற்சித்தது, அந்த முகம். 

எதுவும் பேசவில்லை, ஏன்? எதற்கு? என்று கேள்வி இல்லை. மௌனத்தைப் போர்த்திக்கொண்டு, அவனைக் கடந்து சென்றாள். சுனிலின் மண்டைக்குள், எவனோ ஒருவன் ‘ஓ!’ என்று ஒப்பாரி வைப்பதுபோல் இருந்தது. 

வீட்டிற்குத் திரும்பியவன் கட்டிலின் மேல் விழ, முதன்முறை ரம்யாவை சந்தித்த தருணத்தை அவனின் மனம் திரையிட்டது.

பின்னிய, அழகிய நீண்ட கூந்தல், நெற்றியில் பொட்டு, விபூதி, தோடு, வளையல், கொலுசு, என்று பாரம்பரியத்தை, ஜீன்ஸ் - குர்த்தி டாப்ஸ் எனும் புதுமைக்குள் புகுத்திய, இன்றைய நவநாகரீக பெண்களின் கடைசி வரிசை, ரம்யா.  
“ஹே, ரம்யா!” 
இன்றுபோல் அன்றும் மாலை நேரத்து ரம்யத்தை ரசித்தபடி வந்தவளை அழைத்தாள், நிஷா. 
“ஹாய் நிஷா! நீயா?”
“நானேதான்… எப்படி இருக்க ரம்யா? வாட் எ சர்ப்ரைஸ்!! கடைசியா உன்ன ஆறேழு வருஷத்துக்கு முன்னாடி ஸ்கூல்ல பார்த்தது. நீ மாறவே இல்ல. ஆமா, இங்க எப்படி? கல்யாணம் ஆயிடுச்சா?”
“கல்யாணம் ஆனா தான் கலிஃபோர்னியா வரலாமா? இல்லன்னா கூடாதா?”
“அப்போ, படிக்க வந்திருக்கியா?”
“இல்ல நிஷா… இப்போதைக்கு ஒரு வருஷம் டெபுடேஷன்.”
“எப்படி? எப்படி உங்க வீட்ல?” 
ஆச்சர்யமானாள் நிஷா. ரம்யாவின் பெற்றோர் பழைய பஞ்சாங்கக் கட்டுப்பட்டி இனம் என்று உலகமே அறிந்து வைத்திருந்ததது. 
“இங்க வர நான் பண்ண ஸ்டண்ட் சீனெல்லாம், எனக்கு தான் தெரியும். தலைகீழ நின்னு, குட்டிக்கரணம் போட்டு, அழுது புரண்டு, தர்ணா பண்ணி ஒரு வழியா இங்க வந்தேன்.”
“உன் பாட்டி எப்படி விட்டாங்க?”
ரம்யாவின் பாட்டி - பல்லுப்போன பாண்டிட் குயின். இதுவும் அனைவரும்  அறிந்ததே.   
“தாத்தா கூட டூயட் பாட பாட்டியா சென்ட் ஆப் பண்ணியாச்சு.” 
“அச்சச்சோ இறந்துட்டாங்களா? எப்போ?”
“ஒரு ஆறு மாசம் இருக்கும்.”  
“ஆனா அடுத்த தெருவுக்கே தனியா விடாத உன்னை அமெரிக்கா வரை அனுப்பிவச்சது, உலக அதிசயம் தான்… இது என் பிரென்ட் சுனில்.”
ஆறடி உயரம், தெளிவான முகம், காந்தக் கண்கள், படர்ந்த தோள்கள், சீராய்க் கோதிய கேசம், நேர்த்தியாய் ஆடை என்று, பார்த்தவுடனே பற்றிக்கொள்ளக் கூடிய வசீகரம் கொண்ட சுனிலை ரம்யாவிற்கு அறிமுகம் செய்து வைத்தாள், நிஷா.
“ஹாய் ரம்யா!” என்று சுனில் கூறிமுடிக்கும் முன்னே, “ஹாய் ரம்யா” என்று கைகுலுக்கிட வலக்கையை நீட்டி நின்றான், ‘வடிவேலு பாலாஜி’ சாயலை ஒத்த கமல். அவன் எங்கிருந்து வந்தான், எப்போது வந்தான் என்று மூவரும் திகைத்து நின்றனர்.
“வணக்கம்” என்றாள் ரம்யா இரு கைகளையும் கூப்பி.
“கொட்டாம்பட்டிலியே வணக்கம் வைக்கறத விட்டுட்டானுங்க. நீ என்ன கலிஃபோர்னியால வணக்கம் சொல்ற. பை தி வே ஐ அம் கமல்” என்று அவன் முகம் மலர்ந்து நிற்க,
“கமல் அலைஸ் கமலக்கண்ண கரிகாலமூர்த்தி!!” 
சுருங்கிய கமலின் பெயரை பாயைப் போல் விரித்துவிட்டான், சுனில்.
“அப்படியா? இத்தனை நாள் எனக்கு இந்த உண்மை தெரியாம போச்சே. உனக்கு ஏத்த பேரு தான்” என்று நிஷா விழுந்து விழுந்து சிரிக்க,
“என்ன வெள்ளையா இருக்கோம்ங்கற திமிரா? தார் எடுத்து மூஞ்சில ஊத்திடுவேன்” என்றான் கமல் கோபத்தோடு.
“ஊத்துனா துடைச்சுக்குவேன்” என்று முகத்தைத் துடைத்தபடி, அபிநயத்தோடு நிஷா பதில் கூற, ரம்யாவின் மெல்லிய புன்னகை, அழகிய சிரிப்பானது.
சிரித்து முடித்து ரம்யா நிமிர்ந்து நோக்க, கமலின் அருகே ரம்யாவை நோக்கியபடி வந்து நின்றான், எழில்.
“ரம்யா இது எழில். ரெண்டு பேரும் என்னோட ரூம் மேட்ஸ். சின்ன வயசுலேர்ந்து நாங்க மூணு பேரும் பிரெண்ட்ஸ்.”   
அறிமுகம் செய்துவைத்தான், சுனில்.
“ஆமா ரம்யா, நாங்க மூணு பேரும் சின்ன வயசுலேர்ந்து பிரெண்ட்ஸ். கொஞ்ச காலமா நிஷாவும், சுனிலும் பிரெண்ட்ஸாயிட்டதால நானும், எழிலும்  நிஷாவுக்கு எனிமீஸ் ஆயிட்டோம். நீ எங்களுக்கு பிரெண்டா, எனிமியா?”   
கடகடவென கூறிய கமலைக் கண்டு ரம்யா முழித்துக்கொண்டு நிற்க, நிஷா முறைத்து நின்றாள்.
“மௌனம் சம்மதத்திற்கு அறிகுறி, அப்போ நாம பிரெண்ட்ஸ்!! நைட் எங்களோட டின்னருக்கு வரலாமே?” 
ரம்யா பதில் கூறுவதற்குள், 
“அவ என் பிரெண்டு. என்னோட எனிமி அவளுக்கும் எனிமி தான்.” 
கமலிடம் கோபமாய் கூறிவிட்டு, மற்ற இருவரையும் கண்டு முறைத்துவிட்டு, ரம்யாவின் கைப்பற்றி தன்னுடன் வேகமாய் அழைத்துச் சென்றாள், நிஷா. ரம்யா மட்டும் திரும்பி மூவருக்கும் பொதுவாய், ‘பை’ என்று கையசைத்துவிட்டு சென்றாள்.  

