Wednesday 31 July 2019

கண்ட நாள் முதலாய்...

இமைக்காமல், சலைக்காமல் இவளையே பார்த்துக்கொண்டிருந்த அவனது விழிகளுக்குள், தவனைமுறையில் தன்னை தொலைத்துக் கொண்டிருந்தாள். 
தினமும் சபித்துக்கொண்டு அவள் பயணிக்கும் பேருந்து, சில நாட்களாக சுந்தர விமானமாக மாறியதோடு, இவளது பருவத்தின் பயிர்களுக்கு நீரூற்ற, காதல் புஷ்பங்கள் பூத்துக்குலுங்கின. 
அவன் இறங்கிய பின்னே இரண்டு நிறுத்துங்கள் கழித்து இறங்குபவள், இன்று அவனைத் தொடர்ந்தாள். 
நான்காக மடிக்கப்பட்டிருந்த கோலினை பையிலிருந்து எடுத்து விரித்தவன், மெல்ல மெல்ல எட்டு வைத்து பார்வையற்றோர் சங்கக் கட்டிடத்துள் நுழைவதைக் கண்டவள், திடுக்கிட்டு அதிர்ச்சியில் உறைந்தாள். அவளது நினைவுகளில் அவனது விழிகள் நிழலாடியது.
அவ்விடமே காத்திருந்து அவனை மீண்டும் கண்டவள், அவன் கையிலிருந்த கோலினை வாங்கிக்கொண்டு, அவனது விரலோடு விரல் சேர்த்தவள், கைகள் கூடிய பின்னே தன் காதலை உரைத்தாள், காதலும் கைக்கூடவேண்டுமென்ற  பரிதவிப்போடு.

Monday 29 July 2019

மழை

மழை… கொட்டும் மழைச்சரங்கள் முகம் நனைத்து உயிர் தீண்டும் நொடியில் அவளைக் கண்டேன். மழை நின்றும் அவள் நினைவு என் உயிரை நீவியது.
சாரலாய் அவளது பார்வைகள், தூரலாய் அவளது வார்த்தைகள், மழை மேகமாய்க் கொழுத்த எங்கள் காதல் என, மழை நீர் ஓடையில் தவழும் காகிதக் கப்பலாய் என் நாட்கள் தவழ்ந்து நகர்ந்தன.
காகிதக் கப்பல் ஓர் நாள் கவிழ, இன்றும் அவளை மழை நாட்களில் தொலைவிலிருந்து நான் ரசித்திருக்கிறேன், மழைநீரெல்லாம் எனது கண்ணீரால் கரிக்கச்செய்தபடி. 
இன்று மழையில்லை ஆயினும் அவள் அதோ… அங்கே வருகிறாள்… என் கருப்புக்கண்ணாடி எனக்குக் கைக்கொடுக்க, அவளது கண்களையும் மறைத்துக்கொண்டிருந்தது ஓர் கருப்புக்கண்ணாடி.

Sunday 21 July 2019

கணவன் அமைவதெல்லாம்...

