Wednesday, 29 September 2021

ஆத்ம சாந்தி

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒட்டுப்போட்ட பாசிப்பச்சை நிறப் புடவையின் தலப்பை தலையில் முக்காடிட்டபடி, அன்றைய தினத்தின் உச்சபட்ச வெப்பத்தில், சூசையின் கல்லறை அருகே அமர்ந்திருந்தாள், மேரி. உப்புக்காற்றோடு உரசிக்கொண்டு வந்த கருவாட்டின் வாடையோடு, கல்லறை மீது தூவப்பட்ட கைப்பிடி மல்லிகையின் மணமும் சேர்ந்து மணத்தது.


மூன்று வயதான அக்கல்லறையின் சுண்ணாம்புப் பூச்சு, தொட்டதும், மீனின் செதில்களைப் போல் உதிர்ந்துபோனது. கல்லறை தோட்டத்தின் அரையடி மதில் சுவரைத் தாண்டி அவளது பார்வை நீண்டுச் சென்று, எட்டியெட்டிப் பார்த்துச் செல்லும் கடலலைகளைக் கண்டது. அனிச்சையாய் கல்லறையை வருடிய அவளது விரல்களோடு ஒட்டிக்கொண்டு மேலும் பூச்சு உதிர்ந்தது. தனது இடுப்பில் சொருகி வைத்திருந்த மணிபர்சினை பிரித்துப் பார்த்தாள். இருநூற்று ஐம்பத்தேழு ரூபாய்கள் இருந்தது. அதை மீண்டும் இடுப்பில் சொருகிவிட்டு, கடலலையைப் பார்த்திருந்தாள்.


மண்வெட்டி, கடப்பாரையோடு கல்லறைத் தோட்டத்திற்குள் வந்த சிலர், பரபரவெனக் குழி பறிக்கத் தொடங்கினர். அவசர அவசரமாக எழுந்தவள், எட்டு வைத்து அவர்களின் எதிரே சென்று நின்றாள். 

“நம்ம லூர்தோட அய்யா, இழுத்துக்கிட்டு கிடந்தாரே… முடிஞ்சிருச்சு…”

மார்க்கெட்டில் சிறு பலசரக்குக் கடை வைத்திருக்கும் சேவியர், அவர்களை மேற்பார்வை பார்த்தபடி கூற, அவள் முகத்தில் கனிவும் இல்லை; கருணையும் இல்லை; அவளுக்கு அச்செய்தி தேவையுமில்லை. 

தோண்டிக்கொண்டிருப்பவர்களை நோக்கி,

“அந்தச் சலவக்கல்லு கல்லறை கட்ட எம்புட்டு ஆகும்?” என்றாள், சற்று தள்ளி சலவைக் கல்லால் ஆன கல்லறையைச் சுட்டியபடி.

“முப்பதாயிரம் ஆவும் ஆத்தா…”


முகத்தின் பிசுபிசுப்பை முந்தானையால் துடைத்தபடி, அந்தத் தோட்டத்திலேயே பளிச்சென்று பகட்டாய் இருந்த சலவைக்கல் கல்லறையின் முன் சென்று நின்றாள். சலவைக்கல் கல்லறையைச் சுற்றி சிறு திண்டுகள் நட்டுவைத்து, சங்கலிகள் கோர்த்து, தங்க நிற மையால் பெயரும், பிறப்பு/இறப்பு தேதிகளும் குறிக்கப்பட்டிருந்தது. இரண்டடி உயர சிலுவையும் அதன் மேல் எழுப்பப்பட்டிருந்தது.

‘கெபியும் கட்டணும். சுரூபம் வைக்கணும். எவ்வளவு பெரிய தியாகம்! யார் என்ன சொன்னாலும் புனிதன் தான்! வெயில், மழை அண்டாம நிம்மதியா தூங்கணும்...’ 

முட்டிக்கொண்டு வந்த கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.


“ஏன்யா அதைக் கட்ட முப்பதாயிரம் ஆவுமா?”

மீண்டும் அவர்கள் முன்னே வந்து நின்றாள், மேரி.

“ஆத்தா, மாசக்கணக்கா இதே கேள்விய மம்மட்டி பிடிச்சவன்கிட்டயும், சிமெண்ட்டு மூட்டை தூக்கறவன்கிட்டயும் கேட்கறியே, எதுக்கு? காசு சேத்துக் கல்லறை கட்டி என்ன பண்ணப்போற? அதுக்கு நாலு நல்ல சீலை வாங்கி உடுத்து. பிரியாணி வாங்கிச் சாப்பிடு…”

உரிமையோடு பொங்கினான், சேவியர்.

“கல்லறை கட்ட உன்னைய காசு கேட்டேனா? எவன்கிட்ட என்ன கேள்வி கேட்டா உனக்கென்ன? கல்லறைக்குள்ள கெடக்கறது பொணமாயிருந்தாலும், அது என் புள்ள. சீலை கட்டாமயா திரியறேன்? சோறு குடுன்னு உன்கிட்டயா தட்டேந்தி நிக்கறேன்? என் புள்ளைக்கு நான் செய்வேன். கெளுத்தியாட்டம் துள்ளுற? வார்த்தை கூடப் பேசின, வெட்டுன குழியில நீ படுக்கவேண்டியிருக்கும்…”

அவனது உரிமையோடு, உறவுக்கும் வாய்க்கரிசி போட்டாள்.

