Saturday 23 May 2020

லண்டனில் வத்தக்குழம்பு


அன்று அவன் அலுவலகத்திலிருந்து சற்று முன்னதாகவே வீடு திரும்பியிருந்தான். ஐயாயிரம் மைலுக்கு அப்பாலிருந்து வந்த ஒளியும்/ஒலியும் அழைப்பில் தன்னை மறந்து சிலாகித்துக்கொண்டிருந்தார், அப்பா. மூன்று பேர் அமரக்கூடிய சோபாவில் நடுநாயகமாய் அமர்ந்திருப்பார், எப்பொழுதுமே. அலுவலகம் செல்லும் நேரம் தவிர, வீட்டில் அவர் வசிப்பது அங்கு தான். 

தனது கையில் வைத்திருந்த காகிதத்தை வருடிப்பார்த்தவன், தனது அம்மாவின் புகைப்படத்தைப் பார்த்தான். வரவேற்பறையின் மூலையில் போடப்பட்டிருந்த உணவு மேசையின் பக்கவாட்டுச் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படத்தை அவன் நின்று நிதானித்துப் பார்த்ததில்லை. இன்று ஒரு சிறிய மகிழ்ச்சியின், எளிய கொண்டாட்டமாய் அவன் அன்னையின் முகத்தைக் கண்டு புன்னகைத்தான். 

“அப்பா, அம்மா எங்க?” 
கைப்பேசியில் கேள்வி வந்து விழ,
“வந்துட்டேன் வந்துட்டேன்…” என்று குரல் கொடுத்துக்கொண்டே அப்பாவின் அருகே வந்தமர்ந்தாள், அவள். அவளும் அவனுக்கு அம்மா தான்! லண்டனிலிருந்து அழைத்தது அவனுக்குத் தங்கை தான். ஆனால், தங்கைக்கு எப்படியோ?! அவன் தெரிந்து கொள்ள முயன்றதில்லை.

அவனது அரைமணி நேரக் காத்திருப்புக்குப் பின் ஒளியும்/ஒலியும் நிறைவடைந்து, அவன் மீது தந்தையின் பார்வை விழுந்தது.
கடிகாரத்தைப் பார்த்தவர், “என்னடா சீக்கிரம் வந்துட்ட?” என்றார். 
அவனது அம்மாவாக இருக்க வேண்டியவள், அவனை ஒரு பொருட்டாகக் கூட எண்ணாமல் கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தாள். 

பழகிவிட்ட ஒன்றிற்கு அவனிடம் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 

தந்தையின் எதிரே வந்து நின்றான். கையிலிருந்த காகிதத்தை நீட்டினான். பிரித்துப் படித்தவரின் புருவங்கள் உயர்ந்தன. கைப்பேசியை நோண்டிக்கொண்டிருந்தவளின் கவனம், கணவனின் முக பாவனைகளின் மீது திரும்பியது. 
“என்னப்பா திடீர்னு லண்டன் போற?”
கணவன் கூறியதைக் கேட்டு புருவம் உயர்த்தியவள், இம்முறை கவனத்தைக் கடிதத்தில் பாய்ச்சி, ‘லண்டன்’ எனும் வார்த்தையை மீன் பிடித்தாள்.
“ப்ராஜெக்ட்டுக்காக ஆபிஸ்ல போகச் சொல்லியிருக்காங்க.”
“லெட்டர்ல ஆறு மாசம்னு போட்டிருக்கு?!”
“ஆறு மாசம்னு சொல்லியிருக்காங்க. அது முன்ன பின்ன ஆகலாம்.”
“எப்போ கிளம்பணும்?”
“இன்னும் மூணு வாரத்துல…”

உள்ளே எழுந்து சென்றவள் தண்ணீர் நிரப்பிய பாட்டிலுடன் அறைக்குள் புகுந்துகொண்டாள். தட்டில் மூடிவைக்கப்பட்டிருந்த மூன்று சப்பாத்தியும் ஒரு கரண்டி அளவு குறுமாவும் அவனது கால் வயிற்றினை நிரப்ப, கிச்சனில் தாராளமாக வைக்கப்பட்டிருந்த குடத்து நீரை மூன்று சொம்பு அளவிற்குப் பருகிவிட்டு, மாடியிலிருக்கும் தனது அறைக்குச் சென்றான். பதினொன்றாம் வகுப்பிலிருந்து அவன் அந்த அறையில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறான். அவனோடு மர டேபிள் ஒன்று, வயர் பின்னிய நாற்காலி ஒன்று, பழைய மர அலமாரி ஒன்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றன. உடையை மாற்றிக்கொண்டவன், உதறி விரித்த பாயில் உயிரிழந்த தலையணையைத் தலைக்கு வைத்து உறங்கிப்போனான். 

அலுவலகத்திற்குக் கிளம்பி கீழே வருவான். மேசை மீது மூடி வைக்கப்பட்டிருந்த இரண்டு மூன்று இட்டிலி, தோசை வகையறாக்களை விழுங்குவான். வறண்டு, சில்லிட்டு, தடித்து, தீய்ந்து… எப்படியிருந்தாலும் அதை விழுங்குவன். பூஜை அறைக்குள் தீபாவளி பொங்கலன்று மற்றும் செல்வதோடு சரி. மற்றபடி உண்டு முடித்து, தட்டினை அலம்பிவைத்துவிட்டு, இரண்டு சொம்பு நீர் குடித்துவிட்டு கிளம்பிவிடுவான். கிளம்பும் முன் பெற்றவளின் முகத்தை ஒரு முறை பார்ப்பதோடு சரி. கையெடுத்து வணங்கியதில்லை; கண்ணீர் வடித்ததில்லை; வேண்டுமென்று வேண்டியதில்லை. அவனுடைய உரையாடல் அனைத்தும் அவனது ஒற்றைப் பார்வையில் சுருங்கிக்கொண்டுவிடும். உருவமாய் இருக்கும் தாய்க்கு பிள்ளையின் பார்வை புரியும்போது, அருவமாய் இருப்பவள் அவன் மனதைப் படிக்காமலா இருப்பாள்! நடப்பவை அனைத்திற்கும் பூதசாட்சி அவள்!

அன்று அவன் உண்ண அமர்ந்ததும், "எத்தனை பெட்டி எடுத்துட்டு போகலாம்?" என்றாள் அவனுக்கு அன்னையாக வந்தவள், எங்கோ பார்த்தபடி.
"ரெண்டு பெட்டி. ஒவ்வொண்ணும் பதினைஞ்சு கிலோ."
அவளுக்குத் தேவையான தகவலை மட்டும் கொடுத்தான், தலை கவிழ்ந்தபடி.

‘அம்மா!’ எனும் சொல்லே அவனது அகராதியில் புழக்கத்தில் இல்லாத வார்த்தையாகிப் போனது. ஐந்து வயது பிள்ளை தாயை இழந்த துக்கத்தில் வாடியிருக்க, ‘பிள்ளைக்காக’ என்று சொல்லி மறுமணம் செய்துகொண்டார் தந்தை. ‘அம்மா’ எனும் வெற்றிடம் தொலைந்துபோன மகிழ்ச்சி அப்பிள்ளைக்கு. ஈராண்டுகள் செல்ல, தான் தமையன் ஆகிவிட்ட திளைப்பில், பஞ்சுப்பொதியென தாயின் அருகே படுத்திருந்த பிஞ்சின் கால் விரல்களைத் தொட்டுப்பார்த்தான். சொப்புவாயை சப்பு கொட்டிக்கொண்டு, குமிந்து கிடந்த விழி விரித்து அண்ணனைப் பார்த்தது, அக்குழந்தை. அதன் நாசியினை அவன் தொட நினைத்து விரல் நீட்ட, வெடுக்கென தட்டிவிட்ட புதுத்தாய், ‘இனி இந்த ரூமுக்குள்ள வராதே’ என்று விரட்டினாள். இருப்பினும் ‘அம்மா… அம்மா…’ என்று அவளைச் சுற்றி வந்தவனை, இனி எப்பொழுதும் தன்னை ‘அம்மா’ என்று விளிக்கக்கூடாது என்று கண்கள் உருட்டி மிரட்டினாள். அவளது அகராதியில், ‘அம்மா’ எனும் சொல், தனது மகளுக்காகப் பிரத்யேகமாய் ஒதுக்கப்பட்ட ஒன்றாகிப் போனது. தன்னை மறந்து அவன் அவ்வாறு விளித்த சமயங்களில் பூசைகள் நடந்தன. அவனது இல்லம் அவனுக்கு அந்நிய தேசமாகிப் போனது. அவனது அப்பா இருந்தும் இல்லாமல் போனார்.         