அன்று ரம்யாவின் துறுதுறு கண்கள், குழந்தை முகம், வெள்ளந்தி சிரிப்பு என்று அனைத்தும் சுனிலின் நினைவிற்கு வந்தது. முதல் சந்திப்பிலேயே, தன்னையும் அறியாமல் அவன் மனம் துல்லியமாய் ரம்யாவை படம் பிடித்து வைத்திருக்கும் என்று அவன் நினைக்கவில்லை. இன்று அவனை நோக்கிய அவளின் வலி மிகுந்த கண்கள், துன்பம் தேங்கிய அவளது முகம், ஏதோ கேட்க நினைத்து கேட்காமல் விட்ட அவளது மௌனம், கடந்து சென்று மறைந்த அவளின் பிம்பம் என்று அனைத்தும் அவனின் மனதை நெருடியது.

அடுத்து வந்த நாட்களில் அவன் ரம்யாவை எங்கேயும் கண்டிருக்கவில்லை. இத்தனை நாட்களாக அவளைப் பற்றிய எண்ணங்கள் அவன் மனதுள் எழவில்லை. ஆனால் இந்த எதிர்பாரா சந்திப்பிற்குப்பின், இந்த சில நாட்கள் அவளைக் காணாதது, ஏதோ ஒரு வினோத வருத்தத்தை அவனுக்கு அளித்தது. அவள் எங்கு போனாளோ, என்ன ஆனாளோ என்று அவன் மனம் கேட்டுக்கொண்டே இருந்தது. 

