Tuesday 30 January 2018

யாரோ நான்?!

கடலின் நடுவே
கவிழ்ந்த படகின் மேல்
மல்லாக்கப் படுத்து
விண்மீனை ரசிக்கின்றேன்

சோலையில் புதருள்
சூழ்ந்த முட்களை விலக்கி
கையில் ரத்தம் வடிய
ரோஜாவிற்கு முத்தம் தருகின்றேன்

புகைக்கும் எரிமலை மேல்
விறுவிறுவென ஏறிச்சென்று
விசாலமான நிலத்தைக் கண்டு
வியப்பில் மூழ்கித் திளைக்கின்றேன்

நாற்புறமும் வெள்ளம் நிறைய
வீட்டுக் கூரையின் மூழ்கா விளிம்பில்
உலர்ந்த என் மேல் சட்டையை
நாய்க்குட்டிக்குக் கம்பளியாக்கினேன்

பத்தி, பூ மணக்கும் இழவு வீட்டில்
காது கிழிய ஒப்பாரி ஒலித்தும்
சலனமின்றி உறங்குபவனைக் கண்டு
பொறாமைப் பெருமூச்சு விடுத்தேன்

யாரோ நான்?!
சிந்தை கலங்கிய பித்தனோ!
பித்தம் கலைந்த சித்தனோ!
அனைத்தும் கடந்த ஞானியோ!
வாழ்வை ருசிக்கும் போகியோ!

Sunday 28 January 2018

விலகிய நொடி

என் விழி மீறி பிறக்கும்
பார்வையெல்லாம்
உன் முகம் தேடி காற்றிலே
விரைவதேனோ?!
என் இதழ் தாண்டி ஒலிக்கும்
வாக்கியங்கள்
உன் பெயரையே வார்த்தையாய்
நிறைத்ததேனோ?!
கடிகாரம் கடக்கின்ற
நாழிகைகள்
நான் மட்டும் கடக்காமல்
நிற்பதென்ன?
நீ விலகிச் சென்ற
அந்த நொடி
என்முன்னே நிழலாடி
உறைவதென்ன?
உருண்டோடும் உலகம்
எனை இழுத்துச்செல்லும்
அந்த நொடியினின்று நகராது
என் கால்கள் பாயும்
இரவு பகல், சிந்தை தப்பி
உலவுகின்றேன்!
விழி திறந்து, கனவுள்ளே
வாழுகின்றேன்!
காலம், இந்த உடலுக்குக்
கடிவாளம் போடும்!
காதல், இந்த பிரபஞ்சத்தில்
கலந்தே வாழும்!!

Saturday 27 January 2018

மழை மகளே!!

எரிதழல் தீண்டாமல்
நான் சாம்பலாகிப் போனேனே
விழிவீசிய தூண்டிலில்
நான் கயலென நெளிந்தேனே
கொடி மலரே உன்னால்
நான் மதி தொலைத்து நின்றேனே
என் விதி சமைப்பவளே
உன் முன் மண்டியிட்டு தொழுதேனே

கரையோரம் கட்டிவைத்த
அழகான மணல் வீட்டை
கடலலைகள் திரண்டுவந்து
கவ்விக்கொண்டு செல்வது போல்
சிறிது சிறிதாய் நெஞ்சுக்குள்ளே
சேர்த்துவைத்த என் நேசத்தை
சூறாவளி போல் என்னுள் நுழைந்து
சூறையாடிச் சென்றுவிட்டாய்!

இதழ் பிரித்து நீயும்
ஓர் வார்த்தை சொல்வாயோ?!
கண்ணசைவால் என்னை
கலங்கவைத்துக் கொள்வாயோ?!
மனதினுள் நீயும்
மீட்டும் நாதம் என் பெயரோ!!
மழை மகளே என்மேல்
நீர்தூவி செல்வாயோ!!

நம்பிக்கை!!

மனக்குறை இல்லாத
மனிதனும் இங்கு பிறக்கவில்லையே
இல்லாத ஒன்றைத் தேடி
இருப்பதை மறப்பது நியாயமில்லையே

மண்ணைப் பிளந்து,
புயலைக் கடந்து,
காரணம் தெரிந்தா
முளைக்குது செடி, கொடி?!
எல்லாம் கடந்து,
மரமாய் வளர்ந்து,
காய் கனி தந்து,
வாழும் காரணம் விளங்குதடி!!