“நாளை மறுநாள் காலைல எத்தனை மணிக்கு பிளைட்டு?”
வினவினாள் அவனது சித்தி - பெற்றவளின் உடன் பிறந்தவள்.
அவன் தாராளமாகப் பேசுவது அவளோடு மட்டுமே.
“விடியற்காலை ரெண்டு மணிக்கு, சித்தி. லுஃப்தான்சா. மூணு மணி நேரத்துக்கு முன்னமே ஏர்போர்ட் போயிடுவேன்.”
“நானும் சித்தப்பாவும் வரோம்… இந்நேரம் என் அக்கா இல்லாம போயிட்டாளே… என் புள்ளை ஒரு வயசுலயே ஓடறான், பேசறான், சிரிக்கிறான், டான்ஸ் ஆடறான்னு ஒவ்வொரு விஷயத்துக்கும் பூரிச்சு போவா. அவ இருந்திருந்தா நீ லண்டன் போறத சொல்லிச்சொல்லி ரொம்பப் பெருமை பட்டிருப்பா. ஹ்ம்ம்…”
அம்மாவைப் பற்றி சித்தி கூறியதும், அவனது கண்களில் ஈரம் தேங்கி நின்றது. அவனது தாய் அவனைக் கொண்டாடிய நினைவுகளை பலமுறை சித்தி கூறக் கேட்டிருக்கிறான். அவ்வாறான கொண்டாட்டமின்மையால், தான் இந்த உலகில் முக்கியமற்ற ஆன்மா என்றே எண்ணியிருந்தேன். 
அமைதியாக இருந்தவனின் உள்ளத்து அனலை உணர்ந்தவளாய்,
“தேவையான துணியெல்லாம் எடுத்து வச்சுட்டியா?” என்று மௌனத்தைக் கலைத்தாள்.
“எடுத்து வச்சுட்டேன் சித்தி…”
“அப்புறம் அவளோட பொண்ணு லண்டன்ல தான இருக்கா?”
“தங்கச்சியா? ஆமா சித்தி…”
“என்ன ‘தங்கச்சி’யா? அவ உன்னை புள்ளையா நினைச்சதில்ல. அவ பொண்ணு உன்னை ‘அண்ணா’னு கூப்பிட்டு பேசினதில்ல. இதுல உனக்கு எங்கிருந்து உறவு வந்துச்சு…”
“எனக்கிருக்கற உறவு இவங்க தான சித்தி…”
“காலாகாலத்துல உனக்கு கல்யாணம் பண்ணிட்டா உனக்குன்னு ஒருத்தி வந்துடுவா.”
“அதையும் அவங்க தான சித்தி செய்யணும். அம்மா அப்பாவா, அவங்க ரெண்டு பேரும் தான சித்தி முன்னாடி நின்னு என் கல்யாணத்தை நடத்தணும். இல்லைனா, வரப்போற பொண்ணுக்கும், அவ குடும்பத்துக்கும் என் மேல எப்படி மரியாதை வரும்.”
“நீ ஏன் கவலை படற? இவ்வளவு நாளா நீ பட்டதுக்கெல்லாம் சேர்த்துவச்சு நல்ல பொண்ணு கிடைப்பா. நீ கவலைப்படாத. நான் இருக்கேன்.”
அவனிடம் அமைதி மட்டுமே பதிலாக இருந்தது.
“உனக்கு தொக்கு, புளிக்காய்ச்சல் எல்லாம் செஞ்சு வைக்கறேன். ஊறுகாய் எடுத்துட்டு போகலாமா?”
மீண்டும் அவளே அவனது மௌனத்தை உடைத்தாள். 
“அதெல்லாம் வேண்டாம் சித்தி. எடை அதிகமாயிடும். வெறும் முப்பது கிலோ தான் எடுத்துட்டு போகலாம்.”
“முப்பது கிலோவுக்குமா துணிமணி எடுத்து வச்சிருக்க?”
“இல்லை சித்தி. கைல ஏழு கிலோ எடுத்துக்கலாம். அதுல என்னோடது  வச்சுட்டேன். மீது முப்பது கிலோவும் தங்கச்சிக்கு தேவையான பொருளெல்லாம் அவங்க எடுத்து வச்சிருக்காங்க.”
“அடிப்பாவி… அவ இவ்வளவு அநியாயம் பண்ணறாளா?! உன் அப்பா ஒண்ணுமே சொல்லலையா? ஆறு மாசம் ஊருக்கு போற புள்ளைக்கு எவ்வளவோ தேவை இருக்கும்னு அவருக்குக் கூட தெரியாதா. ஏண்டா நீ இவ்வளவு அப்பாவியா இருக்க?”
“அதெல்லாம் ஒண்ணுமில்ல சித்தி. நீங்க தேவை இல்லாம எதையும் நினைச்சு மனசு வருத்தப்படாதீங்க. நாளைக்கு காலைல நானே வீட்டுக்கு வந்து உங்கள பார்க்கறேன். நீங்க நடு ராத்திரி ஏர்போர்ட்டெல்லாம் வரவேண்டாம்.”
அழைப்பினைத் துண்டித்துவிட்டு தனது லண்டன் வருகையைப்பற்றி தங்கையின் கணவனுக்கு மின்னஞ்சல் அனுப்பினான்.

அன்னையின் புகைப்படத்தின் எதிரே நின்று ஒருமுறை பார்த்துவிட்டு, அப்பாவிடமும், அன்னையாக வந்தவளிடமும் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினான். 
“பணத்தையெல்லாம் விரயம் பண்ணாம ஒழுங்கா சேர்த்து வை. கிரவுண்ட் ஒன்னு வாங்க பேசி வச்சிருக்கேன்” என்று மேலும் ஒரு சுமையை அவனது தோளில் ஏற்றினார், தந்தை. இதை அவர் கூறியிருக்கத் தேவையில்லை. செல்வத்தை எப்படி செலவழிப்பது என்பதனை அவன் அறிந்து வைத்திருக்கவில்லை. அவனுக்கென்று எந்த வித தேவைகளும் இருப்பதாக அவனுக்குத் தோன்றியதே இல்லை.

விமானத்தில் தனது ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தவன், தனது லெதர் ஜாக்கெட்டுக்குள் பாஸ்போர்ட் வைக்கப்பட்ட சிறு தோள் பையினை சொருகிக்கொண்டான். விமானம் மேலே உயர, பிரம்மாணட நகரம் மெல்லச் சுருங்கியது வியப்பாக இருந்தது அவனுக்கு. ஒரு கைப்பிடி மின்மினிப்பூச்சிகளைச் சிதறவிட்டதுபோல் ஜொலித்தது. சிறிது நேரத்தில் இருள் சூழ்ந்துவிட, கண்கள் மூடி சாய்ந்து அமர்ந்தவன், நினைவு வந்தவனாய் மீண்டும் தனது பாஸ்போர்ட்டை சரிபார்த்துக்கொண்டான். தோள் பையில் மடித்து வைக்கப்பட்டிருந்த தங்கையின் விலாசம் கண்ணில் பட்டது. ‘ஹீத்ரு ஏர்போர்ட்டுக்கு வந்துடறேன்’ என்று தங்கையின் மாப்பிள்ளை அனுப்பியிருந்த மின்னஞ்சல் நினைவிற்கு வந்தது. தங்கையின் முகமும் நினைவிற்கு வந்தது. இத்தனை வருடங்களில் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிற்கே அவன் தங்கையோடு ஓரிரு வார்த்தைகள் பேசியுள்ளான். சிறு  வயதில் விளையாடியிருக்கக் கூடும். ஆனால் அந்த நினைவுகள் பனி சூழ் காட்சியென மங்கிக்கிடந்தன. அவன் விவரம் தெளிந்த பின் தங்கை பூப்பெய்த, அவனுக்கு அவசரஅவசரமாக மாடியில் தனி அறை கட்டிக்கொடுக்கப்பட்டு அவனது ஜாகை மாற்றப்பட்டது. பெரும்பாலும் உணவு உண்ண மட்டுமே கீழே வருபவன், அவள் தலை கவிழ்ந்தபடி உணவருந்திவிட்டு எழுந்து செல்வதையே கண்டிருக்கிறான். அடுத்த சில மணி நேரத்தில் அவன் அவளை சந்திக்கப்போகிறான். நலம் விசாரிப்புகளையும் தாண்டி வேறென்ன பேசுவது என்றொரு பெருந்தயக்கம் அவனுள். 

லண்டன் ஹீத்ரு விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவன், தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு வெளிப்பட, அங்கே தங்கையின் கணவன் மட்டும் காத்துக்கொண்டிருந்தான்.
“வாங்க மச்சான்! வெல்கம் டு லண்டன்!!” என்று அவன் கைகுலுக்க, இவனும் அமைதியான புன்னகையோடு கைகுலுக்கினான். 
“இருவது நிமிஷத்துல வீட்டுக்கு போயிடலாம், மச்சான். உங்க தங்கச்சிய தடபுடலா சமைக்கச் சொல்லிட்டு தான் வந்தேன்.” 
பணி நிமித்தமாய் உரையாடியபடி வீட்டை அடைந்தனர்.