அழகான மாலை வேளையில், எதிர்பாராமல் ரம்யாவை மீண்டும் கண்டான். அவள் கண்ணில் படாமல் மறைந்து கொண்டான். அவனுள் இனம்புரியா ஒரு மகிழ்ச்சி மலர்ந்தது. பின்வரும் நாட்களில், அவளுக்குத் தெரியாமல், ஏன் என்று இவனுக்கும் புரியாமல், அவளைத் தொடர்ந்தான். அவள் அலுவலகம், வீடு எல்லாம் தெரிந்துவைத்துக்கொண்டான். ‘அவள் திருமணம் செய்துகொண்டாளோ?!’, என்றொரு கவலை பிறக்க, ‘இல்லை’ என்று தெரிந்த பின், நிம்மதி கொண்டான். 

ஒரு நாள், இரவு மெல்ல கவ்வத்தொடங்கிய நேரம், ரம்யா தனது அலுவலகம் அருகே பேருந்து நிறுத்தத்தில் காத்துக்கொண்டிருந்தாள். அவளைப் பின் தொடர்ந்தவன், தனது காருக்குள் அமர்ந்தபடியே சாலையின் எதிர்புறம் காத்துக்கொண்டிருந்தான். அவள் வீடு சென்றடையும் வரை இவன் தான் காவல் என்று முடிவுசெய்திருந்தான் (இன்றுமுதல், என்றும்!!!). திடீரென கனமழை கொட்ட, நேரமாகியும் பேருந்தின்றி தவித்திருந்தாள். இவன் பொறுமை இழந்து, காரைத் திருப்பிக்கொண்டு அவளருகில் சென்று நிறுத்தினான்.
“ரம்யா, ரொம்ப லேட் ஆயிடுச்சு… வாங்க நான் உங்களை வீட்ல விட்டுடறேன்”, என்றான் பவ்யமாக. பல நாட்கள் கழித்து அவளோடு பேசுகிறான். தன்னையும் அறியாமல் அவனது பேச்சில் மரியாதை சற்று கூடுதலாகவே இருந்தது. அவள் முகம் பார்த்து பேசுகிறான். அவன் இதயம் துடிக்கும் வேகத்தில், எப்பொழுது வேண்டுமானாலும் வெளியே வந்து விழுந்துவிடும் போல் இருந்தது. 

அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு, பதில் பேசாமல் திரும்பி நின்றாள். 
“ரம்யா ப்ளீஸ்… இந்த நேரத்துக்கு மேல இங்க தனியா வெய்ட் பண்றது உங்களுக்கு சேஃப் இல்ல. வாங்க நான் ட்ராப் பண்றேன்.”
“நோ தேங்க்ஸ்,” வெட்டும் பதில் கூறினாள் ரம்யா.

சில நிமிடங்கள் அமைதியாய் நின்றிருந்தவன்,
“ரம்யா, என்னை ஒரு டாக்ஸி ட்ரைவரா நினைச்சுக்கோங்க. ரொம்ப மழையா இருக்கு. டைம் ஆயிடுச்சு. ப்ளீஸ்”, என்றான் மீண்டும்.
வெகு நேரம் காத்திருந்து அவளும் பொறுமையை இழந்திருந்தாள். மழையும் விடுவானேன் என்று சதி செய்தது. அவனோடு செல்வதில் விருப்பமில்லை என்றாலும், வேறு வழியின்றி சென்றாள். இவளிடம் வழிகேட்காமல், அவன் சரியாக இவளது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். ‘இவனுக்கு எப்படி வீடு தெரியும்?!’, என்று ஐயம் கொண்டவள், “தேங்க்ஸ்” என்று கூறிவிட்டு, வேகமாக அபார்ட்மென்ட்டினுள் ஓடிச்சென்றாள். 