உச்சியைப் பிளந்து
மூளை வீங்கி வளரட்டும்
நான்கு சிறகு முளைத்து
திக்கெட்டும் மனம் பறக்கட்டும்
கண்கள் இரட்டிப்பாகி
நாற்புறமும் காணட்டும்
தேனில் தோய்த்தது போல்
நாவின் சொற்கள் இனிக்கட்டும்

வாரணங்கள் கூடி
மார்மீது நிற்பது போல்
காலங்கள் பிசகி
நெஞ்சினை நசுக்கிடினும்
கோலத்தின் சிக்களைப் போல்
சூழ்நிலைகள் ஒன்றிணைந்து
கண்கொள்ளா ஓவியமாய்
வாழ்வும் ஓர் நாள் வளம் பெறும்!!

Sunday 21 January 2018

என் தோழி!!

சில நாட்களாக, மனதில் ஏதோ ஒன்று, நெருடி மறைகிறது. அவளின் முகம்!! என் இனிய தோழியின் முகம்!! அவள் நினைவு வரும்பொழுதெல்லாம் முதலில் என் மன வானில் தெரிவதெல்லாம் அவளின் சிரிப்பே. அவளது குரல் கூட செவிகளைத் தீண்டுகிறது. அவளைக் கண்டு ஆறேழு வருடங்கள் இருக்கும். அவளோடு பேசி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவளின் நினைவுகள் மட்டுமே பசுமையாய் என் மனதில் தோன்றி மறைகின்றன.

கல்லூரியில் படித்த காலத்திலேயே, பிரச்சனைகள் அவள் மடியில் நிரந்தரமாக சம்மனம் போட்டு அமர்ந்துகொண்டு, அவள் கழுத்தை தினமும் நெறித்த வண்ணம் இருக்கும். ஆனால், ஒரு நாளும் அவள் சிரிக்க மறந்ததில்லை. அவளை எல்லி நகையாடியோர் பலர் உண்டு. ஆனால், என்னை யாரேனும் ஒரு வார்த்தை சொன்னால், அத்தோடு அவர்கள் இவளிடம் சிக்கி சின்னாபின்னம் ஆகிடுவர்.

அவளின் குதூகலம், என்றும் அடுத்தவருக்கும் தொற்றிக்கொள்ளும். மன வாட்டத்தை மறந்து, வாய் விட்டுச் சிரித்த நினைவுகள், என்னை இப்பொழுதும் கண்கலங்கவே செய்கின்றன! கல்லூரியில்,ஆண்களோடு எப்படிப் பழகவேண்டும், பலரின் பொய் முகம், உண்மை முகத்திற்கும் உள்ள வேறுபாடு, எது அக்கறை, எது கருணை, எது பாசாங்கு என்று பல விடயங்களை எனக்குக் கற்றுக் கொடுத்தவள்.

கதைப் புனைவதில் அவளுக்கு நிகர் அவளே. மிகப்பெரிய பெண் திரைப்பட இயக்கனராக வரவேண்டும் என்பதே அவளின் கனவாக இருந்தது. அவளின் கதைகளும், அதன் கருவும், மனதனின் முன்னேற்றத்தைச் சார்ந்தே இருக்கும். அவள், அவளின் படைப்புகளைப் பற்றி சொல்லச் சொல்ல, மெய் சிலிர்த்துவிடும். நான் இன்று கதை, கவிதை என்று ஆர்வம் கொண்டதற்கு, அவளும் ஒரு முக்கிய காரணமே!

தொழில்நுட்பம் பூதாகரமாகி, விஸ்வரூபம் எடுத்துள்ள இந்த காலத்தில், வாட்சப், பேஸ்புக் என்பதன் உதவியால் பக்கத்துவீட்டுக்காரர் முதல் உலகின் மறு கோடியில் வாழும் நண்பன் வரை, அனைவரோடும் தொடர்பு கொள்ளக்கூடிய இந்த காலத்தில், அவளை தொடர்பு கொள்ள முடியவில்லை என்பது கசப்பான, ஏற்க முடியாத உண்மையே.

