Sunday 8 January 2017

விலை மாது

ஆடவர் கலையும்
காமக்கழிவுகளின்,
கழிவறை!

ஒற்றைக்கண் பாம்புகள்
கால்களிடையே ஊற,
ஆயிரம் நகங்கள்
மார்பினைக் கீற,
வெள்ளையும் கருப்புமாய்
ரோமங்கள் சூழ,
உயிருள்ள மெத்தையாய்
கட்டிலின்மேல் கிடப்பவள்!!

தினமும் ஒரு அலங்காரம்
தினமும் ஒரு அகமுடையான்
தினமும் ஒரு அரங்கேற்றம்
தினமும் ஒரு அவமானம்!

கண்களில் காதலைக்
கண்டதில்லை
ஸ்பரிசத்தில் மென்மையைக்
கண்டதில்லை
பேச்சிலே இனிமையைக்
கண்டதில்லை
மொத்தத்தில் மனிதர்களைக்
கண்டதில்லை

உதட்டுச்சாயம் நீக்கிட
வழியில்லை
சீராய் உடையுடுத்த
வாய்ப்பில்லை
வயிறார பசித்தீர்க்க
உறவில்லை
ஓர் இரவாவது உறங்கிட
தனிமையில்லை!

கடவுள் வரைந்த
விதியோ!
காலம் சமைத்த
சதியோ!
மானம் பஞ்சத்தின்
பலியோ!
பெண்மை காமத்தின்
குறியோ!

திரௌபதியை மீட்டவன்,
இவளை ஏன் மறந்துவிட்டான்!
மனிதகுலம் படைத்தவன்,
மனிதம் ஏன் மறுத்துவிட்டான்!!

Friday 6 January 2017

மயானம்

மனிதனின் ஆட்டம்
சூனியமாகும்
தாரை தப்பட்டை
இறுதியாகும்
உறவுகள் இருந்தும்
தனிமையாகும்
நெருப்பிலே சலனமின்றி
வெந்துபோகும்
பாவக்கணக்குகள்
தொலைந்துபோகும்
புண்ணியப் பயன்கள்
தீர்ந்துபோகும்
நீண்ட வாழ்க்கை
ஒய்ந்துபோகும்
நினைவுகளின் எச்சம்
கறைந்துபோகும்
ஆறடியும் சிறுகிண்ணத்தில்
அடங்கிப்போகும்
காற்றோடு காற்றாய்
ஒடுங்கிப்போகும்
இவனாகினும் அவனாகினும்
சமமாய்ப்போகும்
எவனாகினும் உலகம்
கடந்துபோகும்!!

காத்திருக்கிறேன்

தொலைவில் கேட்கும்
தபால்காரனின் சைக்கிள் ஒலி,
அவன் கொண்டு வரும் தபால் அனைத்தும்
எனக்கென்று தோன்றும்.
ஆனால்,
ஒன்று கூட எனக்கில்லை!

ஒரு நாளைக்கு ஒரு முறை
வந்து செல்லும் சீமை ரயில்,
இன்று நிச்சயம் நீ வருவாய்
என்று தோன்றும்.
ஆனால்,
இன்றும் நீ வரவில்லை!

அமைதியாய் தூங்கும்
என் வீட்டு தொலைபேசி,
கோவில்மணி ஓசை கூட தொலைபேசி அழைப்பு
என்று தோன்றும்.
ஆனால்,
மௌனத்தை போர்த்திஇருக்கும் தொலைபேசி!

திங்கள் ஒரு முறை உன்
ஊருக்கு வரும் என் தெரு அன்பர்கள்,
இந்த முறை உன் தூது வரும்
என்று தோன்றும்.
ஆனால்,
ஒரு சொல்கூட தூதில்லை!

ஞாபகம்

தென்றல் என்னை தொட்டுச் செல்லும் போது
உன் சுவாசம் என்னை தொட்ட ஞாபகம்!

முகிலுல் மறைந்து வெண்ணிலவு என்னை காணும் போது
உன் ஓரக்கண் கல்ல பார்வை ஞாபகம்!

சாலையோர செவ்வந்தி மரம் என் மீது பூ தெறிக்கும் போது
உன் முத்த மழையில் நனைந்த ஞாபகம்!

காலைக் கதிர் ஒளி என் மீது படியும் போது
உன் நிழல் ஏந்தி உன் பின்னே நடந்த ஞாபகம்!