நாம் கூறும் வார்த்தைகள் நம் மனதிற்கு இனியவரின் செவி சேராமல், அல்லது சேர்ந்தும் மதிக்கப்படாமல் ஒதுக்கப்படுவதின் வலியை என்றாவது நாம் குறிப்பாகக் கவனித்ததுண்டா? பழகிப்போன ஒன்றை எண்ணி, நமது மூளையும் பெரிசாக அலட்டிக்கொள்வதில்லை என்பதே நிதர்சனம். உதாரணமாக, "கடைக்குப் போய் வாருங்களேன்" எனும் போது, தொலைக்காட்சிப்பெட்டியின் ஒலியை அதிகரித்து, கிரிக்கெட் விளையாட்டில் தன்னை மறந்து, மூழ்கி, தொலைந்துபோவது; "பிள்ளைக்கு கணக்குப் பாடம் சொல்லிக்கொடுங்களேன்" எனும் போது, 'எனக்குத் தெரியாது' எனும் உண்மையை தொண்டைக்குள் புதைத்துவிட்டு, "எனக்கு நேரமில்லை" என்று சொல்லி, 'நேரம் இருந்திருந்தால் கணித மேதை ராமானுஜத்திற்கே டஃப் கொடுத்திருப்பேன்' என்று மேதாவி லுக் ஒன்றை நம் மீது வீசுவது; "இன்று ஒரு நாள் லீவு போடுங்களேன்" எனும் போது, "இன்று முடியவே முடியாது" என்று யோசிக்காமல் வரும் பதிலில், 'நான் படிதாண்டி செல்லவில்லை என்றால் அலுவலகம் மட்டுமல்ல அண்டமே நின்றுவிடும்' என்று பொறுப்புணர்வு பொங்கி வழிவது; "இன்று கிச்சனில் உதவுகிறேன்" என்று உள்ளே நுழைந்து, நறுக்கத் தந்த கேரட்டுகளில் முக்கால்வாசியை முழுங்கி வைப்பது… இதுபோல், இன்னும் பல...

எதார்த்தம் என்னவென்றால், நாம் கத்ரீனா கைஃப்பாகவே இருப்பினும், நமக்கு காண்ட்ராக்டர் நேசமணி தான் வாய்க்க வேண்டும் என்று சொர்கத்தில் நிச்சயிக்கப்பட்டுவிட்டால், அதை யாரால் மாற்ற இயலும்!! கணவன் அமைவதெல்லாம்… ஆமென்!!

Friday 19 July 2019

மாமியார் வீடு

அன்று அவள் என்னோடு வாக்குவாதம் செய்தபடி நடக்க, நானும் விடாது அவளது கோபத்தின் உயரத்தை அளந்து பார்க்கும் ஆர்வத்தில் வில்லங்கமான பதில்களையே முன்வைத்தபடி நடந்தேன். நான் சுதாரிப்பதற்குள் அவள் சாலையைக் கடக்க எத்தனிக்க, அதிவேகமாய் விரட்டி வந்தது அந்த லாரி… நான் அவள் கையைப்பற்றி என்னிடம் இழுத்திருக்கலாம்… அல்லது அந்த லாரி க்ரீச்சிட்டு பத்து சென்டிமீட்டர் இடைவெளியில் நின்றிருக்கலாம்… ஆனால்… ஆனால், இரண்டுமே நடந்தது!! 

என் கையை உதறியவள், லாரி ஓட்டுனரை, என்னை முறைப்பது போல முறைத்துவிட்டு, சாலையைக் கடந்து, பேருந்தில் ஏறி அவள் அம்மா வீட்டிற்குச் சென்றுவிட்டாள். 

விபரீதமாக வேறேதோ நடந்திருக்கும் என்று நீங்கள் நினைத்திருக்க வாய்ப்புண்டு. 

நானும் அப்படித்தான்… நானும் அப்படித்தான் நினைத்தேன் என்று நீங்கள் ஊகித்திருந்தால்… அதற்கு வாய்ப்பில்லை ராஜா!! ஏனென்றால் என் மரியாதைக்குரிய மாமனாரும், மதிப்பிற்குரிய மைத்துனரும், காக்கிச்சட்டை 'கன'வான்கள்.. இப்பொழுது என் மனைவியை சமாதான செய்து அழைத்துவர என் மாமியார் வீட்டிற்கு, அதாவது என் மனைவி பிறந்து வளர்ந்த வீட்டிற்கு (மீண்டும், நீங்கள் நினைத்தது கிடையாது) சென்றுகொண்டிருக்கேன்.