அன்று, சங்கடங்கள் ஏதேனும் என் வாழ்வில் எட்டிப்பார்த்தால், முதலில் அவள் நினைவு தான் வரும். அனைத்திற்கும் ஒரு நல்ல தீர்வு அவளிடம் இருக்கும். இன்றும் அப்படியே. எந்த ஒரு மன சங்கடம் எழும்போதும் முதலில் வருவது அவள் நினைவே. அவளை அழைத்து சில நிமிடங்கள் உரையாடிட மனம் ஏங்கும். ஆனால், அவள் எங்கிருக்கிறாள், எங்கே சென்றாள் என்று எனக்கு மட்டுமல்ல, மற்ற நண்பர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை என்பது வேதனை அளிக்கிறது.

இன்று எனது படைப்புகளை படித்துவிட்டு அனைவரும் பாராட்டும் பொழுது பேரின்பமாய் உள்ளது. அதைக் கண்டு பூரித்துப்போக என் தோழி இல்லை. அவளை இன்னும் தேடிக்கொண்டிருக்கேன். யாராவது அவளைப்பற்றிய தகவல் சொல்வாரா என்று முயற்சி செய்கின்றேன். ஆனால் இது வரை பலன் இல்லை. அவள் இன்றாவது என் மின்னஞ்சல்களுக்கு பதில் கூற மாட்டாளா, வேறு யாரேனும் அவளைப் பற்றி தகவல் கூற மாட்டாரோ  என்று தினமும் எதிர்ப்பார்க்கிறேன்.

வகுப்பில் முதல் வரிசையில் நானும், அவளும், மற்றொரு தோழியும் அமர்ந்துகொண்டு செய்யாத சேட்டைகள் கிடையாது. காரணமே இன்றி, மூச்சடைத்து செத்துவிடும் அளவிற்கு சிரிப்போம். ஒருவரை ஒருவர் பரிகாசம் செய்துகொண்டு, இன்பமாய் நகர்ந்தன அந்நாட்கள். இன்று நான் அவளை இழந்து புலம்பப்போகிறேன் என்று, அன்று நான் அறிந்திருக்கவில்லை.

நம்மையும் அறியாமல், காலப்போக்கில் பலரை நம் வாழ்வில் மறந்துவிடுகிறோம். பிறகு எங்கு தேடியும் அவர்கள் கிடைப்பதில்லை. ஆனால், நம்முள் அவர்கள் விட்டுச்சென்ற தாக்கம் அளவிடமுடியாததாகிவிடுகிறது. நம் வாழ்க்கைத் தடத்தையே சிலர் அழகாய் மாற்றிவிட்டு, மாயமாகி விடுகின்றனர்.

இப்பொழுது என் எதிர்பார்ப்புகள் சுருங்கிவிட்டன. அவளோடு பேச வேண்டாம். அவள் முகவரியோ, தொடர்பெண்ணோ வேண்டாம். ஆனால், அவள் எங்கோ ஒரு மூலையில் நிம்மதியாக, ஆரோக்கியமாக  வாழ்கிறாள் என்று சாட்ச்சிப்பூர்வமான செய்தி ஒன்று கிடைத்தாலே போதும். அவளுக்காக என்றும் என் பிரார்த்தனைகள் தொடரும்!!

Saturday 13 January 2018

உனை காதல் செய்ய!!

சிந்தித்து சிந்தித்து வியக்கின்றேன்
உன் சிற்பிக்கு நன்றி கூறிடுவேன்
உயிருள்ள அழகு சிலையே நீ
என் உயிரைப் பருகிட வந்தாயோ?!

