Thursday 10 January 2019

உன் வர்ணங்கள் எங்கே?

விடியலில் சிரிக்கும் கதிரொளி பட்டு
தூக்கம் கலைந்தது, வண்ணத்துப்பூச்சி!
“நாள் தந்த ஆதவனுக்கு நன்றி!
உணவு தந்த மலர்களுக்கு நன்றி!
இடம் தந்த பூமிக்கு நன்றி!
அனைத்தும் தந்த சாமிக்கு நன்றி!!”

பறப்பதற்கு ஆயத்தமாய்
பிரித்துப்போட்டது சிறகை
அவிழும் மலர் நோக்கி
குறிவைத்தது இலக்கை

“உனது சிறகின் வர்ணங்கள் எங்கே?”
வழிமறித்தான் நண்பன்
“சிறகின் சித்திரத்தை சிதறிவிட்டாயோ?”
விழிவிரித்தான் அவன்

சூரியனுக்கும் தனக்கும் மத்தியிலே
சிறகை உயர்த்தியது வண்ணத்துப்பூச்சி
முகமெல்லாம் வண்ண வண்ண
கோலம் வரையும் பேரொளி
சாயம் தீர்ந்து சாம்பல் நிறம் தந்து
அதன் கடுகு விழிகளில் கண்ணீர் தந்தது

வர்ணங்களைத் தேடி
வெகுண்டெழுந்தது!!
செடியின் காம்பில் தேடியது
அங்கில்லை...
தரையில் துள்ளி துழாவியது
அங்கில்லை...
இலையின் அடியில் நோக்கியது
அங்குமில்லை...
திசை நான்கும் அலைகிறது
எங்குமில்லை...

சுக ராகம் பாடும் குயிலிடம் சென்றது
“குயிலே… கருங்குயிலே…
என் சிறகினைக் கண்டாயா!!
பொலிவிழந்து துவள்வதைக் கண்டாயா!!
மஞ்சளும், சிகப்பும் அழிந்தது கண்டாயா!!
தொலைந்த வர்ணங்களை எங்கேனும் கண்டாயா?”
“அந்தோ பரிதாபம், அழகு பூச்சியே!!
வர்ண சொத்துக்கள் தொலைத்து
விகாரமாய் நிற்கிறாய்
கருணை மட்டுமே உள்ளது
உன்னிடம் கொடுக்க…”
வண்ணத்துப்பூச்சிக்காக சோக ராகம் பாடியது…

நிறை மாத வயிற்றுக்காரியாய்
அசமஞ்ச நடை போட்டது நத்தை
“நத்தையே, நில் நத்தையே!”
தழுதழுத்தது வண்ணத்துப்பூச்சி
“கடவுள் கையொப்பம் இட்ட என் சிறகு
இன்று காலியாய்க் கிடக்குது பாரும்
களவு போன வர்ணங்களை
எங்காவது கண்டீரா கூறும்?”
“கலியுக சண்டாளர்கள்
இதையுமா களவாடுவர்?
இன்று உன் சொத்து
நாளை எவன் சொத்தோ?!!
வழிவிடு,
என் கூட்டைக் காக்க வேண்டும்
உறுதி கொடு
அந்த கள்வனைக் காட்ட வேண்டும்...”
அசமஞ்ச நடை ஆர்ப்பாட்டம் கூட்டியது.

“அய்யா, சிலந்தியாரே!
வலை விட்டு வாரும்...
சிறகு செத்துக்கிடக்கிறேன்
தெரிந்தவற்றைக் கூறும்!”
“தம்பி வர்ணனா?!!
நிறம் குன்றியதால்
தடுமாறினேன்
உரம் இருந்திருந்தால்
துணை வருவேன்
மனம் வலு கொண்டால்
துப்பு கிடைக்கும்
அவன் அருள் ஒன்றே
தடை உடைக்கும்”
கண்ணீர் துடைத்தபடி
கடந்து சென்றது வண்ணத்துப்பூச்சி

கைகளுக்குள் கண் பொத்தி
கரைந்திருந்தது
நெஞ்சுக்குள் அபயம் ஒலிக்க
தலை நிமிர்ந்தது
‘இவனா,
கடவுளின் உயரிய படைப்பு
கருணையின் உயிர்க்கூடு
உண்மைகளின் உறைவிடம்
உலகத்தின் ஒளிவிளக்கு!!’