மல்லிகைப்பூ

வெகு நாட்கள்… இல்லை மாதங்கள்… இல்லை கடைசியாக நான் இதைச் செய்தது எப்பொழுது என்று யோசித்துத் தெளியுமுன்னே, நெகிழிப்பையில் திணிக்கப்பட்ட மல்லிகைப்பூவை என் கையில் திணித்தாள், பூக்காரி.
திருமணமான புதிதில் என் கையில் மல்லிகையைக் கண்டாள் அவள் இதழில் மோகனப்புன்னகை தவழ, இலவச இணைப்பாய்  கன்னங்களும் சிவந்து போகும்.
ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் அந்த சிரிப்பினையும், சிகப்பினையும் காண எந்தன் கண்கள்… இல்லை இதயம்… இல்லை, இரண்டுமே ஏங்கின.
வாயிற்கதவைத் திறந்தவள் ஒரு கையில் இருந்த சாப்பாட்டுக்கூடையினை வாங்கிக்கொண்டு, மற்றொரு கையில் பதுவிசாக நான் வைத்திருந்த மல்லிகையை வாங்கி கூடைக்குள் திணித்தபடி, "அக்கா வந்திருக்காங்க" என்றுவிட்டு செல்ல, அவளது இன்ப அதிர்ச்சிக்கு மாறாக எனக்கு துன்ப அதிர்ச்சிகள் தோன்றி, வளர்ந்து, மரித்தும் போயின. 
மல்லிகைச் சரத்தினை நறுக்கி, அக்கா, அக்கா மகள்கள், என் மகள் என்று அனைவருக்கும் பங்கிட்டுக்கொடுத்தவள், அன்று காலை கோவிலில் கொடுத்த இரண்டு அங்குல கதம்ப சரத்தை தலையில் சூடிக்கொண்டே என்னைக் கண்டு நான் ஏங்கிய மோகனப்புன்னகையைச் சிந்த, ஆறுதல் அடைந்தோம் அவளை நெருங்க முடியாமல் போன நானும், மல்லிகையும். 

ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம்

உச்சஸ்தாயியில் ஸ்ருதி பிசகாக அவள் பாடும் சுப்ரபாதமே அவனது தினசரி அலாரம். 
சில நாட்களாகவே இரண்டு வரிக்கு ஒரு முறை எட்டிப்பார்த்தது வறட்டு இருமல்.
'இந்த முப்பது வருஷ சம்சார வாழ்க்கையில இவளுக்கு க்ளாஸ் எடுத்தே காலம் போயிடுத்து' என்று அயர்ந்துகொண்டவன், 'டாக்டரப் போய் பார்க்கணும்னு தனக்கா தோணித்துனா போய் வைத்தியம் பண்ணிக்கட்டும்' என்று ஸ்ருதி தப்பிய சுப்ரபாதத்தைக் கடந்து செல்வது போல், வறட்டு இருமலுக்கும் காதுகளைப் பூட்டிக்கொள்ள பழகிக்கொண்டான்.
காலை நடைப்பயிற்சி முடித்து வீடு திரும்பியதும் ஜரூராக அவன் முன் ஆஜராகும் ஃபில்டர் காபி அன்று வராததைக் கண்டு அடுக்களைக்குள் சென்றவன் கண்டது, மயங்கிய நிலையில் கீழே சரிந்து கிடந்த அவளைத் தான்.
இன்று, அலாரம் சத்தத்தில் விழித்துக்கொண்டவனுக்கு இனி என்றுமே ஸ்ருதி தப்பிய சுப்ரபாதம் அவனை எழுப்பப்போவதில்லை என்ற நிதர்சனம், இதயத்தின் ஓரத்தில் சுருக்கென குத்தியது.

Wednesday 10 July 2019

காதல்னா என்ன?