அவள் மறையும்வரை, மழையின் ஜன்னல் வழியே, அவளையே பார்த்துக்கொண்டிருந்தான், சுனில். அவனது உள்ளத்திலும் மழை சாரல் தூவியது. வெகு நேரம் காரில் அமர்ந்தபடி, அருகில் ரம்யா அமர்ந்திருந்ததை எண்ணியெண்ணி பேரானந்தம் கொண்டான். இத்தனைக் காலமாய் அவனிடம் மறைந்திருந்த அவனின் வசீகரப் புன்னகை, இப்பொழுது அவன் இதழ்களில் படர்ந்தது. ‘ரம்யா’ என்று சில முறை உரக்கக்கூறி, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான். 

ஒரு முடிவில் ஒரு தொடக்கம் - 2


“குட் மார்னிங் நிஷா. எதுக்கு காலங்கார்த்தால போன் பண்ற?”
கலையாத தூக்கமும், குறையாத சோம்பலுமாய் இருந்தான், சுனில்.
“சுனில், மணி பத்தாகுது. இன்னும் எழுந்திரிக்கலையா?”
“இன்னைக்கு சனிக்கிழமை தான… எழுந்து என்ன பண்ணப்போறேன்?”    
“நீ ரம்யாவ பிக் அப் பண்ணிட்டு வர்றியா? அவ இனிமேல் என் கூட தான் தங்கப்போறா. என் ரூம் மேட் காலி பண்ணிட்டா. இந்த டபுள் பெட்ரூம் வீட்ல நான் எப்படி தனியா இருக்கறது? அதான் அவளை ஸ்டுடியோவை காலி பண்ணி, இங்க வர சொல்லிட்டேன். ப்ளீஸ் போயிட்டு வா சுனில்.”
“சரி போறேன். அட்ரஸ் அனுப்பி வை.”
“அப்புறம் அந்த தடியனுங்கள கூட்டிட்டு போகாத. நீ மட்டும் போ.”
“சரி சரி”

இரண்டு பெட்டிகள், மூன்று பைகளோடு தனது அபார்ட்மெண்ட் வாயிலில் நின்றிருந்தபடி, அலைபேசியில் ஏதோ பார்த்திருந்த ரம்யா, எதிரே கிரீச்சிட்டு நின்ற காரின் சத்தத்தில் திடுக்கிட்டாள்.
“ஹாய் ரம்யா, சாரி பயந்துட்டியா?”
சுனிலைக் கண்டு சிநேகமான புன்னகை சிந்திய ரம்யா,
“ஹாய் சுனில்! நிஷா அனுப்பிவச்சாளா? வேண்டாம்னு சொன்னா அவ  கேட்கல, உங்களுக்கு தான் வீண் சிரமம். நானே டாக்ஸில போயிருப்பேன்.”
“அப்புறம் பிரெண்ட்ஸ்னு நாங்க எதுக்கு இருக்கோம்” என்று சுனில் கூறிக்கொண்டிருக்கையில், அவன் அருகே வந்து நின்றான் எழில்.

எழில் காரினை ஓட்ட, அவன் அருகே அமர்ந்திருந்த சுனில், பின் இருக்கையில் அமர்ந்திருந்த ரம்யாவோடு பல நாட்கள் பழகியவன் போல் சகஜமாய் கதைத்துக்கொண்டு வந்தான்.

“என்ன ரம்யா, கத புக்கெல்லாம் ரொம்ப படிப்பியோ? உன் லக்கேஜ் ஏத்தும்போது கவனிச்சேன்.”
“கத புக்கா? கல்கி, பாரதி, பாரதியார்னு எல்லாம் இலக்கியம்.”
“எனக்கு எங்க எதிர்த்தவீட்டு பொண்ணு இலக்கியாவை தான் தெரியும். இலக்கியம் எல்லாம் தெரியாது.”  
தனக்குள்ளே சிரித்துக்கொண்டாள் ரம்யா.
“வீட்ல கல்யாணத்துக்கு மாப்பிள்ளை பார்க்கறாங்களா, ரம்யா?”
அவள் கேள்வியாய் நோக்க,
“இல்ல, பொண்ணுங்களுக்கு படிச்சு முடிச்சதும் கல்யாணம் பண்ணிடுவாங்க. செம ஜாலி. பசங்க தான் பத்து வருஷம் வெயிட் பண்ண வேண்டியிருக்கே. அதான் கேட்டேன்.”
“என்ன ஜாலி?? எங்க கல்யாணம் பண்ணிடப்போறாங்களோனு பயந்து தான் நான் இங்க வந்ததே.”
“அப்போ பாய் பிரெண்ட்?”
“அய்யய்யோ, அதெல்லாம் எதுவும் இல்லீங்க.”
“அப்போ ரூட்டு க்ளியர்” என்று தனக்குள்ளே சுனில் முணுமுணுத்ததை ரம்யா காதில் வாங்கியிருந்தாலும், அலட்டிக்கொள்ளவில்லை.   
“இருந்தாலும் அநியாயத்துக்கு அக்மார்க் நல்ல பொண்ணா இருக்கியே!!”
இது வஞ்சப்புகழ்ச்சியோ என்று அவனை சந்தேகமாய் நோக்க, அவனோ புதிரான சிரிப்பொன்றை சிந்தினான். 

