Wednesday 16 October 2019

மனம்



முத்து போல் பளீரென்ற சிரிப்புடன் 
காலை, கட்டித் தழுவி சென்றது 
அலைகள் மட்டுமல்ல 
அவன் நினைவுகளும்!!!
அழகிய வான், கடலைத் தொடும் அழகை ,
பளிச்சிடும் நிலவு அலங்கரிப்பதைப் போல் ,
மனதின் இருளில் ஒளியாய் அவன்!!!
இன்றோ மேகத்தின் மோகத்தில் அவ்வெண்ணிலவு மூழ்க ,
இருளில் திசை இன்றி, துள்ளித்திரியும் நண்டாய் தள்ளாடியது மனம் !!!
வெள்ளை சிரிப்போடு தினமும் காத்திருந்த அமைதியான அலையோ ,
மேகம் கலைந்த முழு நிலவைக் கண்டதும் ,
ஆர்ப்பரித்து, அரவணைத்து, துள்ளித் தாவி கொண்டாடியது , இன்றொரு நாள் மட்டுமே இவ்வொளி  என்று அறியாமல் !!
கரை மேல் கொண்ட கரையாத காதலுடன், வானின் வெண்ணிலவிற்காக ,
வெண்சிரிப்போடு கேள்விக்குறியுடன் காத்திருக்கும் அலையாய் என் மனம் இங்கே....

Sunday 13 October 2019

விழி மொழி

திருமணம் எனும் பந்தத்தில் இரு மனங்கள் இணைந்து, உறவாடி, ஒவ்வொரு நிமிடங்களிலும், அதன் ஒவ்வொரு நொடிகளிலும் புரிதல் எனும் பொக்கிஷத்தை வேட்கையோடு தேடி, பல சமயங்களில் மனம் களித்து, சில சமயங்களில் மனம் கசந்து, 'அவள் அப்படித்தான்' என்றும், 'அவர் அப்படித்தான்' என்றும், இருவரும் ஒரு பரஸ்பர நிலைப்பாட்டில் ஒத்துணர்ந்து வாழும் வாழ்க்கையில் தான் எத்தனை அலாதி இன்பம்!! 

நேற்று நான் அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில் அவள் அவளுக்குப் பிடித்த மெகா சீரியலில் லயித்திருந்தாள். அவள் எதிரே சென்று நின்ற என்னைக் கண்டு இரு புருவங்களையும் உயர்த்தி நோக்கினாள். இந்த ஒரு சிமிஞை போதும் அவள் மனதை நான் படிக்க. குடுகுடுவென அடுக்களைக்குள் ஓடிச்சென்று இஞ்சி, ஏலக்காய் நசுக்கிப்போட்டு, சுடச்சுட டீ எடுத்து வந்து அவளிடம் நீட்டினேன். ஒரு மிடறு பருகியவளின் இதழோரத்தில் சிறு முறுவல். 'சக்ஸஸ்! ஆத்தா நான் பாஸ் ஆயிட்டேன்!!' என்று கத்த வேண்டும் போல் இருந்தது. ஓர் வார்த்தை கூட இருவரும் பேசவில்லை. ஆனால் எங்களின் பார்வையும், முகபாவமும் இருவரின் மனதையும் படம் பிடித்துக்காட்டின. 

அன்றொரு நாள், வழக்கத்திற்கு மாறாக நான் தாமதமாக வீடு திரும்பினேன். சோர்ந்து சோபாவில் சரிந்த என்னைக் கண்டவள் உள்ளே சென்றுவிட்டாள். பசி மயக்கத்தில், உடல் அசதியில், கண்கள் சுழட்டிக்கொண்டு வந்தன. திடீரென ஓர் மணம் என் நாசி துளைத்து உயிரைத் தீண்டியது. விழித்துப்பார்க்கையில்  என் எதிரே மேஜையில் சிக்கன் பிரியாணி, ஸ்விகி புண்ணியத்தில். ஆர்வமாக உண்ணத் தொடங்க, குஸ்கா மட்டுமே எஞ்சியிருப்பதைக் கண்டு அவளை நோக்கினேன். மூக்கின் மேல் சரிந்திருந்த மூக்குகண்ணாடியை உயர்த்திப் போட்டு என்னை நோக்கினாள். ஆபத்திற்கு பாவமில்லை என்று எச்சிற் கையாலேயே வணக்கம் வைத்துவிட்டு, உண்டு முடித்தேன். அப்பொழுதும், இருவரும் ஒற்றை வார்த்தை பேசவில்லை.

