Monday 30 September 2019

பச்சை மண்ணு!!

"தம்பி, எழுந்திரு, நேரம் ஆகுதுல்ல…"
"இன்னைக்கு ஒரு நாள் லீவு போட்டுகிறேன் பா. ரொம்ப வயிறு வலிக்குது..."
சிரித்துக்கொண்ட தந்தைக்கு, நேற்று ஜுரம், அதற்கு முன்தினம் தலைவலி, என்று ஒவ்வொரு நாளும் அவன் கூறும் காரணங்களை எண்ணி வேடிக்கையாய் இருந்தது. ஒருவாறு அவனை கிளப்பியவர், சிணுங்கிக்கொண்டு வந்தவனை சமாதானம் செய்தபடியே உடன் அழைத்துச்சென்றார்.  முதல் நாள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்த காலம் தொட்டு இன்று வரை இதே கூத்து தான். மாலை, மகனை எதிர்நோக்கி வாயிலில் நடை பழகிக்கொண்டிருந்தவரிடம் சென்று நின்றான், பேரன்.
"ஏன் தாத்தா, காலைல ஆபிசுக்கு போகமாட்டேன்னு அப்பா அழறதும், நீங்க சமாதானம் செஞ்சு கூட்டிட்டு போய் விடறதும், சாயங்காலம் அப்பா வரவரைக்கும் வாசல்லையே வெய்ட் பண்றதும்… ரொம்ப டூ மச் தாத்தா. நான் ஸ்கூலுக்கு ஒழுங்கா போய்ட்டு வரேன்'ல, இப்படித்தான் அடம்பிடிக்கறேனா?"
"அவன் உனக்கு அப்பனா இருந்தாலும் எனக்கு பிள்ளை தான். அதுவுமில்லாம, இந்தக் காலத்து பிள்ளைங்க மாதிரி அவன் கிடையாது.  சூது வாது தெரியாத பச்சை மண்ணு. மீசை வச்ச பச்சைக்குழந்தை!!"
"ஏன் தாத்தா அப்பா அப்படி இருக்காங்க?"
"ஏன்னா அவன் 90s கிட்!!"


Thursday 26 September 2019

மெழுகு தீபம்!