இங்கு நடக்கும் கூத்தை, எப்பொழுதும் போல் கடலலை எட்டிப்பார்த்துவிட்டுச் சென்றது.

         

உயிர்களின், உலகங்களின் படைப்பிற்கான காரணம் கடவுளின் ஆசையின்றி வேறு என்னவாக இருக்க முடியும்?! ஆசை உயிருள்ளவனை உயிர்ப்போடு வைத்திருக்கிறது. மேரிக்கும் ஒரேயொரு ஆசை உண்டு. தனது மகனின் கல்லறையைச் சலவைக்கற்கள் கொண்டு பகட்டாய்க் கட்ட வேண்டும் என்று. அந்த ஆசையின் உந்துதலால் நாதியத்த இவ்வுலகில் இன்னமும் அவளது நாடி துடித்துக்கொண்டிருக்கிறது. 


விடியற்காலை நான்கு மணிக்கு முதல் ஆளாக ஹார்பருக்கு வந்துவிடுவாள். எத்தனை விசைப் படகுகள் வந்தாலும், எத்தனை தெரிந்த முகங்கள் இருந்தாலும், அவள் ஜரூராய் சென்று நிற்பது ஓனரிடம் மட்டுமே. தனது மகன் ‘ஓனர்’ என்றே அவரை அழைத்துப் பழகிவிட்டதால், இவளுக்கும் அவரது இயற்பெயர் மறந்து போயிருந்தது. நெத்திலி, தும்பிலி, கெண்டை, காணங்கத்த என்று ஒவ்வொரு நாளும் வந்திறங்கும் மீன்களில் ஒன்று அல்லது இரண்டு சட்டி வாங்கிக்கொண்டு சென்றுவிடுவாள். கரைக்குச் சென்று, அதாவது ஹார்பர் ரோட்டுக்கு அப்பால் இருக்கும் ஹவுசிங் போர்டு காலனிக்குச் சென்று மீன்களை விற்பனை செய்வாள். அந்த இரண்டு - மூன்று மணி நேரம் மட்டும் அவள் முகத்தில் சிரிப்பு ஒட்டவைக்கப்பட்டிருக்கும். விற்றுத் தீர்ந்ததும் ஹார்பருக்குத் திரும்புபவள், மீன் சுத்தம் செய்து கொடுக்கும் பிளாட்பாரத்தில் உட்கார்ந்துகொள்வாள். அப்பணியிலும் சில சில்லறைகள் சேரும். ஓனரின் பரிந்துரையால், ஏலம் விடும் கட்டிடத்தில் மதியத்திற்கு மேல் சுத்தம் செய்யும் பணி கொடுக்கப்பட்டது. அவளாக யாசிக்கவில்லை. ஓனரின் உதவி வேண்டாமென்றும் யோசிக்கவில்லை. அப்பணியையும் தொடர்ந்தாள். ஓடுவதைக் காட்டிலும் ஓய்ந்து அமருவதே அவளுக்குச் சலிப்பாக இருந்தது. நின்று நிதானிக்கும் பொழுதுகளில் சுமந்துகொண்டிருக்கும் வலி சுயநினைவிற்கு எட்டுகிறது. பார்க்கும் இடமெங்கும் அலையும், நீரும் சூழ்ந்திருக்க, தனது மகன் காவு வாங்கப்பட்ட கோபம் தலைதூக்கும் பொழுது, சர்ச்சில் சென்று அமர்ந்துகொள்வாள். ‘எமது பாபங்களை வாங்கிக்கொண்ட பின்னும் ஏனய்யா இந்த வேதனை?’ என்று பல கோடி முறை அவளது மனம் இறைவனிடம் இறைஞ்சும். 


கையில் குழந்தையோடு இருக்கும் மேரிமாதாவின் சிலையைக் காணும்போதெல்லாம் இவளுள் பக்தியின்றிப் பரிதாபமே மேலெழும். ‘உம்மகன சிலுவையில அறையும்போது எவ்வளவு வலிச்சிருக்கும்… எனக்கும் வலிக்குது…’ என்று எண்ணியபடியே தனது அடிமடியை வருடிக்கொள்வாள்.


“ஆத்தா, இந்த எறாவ எடுத்துட்டுப்போய்ச் சாப்பிடு ஆத்தா”

கையில் நெகிழிப்பையில் இறால் மீன்களோடு வாரம் இருமுறையாவது அவள் முன்னே வந்து நிற்பான், மகன் சூசையின் நண்பன், செபாஸ்டின். அவள் பார்க்கும் பார்வையில் ஏனோ அவன் குறுகித்தான் போவான். அவன் கடன்பட்டவன் போல், அவன் நீட்டும் பையினை வெடுக்கெனப் பிடுங்கிக்கொண்டு செல்வாள், அதையும் காசாக்கிட.