மூன்று அடுக்கு அடுக்குமாடி குடியிருப்பில், வாயிலில் புல்வெளி படர்ந்திருக்க, ஆங்காங்கே டாஃபோடில் மலர்கள் சிரித்திருக்க, தலையாட்டியபடி அவனை வரவேற்றது ஜப்பான் செர்ரி மரங்கள். 
தரைத்தளத்தில் இருந்த வீட்டின் வாயிலில் அவனது தங்கை காத்து நிற்க, இரு பெட்டிகள், கைப்பை, மடிக்கணினி பை என்று அனைத்தையும் தூக்கிக்கொண்டு இருவரும் உள்ளே நுழைந்தனர்.
“வாங்க!” என்று மெலிதாய் சிரித்து அவனை வரவேற்றவள், அடுக்களைக்குள் புகுந்துகொண்டாள்.
“ரெண்டு பெட்ரூம், கிச்சன், ஹால்… இவ்வளவுதான் மச்சான் வீடு இங்கெல்லாம். ஏதோ அட்டைப்பெட்டிக்குள்ள வாழறமாதிரி இருக்கும். நம்ம ஊர்ல நல்ல விசாலமான வீட்ல வாழ்ந்துட்டு இங்க இந்த மாதிரி வீட்ல இருக்கணுமேன்னு நினைக்கும்போது முதல்ல கஷ்டமாத்தான் இருந்தது. அப்புறம் பழகிடுச்சு. முன்னாடி ஒரு சிங்கிள் பெட்ரூம் வீட்ல தான் இருந்தோம். இவ டெலிவரி நேரத்துல ஊர்லேர்ந்து அத்தை மாமா வந்திருந்ததால வசதி பத்தாதுனு இந்த வீட்டுக்கு மாறிட்டோம்…”
தங்கைக் கணவன் பேசி முடிக்க, அவர்கள் இருவரும் பருக கோப்பைகள் ஏந்தியாடி எதிரே வந்து நின்றாள், தங்கை. காப்பியை எடுத்துக்கொண்டவன்,
“எனக்கு காபி கொடுத்துட்டு, மச்சானுக்கு என்ன எடுத்துட்டு வந்திருக்க?” என்றான் அவளது கணவன் யோசனையாய்.
“அண்ணனுக்கு ஹார்லிக்ஸ்” என்றவள் அண்ணனின் கையில் கோப்பையைக் கொடுத்துவிட்டு அடுக்களைக்குள் சென்றுவிட்டாள்.

“அய்யோ… அடிக்காதீங்க… எனக்கு ஹார்லிக்ஸ் ரொம்பப் பிடிக்கும். அதான் எடுத்து சாப்பிட்டேன். அடிக்காதீங்க... வலிக்குது… வலிக்குது…” 
“ஏண்டா என் பெண்ணுக்காக வாங்கி வச்சிருக்கற ஹார்லிக்ஸை நீ தின்னு தீர்க்கப்பார்க்கறியா? உன்னை வீட்ல வச்சிருக்கறதே பெரிய விஷயம். இந்த வயசுலயே திருட்டுத்தனமா?” என்று வசைபாடியபடியே அவனை முதுகிலும், கையிலும் அம்மா அடிப்பதை, சிறு குழந்தையாய் இவள் கதவோரம் நின்று வேடிக்கை பார்த்தது இவளது நினைவிற்கு வந்தது. தேம்பியபடி, கண்களைக் கசக்கிக்கொண்டு இவளைக் கடந்து சென்ற அண்ணனின் அழுகையும் நினைவிற்கு வர, இன்று இவளது விழிகள் ஈரம் கொண்டன.

குளித்து முடித்து உடைமாற்றிக்கொண்டு வந்தவன், தூக்கக் கலக்கத்தில் தங்கையின் மடியில் அமர்ந்திருந்த அவளது பிள்ளையைக் கண்டான்.
“இப்பத்தான் சார் தூங்கி எழுந்திரிச்சாரு. முழிச்சு ஒரு கால் மணிநேரம் ஆகும் அவர் நிதானத்துக்கு வர. அதுவரைக்கும் இப்படித்தான் அவன் அம்மாவை விடமாட்டான்.”
தங்கையின் கணவன் கூறக்கூற, விரல் சூப்பியபடி அமர்ந்திருந்த எட்டு மாதக் கைக்குழந்தையை இமைக்கவும் மறந்து பார்த்திருந்தான், தாய்மாமன். பிறகு யோசனை வந்தவனாய், தனது கைப்பையைத் திறந்து சிறு நகைப்பெட்டி ஒன்றினை எடுத்து மாப்பிள்ளையிடம் நீட்டினான்.
“இது குழந்தைக்கு…”
“நீங்களே உங்க தங்கச்சி கிட்ட கொடுங்க மச்சான்.”
பெட்டியைத் திறந்து தங்கச்சங்கிலி தெரிய தங்கையின் முன் அவன் நீட்ட, அவளோ குழந்தையை அண்ணன் கையில் கொடுத்தாள். பஞ்சுப்பொதியென சந்தன வெண்மைக் குழந்தையைக் கையில் ஏந்தியதில் அவனுக்குப் பேரானந்தம் பொங்கியது. வாயில் வைத்திருந்த விரலை எடுத்துவிட்டு குழந்தை சிரிக்க, உணர்ச்சிப் பரவசத்தில் கண்கள் ஈரமானவன், அதன் உச்சியில் முத்தம் வைத்தான். கையில் வைத்திருந்த நகையை அவன் மீண்டும் தங்கையிடம் நீட்ட, 
“நீங்களே போட்டுவிடுங்க…” என்றாள் பரிவாக.
“ஆமா மச்சான். தாய் மாமன் சீரு ரொம்ப ஸ்பெஷல். நீங்களே போட்டுவிடுங்க” என்று தங்கையின் கணவனும் கூற, உளமார இறைவனை வேண்டி, குழந்தைக்கு நகை சூட்டி, ‘தாய் மாமன்’ ஆசிர்வதித்தான். முதன்முறையாகத் தானும் முக்கியப்பட்டவனாகிப்போன மகிழ்ச்சி அவனுள்!! 

இந்திய நாட்டு நடப்புகளையும், இங்கிலாந்து நாட்டு நடப்புகளையும் பேசியபடி இருவரும் உணவு மேஜையில் ஆஜராகினர்.
உணவு பரிமாறியவள், வெள்ளை சாதத்தின் மீது வத்தக்குழம்பு ஊற்ற, சற்றே கடுப்பான அவளது கணவன்,
“ஏன்மா முதன்முதல்ல உன் அண்ணன் நம்ம வீட்டுக்கு வந்திருக்காங்க. சாம்பார் வைக்காம இதென்ன வத்தக்குழம்பு போய் வச்சிருக்க?” என்று சிடுசிடுத்தான்.
“அண்ணனுக்கு வத்தக்குழம்புனா ரொம்பப் புடிக்கும்” என்றவள், அண்ணனை நோக்க, அவனோ தங்கையின் பதிலைக் கேட்டு ஆச்சரியத்தில் விறைத்திருந்தான்.
வெடுக்கென விலகிச் சென்று அடுக்களைக்குள் புகுந்துகொண்டவள் இமையோரம் துளிர்த்த கண்ணீர்த்துளியை துடைத்துவிட்டாள். 

அன்றொருநாள் மதியம், இவள் உணவு உண்டு முடிக்கும் தருவாயில் அண்ணன் வந்து அமர்ந்தான். தட்டில் அம்மா வெள்ளைச்சோறு இட்டுக் கொடுக்க, அருகிலிருந்த வத்தக்குழம்பினை எடுக்க எத்தனித்தான்.
“டேய், அது அவளுக்கு…” என்ற அன்னை, குழம்பினை அவளின் தட்டில் கவிழ்த்துவிட்டு, மோரினை அவனது தட்டினில் ஊற்றினாள்.
கடுங்கோபத்தோடு மடமடவென உண்டு முடித்தவள், எழுந்து அடுக்களைக்குள் சென்று,
“ஏன் அம்மா என் தட்டிலே குழம்பை கொட்டுனீங்க? என்னால சாப்பிட முடியாம மீதம் வச்சுட்டேன். அண்ணனாவது சாப்பிட்டிருக்கும். அண்ணனுக்கு ரொம்பப் பிடிக்கும்” என்று பொரிந்து தள்ளினாள்.
“இங்கப்பாருடி உன்னால சாப்பிட முடியலைன்னா கீழ கொட்டு. பரவாயில்லை. அவனுக்கும் பிடிக்கும்னு இரக்கப்பட்டா, இடத்தைக் கொடுத்தா மடத்தைப் பிடிங்கிக்கற கதை தான் ஆகும். இனி வத்தக்குழம்பு செஞ்சா தானே. அவனுக்கு எப்பவும் புளிச்ச மோரு தான்.”
முகத்தினை திருப்பிக்கொண்டு அவள் அடுக்களை விட்டு வெளியே வர, கதவருகே கலங்கிய கண்களோடு அண்ணன் நின்றிருந்த நினைவு, இன்றும் அவளை கலங்க வைத்தது.   