"பிறந்தநாள் வாழ்த்துக்கள், தீபா!"  
குரல் கேட்டு தலை நிமிர்ந்த தீபாவின் எதிரே நின்றிருந்தாள், உடன் பணிபுரியும் உயிர்த்தோழி, சுமதி. 
"நன்றி சுமதி, என் பிறந்தநாள் பரிசு எங்கே?"
தோழியை விளையாட்டாய் சீண்டினாள், தீபா.
"மன்னிக்கணும், அந்தப் பரிசை ஜிகினா பேப்பருல சுத்தி, ரிப்பன் கட்டி தூக்கிட்டு வர முடியல…"
'இவள் என்ன கூறுகிறாள்?!!' என்று கேள்வியாய் நோக்கிய தீபாவைக் கண்டு சிரித்தவள், "தினமும் காலையும், மாலையும் உன் பின்னே பாதயாத்திரை வரும் அந்த ஊதா சட்டையைத் தான் சொல்றேன்" என்றாள்.
ஒரு நொடி திடுக்கிட்டவள், தன்னை சமன் செய்துகொண்டு,
"எனக்கு அந்தப் பரிசு வேண்டவே வேண்டாம்" என்றாள், தீர்க்கமாக.
தோழியின் பிடிவாதத்தைப் பல ஆண்டுகளாகத் தகர்த்தெறிய முடியாமல் தோற்றுப்போகும் எரிச்சலில்,
"ஏன் வேண்டாம்?" என்றாள் சுமதி, தன்னையறியாமல் குரலை உயர்த்தி.
அக்கம்பக்கத்தில் இருந்தோர் திரும்பிப்பார்க்க, அசடு வழிய மன்னிப்பு கேட்டவள், தீபாவை விடாப்பிடியாக யாருமில்லா கலந்தாய்வு அறைக்கு இட்டுச்சென்றாள்.
"காலைலயே கலாட்டாவா? மேனேஜர் வர்ற நேரமாச்சு. வா, சீட்டுக்கு போகலாம்."
"போகலாம், போகலாம்… நீ பதில் சொன்னதும் போகலாம்"
"என்ன சொல்லணும்?"
"மங்களகரமா, 'கல்யாணத்திற்கு சம்மதம்'னு சொல்லு!"
"இத்தனை வருஷம் என்னோட பழகியும், என் மனசு உனக்குப் புரியலையா?'
"மனசுல உள்ளத உள்ளபடி படம் போட்டுக் காட்டினா புரியும். பகல் வேஷம் போட்டா எப்படிப் புரியும்?"
"சுமதி…"
"இன்னையோட உனக்கு வயசு முப்பத்திரெண்டு. ‘தங்கையைக் கட்டிக்கொடுத்து கரையேத்தணும், என்னைப் பத்தி யோசிக்க முடியாது’னு  சொன்ன. இப்போ அவளுக்கு ஆசைக்கு ஒன்னு, ஆஸ்திக்கு ஒன்னு பிறந்தும், உன்னைப் பத்தி யோசிக்க முடியலையா?"
"என் தம்பி இருக்கானே…"
"அவன் தான் காலேஜு சேர்ந்தாச்சே!!"
"சேர்ந்துட்டா மாத்திரம் போதுமா, படிச்சு முடிச்சு நல்ல வேலைக்கு போக வேண்டாமா?"
"அப்புறம் அவனுக்கும் கல்யாணம் பண்ணனும், இல்லை?" 
பற்களைக் கடித்துக்கொண்டு சுமதி கூற,
‘ஆமாம்’ என்று பலமாகத் தலையாட்டினாள், தீபா.
"போதும் நிறுத்து தீபா. உன் தம்பியும், தங்கையும் தன் குடும்பம், தன் வாழ்க்கைன்னு போன பிறகு நீ தனி மரமா நிப்பியா?"
"என் அம்மா இருக்காங்களே…"
"கேட்கறேன்னு தப்பா நினைக்காத, உன் அம்மா காலத்துக்கு அப்புறம்?"
"அது, அப்போதைய பிரச்சனை…"
நாசூக்கான பதில் கூறி தோழியிடம் தப்பித்தாலும், அவள் மனதை அக்கேள்வி நெருடியது.
"வெளிப்படையாவே கேட்கறேன்… உன் அப்பா உன் அம்மாவை விட்டுட்டு போன மாதிரி உனக்கும் நடந்துடும்னு பயப்படறியா? தெய்வீகமான காதலும், நேர்மையான காதலர்களும் உலகத்துல இருக்கத்தான் செய்கிறார்கள்!! "
பதில் கூறாமல், ஏதேதோ யோசனைகளால் அடித்துச் செல்லப்பட்ட தோழியைக் காண பரிதாபமாக இருந்தது, சுமதிக்கு.
"மன்னிச்சுடு தீபா, ஒரு ஆதங்கத்துல ஏதேதோ பேசி… உன்னை ரொம்ப காயப்படுத்திட்டேனா?"
"ச்ச ச்ச, இப்போ நாம சீட்டுக்கு போகலேனா மேனேஜர் தான் நம்மை துவைச்சு காயப்போட்டுடுவார்!!"
அவள் கூறியதைக் கேட்டு சுமதி சிரிக்க, உடன் சேர்ந்துகொண்டாள், தீபா. மனதின் பாரங்கள் அழுத்தினாலும், ஒரு புன்னகை, ஒரு ஹாஸ்யம் என்ற அம்புகள் எய்து சுமைகளைத் தகர்த்தெறிவதல் வல்லமை படைத்தவள், தீபா.

குடும்பத்தை நிர்கதியாய் விட்டுச் சென்ற தந்தை, காதல் மணம் புரிய உறவுகளைத் துறந்ததால் ஆதரவின்றி நின்ற தாய், விவரமறியா வயதில் தங்கை, மழலை கொஞ்சும் தம்பி, உண்டு உயிர் வளர்த்திடவே தினமும் போராட்டம் என்று உலகத்தின் கசப்புகள் அனைத்தும் பன்னிரெண்டாம் ப்ராயத்திலேயே தீபாவிற்கு பரிமாறப்பட்டது. படிப்பு மட்டுமே ஆயுள் முழுதும் ஆபத்பாந்தவனாக துணை நிற்கும் என்று படிக்காமல் விட்ட தாயின் அசைக்க முடியாத நம்பிக்கை ஒன்றே உந்துதலாய், தீபாவை பி.காம் பட்டதாரியாக்கியதோடு, இதே அலுவலகத்தில் பத்து ஆண்டுகளுக்கு முன் பணியமர்த்தியது. தாய்க்கு ஓய்வு கிட்டியதோடு, தங்கையின் இல்லறம் நல்லறமாக அமைந்துவிட்ட திருப்தி மட்டுமே ஆறுதலாய்… 

