Monday 24 February 2020

அவளாகிறாள்...

அவளது இரண்டங்குல முறுவலில்
ஏதோ ஓர் புள்ளியில் மடிந்து
மற்றொன்றில் உயிர்த்தெழுகிறேன்...
மரணமும் அவளாகிறாள்
ஜனனமும் அவளாகிறாள்

தினமும் ஒரு கைப்பிடி அள்ளிப்போட்டு
சேர்த்துக்கிடந்த காதலெல்லாம்
கனம் கொண்டது இதயத்துள்...
உணர்வுகளும் அவளாகிறாள்
உன்மத்தமும் அவளாகிறாள்

எண்ணிக்கையில் அடங்கும் நொடியளவில்
என்னைக் கடந்து செல்லும் நீளத்தில்
மட்டுமே அவளைக் காண்கிறேன்...
காலமும் அவளாகிறாள்
காத்திருப்பும் அவளாகிறாள்

நிலவைச் சுமக்கும் இரவுகளிலும்
பட்டாம்பூச்சி சிரிக்கும் பகல்களிலும்
நினைவுகளில் நித்தியமானவள்...
துடிப்பும் அவளாகிறாள்
உயிர்ப்பும் அவளாகிறாள்!!

Thursday 13 February 2020

‘இதயம்’ முரளியும், ஜூன் 20’ம்  

‘இதயம்’ முரளியும், ஜூன் 20’ம்  
--------------------------------------------

‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா…’ இந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் நெருக்கமானது. நானும் ஓர் ‘இதயம் முரளி’ தான். எனது காதலை விதைத்து, எத்தனை நாட்கள், வாரங்கள், மாதங்கள், வருடங்கள் கடந்துவிட்டன என்பதை நான் குறித்து வைக்கவில்லை. காதலுக்கும், காலத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை! 

அவளை முதன்முதலில் கண்டது ஓர் காதலர் தினத்தன்று. அப்பொழுது நான் இரண்டாம் ஆண்டு மாணவன். அவள் முதல் வருடம். கல்லூரிக்கு வருகைத் தந்த முதல் நாளிலேயே என் மனதிற்குள்ளும் வருகைத் தந்துவிட்டாள். ஆம்! இவ்வுலகிற்கு பிப்ரவரி 14 தான் காதலர் தினம். எனக்கோ அவளை முதன்முறை கண்ட ஜூன் 20 தான் காதலர் தினம். எங்கள் இருவருக்குமான பிரத்யேகக் காதலர் தினம்!!

ஒரு வருட விழி பேச்சு பேசித் தீர்த்த பின், இரு குருவிகள் உரசிக்கொண்டு நிலவொளியில் கிரங்கும் காட்சியிடப்பட்ட வாழ்த்தட்டை ஒன்றை வாங்கி, அதனுள் என் இதயத்தை பதுக்கி, ஒற்றை சிகப்பு ரோஜாவையும் துணைக்கு சேர்த்துக்கொண்டு அடுத்த வருட காதலர் தினம், அதாவது ஜூன் 20 அன்று, ஆவலோடு அவளுக்காக கல்லூரி வளாகத்தில் இருந்த ஆலமரத்தின் அடியில் காத்திருந்தேன். அன்று முழுதும் காத்திருந்தேன். அவள் கல்லூரிக்கு வரவில்லை என்று என் நண்பன் என்னிடம் கூறிச்சென்ற பின்பும் காத்திருந்தேன். காதலில் காத்திருப்பு அலாதி இன்பம்! அவளுக்கு அன்று ஜலதோஷமாம். வருடத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் ஜலதோஷம் வரும், போகும். ஆனால், ஜூன் 20 ஒரு முறை மட்டுமே வரும்! ஆதலால் காத்திருந்தேன். 

அடுத்த ஜூன் 20 வந்தது. என் படிப்பு முடிந்துவிட்டிருந்ததால் கல்லூரிக்குள் செல்ல முடியவில்லை. காதல் காணாத தடைகளும் உண்டா என்ன?! மனம் தளராமல் அதே வாழ்த்து அட்டை, ரோஜாவுடன், வாயிலில் அரசு பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தேன். அவள் கல்லூரி பேருந்தில் சென்று வருகிறாள் என்று அறிந்திருந்தும் நான் வெளியே காத்திருந்தேன். ஏனென்றால், காத்திருப்பு தரும் பொறுமையே, காதலர் காதலுக்கு தரும் காணிக்கை.