இந்தப் புரிதல் அனைத்து நேரங்களிலும் இருக்கும் என்று சொல்லிவிட முடியாது. சில தினங்களுக்கு முன் வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய என்னை மூக்குக்கண்ணாடி வழியே கூர்மையாய் நோக்கினாள். மின் விசிறி வேலை செய்தபொழுதும், கையில் ஒரு தாளால் விசிறிக்கொண்டிருந்தாள். ஒன்றும் புரியாமல் என் அறைக்குள் செல்ல நான் எத்தனிக்க, பறந்து வந்து என் பின் தலையில் பட்டு, கீழே விழுந்து நசுங்கி, உருண்டுகொண்டிருந்தது எவர்சில்வர் சொம்பு. அப்பொழுது நினைவிற்கு வந்தது அவளுடைய சித்தப்பா மகள் திருமண பரிசாக அவள் வாங்கிவரச் சொன்ன வெள்ளி சொம்பை நான் மறந்துவிட்டேன் என்று. புடைத்துப் போன என் மண்டையை ஐஸ் பேக் கொண்டு ஆத்திய பின்பு தான் புரிந்தது, சற்றுமுன் அவள் விசிறிக்கொண்டிருந்தது அந்தத் திருமண அழைப்பிதழைக் கொண்டு தான் என்றும் தற்காலிகமாக என் புரிதல் செயலிழந்திருந்தது என்றும். நான் சுதாரித்திருந்தால் உடனே கடைக்கு ஓடியிருப்பேன், சொம்பு தப்பித்திருக்கும். அப்பொழுதும் ஒற்றை வார்த்தை கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை. ஏனென்றால், புரிதல் எனும் வாழ்நாள் தேடல், சொல்லி உணர்வதில்லை, சொல்லாமல் அறிவது!!

Friday 4 October 2019

களவு


வெண்ணிலவு படையெடுத்த அந்த வெண்ணிற இரவில், சில்லென இளங்காற்று நதியை முத்தமிட்டு நீந்திச் சென்று நதிக்கரையில் முகிலொத்த நடை பழகிய அவளையும் தழுவியது. அவளது மணிக்கழுத்தில் மின்னிய வெண்கற்களை விட அவள் புன்னகையே ஜொலிஜொலித்தது. ஜொலிப்பில் வசியம் கொண்டவனாய் அவள் எதிரே பேராவலோடு அவன் வர, அவனைக் கண்டு இமைக்க மறந்தவளாய் அவளும் வர, கல்லில் கால் இடறி விழச் சென்றவளை ஒரே பாய்ச்சலில் தாவிச்சென்று மலரென கைகளில் இதமாய் பற்றினான். மறு நொடி தன்னை சுதாரித்துக்கொண்டவள் யாரேனும் பார்த்துவிட்டனரோ என்று அஞ்சியவளாய் அவ்விடம் விட்டு விலகி ஓடினாள்.

மறுநாள்… அதே நிலவு காயும் இரவு…

அவன்...
"இன்னா அசால்ட்டு ஆறுமுகம், நம்ளே ஏமாத்த பாக்குறே? நம்மள்கிட்ட திர்ட்டு நகை விக்கலாம். போலி நகை விக்கமுடியாது."
"போலியா? யோவ் சேட்டு வைரம்னு நினைச்சேன்"
"இத்தினி நாளா தொலில்லே இருக்கே, ஒரிஜினல்கும் டூப்ளிகேட்டுக்கும் வித்தியாசம் தெரிலே. டைம் வேஸ்ட் பண்ணாதே, நிகல் யஹான் சே, சல் சல்…"

அவள்…
"ஏன்டி, சரோஜா ஒருத்தனாண்ட பர்ஸ அட்ச்சா தேறுமா தேறாதானு யோசிக்க மாட்டியா? மூச்ச புட்சிக்கினு முக்கா மைல் ஓடியாறதுக்கு முன்னாடி அத்த ஒருதரம் தொறந்து பாக்கமாட்ட? விளங்காத பய, வச்சிருந்தான் பாரு கத்தை கத்தையா அடகு கட பில்ல… இதுல நெக்லெச வேற தொலைச்சிட்டியே டி"
"வுடு கா, பஜாருக்கு போவும்போது அந்த பான்ஸி ஸ்டோர்ல அதே டிசைன் நெக்லெச அட்ச்சுட்டு வந்து குடுத்துடறேன். நேத்து நடந்ததை இன்னும் எத்தினி தடவ சொல்லி காட்டுவ?"
"எத்தினி தடவ சொன்னாலும் உனக்கு விளங்கர மாதிரி தெரில, உன்னை எப்டி தான் கரை சேக்க போறேனோ… ஹ்ம்ம்!!"


