Monday 23 August 2021

ஆமாம் சாமி!

வேகவேகமாய் சுழன்றுகொண்டிருக்கும் இந்நகரத்தின் பரபரப்புக் கிடுக்குகளில் தூக்கிச் சுமக்கும் நினைவுகளைத் தொலைத்துவிடப் பார்க்கிறேன். நெஞ்சின் மூலையில் பசை போட்டு ஒட்டிக்கொண்டது போல், அவை அனைத்தும் கொட்டிக்கிடக்கின்றன. ஹாரன் சத்தத்தின் மத்தியிலும் அவளது மெல்லிய கொலுசொலி கேட்கிறது. நானூறு மையிலுக்கு அப்பால் அவளோடு பேசிப்போட்ட வார்த்தைகள் யாவும் ரயிலேறி வந்து இந்தப் புழுதிக் காற்றில் கலந்துவிட்டன. 


‘மிஸ்டர். ஆமாம் சாமி’ என்று தான் அவள் என்னை அழைப்பாள். காதலிக்கத் தொடங்கிய சில நாட்களிலேயே அவள் எனக்கு பெயர் சூட்டு விழா நடத்திவிட்டாள். ஏறக்குறைய நான்கு ஆண்டுகள் அவள் என்னை ‘ஆமாம் சாமி’ என்று அழைத்ததில் எனது இயற்பெயர் அவ்வப்போது மறந்துபோகும். யாரேனும் பெயர் கேட்டால் ‘ஆமாம் சாமி’ என்றுவிட்டு தட்டுத் தடுமாறி பிரண்டெழுந்து சரியான பெயர் சொன்னது எனது நா.


அவள் கூறியவற்றை, கோரியவற்றை என்றும் மறுத்ததில்லை இந்த ஆமாம் சாமி. தாடி வைப்பதைத் தவிர்த்தேன்; தினமும் குளித்தேன்; அவள் சொன்ன நேரத்தில் சொன்ன இடத்தில் வந்து நின்றேன்; கைப்பேசி அழைப்புகளை உடனே ஏற்றேன்; கோபத்தை மறந்தேன்; அப்பாவிடம் பணிந்து இருந்தேன்; அம்மாவுக்கு அடக்கடி சமையலில் உதவினேன்…. இன்னும் பல… எல்லாம் அவள் கூறியதால் செய்தேன்… அவளுக்காகச் செய்தேன்... 


ஏரிக்கரை போகும் வழியில் பெரிய ஆலமரம் ஒன்று உண்டு. காலங்காலமாக அதன் காலடியில் சந்தித்துக்கொள்வதே எங்கள் ஊர் வாழ் காதலர்களின் அய்தீகமாகிப் போனது. நானும், புடைத்துக்கொண்டு படர்ந்திருக்கும் அதன் வேரின் மீது அமர்ந்து கொண்டு எதிரே விரிந்து கிடக்கும் அரளித் தோட்டத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன். அவள் சாவதானமாக வருவாள். காத்திருப்பிலும் மகிழ்ச்சி. காதலிப்பதிலும் மகிழ்ச்சி.


ஒரு நாள் கதைகள் பல பேசிவிட்டு அமைதியாய் அரளித் தோட்டத்தை ரசித்துக்கொண்டிருந்தாள். நான் அவளை ரசித்திருந்தேன். வெடுக்கென எழுந்து சென்றவள் தாவணி முந்தானை வழிய பூக்களை கொய்து வந்தாள். தலையில் வாடிக்கிடந்த மல்லிச் சரத்தை எடுத்து, கோர்த்திருந்த நாரினை உருவி, இரு அரளி மாலைகள் செய்தாள். 

"இந்த மாலையை மாத்திக்கலாமா?"  என்றாள்.

‘சரி’ என்ற நான், அந்த மாலை வேளையில் மாலை மாற்றி அவளுடன் சேர்ந்து சிரித்தேன். கையோடு என்னை உன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடு என்று அவள் கூறியிருந்தால் நிச்சயம் அழைத்துச் சென்றிருப்பேன். கூறியிருக்கலாம்... அவள் கூறவில்லை…


‘மலைகோவிலுக்குச் சென்று வருவோம்’ என்றாள். கும்பிட்டுவிட்டு கீழே இறங்கும் பொழுது தனது உள்ளங்கையில் அடைக்காத்திருந்த குங்குமத்தை என் முன்னே நீட்டினாள். 

"என்ன பாக்குற?! வச்சுவிடு…" என்றாள்.

மறுநொடியே பொட்டு வைத்தேன்.

"யாராவது பார்த்துடுவாங்கன்னு உனக்கு பயமில்லையா? என்ன சொன்னாலும் செய்யற… கோவில்ல வச்சு நீ பொட்டு வச்சது வீட்டுக்கு தெரிஞ்சுட்டா என்ன செய்வ?"