முகத்தினை  அழுந்தத் துடைத்துவிட்டு அடுக்களையை விட்டு வெளியே வந்தவள் கணவனுக்கும், அண்ணனுக்கும் மீண்டும் அன்னமிட்டாள். அண்ணனுக்கு அவள் வத்தக்குழம்பு நீட்ட, அவளது கணவன் ரசத்தை நீட்ட, அண்ணனோ அவளது கைகளையே இமைக்காது பார்த்திருந்தான். 
புரிந்துகொண்ட அவளது கணவன் ரசத்தினை கீழே வைத்துவிட்டு,
“என்ன வேணுமோ கூச்சப்படாம சாப்பிடுங்க மச்சான்…” என்றபடியே தனது தட்டில் கவனம் கொள்ள, அவனோ மீண்டும் வத்தக்குழம்பு இட்டு வயிறார உண்டு  முடித்தான்.   

உண்டு முடித்து கையில் குழந்தையைத் தூக்கிக்கொண்டு அவனை கொஞ்சிக்கொண்டே சுவற்றில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டான். தங்கையின் கல்யாண புகைப்படங்கள் சில மாட்டப்பட்டு இருந்தன. குடும்ப போட்டோ எடுப்பதற்காக மணமக்களோடு தாய் தந்தையர் நிற்க, இவனும் அருகில் வந்து நின்றான். அச்சமயம் அவனுக்கு ஏதோ ஒரு பணியை கொடுத்து அவ்விடம் விட்டு அனுப்பப்பட்டு மீண்டும் புகைப்படம் எடுக்கப்பட்டது. அந்த நினைவு எதிர்பாராமல் அவனுள் வர, புகைப்படத்தைக் காணாது தயக்கத்தோடு முகத்தைத் திருப்பிக் கொண்டான். மீண்டும் படத்தினைக் காண வேண்டும் என்று ஆவல் தலைதூக்க, அருகே சென்று அதனை நோக்கினான். அங்கே அவனும் நின்றிருந்த குடும்பப் புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. அவனுள் ஏராளமான சந்தோஷங்கள் பொங்க, கையில் வைத்திருந்த குழந்தைக்கு ஆசை தீர முத்தமிட்டான்.

மாலை அவன் தன் ஜாகைக்குக் கிளம்பிட தயாரானான்.
“மச்சான் நீங்க இங்க எங்கக்கூட தங்கிக்கலாமே?!” 
“இல்ல மாப்பிள்ளை, கம்பெனில ஆபிஸ் பக்கத்துலயே கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு பண்ணியிருக்காங்க. கூட இரண்டு பிரண்ட்ஸ் இருக்காங்க. அதனால நான் அங்கேயே தங்கிக்கறேன்.”
“நீங்க கிட்டத்தட்ட லண்டன்ல ரொம்ப மெயினான இடத்துல தங்கப்போறீங்க. அங்கிருந்து ட்ரபால்கர் ஸ்கொயர், பக்கிங்ஹம் பேலஸ், மார்பில் ஆர்ச், தேம்ஸ், லண்டன் அய், பிக் பென், பார்லிமென்ட், லார்ட்ஸ் ஸ்டேடியம், வெஸ்மின்ஸ்டர், துஸ்ஸாட் வாக்ஸ் மியூசியம்னு எல்லாமே ரொம்ப ஈசியா சுத்தி பார்த்துடலாம். அப்பிடியே டியூப்  புடிச்சா ஈஸ்ட் ஹாம் போயி முருகனையும், மஹாலட்சுமியையும் கும்பிட்டுட்டு, சரவண பவன்ல நல்லா சாப்பிடலாம். வார கடைசில எதையும் மிஸ் பண்ணாம கண்டிப்பா சுத்தி பாருங்க. நாம ஒரு தடவை பிளான் பண்ணி வேல்ஸ், ஸ்காட்லாந்து போயிட்டு வருவோம்.”
‘சரி’ என்று தலையை அசைத்தபடி அழகாய் சிரித்துக் கொண்டான்.

தனது கைப்பேசியை சரிபார்த்த தங்கையின் கணவன், 
“மச்சான் டாக்சி வந்துருச்சு” என்றதும் தனது கைப்பையையும், மடிக்கணினி பையையும் மட்டும் கையில் எடுத்துக் கொண்டான். 
“இந்தப் பெட்டி இரண்டும்?!” 
“உங்களுக்குத்தான்…” என்றவன் மீண்டும் ஒருமுறை தன்னுடைய பாஸ்போர்ட்டை எடுத்து சரிபார்த்துக் கொண்டு மடிக்கணினி பையில் வைத்தான். 
“இங்கே எல்லாமே கிடைக்கும் அதனால கவலைப்படாதீங்க…” என்று தனது தர்மசங்கடத்தை சூசகமாய்க் காட்டிக்கொண்டான், தங்கையின் கணவன். அவசர அவசரமாக அடுக்களையில் இருந்து கையில் ஒரு நெகிழிப் பையோடு வெளியே வந்த தங்கை, 
“இதல வத்தக்குழம்பு இருக்கு. ஹார்லிக்ஸ் வச்சிருக்கேன். புளிக்காய்ச்சல், தோசை மாவு, இட்லி பொடி கொஞ்சம் வச்சிருக்கேன். ரெண்டு மூணு நாளைக்கு வரும்னு நினைக்கிறேன். நான் வீட்டுல செஞ்ச பட்சணம் கொஞ்சம் வச்சிருக்கேன்” என்று வாழ்வில் முதல்முறையாக மிக நீளமாக பேசி முடித்தாள், அண்ணனிடம்.
அவன் பதில் கூறுவதற்கு முன், தாய்மாமனிடம் தாவிக் கொண்டு வந்த குழந்தையை கையில் அள்ளி கொண்டவன் குழந்தையை விட மனமில்லாமல் வாயிலில் நின்றிருந்த டாக்ஸி வரை ஏந்திக்கொண்டு வந்தான். பிரிய மனமின்றி குழந்தைக்கு ஒரு முத்தம் வைத்து விட்டு தங்கையிடம் கொடுத்தவன் அவளைக் கண்டு ஒரு மென்னகை சிந்திவிட்டு வண்டியில் ஏறி அமர்ந்தான். 
“மச்சான், உங்க பை சீட்டுக்கு கீழே இருக்கு. இந்தாங்க உங்க லேப்டாப் பை. பாஸ்போர்ட் ரொம்ப ரொம்ப முக்கியம். ஜாக்கிரதையா போய்ட்டு வாங்க” என்ற தங்கையின் கணவன் அவனது மடிக்கணினி பையை நீட்ட அதை வாங்கி கொண்டவன், தங்கை கொடுத்த நெகிழிப்பை கீழே இருந்ததைக் கண்டு, அதனை எடுத்து மடியில் வைத்துக் கொண்டு மடிக்கணினி பையை கீழே வைத்தான். வண்டி புறப்பட, 
“அண்ணா, ஊரெல்லாம் பொறுமையா சுத்தி பார்த்துக்கலாம். நீங்க வெள்ளிக்கிழமை சாயங்காலம் வேலை முடிஞ்சதும் நேரா இங்க வந்துடுங்க. திங்கட்கிழமை காலையில இங்கிருந்தே ஆபிஸ் போயிக்கலாம்” என்றாள், அண்ணன் கிளம்பும் பரிதவிப்பில் கண்களில் ஈரம் சேர்த்தபடி. 
“சரிம்மா! போயிட்டு வரேன்மா!!” என்றபடி விடைபெற்றுக்கொண்டான், நீண்டதொரு புன்னகையை முகத்தில் படரவிட்டபடி. 

லண்டன் மாநகரத்து இளவெயில் மாலையின் இளந்தென்றல் காற்றில், தங்கையின் வத்தக்குழம்பு வாசம் அவனுக்கு மட்டும் வீசியது. மனதில், பெற்றவளின் முகம் தோன்ற, தனது கையிலிருந்த நெகிழிப்பையை மேலும் இறுகப் பற்றிக் கொண்டான், புன்னகை குறையாமல்.



*** முற்றும் ***

Friday 15 May 2020

அன்புடன் ஆம்பல் - 1




கணினியின் முன் அமர்ந்திருந்தவனின் மனம் அலுவலகப் பணியில் கவனம் கொள்ளாது, அவளது நினைவுகளில் தொலைந்திருந்தது. உள்ளங்கைகளால் முகத்தினை அழுந்தத் துடைத்தவன் மின்னஞ்சல்களை மீண்டும் சரிபார்த்தான். அவளிடமிருந்து மின்னஞ்சல் ஒன்றினை குழந்தைத்தனமாய் எதிர்பார்த்துக் கிடந்தான், நிச்சயம் எந்தத் தகவலும் வராது என்று தெரிந்திருந்தும். தனது மனதின் அபிலாஷைகளைக் கூறும் காலம் நெருங்கிவிட்டதை உணர்ந்தவன், அதற்கான தருணத்திற்கு ஏங்கியிருந்தான். அவனது ஏக்கத்திற்கு எரியூட்டும் விதமாய் அவளுடனான சம்பாஷனைகள் மனதில் தோன்றின. அத்தனையும் நெஞ்சினுள் கல்வெட்டென பாய்ந்துக் கிடப்பதை எண்ணி சிரித்துக்கொண்டான்.  

