Monday 25 June 2018

உனக்கே உனக்காய்!!

என் உதடுகள் சேமித்த சிரிப்பு
செல்களுக்குள் ஓர் வெற்றிடம்

விரல்களின் இடைவெளி
தாளம் தப்பும் இதய ஒலி

சுகந்தமற்ற சுவாசம்
புழங்காத நேசம்

கண்கள் தவஞ்செய்யும் காட்சி
கனவுகளைப் பிரசவிக்கும் இரவு

மீதியைத் தேடி பாதி உயிர்
மடிமேல் கனமில்லா காற்றுவெளி

புரிந்தும் புரியா விழிமொழி
பிறப்பும் இறப்புமாய் உணர்வுக் கலவை

எனது உலகின் காலைக் கதிர்
எனது இரவின் மதிமுகம்

என்னை ஆளும் உரிமை
என் வாழ்வின் கடமை

அனைத்தும் காத்துக்கிடக்கின்றன
உனக்கே உனக்காய்!!

Wednesday 20 June 2018

சொல்லவா!!

தொட்டு தொட்டுச் செல்லும்
தென்றலிடம் சொல்லவா...
அவளின் சின்னஞ்சிறு விரல்களுக்கே
என் தலை கோதும் உரிமை


எட்டி எட்டிப் பார்க்கும்
நிலவிடம் சொல்லவா...
எனது கண்மணியின் கண்களுக்கே
என்னை விழுங்கும் பார்வை


கூவிக் கூவி அழைக்கும்
குயிலிடம் சொல்லவா...
எனது பைங்கிளியின் இதழ்களுக்கே
என் பெயரின் பிறப்பு


சுற்றிச் சுற்றி வரும்
மரணத்திடம் சொல்லவா...
என்றோ அவளுள் புதைந்துவிட்டேன்
உனக்குக் கொடுக்க இல்லை!!

கண்ணாமூச்சி...

உன் விழி வீசும் பார்வையில்
பல மொழி பேசிச் சென்றாய்
காற்றோடு உன் வாசம்
எனக்காகத் தந்தாய்
மனம் உன்னிடம் நிற்க
நான் விலகிச் சென்றேன்
சுழலென சூழ்ந்து
என்னை ஆட்கொண்டாய்

கனவோடு சில காலம்
காதலாய் சில நேரம்
உயிர் தீண்டும் உன் முகம்
உடல் தொடும் உன் மூச்சு
கண்ணீரோடு புன்னகை
தூரத்திலும் நெருக்கம்
உனக்கான என் மடி
எனக்கான உன் மார்பு

இருளில் தொலையும் பகலாய்
அனைத்தும் தொலைந்தது எங்கே...
உன் உள்ளங்கை தேடி
என் விரல்களும் அழுகுது இங்கே…

காலத்தின் கைபிடித்து நானும்
ஓடியோடி உனை தேடுகின்றேன்
காதலால் என் கண் கட்டிவிட்டு
எட்டி நின்று சிரிப்பதேனோ??!!

Tuesday 19 June 2018

உன்னோடு உனதாய்!!

நான் நானாக
நீ நானாக
நாம் என்னுள்ளே
நானாகக் கண்டேன்!!

பிரியும் உடலிரண்டு
பிரியா உயிரிரண்டு
இவ்விரு உயிருள்
காதல் கசிந்தேன்!!

இன்பம் வெகுதூரம்
துன்பம் வெகுதூரம்
சலனமில்லா நிலையில்
நான் நிலைத்தேன்!!

கடிகார முள் ஓடியோடி
காலம் குறைந்தாலும்
கடிவாளம் பூட்டிய
ஜீவனோடு வாழ்ந்தேன்!!

மோனங்கள் சில நேரம்
மோகங்கள் சில நேரம்
உன்னோடு திரிந்து
நான் மரித்தேன்!!

காற்றில் தென்றலாய்
கனவில் காட்சியாய்
ஒலியில் மொழியாய்
உன்னோடு உனதாய்க் கலந்தேன்!!