"என்ன மாமா, தினமும் வேலை முடிஞ்சு எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவ. இன்னிக்கு ஏன் இவ்ளோ லேட்டு? பசங்க ரெண்டும் உன்னை எதிர்பார்த்து, இப்போ தான் தூங்கப்போச்சுங்க."
இரவு பத்து மணிக்கு வீடு திரும்பிய மாமனிடம், பதில் வேண்டி கவலையாய் அவள் நின்றிருந்தாள்.
"டவுனுக்கு போய் வர நேரம் ஆயிடுச்சு புள்ள" என்றவன், "இந்தா இது உனக்கு தான்" என்று ஒரு பையை நீட்டினான்.
யோசனையாய் பையைப் பிரித்தவளுக்கு, உள்ளிருந்த புதுப் புடுவையைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் நா எழவில்லை. இத்தனை வருடங்களில் முதன்முறையாக அவன் அவளுக்கு பரிசு வாங்கி வந்திருப்பதைக் கண்டு ஆனந்தத்தில் விக்கித்துப்போயிருந்தாள்.
அவளது மனவோட்டத்தை உணர்ந்துகொண்டவன், அவனே பேசத்தொடங்கினான்.
"எங்க சூப்பர்வைசர் கல்யாணம் முடிஞ்சு இன்னிக்கு தான் டூட்டில வந்து சேர்ந்தாரு. அவருக்காக எங்க மேனேஜரு சாயங்காலம் ஃபாக்டரிலயே சின்னதா ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருந்தாரு. சிக்கன் பிரியாணி, சூப்பு, சுவீட்டு எல்லாம் போட்டாங்க. எல்லாரும் எங்க சூப்பர்வைசர பத்தி ரெண்டு வார்த்தை பாராட்டி பேசி, வாழ்த்து சொன்னோம். அப்போ எங்க மேனேஜரு, 'நான் ஒரு கேள்வி கேட்ப்பேன். யாரு சரியா விளக்கம் தரீங்களோ அவங்களுக்கு இருநூறு ரூவா பரிசு'னு சொன்னாரு."
"என்ன கேள்வி மாமா?"
"'காதல்னா என்ன?'னு கேட்டாரு."
"அது சரி, நல்லா கேள்வி கேக்குறாரு பாரு..."
"ஏன், அது நல்ல கேள்வி தான? நாங்க மொத்தம் இருபத்து மூணு பேரு. எல்லாரும் என்னாமா பதில் சொன்னாங்க தெரியுமா! அம்பிகாவதி, அமராவதி, தேவதாஸ், காவியம்னு என்னென்னமோ சொன்னாங்க. சில பேர் சொன்னது எனக்கு புரியவே இல்லனா பார்த்துக்க. ஒரு ஃபிட்டரு கவிதையே படிச்சுட்டாரு. அப்புறம் என் முறை வந்துது…"
"நீ என்ன சொன்ன?" என்றாள் ஆவலாக.
"எழுந்து நின்னு முதல்ல எல்லாருக்கும் வணக்கம் சொன்னேன்."
"அப்புறம்?"
"சார், நான் ஏழாங்க்ளாசோட படிப்ப நிறுத்தினவன். எனக்கு அழகா பதில் சொல்ல தெரியாது. எனக்கு தெரிஞ்சத சொல்றேன். என் முத புள்ள பொறக்கும்போது, என் சம்சாரம் ரெண்டு நாளா இடுப்பு வலியில துடிதுடிச்சு, ஒரு வழியா புள்ளைய பெத்தெடுத்தா. அவள வார்டுல பார்க்க போனப்ப, சக்கையா பிழிஞ்சுபோட்ட மாதிரி கிடந்தா. என்ன தான் புள்ள பொறந்தது சந்தோசம்னாலும், அவள பார்க்க என்னவோ போல இருந்துது. அரை மயக்கத்துல மெல்ல கண்ணை தொறந்து பாத்தவ என்னை பாத்து என்ன கேட்டா தெரியுமா? 'சாப்பிட்டியா மாமா?'னு கேட்டா. அது தான் சார் எனக்கு தெரிஞ்சு காதல். எனக்கு ரெண்டு ஆம்பளப்புள்ளைங்க. என் அம்மா ஒரு பொம்பளப் புள்ளைய பெத்து கொடுக்க சொல்லி சதா நச்சரிக்கும். ஆனா, என் சம்சாரத்துக்கு விருப்பம் இல்லை. 