அவனைக் கண்டு கைகூப்பியது
நம்பிக்கை அதன் மனதில் பொங்கியது

“மனிதா, ஓ மனிதா!
என்னைப் பாராயோ!!
என் பாபங்களினின்று
விடுதலை தாராயோ?!

மனிதா, ஓ மனிதா!
என்னைத் தீண்டாயோ!!
உன் ஞானத்தால்
வர்ணம் மீட்பாயோ?!”
மனிதனின் முகத்தில்
அழகாய்ப் பிறை முறுவல்
“வர்ணங்களா… நான் அறிவேன்…
வா வா வா!”
தனது விழி நீர் துடைத்து
அவனது வலிய தோள்களில் அமர்ந்தது
கவலைகள் விடுத்து
மற்ற உயிர்களின் வியப்பைக் கவர்ந்தது

‘ஓ! இதுதான் இவனது வீடா?
புண்ணியவான்கள் மனிதர்கள்!!
கூட்டிலும் கலை நயம்!!
ரசனைக்காரர்கள் மனிதர்கள்!!’

“அதோ பார்!”
என்றான் அவன்,
“எனது கை ஜாலம் பார்!”

சுவரின் நடுநாயகமாய் சித்திரம்
வண்ணத்துப்பூச்சியின் கண்களில் விசித்திரம்
“உன்னைப் போல் ஒருவன்”
என்றான் அவன்,
சித்திரத்தில் சிரித்தது ஒரு வண்ணத்துப்பூச்சி!!

“வரைந்த பின்னே உணர்ந்தேன்
மஞ்சளும், சிகப்பும் இல்லை என்னிடம்
சுற்றும் முற்றும் திரிந்தேன்
இறுதியில் அவற்றைக் கண்டேன் உன்னிடம்
சாமர்த்திய யுக்தி கொண்டு
உனது வண்ணங்களை வழித்தெடுத்தேன்
தூரிகையால் அவை நனைத்து
எனது ஓவியத்தை முடித்து வைத்தேன்!!”

கண்களில் நீர் கோர்த்த வண்ணத்துப்பூச்சி
சரிந்த சிறகை இழுத்துக்கொண்டு,
தளர்ந்த கால் கொண்டு நடந்தது...
அழகற்ற சிறகு
அர்த்தமற்றது!!
சிறகுகள் வெட்டி எறிந்தது
இதயத்தில் இரத்தம் சொரிந்தது
வண்ணத்துப்பூச்சி
வெறும் பூச்சியானது,
மண்ணுக்குள் சிரசை

மூழ்கிக்கொண்டது...

விழியால் வருடிச்செல்லாயோ!!

தீண்டும் தென்றலுக்கு தீ வைத்தது யாரோ?
சிரிக்கும் சித்திரத்தை அழச்செய்தது யாரோ?
முத்தத்தடங்களில் முட்கள் நட்டது யாரோ?
வானவில் சத்தியங்கள் உடைத்துச் சென்றது யாரோ?

உந்தன் கண்ணாடி வளையல்கள்
எனது கை கீறி இரத்தம் ருசிப்பதும் ஏனோ?
உனது மங்கள வார்த்தைகள்
என் நினைவுகளில் அமிலம் சுரப்பதும் ஏனோ?

தூது செல்லும் காற்று
என் விளக்கை அணைத்ததும் ஏனோ?
தூரல் சிந்தும் மேகம்
வெகு தூரத்தில் தவழ்வதும் ஏனோ?
வானத்து மின்மினிகள்
தரை மேல் வீழ்வதும் ஏனோ?
நீ விலகிச் சென்றும்
எனதுயிர் பிரியாமல் இருப்பதும் ஏனோ?

விட்டுச் சென்றிடவா
காதலை நட்டாய்??
மொட்டு அவிழ்கையிலே
தீயாலே சுட்டாய்?!!