“கவிதைகளில் ஒருவரின் மனம் புரியுமா?! குணம் தெரியுமா?!” என்றான், அவளிடம் ஒருமுறை.
“கவிதைகள் மதி கொண்டு எழுதப்படுபவை அல்ல… மனம் கொண்டு… மனமே கவிதைகளின் கருவறை…” என்றாள் அவள். 
“உங்கள் கவிதைகள் உங்களது மனதிற்கான முன்னுரையா?”
சில நிமிடங்கள் சிந்தித்தவள்,
“ஆம்… முன்னுரை தான்! ஒரு புத்தகத்தின் முன்னுரையை வாசித்தால் பின்வரும் பக்கங்களில் என்னென்ன இரகசியங்களும், சிக்கல்களும், குழப்பங்களும், தத்துவங்களும் புதைந்து கிடக்கின்றன என்பதனை ஒருவாறு ஊகிக்க முடியும். அதுபோலவே நானும். என் மனக் கிடங்கிலும் அன்புகள் அடைகாக்கப்பட்டுள்ளன, இரகசியங்கள் பதுக்கப்பட்டுள்ளன...” என்றாள்.
அவள் கூறியது அவனது மனதில் ஆழப்பதிந்துவிட்ட ஒன்றாகிப்போனது. 
‘அந்த இரகசியங்களை அவள் என்னிடம் கூற வேண்டும்… என்னிடம் மட்டுமே கூற வேண்டும்… அவளது மனதின் ஆழத்தில் நங்கூரமென நான் நிலைகொண்ட பின் அவளே நிச்சயம் உரைப்பாள்…’ என்று எண்ணிக்கொண்டான். 

ஒருவார காலமாகிவிட்டது அவளோடு பேசாது. ஒரு மாமாங்கம் கடந்ததைப் போல் தோன்றியது அவனுக்கு. கடிகார முட்களை விரட்டியடித்துக்கொண்டிருந்தான். பத்து நாட்கள் குலதெய்வ வழிபாட்டிற்காக ஊருக்குச் செல்வதாகக் கூறியிருந்தாள். ஏழு நாட்கள் முடிந்துவிட்டிருந்தன. இன்னும் மூன்று நாட்களின் காத்திருப்பை எண்ணி அயர்ந்து கொண்டான். 

உலகிற்கு கதிரவனின் உதயமும், அஸ்தமனமும் ஒரு நாளினைக் குறிக்கும் என்றால், அவனது உலகிற்கு அவளது காலை வணக்கமே சூரியோதயம்; இரவு வணக்கமே சந்திரோதயம். அவளது கவிதைகளைப் படித்தான்… மீண்டும் மீண்டும் படித்தான்… அவளது மனதினையும் படிக்க முயன்றான். அவளது எழுத்துக்கள் உள்ளூர செய்த வேதியல் மாற்றத்தால் காதலி மீது மட்டுமல்ல, காதல் மீதும் அவனுக்குக் காதல் வந்தது.               

     
உனது மனதினுள் 
என்னை நீ சிறையெடுக்க 
நான் என்ன தவறு செய்யவேண்டும்? 


அவனுக்கு மிகவும் பிடித்த இம்மூன்று வரிகளை அடிக்கடி தன்னுள்ளே கூறிக்கொண்டான். கவிதைக் காதலிக்கு உலகின் தலை சிறந்த கவிதைத் தொகுப்புகளைப் பரிசளிக்க எண்ணினான். ஆனால் காதலியின் கவிதைகளைத் தவிர மற்றவை எதுவும் ருசிக்கவில்லை. அவளது எழுத்துப்பிழைகளைக் கூட ரசிக்கப் பழகிவிட்டவனுக்கு, இலக்கியங்கள் அனைத்தும் தேவையற்றதாகிப் போனது.


பிறர் கையில் ஆயுள் ரேகை
எனது கையில் காதல் ரேகை
என்னுள்ளே காதல் நீளும் வரை
எனது ஆயுளும் நீண்டிருக்கும்…


அவள் எழுதியிருந்த இக்கவிதையை வாசித்த பின்பு தனது உள்ளங்கைகளைக் கண்டான். அவனது ஆயுள் ரேகையை மிக நேர்த்தியாக அவனது கையில் பிரம்மன் வரைந்திருப்பதைக் கண்டான். ‘இது காதல் ரேகைனு என்னைப் படைச்ச கடவுளுக்கும் தெரிஞ்சிருக்கு. அதான் இந்த ஒரு ரேகையை மட்டும் இவ்வளவு தெளிவா, பிசிறில்லாம அழகா வரைஞ்சிருக்காரு…’ என்று எண்ணிக்கொண்டான்.

அவளது சிந்தனைகளிலும், எழுத்திலும் தொலைந்திருந்தவனின் கவனத்தை ஈர்த்தது கைப்பேசி. அம்மாவின் அழைப்பினை தாமதிக்காது ஏற்றான்.
“அம்மா, எப்படி இருக்கீங்க?”
“சந்தோஷ், நலம் விசாரிக்கற நிலைமையில இப்போ நாம இல்லை. உடனே புறப்பட்டு ஊருக்கு வா…”
அம்மாவின் கவலை தோய்ந்த குரலில் கலவரமானவன்,
“என்ன அம்மா என்ன ஆச்சு? ஏன் இப்படி பேசறீங்க? எல்லாரும் நல்லா இருக்கீங்களா இல்லையா?” என்று தனது பரிதவிப்பினை கேள்விகளாய் அடுக்கினான். 
“பதறாம அம்மா சொல்றத பொறுமையா கேளு, சந்தோஷ். பாட்டிக்கு திடீர்னு காலைல நெஞ்சு வலி வந்துடுச்சு. ஆஸ்பத்திரியில சேர்த்திருக்கோம். நீ உடனே கிளம்பி வா…”
“பாட்டிக்கா? என்னமா ஆச்சு பாட்டிக்கு?”
அவனது குரல் தழுதழுக்க, கண்கள் ஈரம் கொண்டன.
“ஹார்ட் அட்டாக்குனு டாக்டர் சொல்லிட்டாங்க. நீ உடனே கிளம்பி வா. அப்பா ரொம்ப மனசொடிஞ்சு இருக்காங்க. எனக்கும் பயமா இருக்கு…”
“பாட்டிக்கு ஒன்னும் ஆகாதுமா…”
“ஆகாது டா… கும்பிடற தெய்வம் நம்மள கை விடாது. இருந்தாலும் நீ வந்தா எங்களுக்கு தைரியமா இருக்கும்…”
“உடனே கிளம்பி வரேன்மா…”
“சந்தோஷ், கார் எடுத்துட்டு வராத. இந்த நேரத்துல நீ வண்டி ஓட்ட வேண்டாம். பஸ்ஸோ, ட்ரெயினோ பிடிச்சு வந்துடு.”
“வந்துடறேன் மா, நீங்க தைரியமா இருங்க. நான் வண்டி ஏறிவிட்டு போன் பண்றேன்” என்றவன் தனது தாய்க்கு தைரியம் கூறிவிட்டு கோயம்பேடு பஸ் நிறுத்தத்திற்கு விரைந்தான்.          