***


“என்னடா செபாஸ்டின் சாப்பிடாம இங்க ஏன் உட்கார்ந்திருக்க?”

“இல்ல… பசியில்ல…”

“காலையிலிருந்து நாலு பாடு மீன் பிடிச்சிருக்கோம். பசியில்லனு சொல்லாத…”

அந்த விசைப் படகின் ஒருபுறத்தில் இரவு உணவு தயாராகிப் படகில் வந்திருந்தோர் பாட்டும், கும்மாளமுமாய் இருக்க, மறுபுறம் செபாஸ்டின் மட்டும் தனிமையில் கிடந்தான். மீன்பிடிக்கச் செல்லும் போதெல்லாம் தனது படகில் பணிபுரிய வருவோர் அனைவருக்கும் ஓனர் தாயாகிப் போவார்.

“என்னாச்சு செபாஸ்டினு? இந்தமுறை நமக்கு நல்ல ஈடு வந்திருக்கு. என்ன கவலை உனக்கு?”

“அதில்லீங்க ஓனர், நாம நாளைக்குக் கரையேறிருவோம்ல?”

“அதனால என்ன?”

“நாளை மறுநாள் சூசை நினைவு நாள்…”

அந்த நடுக்கடல் அமைதியில், மகனை விழுங்கிவிட்ட கடலைக் கண்டு அழுத மேரியின் ஒப்பாரி அவர்களுக்கு மட்டும் கேட்டது. 

“எனக்குப் பாவமன்னிப்பு வேணும் ஓனர்…”

“நீ என்ன தப்பு செஞ்சுட்ட?”

“சூசையைக் காப்பாத்தியிருக்கணும். இல்ல, அவனோட செத்திருக்கணும். ரெண்டு பாவம் பண்ணிட்டேன் ஓனர். ஆத்தாவைப் பார்க்கும்போது உடம்பு நடுங்குது. ‘என் புள்ளையப் பாத்துக்கறேன்னு சொன்னியே, எங்கடா அவன்?’னு ஒவ்வொரு தடவையும் அவ கேட்கற மாதிரி இருக்கு...”

“நீ என்னடா பண்ணுவ… அவன் தலையெழுத்து… ஆத்தா பாவம்டா… ஒட்டுண்ணியா புள்ளை மேல பித்தா கெடந்தவ… என்ன பண்ணுவா பாவம்?”

“இந்த சென்மத்துல ஆத்தா என்னை மன்னிக்காதா?”

“அவளுக்கு யாரு மேல கோவம்னு தெரியலடா. எல்லாருமே அவளுக்கு எதிரியாகிட்ட மாதிரி எட்டி நிக்கறா. மனசு தவிக்குது…”

“ஆத்தாள பாத்துக்கணும்னு கடைசியா சூசை சொன்னான். அவன் இடத்துல இருந்து நான் செய்யணும்னு நினைக்கறத எதையும் செய்யத் துப்பில்லாம இருக்கேன். ‘நீ வேலைக்குப்போகாத ஆத்தா, நான் உனக்குக் காசு தரேன்’னு சொல்லணும்னு நினைக்கறேன். மூணு வருசமா முடியல…”

“எனக்கு மட்டும் அந்த எண்ணம் இல்லையாடா? சட்டி மீனை சும்மா கொடுத்தா கோவிக்கறா. காசு குறைச்சு வாங்கிக்கறேன்... ஹ்ம்ம்… நீ உன் பொழைப்ப பாரு. உன்னைப் பெத்தவங்களுக்குச் செய்ய வேண்டியதை செய்…”

“என்னைப் பெத்தவங்களுக்கு நான் செய்யாட்டியும் என் தம்பி செய்வான். அவன் பார்த்துப்பான்… ஆனா சூசைய விட்டா அவளுக்கு ஆதரவு இல்லையே…”

“இந்த அறிவு அன்னைக்கே உங்களுக்கு எங்கடா போச்சு? உள்ள வராதீங்கடா’னு கடல் தாயி முன்கூட்டியே சொல்லாமலா இருக்கா? வீட்டுப் பொம்பளைக்கோ, பெத்தவளுக்கோ உடம்புக்கு நோவுனா, சரியாகுற வரை நாம தொந்தரவு செய்யாம, ரோட்டுக் கடைல எதையாவது வாங்கிச் சாப்டுட்டு பொழப்ப பாக்குறதில்ல? இவளும் அப்படித்தான்டா... புயலோ, மழையோ அடிச்சு ஓய்ஞ்சு இவளோடு நோவு தீரும் வரை பொறுக்கணும் டா… கடல்னா வெறும் காத்தும் தண்ணியும் கிடையாது. அதுக்கும் சீவன் இருக்கு…”

“ஓனர்…”

கலங்கியிருந்த அவனது விழிகளைத் துடைத்தவர்,

“நீ சாப்பிட வா… யார் வந்தாலும், போனாலும் வாழற வரைக்கும் நாம மூச்சுவிட்டுத்தான் ஆகணும்… எழுந்து வா...”

