Wednesday 1 August 2018

நான் நிலா மகள்...

நான் நிலா மகள். தாரகைத் தோழிகளோடு கொஞ்சி விளையாடும் வெண்ணிலவின் மகள். சாம்பல் கூடமாய்க் காட்சி தரும் வெற்று நிலவு தேசமே என் தாய் மடி. மேடின் மீதேறி பள்ளத்தில் குதித்து, நிலவின் மணற்பரப்பில் காலடி பதிப்பதே எனக்குப் பிடித்தமான விளையாட்டு. தாவிச் சென்று முகிலினம் மீது சஞ்சரிப்பேன். மினுக்கும் நட்சத்திரங்களோடு கண்ணாமூச்சி ஆடுவேன். இரவெல்லாம் எனது சாம்ராஜ்யம். ஆதவன் விடியலில் கண் விழிக்க, ஓடிச்சென்று நிலவின் முதுகிற்கு பின்னே ஒளிந்துகொள்வேன். அக்னி ரேகைகள் என்னைத் தீண்டிடக் கூடாது. நிலவின் முகத்தைப் பார்த்ததுண்டா? கதிரவன் கதிர் தீண்டி ஆங்காங்கே எரி தழும்புகள். எனக்கு வேண்டாமம்மா அந்த வடுக்கள்.

ஆடி ஓடி விளையாண்ட காலங்கள் மெல்ல மெல்ல சலித்த பின்னே, என் அகமும் புறமும் மாற்றம் கொள்ள, மனமும் மோகனத் தேடலில் களித்தது. விந்தையான ஈர்ப்பு விசையின் பிடிக்குள்ளே முடங்கியிருந்தேன். இரவெல்லாம் இம்சையாகிப் போனது.

ஓர் இரவு, மேகங்கள் ஒன்று கூடி கைக் கோர்த்து நின்றன. கடகடவென மேலெழும்பி நிலவின் தலைமீது அமர்ந்தன. சரசரவென நீர் மணிகளை அவை கட்டவிழ்த்து விட, முதல் முறையாக நனைகிறேன். இத்தனை ஆண்டுகளின் பல பகல்களும், பற்பல இரவுகளும் கடந்து வந்த நான், என் வாழ்வின் முதல் மழையில் நனைகிறேன். நீர்ச்சரம் என் உச்சியைத் தொட்டு, மெல்ல வடிந்து, என் மேனியில் படர்ந்து, என் பாதத்தின் அடியில் புதைந்து போயின. கண்மூடி நானும் குழைந்து போனேன். மழை தூவி மரித்துப்போன மேகங்கள், மறைந்து போனபின் கண் விழித்தேன். அதோ சாம்பல் காட்டின் மத்தியிலே புதிதாய் ஒரு செடி, அதில் சிறிதாய் ஒரு மலர். மெல்ல அருகே சென்று நான் அம்மலரை முத்தமிட, எனது அதரங்கள் சிவந்தன. விந்தையினும் விந்தையின் விடை அறியாது நான் குழம்பித் தவித்து உறங்கிப்போனேன்.

பளிச்சென்று ஒரு வெளிச்சம் என் இமைகளைத் தட்டி எழுப்ப, வெடுக்கென்று எழுந்தேன் நிலவின் முதுகைத் தேடி ஓடினேன். இரவு கவ்வ, வெளிப்பட்ட நான் இதுவரைக் காணாத ஒன்றைக் கண்டு திகைத்தேன். சாம்பல் மணல்மேடு நந்தவனமாய் நிற்கிறது. பூமி பூங்காவனத்துப் புது மலர்கள் அத்தனையும், இதோ என் கண்முன்னே மலர்ந்து சிரித்து நிற்கிறது. சந்தோஷக் கிறுக்கேறி ஆர்ப்பாட்டமாக நான் ஓட, ஒரு கை இடை மறித்து, என் கரம் பற்றி இடை வளைத்து, நெஞ்சுக்குள்ளே இறுக்கிக் கொண்டது. முதல் மழை போல், முதல் வெப்பம். குளிர் மகள் எனக்கு அனல் அணைப்பு. வெப்பத்தில் மயங்கியவள், வெட்கம் தலை தூக்க, விலகி நின்று பார்க்கிறேன் அந்த கோமகனை. தங்கமென அவன் ஜொலிக்க, என் கண்கள் கூசிக் கவிழ்ந்தன.

‘நிலவின் மகளே, இந்த நந்தவனம் உனக்காக’ என்றான். எனது மோகனத் தேடல்கள் அவனிடம் தஞ்சம் கொண்டன. பாய்ந்து திரிந்த மனம், இன்று பக்குவமாய் அவன் சொற்களை முழுங்கின.
‘யார் நீ?’ என்றேன்.
‘பகலவனின் பிள்ளை’ என்றான்.
என் பரிதவிப்பைக் கண்டவன், ‘உனக்கு சில்லென ஒளி கூட்ட நான். எனது வெப்பத்தில் குளிரூட்ட நீ. உனக்காய் நான். என்னால், எனக்காக மட்டுமே நீ!’
அவனது வெப்பத்தில் காதலாய்க் கரைந்துபோகிறேன். வலியுமில்லை!! வடுவுமில்லை!!