சந்தோஷ் பிறந்தது, வளர்ந்தது தஞ்சை என்றாலும் பன்னாட்டு நிறுவனத்தில் பணியமர்ந்தது சென்னையில். பெற்றோர் பெற்றெடுத்திருந்தாலும் அவனை அரவணைத்து, அன்பு காட்டி, அறிவுரை ஊட்டி வளர்த்தது பாட்டியே. ஒற்றை பேரப்பிள்ளை என்பதால் அறிவுரையோடு, பால், நெய், தயிர் மற்றும் அவனுக்கு மிகவும் பிடித்த பால்கோவா ஆகியவையும் சற்றே கூடுதலாக ஊட்டிவிடப்பட்டதால் கண்ணாடி போட்ட செரெலாக் பேபி ஆகிவிட்டான் இந்த சந்தோஷ். இலவச இணைப்பாக செல்லத் தொப்பையும் அவனோடு வளர்த்துவிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு முறையும் ஊர் திரும்பும் பொழுது, அவனுள் ஏகப்பட்ட சந்தோஷங்கள் கொட்டிக்கிடக்கும். ஒவ்வொரு வாரமும் தவறாமல் தனது காரினை எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பிவிடுவான். தனது பாட்டியை அழைத்துக்கொண்டு திருச்சி ஸ்ரீரங்கநாதரை வழிபடுவது அவனுக்கு மிகவும் பிடித்த ஒன்று. ஸ்ரீரங்கம், திருவானைக்கா, மலைக்கோட்டை என்று சில சமயங்களில் நாள் முழுதும் நண்பர்களைப் போல் பாட்டியும், பேரனும் சுற்றிக்கொண்டிருப்பர். முதல் சம்பளம் வாங்கியதும், அத்துனை பணத்திலும் பாட்டிக்கு மட்டும் சென்னையிலிருந்து பட்டுச் சேலைகள் வாங்கி இருந்தான். “பாட்டி, இதுதான் என் முதல் சம்பளம்” என்று கூறி புடவைகளைப் பாட்டியின் கையில் கொடுத்துவிட்டு அவரது காலில் விழுந்து வணங்கியது இன்றும் அவனது நினைவில் பசுமையாய் இருந்தது. முதல் முறை பெற்றோரோடு பாட்டி சென்னைக்கு வந்திருந்தபோது, ஊர் சுற்றிக்காண்பிக்க தனது மேலாளரிடம் கெஞ்சிக் குட்டிக்கரணம் அடித்து குழைந்து சிரித்து ஒரு வார காலம் விடுப்பு பெற்றான். முதல் முறை சென்னை மெரினா கடற்கரைக்கு விஜயம் செய்த பாட்டியிடம் அந்தக் கடல் அளவு ஆனந்தம் கண்டான். 
“கடவுளோட படைப்புல நான் ரொம்ப வியக்கிறது கடலும், மலையும் தான் சந்தோஷ்” என்றார், பாட்டி. 
“ஏன் பாட்டி?” என்றான் அவன் ஒன்றும் விளங்காமல். 
“மலை மாதிரி மனுஷனோட குணம் இருக்கணும். கடல் மாதிரி அவனோட சினம் இருக்கணும்” என்றார். 
“கடலளவு கோபப்படுணுமா பாட்டி?” என்றான் கேலியாய். 
“அப்படி இல்லை டா. மலை என்பது உயரத்தைக் குறிக்கும். ஒரு மனுஷனோட குணம் மேன்மையா இருந்தாத்தான் அவனும் மேன்மையானவன் ஆவான். மழை வர  மலைகள் ஒரு காரணமா இருக்கு. அதுபோல மேன்மையானவர்களால பலர் வாழ்வு செழிப்பாகும். அதே போல, கடல் என்பது ஆழத்தைக் குறிக்கும். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மனிதனின் கோபம் ஆழத்தில் இருக்கோ அவனது மனமும், அதில் முளைக்கும் எண்ணமும் கடற்பரப்பு போல விசாலமா இருக்கும்” என்றார். 
அன்றிலிருந்து ஒவ்வொருமுறை அவன் கடற்கரைக்குச் செல்லும்போது பாட்டியின் உபதேசமே அவனது நினைவிற்கு வரும்.      

இரவு நெருங்க ஊர் திரும்பியவன், உடனே தனது பாட்டி அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு விரைந்தான். ஒருபுறம் அழுதழுது ஓய்ந்திருந்த தந்தை, முகம் வீங்கி நிலைகுத்திய பார்வையோடு ஏதோ எண்ணத்தில் மூழ்கியிருக்க, விசும்பிக்கொண்டிருந்த அவனது தாயே அவன் வந்துவிட்டதை உணர்ந்து எழுந்து மகனருகே ஓடோடிச் சென்றாள்.
“பம்பரமா வேலை செய்யற பாட்டி எப்படி படுக்கையில கிடக்கறாங்க பார்த்தியா?”
அவசர சிகிச்சைப் பிரிவின் கண்ணாடி வழியே மரணத்தின் வியூகத்தில் சிக்கிக்கொண்டுள்ள பாட்டியைக் கண்டான். ஆத்மார்த்தமான அன்பினைப் பொழிவதில் அவருக்கு நிகர் அவரே. இன்றுவரையான அவனது வாழ்வின் அதிகப்படியான நிமிடங்களில் அவனது பாட்டியே நிறைந்திருக்கிறார். வார இறுதிகளில் ஊர் திரும்பும் பேரனுக்காக வீட்டின் வாயிற் கதவின் அருகே மணிக்கணக்காகத் தவம் கிடப்பவர், இன்று தன்னிலை மறந்து துயில் கொண்டிருக்கிறார். 

கண்களைத் துடைத்துக்கொண்டு தனது தந்தையை அவன் காண, அவர் அசைவின்றி அமர்ந்திருந்தார். பற்பலத் துயரங்களைக் கடந்து வந்த பாட்டியின் வாழ்க்கைப் பாதையைக் கண்கூட கண்டவர். பல கதைகள் அவர் கூற கண்ணீருடன் அவன் கேட்டுக்கொண்ட தருணங்கள் அவனது நெஞ்சில் நிழலாடின. 
“அப்பா…”
அவனது அழைப்பு தந்தையின் செவி தீண்டவில்லை.
“அப்பா…” 
மீண்டும் அழைத்தவன் அவரது தோளினை மெல்ல உலுக்க, நினைவிற்குத் திரும்பியவர், “சந்தோஷ்…” என்றுவிட்டு மௌனமாய் கண்கள் கலங்கினார். தந்தையின் மனமும், அதில் தகிக்கும் ரணமும் அறிந்தவனாய், அவனும் மௌனம் கொண்டான். அவனது தோளில் தந்தை தலை சாய்த்துக்கொள்ள, இவன் உள்ளே உடைந்துபோனான். ஆஜானுபாகுவாக வலம் வரும் தந்தை இன்று பெற்றவள் நிலையெண்ணி ஐந்து வயது பிள்ளை போல் அழுதிருப்பதைக் கண்டு அவரை சமாதானம் செய்திட முடியாமல் வார்த்தைகளைத் தொலைத்துவிட்டு, தவித்திருந்தான்.

மருத்துவமனையில் அமைதி சூழ்ந்திருக்க, நகரம் இரவினை போர்த்தியிருக்க, ஊஞ்சலாடிய நினைவுகளில் தொலைந்தவனாய் இருக்கையில் அமர்ந்த நிலையிலேயே உறங்கிப்போனான், சந்தோஷ். 

“சந்தோஷ், எழுந்திரு…”
அம்மாவின் அழைப்பில் கண் விழித்தவன், முகத்தினை அழுந்தத் துடைத்துவிட்டு நிமிர்ந்து அமர்ந்தவன், “பாட்டி எப்படி மா இருக்காங்க?” என்றான்.
“பாட்டி கண்ணு முழிச்சுட்டாங்க… முகம் கழுவிட்டு வா, உன்னை பார்க்கணும்னு சொல்றாங்க…”
“அப்படியா? வாங்கம்மா…” என்று அவன் எழ,
“முதல்ல முகம் கழுவி, தலை கோதி, சட்டையை சரி பண்ணிட்டு வா… உன்னை இந்தக் கோலத்துல பார்த்தா அவங்களால தாங்க முடியாது…”, என்று இடைமறித்தாள், அன்னை.
இரண்டு நாட்கள் முகச்சவரம் செய்யாமல் விட்டாலே, ‘ஏன் இந்தச் சோகம்?’ என்று மனம் வருந்துவார் பாட்டி. அவனது தாய் கூறியதுபோல், முகம் கழுவி, கேசத்தையும், உடுப்பையும் சீர் செய்துவிட்டு விரைந்தான்.

பாட்டியின் அருகே சென்று நின்றவன், சுருக்கங்கள் படர்ந்திருந்த அவரது வலக்கையினை எடுத்து தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டான். மெல்ல கண் விழித்த பாட்டி சந்தோஷைக் கண்டதும் அமைதிப் புன்னகை சிந்தினார். 

“பாட்டி…”
அவனது கைகளை தனது வலுவிழந்த கையினால் இறுகப்பற்றியவர், நிம்மதி புன்னகை சிந்தினார். 
“எனக்கு ஒண்ணுமில்ல சந்தோஷ்…” என்றவர், “ஊர்லேர்ந்து வந்த பிள்ளைய வீட்டுக்கு அனுப்பி தூங்க சொல்லாம எதுக்கு மா இங்க தங்க சொன்ன? காலைல நாலு மணிக்கெல்லாம் எதுக்கு மா எழுப்பின? அவன் முகமே எவ்வளவு ஓஞ்சு போயிருக்கு பாரு…” என்றார் மருமகளிடம்.
பாட்டியின் அன்பில் நெகிழ்ந்தவன், உடைந்து அழத்தொடங்கினான். 

Wednesday 13 May 2020

அன்புடன் ஆம்பல் - 2




மூன்று நாட்களாகப் பாட்டியின் அருகிலேயே இருந்தான், சந்தோஷ். 
“சந்தோஷ், கொஞ்ச நேரம் வீட்டுக்குப் போயிட்டு வா… நானும், அப்பாவும் இங்க இருக்கோம்…”
அம்மா வற்புறுத்த, “இல்லை அம்மா, என்னால பாட்டிய விட்டுட்டு எங்கேயும் போக முடியாது…” என்று விடாப்பிடியாக இருந்துவிட்டான். மூன்றாம் நாளின் முடிவில் பாட்டியின் உடல்நிலை சற்றே தேறியிருக்க, சந்தோஷிற்கும் அவனது பெற்றோருக்கும் நிம்மதி துளிர்த்தது. இறுதிப் பரிசோதனைகளை சரிபார்த்த மருத்துவர், “அவங்களுக்கு வந்திருக்கறது மைல்டு அட்டாக் தான். இருந்தாலும், அவங்க உடல் நிலை பலவீனமா இருக்கறதால ரொம்பவே  கவனமா பார்த்துக்கணும். மனம் வருந்தும்படியா எதுவும் சொல்லாதீங்க…” என்ற எச்சரிக்கையோடு அவர் வீடு திரும்பிட ஒப்புதல் தந்தார்.

