Wednesday 11 May 2016

உணர்வாக நீ!

எழுதிய கவிகளும்
பேசிய மொழிகளும்
பாடிய கீதங்களும்
காலடித் தடங்களும்
கண்ணோர நீர்த்துளியும்
இதழோரப் புன்னகையும்
இதமான சுவாசமும்
விரல்கசியும் நேசமும்
ஒய்யார வனப்பும்
உயிர் சிதைக்கும் பார்வையும்
காதோர ரகசியங்கள்
பேசாத மௌனங்கள்
செல்லமான ஊடல்கள்
கோபம் மறந்த கூடல்கள்!
உறவாக நீ இல்லை,
உணர்வாக வாழ்கின்றாய்!
நினைவுகளை சுமந்துகொண்டு,
உனக்காக வாழ்கின்றேன்!
இல்லை,
எனக்காக,
என காதலுக்காக,
உன்னை காதல் செய்வதற்காக,
வாழ்கின்றேன்!

உன் நேசம்

மலையின் உச்சியிலே
நின்றிருந்தேன்
என் தலை தொடும் முகிலைக்
கண்டிருந்தேன்
மழைத்துளியும் சிந்திடவே
தவமிருந்தேன்
வறண்ட பூமி குளிர்ந்திடவே
காத்திருந்தேன்
கருமேகம் எனைக் கடக்க
பயம்கொண்டேன்
அங்கோர் காட்டில் அது மழைத்தூவ
நான் மனம் நொந்தேன்
வறண்ட பூமி பிளந்திடவே
நான் உயிரோடு புதைந்தேன்!
தொலைதூர முகிலாய் நீ!
துவண்ட நிலமாய் நான்!
நான் ஏங்கிய மழைத்துளி,
உன் நேசம்!!!