ஓனர் சென்றுவிட, அந்த இருட்டு நீர் விரிப்பில் தனது தொலைத்துவிட்ட தோழனைத் தேடினான், செபாஸ்டின்.


***


“ஆத்தா, ஏன் இப்படிப் பயந்து சாவுற? மதியம் மேல தான் கடலுக்குப் போகக் கூடாதுனு சொல்லியிருக்காங்க. அஞ்சு மணிப் படகுல மொத பாடு முடிஞ்சதும் திரும்பிடுவோம்… சொல்றா செபாஸ்டினு…”

 

அன்று கடலுக்குள் செல்ல வேண்டாம் என அரசாங்கம் எச்சரித்திருக்க, ஒரேயொரு முறை கடலுக்குள் சென்று வரவேண்டும் எனத் தாயிடம் கேட்டுக்கொண்டு நின்றிருந்தான், சூசை. உடன், தோழன் செபாஸ்டினும் தயாராய் இருக்க, பதினைந்து வயதின் இள இரத்தம் பரபரத்தது. 


“ஓனருகிட்ட கேட்டியா ராசா?”

‘வேண்டாம்’ என்பதை வேறு மாதிரி சொல்ல முயன்றது, தாயுள்ளம்.

“ஓனரு ஊர்ல இல்ல, ஓனரக்காகிட்ட படகு வேணும்னு சொன்னா வேண்டாம்னா சொல்லப்போறாங்க?”

“இல்லபா, கடலுக்குப் போற நேரம் இல்லையே இது…”

ஏதோ ஒரு பதட்டம் அவளை அலைக்கழித்தது.

“ஆத்தா…”

கோபத்தைக் குரலில் காட்டியவன், அருகில் வைக்கப்பட்டிருந்த காலியான ஐஸ் பெட்டிகளை எட்டி உதைத்துவிட்டு வெளியே சென்று அமர்ந்துகொண்டான்.


"விடு சூசை, இப்ப கடலுக்குப் போகத் தோதான நேரம் இல்லை…"

செபாஸ்டின் சமாதானம் செய்ய முயன்றான்.

"நீ ஒன்னும் வரவேணாம்டா, நானே தனியா போய்க்கறேன்…"

"தனியா போறியா? வகுந்துடுவேன் உன்னை…"

செபாஸ்டினும் கோபங்கொண்டு அருகே அமர்ந்து கொண்டான். குழந்தைப் பருவம் தொட்டே இணைப்பிரியா உயிர் நட்பு உப்புக்காற்றில் உலராமல் இருந்தது.

"செபாஸ்டினு, சீக்கிரம் நாலு காசு சேக்கணும், நாமளும் போட்டு(Boat) வாங்கணும், எக்ஸ்போர்ட் பண்ணணும், ஆத்தாவ நல்லா பாத்துக்கணும்டா..."

நண்பனின் தோளின் மீது கை போட்டு மிக நெருக்கமாக அமர்ந்து கொண்டான், செபாஸ்டின்.


"இந்தா ராசா, தூக்கு சட்டியில சோறு வச்சிருக்கேன். ரெண்டு பேரும் போட்டுல சாப்பிட்டுக்கோங்க..."

அவர்களின் எதிரே வந்து நின்றாள், மேரி.

"ஆத்தா…" துள்ளிக்குதித்து எழுந்த சூசை, கோவம் கலைந்து சிரிக்க, அவனது சிரிப்பிற்காக எதையும் பொறுத்து, மறைத்துக்கொண்டாள், மேரி.

“ஆத்தா நான் சூசையப் பார்த்துக்கறேன்…” 

செபாஸ்டினின் வாக்கு அவளுக்குத் துணிவைக் கொடுக்க, மனதிற்குள் ஜபிக்கத் தொடங்கினாள். 


படகு கடலில் பாய்ந்தது. கண்ணைவிட்டு படகு நீங்கும் வரை கரையில் நின்றுகொண்டு கைக்காட்டினாள், மேரி. படகு வெகு தூரம் சென்றதும் தேவாலயத்தை நோக்கியபடி சிறிது நேரம் நின்றிருந்தாள். வீட்டிற்குத் திரும்பியவளுக்கு எதிலும் மனம் ஒட்டாமல், பாய் விரித்துப் படுத்துக்கொண்டாள்.


"ஆத்தா… ஆத்தா…"

வேகமாய்க் குரல் வர, அதைவிட வேகமாய்க் கதவு தட்டப்பட, பதட்டமாய் வெளிப்பட்டாள், மேரி.

"ஒனரய்யா, உள்ள வாங்க…"

"அது கிடக்கட்டும். இந்தப் பயலுக வந்தாணுங்களா இல்லையா?"

உச்சி நேரத்தில் ஒலிக்கும் தேவாலய மணியோசை அவளைக் கதிகலங்கச் செய்தது.