மற்றுமொரு ஆண்டு கரைந்தது, அவளது நினைவில். மீண்டும் தூசு தட்டி மீட்டெடுத்தேன் எனது இதயம் புதைக்கப்பட்ட வாழ்த்து அட்டையை. அடுத்த ஜூன் 20 நான் நின்றிருந்தது எங்கள் ஊரில் மிகவும் பிரசித்தி பெற்ற வி.கே.எஸ். திருமண மஹால் வாசலில். வரவேற்புப் பலகையில் அவளது பெயரைக் கண்டதும் என்னுள்ளே மழைச்சாரல் சிதறாமல் சிந்தியது. அவளது பெயரைக் கண்டதும் அருகிலிருந்த மாப்பிள்ளையின் பெயரை வாசிக்கக் கூட எனது கவனம் செல்லவில்லை. கையில் ரோஜாவுடன், கண்ணில் காதலுடன் நான் நின்றிருந்த கோலத்தைக் கண்டு இரு பீம் பாய்ஸ்கள் என்னை நெருங்கினர். அவர்களைக் கண்டதும் நான் விறுவிறுவென நடந்து வந்துவிட்டேன். உயிர் பயத்தினால் நான் வரவில்லை, நான் மரித்தால் என் காதலும் மரித்துவிடும் எனும் பயத்தினால் வந்துவிட்டேன்.

அடுத்த ஜூன் 20 என் வாழ்க்கை என்னை நிற்க வைத்தது ரயில்வே ஸ்டேஷனில். அவள் வெளியூரில் வசிக்கிறாளாம். ரயில் பயணத் தொலைவில் அவள் இருந்தாலும், காதல் கண்டங்களையும் தாண்டும்!! பல ரயில்கள் வந்து சென்றன, பற்பல முகங்கள் கடந்து சென்றன. அசராமல் நாங்கள் மூவரும் காத்திருந்தோம் அவளுக்காக - ரோஜா, வாழ்த்து அட்டை மற்றும் நான்!

ரயிலில் பெட்டிகள் சேர்வது போல, என் வாழ்விலும் வருடங்கள் சேர்ந்தன. பற்பல ஜூன் 20’களும் கடந்தன. ஆனால், ஒவ்வொரு வருடமும் என் மனம் மட்டும் ஜூன் 20’க்காக கலங்காமல் காத்திருந்தது. 

இன்று மீண்டும் ஜூன் 20. காலெண்டரைக் கண்டதும், ‘பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா…’ என்று எனது உதடுகள் அனிச்சையாய் பாடத் தொடங்கின. எனது அலமாரியை தோண்டித்துளாவி அன்று வாங்கிய வாழ்த்து அட்டையை எடுத்தேன். அட்டையின் ஓரத்தில் கிழிந்திருந்தது. கிழிந்தது அட்டை மட்டுமே என் காதல் அல்ல! பசையைத் தடவி, சீர் செய்தேன். முதன் முறை வாங்கிய அதே ரோஜாவும் கிடைத்தது. எனது இரண்டாம் வருட பாட புத்தகத்தில் அன்று வைத்தது போல் இன்றும் அப்படியே இருந்தது. அதன் சிகப்புகள் மறைந்துவிட்டிருந்தாலும், அதனைக் காணும்போது என்னுள்ளே ஏற்படும் சிலிர்ப்புகள் இன்றளவும் மறையவில்லை. 

“ஏங்க சுகர் மாத்திரை சாப்பிட்டீங்களா?” என்றொரு குரல் கேட்டதுமே, பட்டென மறைத்து வைத்தேன் ரோஜாவையும், அட்டையையும். 
“பெரியவன் காலேஜுக்கு டைம் ஆயிடுச்சுனு வெயிட் பண்றான். சீக்கிரம் கிளம்பி வாங்க” என்றுவிட்டுச் சென்றாள், அக்குரலுக்குச் சொந்தக்காரி. 
இந்தக் காதல் கண்கட்டி வித்தையிலும், கண்ணாமூச்சி ஆட்டத்திலும் கைதேர்ந்ததாக இருக்கின்றதே!! சற்றுமுன் என்னிடம் பேசிச் சென்றவள்... என் மனைவி. வாழ்க்கையின் ஓட்டத்தில் எனக்கு ஒரு முறை திருமணம் நடந்து, இரண்டு பிள்ளைகள் கூட பிறந்துவிட்டனர். ஆனால், இவ்வுண்மைகளை நொடியில் மறக்கச் செய்கிறது, இந்தக் காதல்.