ரம்யாவை உற்சாகத்துடன் வரவேற்ற நிஷா, ரம்யாவிற்கென தயார் செய்திருந்த அறையைக் காட்டிவிட்டு, வரவேற்பறைக்கு வர, அங்கே எழில் மட்டும் அமைதியாய் தனது கைபேசியைப் பார்த்தபடி  அமர்ந்திருந்தான். யோசனையாய் கிச்சனுக்குள் சென்ற நிஷா,
“சுனில், உன்னை மட்டும் தானே போக சொன்னேன். எதுக்கு அவனை கூட்டிட்டு போன?”
“ப்ச், என் கார் கொஞ்சம் ரிப்பேர் ஆயிடுச்சு. அதான் அவனை கூட்டிட்டு  போனேன்.” 
“என்னவோ போ… ஆமா, இங்க என்ன நோண்டிட்டு இருக்க?”
“நிஷா ரொம்ப பசிக்குது.  சமைக்கலயா?”
“இல்லடா, ரம்யா ரூமை ரெடி பண்ணிட்டு இருந்தேன்.”
“இல்லேனா மட்டும் அறுபத்தி நாலுவகை செஞ்சு அசத்தியிருப்பல?”
“அப்புறம் எதுக்கு தெரிஞ்சிட்டே கேட்குற? நான் எதுவும் சமைக்கல. சமைக்கவும் தெரியாது”, கடிந்து கொண்டாள் நிஷா.
“அரை மணி நேரத்துல நான் ஏதாவது செஞ்சு தரேன்” நிஷா கூறியதைக் கேட்டுக்கொண்டே உள்ளே நுழைந்த ரம்யா குறுக்கிட்டாள். 
“ரொம்ப தேங்க்ஸ் ரம்யா. உப்பு, காரம் கூட குறைய இருந்தாலும் பரவால்ல. என்னால ஹோட்டலெல்லாம் போக முடியாது” என்று பாவம்போல் கூறிவிட்டு அவ்விடம் விட்டு நீங்கினான், சுனில்.       
     
ரம்யா கூறியது போல், அரை மணி நேரத்தில் வெஜிடபிள் புலாவ் தயாரானது. 
“ஹே சுனில், என்னோட போன்ல என்ன பண்ணிட்டு இருக்க? எப்போ பார்த்தாலும் கேம். வா சாப்பாடு ரெடி.”
பல நாட்கள் பட்டினி கிடந்தவர்கள் போல் சுனிலும், எழிலும் முந்திக்கொண்டு பந்தியில் அமர்ந்தனர்.
“வாவ் ரம்யா, ரொம்ப நல்லா இருக்கு. உனக்கு சமைக்கத் தெரியுமா?”
ரம்யாவை பாராட்டிக்கொண்டே, தனது தட்டில் இருந்த புலாவ் குன்றின் மேல் இரண்டு கரண்டி மேலும் அள்ளிப்போட்டு புலாவ் மலையாக்கினான், சுனில்.

“இப்போ தான் புரியுது, எதுக்கு இவ்வளவு ஆர்வமா நிஷா உன்னை ரூம் மேட்டா  சேர்த்துக்கிட்டானு. ரொம்ப தேங்க்ஸ் ரம்யா. இப்படி ஒரு சாப்பாடு கிடைக்கும்னா என்ன ஹெல்ப் வேணும்னாலும் சொல்லு, நான் செய்யறேன்.”
பல விருந்துகளை எதிர்நோக்கி, பலமாய் நங்கூரம் போட்டான், சுனில்.
“உதவி பண்ணாதான் சாப்பாடுனு கிடையாது. எப்போ வேணும்னாலும் வீட்டுக்கு  வாங்க. எனக்கு தெரிஞ்சதை சமைச்சு தரேன்.”
மீண்டும் ரம்யாவிற்கு நன்றிகூறிவிட்டு, விடைபெற்று சென்றனர் சுனிலும், எழிலும்.