"இன்னைக்குக் கடலுக்குப் போக வேணாம்னு சொல்லியிருக்காங்கல்ல? எதுக்கு அவனுகள அனுப்புன ஆத்தா? நான் ஊர்ல இல்லாத நேரம் சம்சாரத்துக்கிட்ட சொல்லிட்டு போட்ட வாங்கிட்டு கிளம்பிட்டானுங்க. அதுவே கோளாறு புடிச்ச போட்டு. அதை வித்துட்டு வேற வாங்கிப்போடணும்னு நினைச்சுட்டு இருக்கேன். அதைப் போய்…"

அவள் சரிந்து அமர்ந்து அழ,

"ஒரு பய கடலுக்குப் போகல. இவனுங்களுக்கு மட்டும் எதுக்கு இந்தக் கிறுக்கு? இந்த சூசைய, ‘மடிமுடி போட ராசியா இருக்கியேப்பா’னு ஒரு வார்த்தை சொல்லிட்டேன். அதுல வந்துருச்சு இந்தத் தைரியம்ல? அந்தப் பயலுக்கு முதல்ல நெட்டு தெளிவு எடுக்கத் தெரியுமா? போயிருக்கானுங்களே, செலவையாவது அவனுங்களால எடுக்க முடியுமா? ஏதோ குருட்டு தைரியத்துல உள்ள இறங்கிட வேண்டியது... நம்ம பயலுகள அனுப்பறேன். கரையேறட்டும் அவனுங்களுக்கு இருக்கு…" என்று தனது மொத்த பரிதவிப்பையும், ஆதங்கத்தையும், அப்பிள்ளைகளின் மேல் அவர் கொண்டிருந்த பாசத்தையும் தனக்குத் தெரிந்த மொழியில் கொட்டிவிட்டு, படபடப்பு குறையாமல் அவ்விடம் விட்டுச் சென்றார்.


மேரி அமர்ந்த நிலையிலிருந்து நகராமல், தேவனின் பெயரை ஜெபித்திருக்க, அவளது மனதில் சிரித்தபடி விடைபெற்றுக்கொண்ட மகனின் முகமே நின்றது.


"ஏ மேரி, பாவியா போயிட்டியே... ஓடியா…"

என்று எங்கிருந்தோ வந்த குரல், வாயிற்படியில் அழுகையும், வேதனையுமாய்க் கண்மூடிக் கிடந்தவளைக் கலைக்க, தொலைவில் குழுமியிருந்த கூட்டத்தைக் கண்டு இவள் தலைதெறிக்க ஓடினாள்.

கூட்டத்தை விளக்கி, தரையில் கிடந்த செபாஸ்டினைக் கண்டாள்.

"என்னை மீறி ஏன்டா போனீங்க? ஏன் போனீங்க?”

அவனது சட்டைக் காலரைப் பிடித்து, அவனை உலுக்கிக் கொண்டிருந்தார், ஓனர். கோபமும், அழுகையுமாய் அவர் நின்றிருக்க, உடலின் திராணி மொத்தமும் வடிந்து உயிருள்ள சவமாய்க் கிடந்தான், செபாஸ்டின். 

எதுவும் விளங்காமல் நின்றிருந்த மேரி, சுற்றும் முற்றும் தனது மகனைத் தேடினாள். செபாஸ்டினைக் கண்டதும் சற்றே துணிவு கொண்ட அவளது மனம், பிள்ளையின் முகத்தைக் காணத் தவித்தது. 

ஓனரை விலக்கிவிட்டு செபாஸ்டினின் எதிரே சென்று அமர்ந்த மேரி, அவனது கைகளைத் தனது கைகளுக்குள் ஏந்தி,

"யப்பா செபாஸ்டினு, சூசை எங்கய்யா?" என்றாள். 

அவனது கைகளைப் பற்றி இறைஞ்சினாள்.

அவளது முகம் காணமுடியாமல் குலுங்கிக் குலுங்கி அழுதவன், 

"அவன் உசுர விட்டு என் உசுரக் காப்பாத்திட்டான் ஆத்தா…" என்றுவிட்டு அவளது பாதத்தின் அருகே விழுந்தான்.

அவள் பிரம்மை பிடித்தவள் போல் எதுவும் விளங்காமல் ஓனரைப் பார்த்தாள்.


***


“சூசை, என்னடா பார்க்குற?”

கடலில், நகராமல் நின்றுவிட்ட விசைப் படகில், நண்பர்கள் செய்வதறியாது தவித்துக்கொண்டிருந்தனர். கடல் மெல்ல தனது ருத்ரத்தைத் தொடங்க, படகு தத்தளித்தது. 

“செபாஸ்டினு, நீ தண்ணில குதிச்சு கரைக்குப் போயி போட் அனுப்பு. டௌ பண்ணித்தான் கரைசேர முடியும்...”

“உன்னை விட்டுட்டா?”

“ஓனர் போட்ட தனியா விட்டுட்டு வர முடியாது. அவரு என்மேல ரொம்பப் பாசம் வச்சிருக்காரு. போட்டு எடுத்துட்டு வந்த நானே, அதை அனாமத்தா விடமுடியாது. முதபாடு மீனெல்லாம் வேற கிடக்கு.”