நான் புன்னகைத்தேன்.

"போயா ஆமாம் சாமி…" என்றுவிட்டு இரண்டடி முன்னே சென்றவள், 

"நான் என்ன சொன்னாலும் செய்வியா?" என்றாள்.

"ம்ம்" என்று பலமாய் தலையசைத்தேன்.

"எங்க இந்த மலை உச்சியிலிருந்து கீழ குதி பாப்போம்?!!" என்றுவிட்டு சிரித்தாள்.

‘சரி’ என்றுவிட்டு அறையடிச் சுவரின் மீது ஏறினேன்.

"அடப்பாவி நில்லு… என்ன பண்ற" என்று பதறியடித்து ஒடிவந்தவள் என் கால்களைக் கட்டிக்கொண்டாள்.

"இறங்கு கீழ… நான் சொல்றேன்ல இறங்கு…" என்று அழத்தொடங்கினாள்.

நான் கீழிறங்கியதும் என் நெஞ்சின் மீது சாய்ந்துகொண்டவளுக்கு உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.

"ஏன் நீ இப்படி இருக்க? என்ன சொன்னாலும் கண்மூடித்தனமா செய்யற? ஏன் எதுக்குனு கேள்வி கேட்கமாட்டியா?" என்று அழுது கொண்டே வினவினாள்.

"நீ என்ன சொன்னாலும் செய்வேன்" என்றேன்.

"போயா ஆமாம் சாமி" என்றுவிட்டு அழுதுகொண்டே அவள் சிரிக்க, நான் உடன் சேர்ந்து சிரித்தேன்.


ஒரு நாள் அரளி தோட்டத்தின் அருகே என்னை சந்திக்க வந்தாள். 

"என் அப்பாவுக்கு உன்னை பிடிக்கலயாம். வேற மாப்பிள்ளை பார்க்கிறாங்க. நீ என்னை விட்டு தூரமா போயிடு…" என்றுவிட்டு என் கண்களிலிருந்து மறைந்துபோனாள்.


மறுநாள் விடியல், நானூறு மைலுக்கு அப்பால் இருக்கும் இந்த நகரத்தில் தான் எனக்கு விடிந்தது. நாட்கள் நகர்கின்றன. ஆனால் என் வாழ்க்கை என்றோ ஸ்தம்பித்து நின்றுவிட்டது.


"ஹலோ"

அவளிடமிருந்து அழைப்பு… ஆறு மாதங்களுக்கு பிறகு… இதயம் குழைந்தது… வார்த்தை தொலைந்தது… கண்ணீர் கோர்த்தது… 

"உடனே கிளம்பி ஊருக்கு வா…" என்றாள்

"சரி…" என்றேன்

"வந்துடுவல்ல?" என்றாள்

"உடனே" என்றேன்.

அழைப்பு துண்டிக்கப்பட்டது. உடனே கிளம்பினேன்.


மனம் முழுதும் கலவரமாய் எனது வீட்டிற்குள் நுழைய, என் கண்ணெதிரே அவள். மூர்ச்சையின் வாசல் வரை சென்று மீண்டேன். 


"தம்பி…" அவளது அப்பா என்னை அழைத்தார். அருகே என் குடும்பத்தாரும் இருந்தனர். அவள் என்னைப் பார்த்து சிரித்தபடி என் அம்மாவின் அருகே சென்று நின்றுகொண்டாள்.


"தம்பி, என் பொண்ணுக்கு எப்பவுமே 'ஆமாம் சாமி' அப்பனாவே இருந்துட்டேன். இந்தக் கல்யாண விஷயத்துல தான் முத முறையா முடியாதுனு சொன்னேன். ஆனா இந்தக் கழுத சாப்பிடாம தூங்காம தேம்பிக்கிட்டே இருந்தா. மனசு தாங்கல. அதான் இந்த விஷயத்துலயும் பொண்ணு பேச்சுக்கு பதில் பேச்சு பேசாம சம்பந்தம் பேச வந்துட்டேன். உங்களுக்கு என் மேல எந்த வருத்தமும் இல்லையே? கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் தானே?"

அவர் கூறியதனைத்தும் காதில் விழுந்தது. மண்டைக்கு உரைத்ததா என்று புரியவில்லை. அவளைக் கண்டேன். 'சரினு சொல்லு' என்று உதடசைத்தாள். 

"சரிங்க.." என்றேன் அவள் அப்பாவிடம்.

'ஆமாம் சாமி’ என்று அவள் முனகியது எனக்குக் கேட்டது. அவள் சிரிக்க, நானும் சிரித்தேன்!