இன்று, நியூயார்க் நகரில், கொட்டும் மழையை ரசித்தபடி, இந்திய உணவகத்தில் வெஜிடபிள் புலாவ் உண்கிறான். ரம்யாவைக் கண்டது முதல்,  கடந்த சில நாட்களாக வெவ்வேறு உணவகத்தில் வெஜிடபிள் புலாவ் ருசித்துவிட்டான். அனால் எதிலும் ரம்யாவின் கை மணம் இல்லை. சற்றுமுன் அவளோடு பேசிய ஒரு சில  வார்த்தைகளின் ரீங்காரமும், தன்னுடன் பயணித்த அவளின் விலகிய அருகாமையும் மட்டும் அவனுள் இனித்தது.

வீட்டிற்குள் ஓடிச்சென்று தாழிட்டுக்கொண்ட ரம்யா, வெகு நேரம் ஜன்னலின் கண்ணாடி மேல் சடசட வென பெரும் சப்தத்துடன் கொட்டும் மழையைக் கண்டிருந்தாள். அன்று, புதுப்பிக்கப்பட்ட நிஷாவின் நட்பு, அவளின் வாழ்வை புரட்டிப்போடும் என்று துளியும் அவள் நினைக்கவில்லை. இன்று எரிச்சலூட்டும் மழையை அன்று நிஷாவின் வீட்டில், தனது அறையின் சாளரம் வழியே ரசித்திருந்தாள். அந்த இனிய தனிமையில் கவிதை தாங்கிய குறுஞ்செய்தி ஒன்று, அறியாத எண்ணிலிருந்து அவள் கைபேசியில் வந்து விழுந்தது. அந்த இரவு... அந்த கவிதையில்... தான் அறியாமல்... தன்னை தொலைத்தவள், இன்று அனைத்தையும் தொலைத்துவிட்டு நிற்கிறாள்.


விடியலில் ஒய்யாரமாய்
புல்லின் மேல் உறங்கும் பனி
கடும் பகல் சுடுவெயிலில்
முகம் வருடும் குளிர் தென்றல்
இரைச்சல்களின் மத்தியிலே
தனை மறந்து இசைக்கும் கருங்குயில்
மலர்தூவி ஆசீர்வதிக்கும்
சாலையோர செம்மயில் கொன்றை
தள்ளியே நடந்தாலும்
நம்மோடு உலவும் நிலவு
இதமான மழைக்குளியல்
தொடர்ந்து சூடான தேநீர்
சுகம் தந்த அனைத்திலும்
சுவாரஸ்யம் தீர்ந்ததடி!
ரம்யமானது அனைத்தும்
என் ரசனையை இழந்ததடி!
புன்னகைப் பூவே,
உனை மட்டும் நெஞ்சம் பற்றுதடி!
ரசனைகள் நீயாகிட,
அது தரும் ரம்யங்களும் நீயானாய்!!


அன்று கிச்சுக்கிச்சு மூட்டிய கவிதை இன்று கசந்தது. அன்று அந்த கவிதையை வாசித்த மறு நொடி, சுனிலின் முகம் அவள் மனதில் மின்னி மறைந்த நினைவும் இன்று கசந்தது.    


மறுநாள், ரம்யாவைக் காண வேண்டும் என்ற ஆவல் சற்று கூடுதலாக சுனிலுக்குப் பொங்கியது. ஏதோ அவளிடம் சொல்லவேண்டும் என்றொரு எண்ணம் தோன்றிக்கொண்டே இருந்தது. வழக்கமாக செல்லும் வழியில், அவள் நடந்து வந்துக்கொண்டிருந்தாள். ஏனோ மிகவும் அழகாய் இருந்தாள். இல்லை, அவனுக்கு மிகவும் அழகாய்த் தெரிந்தாள். நேற்று போல், பதட்டங்கள் இன்று பெரிதாக அவனை சூழவில்லை. அவளருகே சென்றான்.
“ரம்யா, உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.”
அவள் பதில் கூறவில்லை.
“ஒரு காபி சாப்டுட்டே பேசலாமா?”
“பேசறதுக்கு ஒன்னும் இல்ல”, என்று கூறிவிட்டு கடந்து செல்ல எத்தனித்தாள்.
“ரம்யா ப்ளீஸ், ஒரு பத்து நிமிஷம்… எனக்காக… ப்ளீஸ்...”
கண்களை மூடிக்கொண்டு, வலக்கை விரல்களால் நெற்றியை வருடிக்கொண்டு நின்றாள்.
“நான் தப்பான நோக்கத்துல கேட்கல. ஒரு பத்து நிமிஷம்… ப்ளீஸ்”