“நான் உன்னை விட்டுட்டு போகமாட்டேன்…”

“கடல் கொந்தளிக்குது. உன்னையும் வம்படியா கூட்டிட்டு வந்துட்டேன்டா. நீ முதல்ல கரை சேரணும்.”

“சூசை, ரெண்டு பேரும் தண்ணில இறங்கிடுவோம்…”

சருகில் சாரைப் பாம்பு நெளிவது போல் சத்தம் கேட்க, என்ஜின் அருகே சென்று பார்த்தான், சூசை. 

“என்னடா சூசை?”

“நீ வீலைப் (Steering Wheel) புடி… நான் பார்க்கறேன்…” என்று நண்பனை அனுப்பிவிட்டு, கவலையோடு என்ஜினைப் பரிசோதித்தான், சூசை.

‘ஸ்பார்க்கு வருது… என்னவா இருக்கும்னு தெரியலையே… ஏசப்பா என்னால ஓனருக்கு நட்டம் வந்துடக்கூடாது… போட்ட கரையேத்து…’ என்று மனதினுள் மருகினான்.

மேழெழும்பி அடங்கிய அலையால் திக்குமுக்காடிய படகில் பொருட்கள் சரிய, மூலையில் வைத்திருந்த டீசல் கேன் கவிழ்ந்து கொட்டியது. பரபரவென நண்பனிடம் ஓடிவந்த சூசை, எதுவும் கூறாமல் ஒரே மூச்சில் அவனைக் கடலுக்குள் தள்ளினான். மறுநொடி நீர் தேக்கி வைத்திருந்த பாரலைக் கவிழ்த்தான்.

“டேய் சூசை, என்னடா ஆச்சு? நீயும் வாடா.”

தட்டுத்தடுமாறி கடலில் நீந்தியபடி ஓரளவு சுதாரித்துக்கொண்ட செபாஸ்டின், நண்பனை எண்ணி கவலைக்கொண்டான். 

என்ஜின் தீ பிடிக்க, “தண்ணில குதிடா சூசை” என்று செபாஸ்டின் கத்த, உடல் நடுங்கிய சூசை நீருக்குள் குதிக்க எத்தனிக்க, இமைக்கும் நொடியில் வெடித்துச் சிதறியது, படகு. அந்தத் தாக்கத்தில் நீருக்குள் மூழ்கிய செபாஸ்டின் சில நொடிகளில் மீண்டும் மேலெழ, நீர் மீது தீக்காடு சூழ்ந்திருந்தது. 

தனது மொத்த சக்தியையும் திரட்டி, அவன் “சூசை… சூசை…” என்று அழைக்க, பதிலற்றுப் போனது. 

மேலெழுந்த வானுயர ஆழிப்பேரலை படகை விழுங்கி, செபாஸ்டினை வீசியெறிந்தது. கடல் பரப்பில் எங்கோ வீசியெறியப்பட்டவன், கடலன்னையின் கருணையால், அலைகளின் கரம் வழியே கரையை நோக்கி அனுப்பிவைக்கப்பட்டான். அரை உயிரோடு, அரைகுறை நினைவோடு மிதந்து கிடந்தவனை, ஓனர் அனுப்பிவைத்த மீட்புக் குழு மீட்டெடுத்து கரை சேர்த்தது.


***


நடந்தவற்றை ஓனர் கூறக் கேட்டுக்கொண்டவள் செபாஸ்டினை நோக்க, அவன் மயங்கி தரையில் மூர்ச்சையாகியிருந்தான்.


அந்த நொடி முதல், அடுத்து இரு தினங்களுக்குக் கடலையே வெறித்துக்கொண்டு கிடந்தாள். தனது மகன் வருவான் என்று கரையில் காத்திருந்தாள். கொட்டும் மழையும், வீசும் புயலும் அவளது நம்பிக்கையை அசைக்கவில்லை. கண்ணீரைக் கூட கட்டிப்போட்டுவிட்டாள். 


புயல் ஓய்ந்த பின் சூசையைத் தேடி கடலுக்குள் சென்ற மீனவர்கள் சூசை எடுத்துச் சென்ற விசைப்படகின் எச்சத்தை மீட்டு, மீன்களைத் தின்று வளர்த்த சூசையின் உடம்பில் மீன்கள் தின்றது போக இருந்த மிச்சத்தைப் பழைய துணி, பைகளைக் கொண்டு கட்டி, கரை சேர்த்தனர். 


ஆவியற்றுப்போன மகனின் முகத்தைக் காண கட்டுகளை மேரி வேகமாக அவிழ்க்க முயல, வேறு வழியின்றி அவளை வம்படியாகத் தடுத்து நிறுத்தினர் கூட்டத்தார்.

“வேணாம் ஆத்தா… அதை நீ பாக்காத… சூசை சிரிக்கிற நினைப்பே உனக்குப் போதும்… வேணாம் ஆத்தா…” என்று அவளது காலில் விழுந்து கெஞ்சினார், ஓனர். 