வீடு திரும்பியதும் பாட்டியை விட்டுப் பிரிந்து ஊருக்குச் செல்ல விருப்பமில்லாமல் வீட்டில் இருந்தபடியே தனது மடிக்கணினியில் அலுவலகப் பணிகளைத் தொடர்ந்தான். 

ஏறத்தாழ ஒரு வாரம் ஆகிவிட்டிருந்த நிலையில், ஓர் இரவு சந்தோஷின் பெற்றோர் அவனிடம் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, பாட்டி அறியா வண்ணம் அவனது அறைக்குச் சென்றனர்.
“பேசணும்னு சொன்னீங்க… ரெண்டு பேரும் எதுவும் சொல்லாம அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?”
தன் முன்னே மௌனமாய் அமர்ந்திருந்த பெற்றோரிடம் வினவினான்.
“என் அம்மாவுக்கு எதனால இப்படி ஆச்சுன்னு உனக்குத் தெரியுமா, சந்தோஷ்?” 
கோபமும், வருத்தமுமாய் வினவினார், சந்தோஷின் தந்தை.
அவரது கேள்வியில் சற்றே பயம் கொண்டவன்,
“என்ன அப்பா சொல்றீங்க?” என்றான், குழப்பமாய்.
“நீ ஏன் சந்தோஷ் கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல மாட்டேங்கற?”
அம்மாவும் தனது வருத்தத்தினைத் தெரிவித்தாள்.
“உனக்கு இருபத்தொன்பது வயசாகுது. நல்ல வேலை, கை நிறைய சம்பளம், காசு பணத்துக்குப் பஞ்சமில்லை. நம்ம வீட்ல வசதிக்கு குறைவில்லை. பலர் விரும்பி பெண் தர ஆசைப்படறாங்க. ஆனா நீ விருப்பம் இல்லனு சொல்லி தள்ளிப்போட்டுட்டே இருக்க. அதை நினைச்சே பாட்டிக்கு ரொம்ப கவலை. நீ ஏதோ மனசுல நினைச்சு குழம்பியிருக்கியோனு புலம்பிட்டே இருந்தாங்க. கல்யாணப் பேச்சு எடுக்கும்போதெல்லாம் நீ என்கிட்ட கோபப்படுறத பார்த்து அவங்க எத்தனை நாள் வருத்தப்பட்டிருக்காங்க தெரியுமா? உன் மனசுல என்ன இருக்குனு தயவு செஞ்சு சொல்லுப்பா…”
கோபம் கொண்ட அவனது அன்னை ஒரு கட்டத்தில் கண்கள் கலங்கினாள்.
தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தவன், ஆழப்பெருமூச்சு ஒன்றினை விடுத்து, தனது மனதில் உள்ளவற்றைக் கூறிவிடுவது என்று முடிவு கொண்டான்.  
“அம்மா, நான்… நான் ஒரு பொண்ணை…”
கூறி முடிக்குமுன்னே அவன் கூற வந்ததை அவனது பெற்றோர் புரிந்துகொண்டனர் என்பதனை அவர்களின் வெளுப்பேறிய முகமே உரைத்தது.
“என்னப்பா சொல்ற?”
முதலில் மௌனம் உடைத்தாள் அவனது அன்னை.
“அம்மா… நான் செய்யக்கூடாத தப்பை ஒன்னும் செய்யலையே?!”
“ஏன்பா இத்தனை நாளா எங்ககிட்ட சொல்லல? எத்தனை முறை இதைப்பத்தி கேட்டிருப்பேன்?”
“அது… நானே ஒரு தெளிவான முடிவுல இல்லாத போது என்னனு சொல்ல…”
“யாரு அந்தப் பொண்ணு?”
“அவ ஒரு எழுத்தாளர். கதை, கவிதைனு நிறைய எழுதியிருக்கா. அவளுடைய எழுத்தை வாசிக்க ஆரம்பிச்ச பிறகு தான் எங்களுக்குள்ள அறிமுகம் ஆச்சு. எங்களோட நட்பு இன்னைக்கு புரிதலோடு ஒரு அன்பா மலர்ந்திருக்கு.”
“அதெல்லாம் இருக்கட்டும்… அவ அம்மா அப்பா யாரு? என்ன பண்றாங்க? எந்த ஊர்? எல்லா விவரமும் சொல்லுப்பா…”
அம்மா மட்டுமே கேள்விக்கணைகளைத் தொடுத்திருந்தாள். அப்பாவின் விருப்பமின்மை அவரது முகத்திலேயே பட்டவர்த்தனமாகத் தெரிந்தது.
“அம்மா… எனக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்க. நான் எல்லா விவரமும் கேட்டுச் சொல்றேன்…”
“என்ன? எந்த விவரமும் தெரியாம அப்படி என்னப்பா பழக்கம்?”
“அம்மா, நாங்க ரெண்டு பேரும் வெறும் ஈ-மெயில்ல தான் பேசியிருக்கோம்…”
“ஓ! இந்தக் காலத்து இன்டர்நெட் காதலா?”
அப்பாவின் கேள்வியில் புதைந்திருந்த பரிகாசம் அவனுக்கு விளங்கியது. 
“அந்தப் பொண்ணோட நிஜப் பெயர் என்னனு தெரியுமா? அந்தப் பொண்ணு கருப்பா, சிவப்பா? இல்லை நெட்டையா குட்டையான்னு தெரியுமா?”
அவன் பதில் கூறாது தலைகவிழ்ந்து அமர்ந்திருந்தான்.
“எதுவுமே தெரியாம எப்படி உங்களுக்குள்ள காதல் வந்துச்சு?”
மற்றொரு பரிகாசம் அப்பாவிடமிருந்து, வெறுப்பு சற்று தூக்கலாக.
“அப்பா, இன்னும் நான் என் மனசுல உள்ளதை அவகிட்ட சொல்லல… ஆனா அவ விருப்பமும் இதுதான்னு எனக்குத் தெரியும்…”
துணிவைத் துணைகொண்டு தீர்க்கமாகக் கூறிமுடித்தான்.
“ஓ! காவியக் காதலா?”
அவனது பதிலுக்குக் காத்திராமல் சுவற்றினை நோக்கி பேசத்தொடங்கினார், அவனது தந்தை.
“என் அப்பா, நான் நாலு வயசு புள்ளையா இருந்தபோது என்னையும், என் அம்மாவையும் தெருவுல விட்டுட்டாரு. என் அப்பாவோட உறவுக்காரங்க யாரும் உதவல. பிறந்த ஊருக்குப் போய்டலாம்னு என் எம்மா இங்க திரும்பி வந்தாங்க. அப்பா, அம்மா இல்லாம அண்ணன், அண்ணி தயவுல வளர்ந்து கல்யாணம் பண்ணவங்க திரும்பவும் அவங்க கிட்டயே அடைக்கலம் தேடிப்போனாங்க. ஆனா அவரும் ஏத்துக்க மறுத்துட்டாரு. என்னை வச்சுக்கிட்டு தனியா காட்டுலையும், மேட்டுலையும் வேலை செஞ்சு, வாயக்கட்டி, வயத்தக்கட்டி என்னை ஆளாக்கினாங்க. நான் டிப்ளமோ முடிச்சு பத்து வருஷம் துபாய்ல சம்பாதிச்சப் பணத்தை வச்சு இங்க நிலம் வாங்கிப்போட்டு விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன். தூக்கம், சாப்பாடு எல்லாம் மறந்து நானும், என் அம்மாவும் உழைச்சோம். என் அம்மா தான் உன் அம்மாவை எனக்குக் கட்டிவச்சாங்க. அவளுக்கும் இன்னொரு அம்மாவா இருக்காங்க. இப்போ நீ அனுபவிக்கற பகட்டு எல்லாம் என் அம்மாவோட உழைப்பு. நீ வியர்க்கக்கூடாதுனு ஓடவிட்டிருக்கற ஏ.சி. என் அம்மாவோட வியர்வை. இதெல்லாம் உனக்குத் தெரிஞ்ச கதைதான். இருந்தாலும் திரும்பவும் நான் உனக்கு ஞாபகப்படுத்தறேன். எனக்கு விவரம் தெரிஞ்சு என் அம்மா வாய் திறந்து இது வேணும், அது வேணும்னு என்கிட்ட கேட்டதே இல்லை. முதல் முறையா நேத்து என்கிட்டே உன்னோட கல்யாணத்தைப் பார்க்க விரும்பறதா சொன்னாங்க. தனக்கு ஏதோ ஆயிடுமோன்னு பயம் அவங்களுக்கு. எனக்கும் தான். அவங்க என்கிட்ட முதலும் கடைசியுமா கேட்கற விஷயத்தை நான் இல்லனு சொல்லமாட்டேன். சின்ன வயசுல, இந்த ஊருல என் அம்மாவுக்கு துணையா இருந்து  உதவி செஞ்ச அவங்க ஸ்நேகிதியோட பேத்தியை உனக்கு கட்டி வைக்கணும்னு ஆசைப்படறாங்க. பொண்ணோட அப்பா எனக்கு நல்ல பழக்கம். நல்ல குடும்பம். வீட்டுக்கு ஒரே பொண்ணு. சென்னைல தான் இருக்காங்க. நாளைக்கு காலைல நானும் உன் அம்மாவும் சென்னைக்குப் போய் அவங்ககிட்ட பேசிட்டு வரப்போறோம். கொஞ்ச நாளைக்கு நீ இங்கயே இரு. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரத்துல உனக்குக் கல்யாணம். இன்டர்நெட்ல காதலிக்க நீ ஒன்னும் விடலைப்பய இல்லை. ஒழுங்கா பொறுப்பா நடந்துக்கோ..” என்று காரசாரமாக பேசியவர், விருட்டென அறையை விட்டு வெளியேறினார். 