காபி ஷாப்பில், அவள் எதிரே அமர்ந்துகொண்டு, தன்னை மறந்து அவளை ரசித்துக்கொண்டிருந்தான். வேண்டாவெறுப்பாக அமர்ந்திருந்த அவளோ, தவித்துக்கொண்டிருந்தாள். 
“நான் கிளம்பறேன். காபிக்கு ரொம்ப தேங்க்ஸ்”, என்று கூறியபடி அவள் எழுந்தாள்.
“அய்யோ ரம்யா… ஒரு நிமிஷம், நான் பேச நினைச்சத இன்னும் சொல்லவே இல்லை...”
அவள் அமர்ந்தாள்.
“ஐ அம் சாரி ரம்யா… ஈஸியா சாரி சொல்லிட்டேன்… ஆனா, உங்க கஷ்டம் அதனால தீர்ந்துடாதுன்னு தெரியும்… என் நிலையில இல்லாம, அப்படி ஒரு…”, என்று கூறுகையில் அவன் குரல் கம்மியது. அவனால் அதற்கு மேல் அவள் முகத்தைப் பார்க்க இயலவில்லை.
அவள் சலனமின்றி அமர்ந்திருந்தாள். மறுத்துப்போய், பண்பட்டு, இன்று ரம்யாவின் மனம் பக்குவப்பட்டிருந்தது. 
“என்னை மன்னிச்சுடுங்க ரம்யா...”
அவள் ஏதோ யோசனையில் மூழ்கிப்போயிருந்தாள். பழயவற்றைப் பேசி, அவளை நோகடித்துவிட்டோமோ என்று அவனுக்குக் குற்ற உணர்வு துளிர்த்தது.
“ஏதாவது பேசுங்க ரம்யா.”
“நிஷா… நிஷா எப்படி இருக்கா?”
“நிஷாவா? தெரியலையே...”
அவள் நெற்றி சுருங்கி, அவனை ஆச்சர்யமாகப் பார்த்தாள்.
“அந்த பிரச்னைக்கப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு அவ கல்யாணம் பண்ணி, லண்டன்ல செட்டில் ஆயிட்டா… அவ்ளோ தான் எனக்கு தெரியும்… நான் அவளோட கோன்டேக்ட்ல(contact) இல்ல...”
‘அய்யோ!’ என்று பதரியது ரம்யாவிற்கு. தன்னால், தனக்கு மட்டுமல்ல நிஷாவிற்கும் இத்தனை பெரிய தண்டனையா என்று ரம்யாவின் மனம் வாடியது. 
“நேத்து என்ன வீட்ல ட்ராப் பண்ணதுக்காக, ஒரு மரியாதைக்கு காபி ஷாபுக்கு வந்தேன்… இனிமேல் என்ன தொந்தரவு பண்ணாதீங்க ப்ளீஸ்!” என்றவள், கதவின் பின்னே மறைந்து போனாள்.

சுனில், ரம்யா கேட்டுக்கொண்டதின் பேரில், இரண்டு மூன்று நாட்கள் அவளை பின்தொடராமல், தன்னை கட்டுப்படுத்திட முயற்சி செய்தான். ஆனால், அவளைக் காண வேண்டும் என்ற ஆவல் தலை தூக்க, அவனது கட்டுப்பாடுகள் கரைந்துபோயின. அவளுக்குத் தெரியாமல், மீண்டும் அவளை பின் தொடர்ந்தான். ஏனோ அவள் அழகு கூடிக்கொண்டே போவது போல் இருந்தது. அவளைக் காணும் நொடிகள், அவனுக்கு மெய் சிலிர்த்தது. 