நெருஞ்சி முட்களால் வேலி செய்தும்
நெஞ்சினைக் காக்க இயலவில்லை
கெஞ்சிக் கூத்தாடி மன்றாடியும்
நெஞ்சத்தின் பாய்ச்சலோ முடங்கவில்லை

போதி மரத்தின் புத்தனைப்போல்
வாழ்ந்திட மனதிற்குப் பாடம் சொன்னேன்
வேதிப் பொருட்கள் யாதுமின்றி
என் உயிருக்குள் அமிலத்தை ஊற்றிவிட்டாய்

என்னை மெல்ல மெல்ல சிதைப்பதுவே
அரக்கி உனக்கு ஆனந்தமோ!!
கொல்லும் வலியையும் பொறுத்திடுவேன்
கண்மணி உனை காதல் செய்ய!!

நெஞ்சம் இரங்காதோ!!

நெஞ்சுக்கூட்டைப் பிளந்து கொண்டு
யாரவள் உள்ளே இறங்கியது!!
கஞ்சக்கருமியின் பொக்கிஷம் போல்
என் இதயமும் அவளைப் பதுக்கியது

வெள்ளம் சூழ்ந்த நிலத்தினை போல்
என் உயிரும் அவளுள் மூழ்கியது
அய்யோ! இது என்ன என்ன?!
மூளையும் கலங்கி குழம்பியது

கண்கள் செய்த குற்றத்திற்கு
கட்டுடல் முழுதும் தண்டனையோ
கொஞ்சும் வண்ணக்கிளியே நீ
என் மனதைக் கொத்தித் தின்பதேனோ?

சிறிய கருவிழிப் பார்வைகள்
காட்டாறு போல எனை வீழ்த்தியதே
நீ சிந்தும் மெல்லிய புன்னகையால்
என் உயிரும் துகள்களாய்ச் சிதறியதே

வஞ்சிக்கொடி உன் வனப்பினால்
வஞ்சம் வைத்து பழிதீர்த்தாய்
கெஞ்சும் எந்தன் அன்பிற்கு
உன் நெஞ்சம் தான் இரங்காதோ??!!

Trust the 'You'

Born to relish
The restive mind
And let free off
The resonating strains

The quintessential bit of
This puny flashing life
Has long been lost
And the tracks were broke

For the path you walk
May be the brainy choice
But least been proved
To showcase the ecstasy

Take that other walk
Leap over the hill
Fly with eyes open
See all that you see

For there is no proven path
To glory and merry
Believe the sound in you
Trust the You in you!!!

உனை நாடும் இதயம்

காற்று வெளியிலே
கண்மூடித் தவழ்ந்திடும்
காகிதப் பூ போலே,
கனவிலே தொலைகின்றேன்

சிந்தனைகள் ஒவ்வொன்றும்
சில்லுசில்லாய் சிதைந்திட
சித்தத்தில் நீ மட்டும்
சிலை போல நிற்கின்றாய்

கண்களுக்குள் தவறவிட்ட உன்
காட்சியைத் தேடுகின்றேன்
கண்ணாடிக் குடுவைக்குள்
காற்றைத் தேடி திரிகின்றேன்

அலைபோல பல எண்ணம்
தீண்டித் தீண்டி சென்றிடினும்
நினைவெல்லாம் உனைமட்டும்
சிப்பியுள் முத்தாய் அடைகாக்கும்

பிரிந்து விலகிச் சென்றாலும்
ஓடி ஒளிந்து மறைந்தாலும்
என் இதயக் கண்கள் என்றும்
உன்னை மட்டும் நாடிடுமே!!!

Monday 1 January 2018

உன் நினைவே போதும்!

மனசு தடுமாறும்
இந்த உலகம் புதுசாகும்
விழியோ உன்னை தேடும்
உன் பெயரே எங்கும் கேட்கும்

தனிமை சுகமாகும்
தவிப்பே துணையாகும்
நிலவும் வந்து பேசும்
புது நாணம் நெஞ்சில் பூக்கும்

தொலைவில் வரும்போதே
என் உயிரும் தடுமாறும்
அருகில் உன்னை கண்டால்
என் மூச்சே நின்றுபோகும்

கண்ணாலே பார்த்து பார்த்து
மௌனமான நேசம்
கண்ணாடி நெஞ்சுக்குள்
பொக்கிஷமாய் வாழும்

சொல்லத்தானே வார்த்தையில்லை
சொல்லிடவும் தேவை இல்லை
உயிருக்குள்ள உறைந்துபோன
உன் நினைவே போதும்!!!