மனதில் குடியிருப்பவளை எண்ணி இத்தனை நாட்களாக மனமகிழ்ச்சியில் தூக்கம் இழந்தவனுக்கு இன்று மனச்சோர்வில் தூக்கம் தூரம் ஆனது.


பிரிவின் முடிவில் காத்திருப்பது 
மரணம் மட்டுமே! 
உயிரைத் துறந்தால் 
ஒரு முறை மரணம் 
இல்லையெனின் 
தினம் தினம் மரணம்... 


அவளது கவிதையை அவனது மனம் நினைவூட்டியது. இக்கவிதையை சாதாரணமாய்க் கடந்து சென்றவனுக்கு இன்று அவனது வலி அதன் அர்த்தத்தை உணர்த்தியது.

அவனது பாட்டியின் மேல் அளவு கடந்த அன்பு வைத்திருப்பவன் தான். தந்தை அவனிடம் கூறியிருந்த பழங்கதைகளை அவ்வப்போது நினைத்துப் பார்த்து பாட்டியை எண்ணி பெருமைக் கொள்பவன் தான். தந்தையின் வார்த்தையே தாரக மந்திரம் என்றிருப்பவன் தான். அவர் கூறிய கல்லூரியில் படிப்பு, அவர் கூறிய நகரத்தில் பணி என்று அவனது அனைத்திலும் அவரின் சொல்லே முடிவாக இருந்தது. ஆனால், காதல் அனைத்து கட்டுக்கோப்புகளையும் நொடியில் கட்டவிழ்த்து விடுகின்றது. அது கொடுத்த குருட்டு தைரியத்தில் அவனது மனதின் எண்ணங்களைத் துல்லியமாய் அவன் கொட்டித்தீர்த்தாலும், நினைத்ததை சாதித்துக்காட்டும் துணிவு பிறக்குமா என்பது இவன் விஷயத்தில் கேள்விக்குறியே. ஏனெனில், அவளை நேசிக்கும் அதே இதயம் அவனது குடும்பத்தையும் நேசிக்கிறது.

மறுநாள் தாயும், தந்தையும் பெண்வீட்டாரினை சந்திக்கச் சென்றுவிட, நிம்மதியின்றி தவித்திருந்தான் சந்தோஷ். அவன் சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த ஊரும், வீடுமே கடுங்காவல் போடப்பட்ட அரணாகத் தோன்றியது. காலையில் அப்பா கிளம்பும் முன் அவனிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கோபத்தினையும், கண்டிப்பையும் கண்களால் உமிழ்ந்துவிட்டுச் சென்றார். அம்மாவிற்குத் தெரிந்ததெல்லாம் இவனை சமரசம் செய்வது மட்டுமே. அப்பாவின் செய்கையில் எவ்விதக் குறையும் அவளது கண்களுக்குத் தட்டுப்படுவதில்லை. நிதானித்து, சிந்தித்து ஆலோசிப்பவர் பாட்டி மட்டுமே. அவரிடம் சரணாகதி அடைந்துவிட பாட்டியின் அறைக்குள் நுழைந்தான்.

“வா சந்தோஷ்!”
பாட்டியின் பொலிவிழந்த முகமும், வலுவிழந்த தேகமும் அவனது உள்ளத்தை நோகடித்தன.
“பாட்டி…”
அவரின் அருகே சென்று அமர்ந்துகொண்டான். சிறு வயதில் அப்பாவிடம் பூசை வாங்கும் நேரங்களில் பாட்டியின் மடியே அவனுக்குத் தஞ்சம். கனிவான குரலில் அவர் சொல்லும் அறிவுரைகளையும், சமாதானங்களையும் அமைதியாகக் கேட்டுக்கொள்வான். 
"அப்பா உன் கல்யாணத்தைப் பத்தி பேசினாங்களா சந்தோஷ்?"
"ஆமா…" என்றவனின் குரல் அடைத்துக்கொண்டு, கண்கள் ஈரம் கொண்டன. உடனே தன்னை சுதாரித்துக்கொண்டவன், பாட்டி அறியாவண்ணம் தன்னை சமன் செய்துகொண்டான். 
"பொண்ணு நல்ல அழகு. டிகிரி வாங்கியிருக்கா. உனக்கு நல்ல பொருத்தமா இருப்பா. அவளைப் பார்த்ததும் எனக்குப் பிடிச்சுப்போச்சு.” 
பாட்டியின் முகத்தில் பூரிப்பினைக் கண்டவனுக்கு அழுவதா, சிரிப்பதா என்று புரியவில்லை.
“கல்யாணத்தைப் பொறுமையா நடத்தலாம்னு சொன்னேன்…”
அவர் கூறியதைக் கேட்டு சிறு நம்பிக்கை தலைத் தூக்கியது சந்தோஷிற்கு. பாட்டி கூறினால் அப்பா தட்டமாட்டார் என்பது அவன் அறிந்ததே.
“ஆனா, என் பேச்ச கேட்க மாட்டேன்னு சொல்லிட்டான் சந்தோஷ்…”
அவனுக்குத் துளிர்த்த நம்பிக்கை துவண்டு போனது.
“பத்திரிக்கை அடிச்சு, நிச்சயத் தாம்பூலம் மாத்தி, நாலு அஞ்சு மாசம் கழிச்சு பெரிய மண்டபம் எடுத்து சீரும் சிறப்புமா உனக்குக் கல்யாணம் செய்யணும்னு ஆசை. ஆனா, என்னை நினைச்சு இப்படி அவசர அவசரமா கல்யாண ஏற்பாடு பண்றான். நான் இருந்தா என்ன இல்லேனா என்ன? உனக்கு செய்ய வேண்டியத ஒழுங்கா செய்ய வேண்டாமா?”
“பாட்டி…”
இத்தனை நேரமும் அமைதி காத்தவன், வாய் மலர்ந்தான்.
“பாட்டி, எனக்கு நீங்க தான் முக்கியம். வேற எதுவும் வேண்டாம்.”
பாட்டியின் கைகளை அவன் மெல்லமாய்ப் பற்றிக்கொண்டான்.
“நீங்க உடல் தேறி வரணும் பாட்டி. எனக்குப் பிடிச்ச பால்கோவா செஞ்சு தரணும். என்னை வளர்த்தது போல என் பிள்ளையையும் வளர்க்கணும்…”
அவன் கூறியதைக் கேட்டு கண்கள் கலங்கிவிட்டார் அவனது பாட்டி.
பாட்டியை சமாதானம் செய்தவன், அவரை ஓய்வெடுக்கச் சொல்லிவிட்டு எழுந்து செல்ல, கதவு அருகே சென்றவனை மீண்டும் அழைத்தார் அவனது பாட்டி.
“சந்தோஷ், உனக்கு இந்தக் கல்யாணத்துல விருப்பம் தானே? நாங்க தான் ரொம்ப சந்தோதோஷமா இருக்கோம். மாப்பிள்ளை நீ முகத்துல செண்டிப்பே இல்லாம இருக்கியே?”
“அது ஒண்ணுமில்ல பாட்டி. நைட்டு ரொம்ப நேரம் கண் முழிச்சு ஆபிஸ் வேலை பார்த்தேன். அதான் கொஞ்சம் அசதியா இருக்கு… நீங்க தூங்குங்க...”       

பாட்டியிடம் உண்மையைக் கூறவேண்டும் என்ற எண்ணத்தோடு சென்றவன், அவரின் நிலையைக் கண்டு நா எழாமல் தனது அறைக்குத் திரும்பினான். அறைக்குத் திருப்பியவன், கதவினை தாழிட்டுக்கொண்டு இரகசியமாய் அழுது தீர்த்தான். முகமறியா தேவதையின் மாயப்பிடிக்குள் சிக்கிக்கொண்டவன் அவளை நெருங்கவும் முடியாமல், நடப்பவற்றிலிருந்து தப்பிக்கவும் முடியாமல் தீயிலிட்டப் புழுவாய்த் துடித்தான்.