ஒரு மாலை, அவளுக்காக காத்திருந்தான். நேரம் ஆகியும் அவள் வராதாதால், படபடத்தான். அவள் வரும் பாதை அருகே நின்று கொண்டு, முன்னும் பின்னும் பார்த்துக்கொண்டே, பொறுமையை மெல்ல இழந்துகொண்டிருந்தான். நடைப்பாதையின் மத்தியில் நின்று கொண்டு, எம்பி எம்பி தேடினான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை அவள் இல்லை. ஏதோ கோபமும், அழுகையும் முட்டிக்கொண்டு வரும்போல் ஆகிவிட்டது அவனுக்கு.
“எக்ஸ்கியூஸ்மீ”, என்றொரு குரல், அவன் பின்புறம் கேட்டது. அவள் தான்! திடீரென உற்சாகமும், சந்தோஷமும் பீரிட்டு எழுந்தது.
திரும்பி அவளைப் பார்த்து அவன் சிரிக்க, ‘நீ திருந்தவே மாட்டியா?’ என்பதுபோல் ஏளனப் பார்வையை வீசினாள்.
“ஹாய் ரம்யா, எப்படி இருக்கீங்க?” என்றான். அவனின் குதூகளம், அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது.
“கொஞ்சம் வழிவிடறீங்களா?” 
டக்கென ஒதுங்கி நின்றவன், அவள் நடக்கத் தொடங்கியதும் அவளிடம் பேச வேண்டும் என்று ஆவல் பொங்கி எழ, 
“ரம்யா உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்”, என்று அவளை வழிமறைத்தான்.
என்ன சொல்லவேண்டும் என்று அவன் முடிவு செய்திருக்கவில்லை. பேசவேண்டும் என்ற ஆவலில் அவன் ஏதோ உளறிவிட்டான். அவனை ஏற இறங்க சில நொடிகள் பார்த்துவிட்டு, ரம்யா நகர,
“நிஷா…” என்று அவன் கூற, அவள் நின்றாள்.
“ரம்யா, நிஷாவுக்கு குழந்தை பிறந்திருக்கு… பெண் குழந்தை… உங்ககிட்ட சொல்லலாம்னு வந்தேன்” என்றான். இது இரண்டு மாதத்து பழைய செய்தி. நிஷாவின் உறவுக்காரர் ஒருவர் சுனிலின் அம்மாவிற்கு மிகவும் நட்பு. நிஷாவுடன் தொடர்பில் இல்லை என்றாலும், அவளின் உறவுக்காரர் மூலம் அவள் சௌகரியமாக, சந்தோஷமாக இருக்கிறாள், என்ற உணர்வே அவனுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. தக்க சமயத்தில் அச்செய்தி அவனுக்கு உதவியது.

அச்செய்தியைக் கேட்டவுடன், ரம்யாவின் முகத்தில் முதன்முறை அவன் ஒரு அழகிய, மெல்லிய புன்னகையைக் கண்டான். அந்த காந்தப் புன்னகை, அவன் நெஞ்சுக்குழிக்குள் ஒட்டிக்கொண்டது. அவள் கண்கள் விசாலமாக, இவன் அதில் மயங்கி, புதைந்துபோனான். “ஓ கே… தேங்க்ஸ்”, என்று கூறிவிட்டு நீங்கிச்சென்றவளின் புன்னகை மறையாமல் அவள் இதழில் ஓட்டிக்கொண்டிருந்தது. 

முற்றும் நிலை குழைந்துபோனான், சுனில். அவன் மனதுள் மடிந்து, மக்கிய உணர்ச்சிகள் மீண்டும் துளிர்க்கத் தொடங்கின. அவனின் நினைவுகளை ரம்யா ஆளத்தொடங்கினாள். என்ன வேலை செய்தாலும், அவளின் நினைவலைகள் இவனை அவ்வப்போது தீண்டிவிட்டுச் சென்றன. ஒரு புறம், ஒரு வகையான பேரானந்தம். மறு புறம், மறுக்க முடியாத குற்றவுணர்வு. அவளிடம் பேசும் ஆர்வம் குறைந்து, சளைக்காமல் அவளை பார்த்திருக்கவே மனம் ஏங்கியது. ஏனோ அவளை நெருங்கி, வெறுப்பை மேலும் பெற்றுக்கொள்ள அவன் விரும்பவில்லை. அவனது வெறுமையான வாழ்வும், மனமும் வளம் பெற்றது. அவனது உற்சாகம் மீண்டும் அவனை கட்டிக்கொண்டது.