'எனக்கு மூணாவது பெத்து வளக்க திராணி இல்ல மாமா'னு சொன்னா. பெத்துதான் ஆகணும்னு நானும் கட்டாயப்படுத்தல, என் அம்மாவையும் அதுக்குமேல அதை பத்தி பேச விட்டதில்லை. இதுவும் காதல் தான் சார். நாள் முழுக்க நின்னுகிட்டே வேலை செய்யறேன்னு ராத்திரியில அவ எனக்கு கால் பிடிச்சு விடுவா. காலைல அவ எனக்கும், புள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு கட்டும்போது, நான் புள்ளைங்கள குளுப்பாட்டி, யூனிஃபார்ம் போட்டுவிடுவேன். மாசாமாசம் சம்பளம் வந்ததும் அவ கைல கூட கொடுக்கமாட்டேன், சாமி மாடத்துல வச்சுடுவேன். தினமும் அவளே என் சட்டை பாக்கெட்டை செக் பண்ணி, கை செலவுக்கு காசு வச்சு வைப்பா. எப்ப சண்டை போட்டாலும், எக்காரணம் கொண்டும் அவ எனக்கு சோறாக்கிப் போடாம இருந்ததில்லை, என் கோபமும் ராத்திரி தாண்டுனதில்ல. ஏழு வருசத்துல, ஒரு தடவ கூட எங்க கல்யாண நாளு எனக்கு ஞாபகம் இருந்ததில்ல, அவளும் வருசாவருசம் தவறாம எனக்கு புடிச்ச பால் பாயசம் செஞ்சு, 'என்ன மாமா இந்த வருசமும் கல்யாண நாள மறந்துட்டியா?!'னு சிரிச்சுக்கிட்டே கொடுக்க மறந்ததில்லை. இதுவரைக்கும் அவளுக்கு நான் ஒரு பரிசும் வாங்கித் தந்ததில்லை. அதே போல, என் தேவை என்னனு எனக்கே தெரியாது, அவளுக்கு தான் தெரியும். இவ்வளவு ஏன் சார், இத்தனை வருசத்துல நான் ஒரு தடவ கூட 'ஐ லவ் யூ'னு சொன்னதில்லை. இத்தனை வருசத்துல ஒரு தடவ கூட அவளுக்கும் என் மேல பாசம் குறைஞ்சதில்ல. எனக்கு தெரிஞ்சு இதெல்லாம் தான் சார் காதல்!" என்று,  நண்பர்கள் முன்னிலையில் பேசியதனைத்தையும் வார்த்தை மாறாமல் ஒப்புவித்தான். அவளோ, ஆச்சரியத்தில் இமைக்கவும் மறந்து அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
"என்ன புள்ள அப்படி பார்க்குற?"
"மாமா, எனக்கு பேசத்தெரியாதுன்னு சொல்லிட்டு, இவ்வளவு அழகா பேசியிருக்கியே நீ…"
"அதனால தான் எனக்கு இருநூறு ரூவா பரிசு கொடுத்தாங்க. நானும் அடுத்த வாரம் வர நம்ம கல்யாண நாளுக்காக உனக்கு புடவை வாங்கியாந்தேன்."
"புடவை ரொம்ப நல்லா இருக்கு மாமா, ஆனா…"
"என்ன புள்ள?"
"ரொம்ப நாளா இத்துப்போன செருப்பையே தச்சு தச்சு போட்டுக்கிட்டு இருக்க, உனக்கு ஒரு புது செருப்பு வங்கணும்னு நினைச்சேன். இப்ப எனக்கு புடவை அவசியமா? வேலைக்கு போற உனக்கு நல்ல செருப்பு வாங்கியிருக்கலாம்..."
"பார்ரா… இதுக்கு பேரு தான் புள்ள காதல்"
"போயா…"
"ம்ம், உன்னை விட்டு எங்க போறதாம்?? புள்ள, இத்தனை நாளா உன்கிட்ட சொல்லாம விட்டத இப்ப சொல்லட்டுமா?"
"என்னது?"
"ஐ லவ் யூ…"
"போ மாமா" என்றவள் உள்ளங்கைகளுக்குள் முகம் புதைத்து நாண, அவளது மாமனோ மனம் நிறைந்து, உரக்கச் சிரித்தான்.