மதிய உணவு இடைவேளையின்போது, ஒரு முழ நீளத்திற்கு முகத்தைத் தொங்கப்போட்டிருந்த தோழியை ஆராய்ந்து நோக்கினாள், தீபா. 
"என்ன ஆச்சு, சுமதி?"
"ஒன்னுமில்ல…"
"மேனேஜர் ஏதும் சொன்னாரா?"
"இல்லை… அந்த ரவி… மூணு வருஷமா ஏதேதோ சினிமா வசனமெல்லாம் பேசி உன் பின்னாடியே சுத்தினவன், வேற ஒரு பெண்ணோட கல்யாணம் நிச்சயமாயிருக்குன்னு சொல்லி காலைல கல்யாணப் பத்திரிக்கை வச்சுட்டுப்போனானே… உனக்கும் தானே வச்சான்… அதுதான் ரொம்ப கஷ்டமா இருக்கு."
"இதுல உனக்கென்ன கஷ்டம்? தெய்வீகக் காதல் திசை மாறிப்போச்சு; வேறொரு தெய்வத்திடம் சரணாகதியாச்சு…"
அவள் கூறியதைக் கேட்டு அனைத்தையும் மறந்து சிரித்த சுமதி, மீண்டும் முகம் தொங்கிப்போனாள்.
"அவன் எவ்வளவு பெரிய தப்பு பண்ணியிருக்கான், நீ சிரிக்கற?"
"தப்பா? எதார்த்தமா ஒரு முடிவெடுத்திருக்கான். இதில் அவனை திட்டவோ, நாம வருந்தவோ என்னயிருக்கு?"
"தீபா, அவன் போனா போறான், அந்த நீலச்சட்டைக்காரன பார்த்தாலே ரொம்ப நல்லவனா இருக்கான்."
"ஆரம்பிச்சுட்டியா?" என்று அலுத்துக்கொண்டவள், பதில் பேச வாயெடுத்தவளின் வாய் மீது கை வைத்து அமைதியாக்கினாள்.

"தீபா, அந்த நீலச்சட்டைக்காரன் எங்கே?"
மாலை தோழியர்கள் அலுவலகம் முடிந்து வீடு திரும்புகையில், அவனைத் தேடியபடி கண்களை சுழலவிட்டாள், சுமதி.
"பஸ்ஸில போகாமல் என்னோடு நடந்துவரும்போதே நினைச்சேன்."
தோழி முறைப்பதைக் கண்டவள்,
"மாமியார் ஊருக்குப் போயிருக்காங்க. சாவதானமா வீட்டுக்கு போனா போதும். பஸ்ஸு நெரிசலில் ஜூசாவதை விட, நடராஜா சர்வீஸே மேல்…"
உரையாடிக்கொண்டு நடையைத் தொடர்ந்தவர்களை மறித்துக்கொண்டு நின்றான், நீலச்சட்டைக்காரன்.
"தீபா, எனக்கு நேரமாச்சு, நான் கிளம்பறேன்" என்று சுமதி நழுவிக்கொள்ள,
"தாங்க் யூ சிஸ்டர்" என்று அவன் கூறியதைக் கேட்டு, 'ஆரம்பமே அசத்தல்' என்று புருவத்தை உயர்த்தி தீபாவிடம் சிமிஞை செய்து அவ்விடம் விட்டு நழுவினாள்.
கைக்குட்டையை எடுத்து நெற்றி வியர்வையைத் துடைத்தவன், ஆழப் பெருமூச்செடுத்து, தன்னை ஆசுவாசப்படுத்தினான். 
"என் பெயர் மதன். உங்க ஆபிஸ் இருக்கும் தெருவிலே தான் நான் வேலை செய்யும் ஆபிசும் இருக்கு. நான் எலெக்ட்ரானிக்ஸ் டெக்னீஷியனா இருக்கேன். எனக்கு அப்பா மட்டும் தான், அம்மா இல்லை. அம்மாவபோல இருந்த தங்கைக்கு போன மாசம் கல்யாணம் முடிஞ்சுடுச்சு. வாடகை வீடு. இவ்வளவு தான் செலவு பண்ணனும்னு பட்டியல் போட்டு, எல்லா சந்தோஷங்களையும் அந்தப் பட்டியல்ல கடைசியா எழுதர சராசரி நடுத்தர வாழ்க்கை. தங்கை கல்யாணத்துக்கு வாங்கின கடன் போக, இப்போதைக்கு என் தோள்களில் எந்த பாரமும் இல்லை. கண்கள் மட்டும் கனத்திருக்கு பல கனவுகளோடு… அதில் ஒரு கனவு… அழகான, அற்புதமான கனவு… நீங்க!"
தனது மனதில் உள்ளவற்றைக் கூறி முடித்த திருப்தியில் அவளையே நோக்கிக்கொண்டு நின்றான்.
"அந்த பார்க்ல போய் பேசலாமா?" என்றான் தயங்கியபடி, அவளிடம் ஒப்புதல் எதிர் நோக்கி.
"பக்கத்து தெருவில தான் மாமியார் வீடிருக்கே!! ஆற அமர உட்கார்ந்து பேசுவோம்…"
அவன் புரியாமல் நெற்றி சுருங்கியபடி நின்றிருக்க, 
"மகளிர் காவல் நிலையத்தை சொன்னேன்" என்றவள், அவனை வெட்டும் பார்வை பார்த்துவிட்டு விலகிச் சென்றாள். 