மனமெனும் மாளிகையில்
மகுடம் தரித்தவள் நீயடி
இன்று மாளிகையை மண்மேடாய்
சிதைத்துப்போனது ஏனடி?
கனவுகளை கண்களுக்குள்
பிரசவித்தவள் நீயடி
வாழ்வின் ஒளியைப் பறித்துக்கொண்டு
இருளைக் கொடுத்தது ஏனடி?

உனக்காகவே வாழ்ந்தன
என்னோடு எனது நிமிடங்கள்
இன்று எஞ்சியிருப்பது
மனதோடு உன் நினைவுகள்...

வார்த்தைகளைக் கோர்த்துக் கோர்த்து
கவிதைகளை வடித்துக் கொடுத்தேன்
எனக்கும் என் காதலுக்குமாய்
முற்றுப்புள்ளி வைத்துச் சென்றாய்...

உறவாக நீ வந்து,
உயிராக ஆனாயே...
களைகின்ற கனவுகளில்
களையாது நின்றாயே...
ஊடலும் காதலுக்கு
பசை தானே என்றாயே...
ஒரு சொல்லிற்கு எனை விடுத்து
காதல் கடந்து சென்றாயே...

தீப்பிடித்த வாழ்விற்கு
குளிர் சாரல் ஆனவளே  
வாழ்வே எனை எரிக்கிறதே

விழியால் வருடிச்செல்லாயோ!!

மாறட்டும் கலியுக வாழ்க்கை!!

நிழலைக் கொண்டாடும் உலகில்
நிஜங்கள் இருளில் மறையும்
விரல்கள் சிந்திடும் வியர்வை
கைக்குட்டை மட்டுமே அறியும்

படிகாரக் கற்களை எல்லாம்
வைரமென நம்பி வணங்கும்
பொய்களுக்கு அரியணைத் தந்து
உண்மைகள் ஓரத்தில் ஒடுங்கும்

சிரிக்கின்ற மலரில் கூட
சில்லறைகள் தேடும் உலகம்
நீரூற்ற நேரமில்லை
பழம் மட்டும் ருசிக்க வேண்டும்

எதிலோ மயங்கிடும் மனது
எங்கோ முடங்கிடும் நினைவு
அறியாத புரியாத தேடல்
நாளையில் தொலைத்த இன்று

நட்சத்திரப் பந்தலின் கீழே
உறங்கிட ஆசைகள் கொண்டு
இதிகாசக் கூற்றுகளை மறந்து
இன்னலை சுமக்கும் மாக்கள்

பக்குவமாய் பாசாங்கு நீக்கி
பார்வையில் பகுத்தறிவு பொருத்தி
உழைப்பின் உயர்வை உணர்ந்து
உண்மையின் வீரத்தில் சிலிர்த்து

மதங்களுக்கு பாலம் நெய்து
மனதை சல்லடையில் சலித்து
மானுடம் சிறப்புறச் செய்ய

மாறட்டும் கலியுக வாழ்க்கை!!

இனி வாழ்வோம்

அழகிய மலரைக் கண்டு
மனதிற்குள் முத்தமிடுவோம்!
வாழ்த்தும் குயில்களுக்கு
கண் சிமிட்டி ஆமோதிப்போம்!
புத்தகத்தில் இனித்தவற்றை
கோடிட்டு சேகரிப்போம்!
தினமும் பத்து நிமிடம்
இசையில் தொலைந்திடுவோம்!
வளர்ந்துவிட்டதை மறந்துவிட்டு
மழையில் நனைந்திடுவோம்!
நூலறுந்த காற்றாடியாய்
எங்கோ தொலைந்து மீள்வோம்!
உள்ளத்தோடு உயிரையும்
சிறு பிள்ளையென பேணுவோம்!
தவறவிட்ட நிமிடங்களை
தூசு தட்டி வாழ்ந்திடுவோம்!