சவப்பெட்டியில் சூசையின் உடல் வைக்கப்பட்டு, மண்ணின் மடியில் புதைக்கப்பட, மூன்று நாட்களாக அடக்கி வைத்திருந்த வலிகளையும், இனி வாழப்போகும் நாட்களின் சுமைகளையும் சொல்லிச் சொல்லி வாய்விட்டு அழுதாள், மேரி.  

கல்லறைத் தோட்டத்தின் குட்டிச் சுவருக்கு அப்பால் படர்ந்திருந்த மணல் பரப்பின் எல்லையில் எட்டியெட்டிப் பார்த்துச் சென்ற அலைகளையும், அதையும் தாண்டி படர்ந்திருந்த கடலையும் கண்டவள்,  

“நீ தான் என் வயித்த நிறைக்கற, இல்லேங்கல. அதுக்காக பதிலுக்கு என் அடிமடியில கைய வச்சுட்டியேடி. உன் மடியில தினமும் உனக்கு லட்சம் பிள்ளை பிறக்குது. ஆனா என் ஆயுசுக்கும் இவன் ஒத்த புள்ள தானே… இப்போ அவனும் போயிட்டானே...” என்று அவள் குரல் எடுத்து அழுதது இன்றும் அலைகளின் மத்தியில் எதிரொலிக்கிறது. அன்றிலிருந்து இன்று வரை பழைய சோறும், சில மிளகாய்களும், கடைசி ஆசையும் மட்டுமே அவளது உயிரை நீட்டித்து வைத்திருக்கிறது. 


***


கிறிஸ்துமஸ் விழாவிற்காகத் தேவாலயம் அலங்கரிக்கப்பட்டு கலைக்கட்ட, மேரியோ அதில் எதுவும் மனம் லயிக்காமல் சூசையின் கல்லறை அருகே அமர்ந்திருந்தாள். 

"சூசை… சூசை… எங்கய்யா இருக்க நீ? தூங்கறியா? தூங்கு ராசா தூங்கு… இந்த ஆத்தாளுக்காக ஓடியாடி உழைச்சு நீ களைச்சுப் போயிருப்ப… தூங்கு ராசா…"

‘ஏன் என்னை விட்டுட்டுப் போன?’ என்ற கேள்வி அவளது தொண்டைக்குழி வரை வந்து நின்றாலும், ஒருநாளும் அவள் அவனை அவ்வாறு வினவியதில்லை. அவன் இறந்துவிட்டான் எனும் நிதர்சனத்தை விட, உறங்கிக்கொண்டிருக்கிறான் எனும் கற்பனை அவளுக்குச் சற்று ஆறுதலாக இருந்தது. 


எழுந்து வந்தவள், மின்விளக்குகளால் ஜொலித்துக்கொண்டிருந்த தேவாலயத்தைக் கண்டாள். மக்கள் கூட்டத்தைக் கண்டாள். சூசை வயதொத்த விடலைப் பையல்களைக் கண்டாள். சிரிப்பு நிறைந்த முகங்களைக் கண்டாள். எதுவும் அவளது புத்தியில் பதியவில்லை. மேரிமாதா சிலையை நோக்கி நடந்தாள். சிலையின் முன் ஒருவள் கலங்கியபடி பிரார்த்தித்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். அவளது காலருகே இளவயதினன் ஒருவன் உடல் மெலிந்து நொந்து கிடப்பதைக் கண்டாள். அவனைக் கண்டதும் அவளது கண்கள் நீர் கோர்த்தன. திமுதிமுவென ஒடியவள், அவன் அருகே சென்று அமர்ந்து, அவனது கைகளைத் தனது கைகளுக்குள் ஏந்தி, 

"சூசை… சூசை… என்னப்பா ஆச்சு உனக்கு? சூசை… சொல்லுயா… சூசை…" என்று மூச்சுவிடாமல் மேரி பிதற்ற, புரியாமல் விழித்தனர் அவ்விருவரும்.

மகனின் அருகே அமர்ந்த தாயவள், "புள்ளைக்கு உடம்பு சரியில்ல ஆத்தா. லிவருல ஏதோ பிரச்சனையாம். அது என்னன்னு கூட எனக்கு சொல்லத் தெரியல. ஆப்பரேஷன் பண்ணனும். காசு வேணும். இயேசப்பா தான் புள்ளய காப்பாத்தணும்..." என்றவள் உடைந்து அழ,

"நான் இருக்கேன்யா உனக்கு…" என்று அவனது முகத்தினை வருடிய மேரி, எழுந்து மறுநொடியே வேகவேகமாய் ஓடியபடி நடந்தாள். 


வீட்டிற்கு விரைந்தவள், அங்கும் இங்குமாய் பதுக்கி வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை எடுத்து ஒரு பைக்குள் சேகரித்தாள். மூன்று வருட சேமிப்பாக ஏறத்தாழ இருப்பதாயிரத்துக்கும் மேல் வைத்திருந்தவள், ரூபாய் குறைவின்றி அனைத்தையும் திரட்டினாள். மீண்டும் ஓட்டமும் நடையுமாய் வேகவேகமாய் மேரிமாதா சிலையருகே வந்தவள், அவ்விருவரையும் காணாமல், ஜனசாகரத்தில் தேடத் தொடங்கினாள். 