எனது மூத்தமகனை கல்லூரியில் இறக்கிவிட்டு, நான் விரைந்தது பெரிய பஸ்ஸ்டாண்டிற்கு. அவள் பக்கத்து ஊருக்கு குடி பெயர்ந்துவிட்டாள் எனும் செய்தி, சென்ற மாதம் என் நண்பன் மகள் வளைகாப்பிற்கு சென்றிருந்த போது அவன் கூறினான். இதுவே காதலின் மகிமை!! அவளை அருகில் இழுத்து வந்துவிட்டது.

வெய்யிலின் உஷ்னத்தில் வியர்வை வடிய நான் நின்றிருக்க, “அடியே, கூறுகெட்டவளே நான் பெரிய பஸ் ஸ்டாண்டுக்கு வந்துட்டேன். உன் மவன் என் போன போட்டு உடைச்சுப்புட்டான்டி. ஆட்டோ புடிச்சு வந்துடறேன்…” என்றொரு தேன் குரல் என் செவி தீண்டியது. அவள் தான்... அவளே தான். திரும்பி அவள் முகம் பார்க்க முடியா அளவிற்கு என்னுள் பரவசம். சிறு மயக்கம் வேறு. இது லோ சுகரால் வந்த மயக்கமா இல்லை காதலால் வந்தததா என்று பிரித்துக் கூற முடியாத அளவிற்கு பரவச மயக்கம். 

நான் நடுங்கிக்கொண்டிருக்க, அவள் என்னெதிரே தோன்றினாள்.
“சார், உங்களுக்குத் தேவை இல்லனா அந்த அட்டைய கொஞ்சம் கொடுங்களேன். என் போன என் பேரன் உடைச்சுட்டான். ஒன்றை வயசு தான் ஆகுது, ஆனா அருந்த வாலு. நான் பேசினா என் பொண்ணுக்கு கேட்க மாட்டேங்குது. பட்டு பட்டுனு சுவிட்ச் ஆப் ஆயிடுது. அவ நம்பரை குறிச்சுக்கிட்டு பக்கத்துல கடைல இருந்து போன் போட்டு சொல்லிடுவேன்...”
அவள் கூறக்கூற அவளது குரலில் கசிந்த தேன், காட்டாறென பாய்ந்து வந்து என் உயிரைத் தொட்டது. 

இத்தனை ஆண்டுகள் காத்திருப்புக்குப்பின் அந்த அட்டையை அவளிடம் கொடுத்தேன், உள்ளே பதுக்கிவைத்திருந்த இதயத்தையும் சேர்த்து. அட்டையின் மேல் அவள் ஏதோ எழுத, என் உயிரில் பச்சை குத்தியது போல் ஓர் உணர்வு. அவள் விலகிச்சென்ற பின்னே உணர்ந்தேன் ரோஜாவை கொடுக்கத் தவறிவிட்டேன் என்று. உதிர்ந்து போன ரோஜா இதழ்களை நாசூக்காக பொட்டலம் கட்டியதை வீணாக விடலாமா?! அவளை தேடிக்கொண்டு கூட்டத்தை விலக்கிக் கொண்டு சென்றேன். ஒரு கடையில் இடுப்பில் பேரனை ஏந்திக்கொண்டு, தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்தாள். அருகிலிருந்த அவளது கூடையில் எனது காதல் ரோஜா பொட்டலத்தை அவள் அறியா வண்ணம் வைத்துவிட்டு ஓடி வந்துவிட்டேன். 

நான் கொடுத்த அட்டையைப் பிரித்ததும், ரோஜாப்பூ இதழ்களைக் கண்டதும், அவளுக்கு என் நேசம் புரிந்துபோகும். இனி அவளது பதிலை எதிர்நோக்கி ஜூன் 20’ன் காத்திருப்புகள் தொடரும்!! 


காதலுக்கும், காலத்திற்கும் எவ்வித சம்மந்தமும் இல்லை!!!