ஓட்டத்தின் நடுவே,
ஓய்வெடுக்கட்டும் கால்கள்...
கனவுகளின் நடுவே,
உறங்கிக்கொள்ளட்டும் விழிகள்...
வியர்வையைத் துடைத்து,
இளைப்பாறட்டும் கைகள்...
அனைத்திற்கும் நடுவே,
அமைதிகொள்ளட்டும் நெஞ்சம்!!

நட்சத்திரம் எண்ணியபடி
இரவுகள் சில கழியட்டும்...
மலரோடு பேசியபடி
பொழுதுகள் பல மரிக்கட்டும்...
நடைபாதை மரங்களோடு
உறவுகள் வளரட்டும்...
வாழ்வாங்கு வாழ்ந்து
இரசனைகள் நிறையட்டும்!!

மரணத்தின் அருகில் நின்று
தத்துவங்கள் பேச வேண்டாம்,
வாழும் வாழ்க்கைத் தடத்தில்
ஞானத்தை வடித்துச் செல்வோம்.

அறிந்தும் அறியாத
அனைவருக்கும் ஒரு புன்னகை!
சிறந்தும் சிறக்காத
நல்லவர்க்கு ஒரு இன்சொல்!
உயிர்த்தும் உயராத
உயிர்களுக்கு ஒரு பிரார்த்தனை!
புரிந்தும் புரியாத

இறைவனுக்கு ஒரு நன்றி!!!

Monday 7 January 2019

ஆரஞ்சு நிற பலூன்

சற்று தொலைவில் அவர் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் கையில் ஆரஞ்சு நிற பலூனோடு தயாராய் நின்றிருந்தான், பலூன்காரன்.
முகம் நிறைய புன்னகையோடு அதை வாங்கிக்கொண்டவர் பலூன்காரனிடம் பணத்தை நீட்ட,
“அய்யா, பேரப்புள்ளைக்கு ரெண்டு பலூனா வாங்கிப் போங்களேன். புள்ள சந்தோஷப்படுமே!!” சில்லறையை திருப்பிக்கொடுக்க மனமில்லாமல் நீட்டியபடி வினவினான்.
“ஒன்னு போதும் தம்பி. இது என் பேரப்புள்ளைக்கு இல்லை. என் பொண்ணுக்கு!” பெருமிதமாக வந்தது பதில்.
தலை நரைத்து, நடை தளர்ந்து நிற்பவரைக் கண்டவன் கண்களில் கொக்கிகள் தென்பட்டன.
தெய்வீகமாய் சிரித்தவாறு, “என் பொண்ணுக்கு பதினெட்டு வயசு ஆயிடுச்சு. ஆனாலும், இன்னைக்கும் அவ குழந்தைதான். நான் உயிரோட இருக்குற வரை தினமும் ஒரு ஆரஞ்சு பலூன் அவளுக்காக வாங்குவேன். பதினஞ்சு வருஷ பழக்கம்!!”
கடந்து சென்றவரை கனிவோடு கண்டு நின்றான் பலூன்காரன்.

பலூனை மிகக் கவனமாகப் பற்றிக்கொண்டு தனது வீட்டிற்குள் நுழைந்தவர், மின் விளக்கினை எரிய விட்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் இருக்கும் தனது வீட்டின் வராந்தாவில் வந்து நின்றார். மாலை இளந்தென்றல் அவரின் கன்னச் சுருக்கங்களுக்கிடையே சில்லிட்டுச் சென்றது. இரு கைகளுக்குள் அடங்கியிருந்த பலூனிற்கு ஒரு முத்தம் கொடுத்து, கைகளை உயர்த்தி காற்றோடு அதை தவழவிட்டார். அசைந்து அசைந்து பறந்து மறைந்தது, ஆரஞ்சு பலூன்.

வானை நோக்கியபடி அவர் வராந்தா இருக்கையில் அமர்ந்திருக்க, வீட்டினுள்ளே மின்விளக்கின் கீழே அவருடைய மூன்று வயது மகள் பால் பற்கள் பளிச்சிட சிரித்திருந்தாள், புகைப்படத்தில். அந்தி வானம் ஆரஞ்சு நிறம் பூசிக்கொள்ள, அமைதியாய் சிரித்துக்கொண்டார் அவர்.