"ஒருத்தர் தன்னோட விருப்பத்தை சொன்னா இப்படி தான் அவமானப் படுத்துவியா, தீபா? சினிமா வசனமெல்லாம் பேசாம, உள்ளதை சொன்னவருக்கு இது தான் பதிலா?" 
நடந்தவற்றை மறுநாள் தீபா கூற கேட்டறிந்துக்கொண்ட சுமதிக்கு, கோபமும், எரிச்சலும் ஒருசேர பொங்கியது. 
"சுமதி…"
"நீ எதுவும் சொல்லாத…"
"சரி, இப்போ என்ன செய்ய சொல்ற?"
"மன்னிப்பு கேளு…"
"மன்னிப்பா? மன்னிப்பு கேட்டா அவர் சொன்னதுக்கு சம்மதம்னு ஆகிடாதா?"
"ஆமாம், அதுக்குத் தான் கேட்க சொல்றேன்."
சில நொடிகள் யோசனையானவள்,
"தம்பி படிப்புக்கு வாங்கின கடன் இருக்கு… அவர் தோள்ல என் பாரத்தை இறக்கி வைக்கறதா??" என்று தீபா நீட்டிமுழக்கியதில் ஒருவாறு அவளது விருப்பம் புரிந்து போனது, சுமதிக்கு.
"அப்படி வா வழிக்கு…"
"என்ன?"
"ஒன்னும் இல்ல… அவர் தன்னோட குடும்ப நிலைமையை எடுத்துச் சொன்ன மாதிரி நீயும் சொல்லு. பாவம் தாயில்லாம வளர்ந்தவர், உன்னை புரிஞ்சுப்பார்…” 
"ம்ம்… கொஞ்சம் யோசிக்கணும்… இரண்டு நாள் ஆகட்டும்…"


“இன்னையோடு இரண்டு நாள் முடிஞ்சுடுச்சு” என்று தோழியின் எதிரே வந்து நின்றாள், சுமதி. 
நாணம் இழையோடிய சிரிப்பினை சிந்தியவள்,
"இன்னைக்கு சாயங்காலம் சொல்லிடறேன்" என்று அவள் கூறி முடிக்க, மறுகணம் கைபேசி சிணுங்கியது. 

காலை கைபேசி அழைப்பு வந்ததும் அலுவலகத்தில் விடுப்பு பெற்றுக்கொண்டு விரைந்த தீபா, மாலை மீண்டும் வந்தாள்.
"என்ன ஆச்சு தீபா, ஒன்னும் சொல்லாம போய்ட்ட? போனையும் எடுக்கல?"
பதறிப்போன சுமதியிடம், "தம்பிக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சு…" என்று உடைந்து அழுதாள்.
"உடனே ஆப்பரேஷன் பண்ணனும்னு டாக்டர் சொல்லிட்டாங்க… செஞ்சா தான் பிழைப்பானாம்…" என்று அழுது கரைந்தவளை ஒருவாறு சமாதானப்படுத்தினாள், சுமதி.
"நான் மேனேஜர பார்த்துட்டு வரேன்…" என்று தன்னை சமன் செய்து கொண்டு மேலாளர் அறைக்குச் சென்றாள், தீபா.

அரை மணி நேர சந்திப்பிற்கு பிறகு வெளியே வந்தவள், சுமதியிடம் சென்றாள்.
"சுமதி, நாளைக்கே லோன் பணம் கிடைக்க மேனேஜர் சம்மதிச்சுட்டார். நான் திரும்பி வரும் வரை என்னோட வேலைகளை…” 
"எல்லாம் நான் பார்த்துக்கறேன்… நீ முதல்ல ஆஸ்பத்திரிக்கு கிளம்பு…"
"ம்ம்…" என்றுவிட்டு செல்ல எத்தனித்தவள், சுமதியிடம் திரும்பி,

"இனி மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை…" என்றவள், பொங்கும் கண்ணீரைப் பற்களைக் கடித்து அடக்கிக்கொண்டு, மீண்டும் மெழுகானாள்.