Thursday 3 October 2019

அன்பாய் ஒரு புன்னகை

கழுத்தில் புதுத்தாலி மஞ்சள் மணக்க, புதுப்பெண் பொலிவு முகத்தில் ஜொலிக்க, அவனது அலமாரியை சுத்தம் செய்துகொண்டிருந்தவளின் கண்ணில் பட்டது அப்பெட்டி. உள்ளே எம்பராய்டரி செய்யப்பட்ட கைக்குட்டையும், வாழ்த்து அட்டைகளும், சாக்கலேட் தாள்களும், பரிசுப் பொருட்களும் என, அவளிடம் அவன் சொல்லாமல் விட்ட அவனது முன்னால் காதலையும், காதலியையும் போட்டுடைத்தது.

அறைக்குள் நுழைந்தவன் அவள் கையிலிருந்த அவனது ரகசியக் காதல் பொக்கிஷங்களைக் கண்டு திடுக்கிட்டு நிற்க, அவளோ நிதானமாய் அவனைக் கண்டு புன்னகைத்தாள்.

அப்பெட்டிக்குள் அடைகாக்கப்பட்டவைகளை மீண்டும் அடுக்கியவள், அதை அதனிடத்திலேயே வைத்தாள்.

அவன் நம்பமுடியாமல் பார்த்திருப்பதைக் கண்டவள், "இந்தப் பெட்டியில உள்ளத அழிச்சுடலாம், ஆனா உங்க மனசுல உள்ளத அழிக்க முடியாது. உங்க மனசு முழுக்க நான் நிறைஞ்சதும், நீங்களே இந்தப் பெட்டிய வேண்டாம்னு தூர எறிஞ்சிடுவீங்க" என்றுவிட்டு, மீண்டும் அன்பு குழைத்த புன்னகையைச் சிந்தினாள்.


Wednesday 2 October 2019

ஒற்றை வார்த்தை

தினமும் அவனிடமிருந்து நான் எதிர்பார்க்கும் அந்த ஒற்றை வார்த்தை இன்றும் வாராமல் போய்விடுமோ என்றொரு தவிப்பு என்னுள். தினமும் ஏங்கியேங்கி ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது என்றாலும், இன்று அவனிடமிருந்து அந்த ஒற்றை வார்த்தை வரவில்லையென்றால் என் மனதில் இருக்கும் மொத்தமும் அவனிடமே கொட்டப்படும். தொலைவிலிருந்து அவனை பார்த்திருந்த நான், ஓர் முடிவுடன் அவன் எதிரே சென்று நின்றேன். தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தவன், நிமிர்ந்து என்னை நோக்கினான். ஆர்பாட்டமற்ற அவனது முகத்தினைக் கண்டதும், அனைத்தையும் கூறும் நேரம் வந்துவிட்டது என்றுணர்ந்தேன்.

"இங்க பாரு, உன்கிட்டேர்ந்து நான் எதிர்பார்க்கறது 'போதும்'ங்கற ஒரு வார்த்தை தான். ஆனா ஒரு நாளும் நீ அதை சொன்னதில்லை. தினமும் பதினஞ்சு இருபதுன்னு தோசை, இட்லியை முழுங்கற. இன்னைக்கு பத்து தோசை ஊத்தறதுக்குள்ள மாவு காலியாயிடுச்சு. அதனால, நீ சொல்லவேண்டியத, உன்னை பத்து மாசம் சுமந்து பெத்தவளா இருந்தும் நானே சொல்றேன், போதும், எழுந்து கைய கழுவு!"

விருட்டென எழுந்து வெளியே சென்றவன் பத்து நிமிடங்கள் கழித்து வீடு திரும்பி என்னிடம் வந்து நீட்டினான் பத்து ரூபாய் தோசை மாவு பாக்கெட்டை, ஆர்பாட்டமற்ற முகத்துடன்!!