"சூசை… சூசை…" என்று முனகிக்கொண்டே தேடியவள், இறுதியில் அவர்களைத் தேடிப்பிடித்தாள். 


அந்த இளையவனின் கைகளை மீண்டும் பற்றிக்கொண்டவள், தனது கையிலிருந்த பையை அவனது கையில் கொடுத்து,

"உனக்கு ஆத்தா நான் இருக்கேன்யா… கவலைப்படாத சூசை…" என்றுவிட்டு அவனது உச்சி முகர்ந்து முத்தமிட்டு கலங்கிய விழிகளோடு, ஜனசாகரத்தில் மறைந்துபோனாள்.


வீடு வந்து சேர்ந்தவள், நிம்மதியாய் உறங்கிப்போனாள்.


நாட்களும் ஓடியது. மேரியும் நிற்காமல் ஓடினாள்.


ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க மீண்டும் தேவாலயம் கலைக்கட்டியது. ஆனால், அதை எதையும் மேரி பொருட்படுத்தவில்லை. சூசையின் கல்லறையின் அருகே அமர்ந்துகொண்டு கடலை வெறித்துக் கொண்டிருந்தாள். 


"ஆத்தா…" 

அவளருகே வந்து நின்றாள், சில நாட்களுக்கு முன் கிறிஸ்துமஸ் அன்று மேரிமாதா முன் கலங்கி நின்றவள். அவளருகே நின்றிருந்த மகனைக் கண்டதும் எழுந்து நின்ற மேரி, அவன் உடல் தேறி, கண்களில் ஒலியுடன் நிற்பதைக் கண்டு பூரித்துப்போனாள்.


"அய்யா… சூசை..." என்று அவனது தலை வருடினாள்.

"நீ கொடுத்த காசுல என் புள்ள பொழச்சுட்டான் ஆத்தா…" என்று அவள் அழ,

"ஆமா பொழச்சுட்டான்… சூசை…" என்று அவனது கன்னத்தை வருடினாள், மேரி.

"நான் ஆல்பர்ட் ராஜா…" தயங்கித்தயங்கி கூறினான், அவன்.

"சரிய்யா… சரிய்யா…" 

"ஆத்தா… யாரு என்னானு தெரியாம காசு கொடுத்து உசுர காப்பாத்திட்ட. உன் கடனை எம்புள்ள அடைச்சுடுவான் ஆத்தா…"

அவள் மீண்டும் அழுதாள்.

"கடனா?" சிரித்துக்கொண்ட மேரி, "சூசையைப் பாத்துக்கடி…" என்றுவிட்டு மெல்ல நடந்து தேவாலயத்துக்குள் சென்றாள்.


அவள் மனதில் எந்தக் கேள்வியும் இல்லை. விடைகளை இம்முறை அவள் வேண்டவில்லை. கருணாமூர்த்தியின் கருணை மட்டுமே அவளது உள்ளத்தில் பெருகியது. 

"இயேசப்பா, சூசைய பாத்துக்கய்யா…" என்றுவிட்டு எழுந்து வெளியே வந்தாள். வண்ண வண்ண விளக்குகளைக் கண்டு அவள் கண்கள் விரித்தாள். ஜனக்கூட்டதை வேடிக்கை பார்த்தாள். பல முகங்களில் தென்பட்ட மகிழ்ச்சி அவளுக்கும் ஒட்டிக்கொண்டது. ரோட்டோரம் முளைத்திருந்த கடைகளைக் கண்டாள். சீனி காராசேவு வாங்கிக் கொண்டு, ஒவ்வொன்றாய்க் கொறித்தபடி, திருவிழா ஆரவாரத்தைக் கண்டு களித்தாள்.


***


காலையில் ஹார்பருக்குச் சென்றவள், ஓனருடைய போட்டைத் தேடி தனது கூடையோடு அங்கு சென்று நின்றாள்.

"ஆத்தா நல்லாயிருக்கியா?"

வழமையாய் ஓனர் அவளைக் கேட்கும் கேள்வி. 

"நல்லாயிருக்கேன்யா, நீங்க எப்படியா இருக்கீங்க?" என்றாள் பதிலுக்கு.

அதிர்ச்சியில் பேச மறந்த ஓனர், ‘ம்ம்’ என்று தலையை மட்டும் ஆட்ட, பரிவான புன்னகையோடு தான் வாங்க வந்ததை வாங்கிக்கொண்டு நடந்து சென்றாள்.

அவள் சென்றதும், கீழே அமர்ந்து ஓனர் தோள்கள் குலுங்க அழ, பதட்டமாயினர் அவரிடம் பணிபுரிவோர்.

"ஆத்தா என்கிட்ட பேசி எத்தனை நாளாச்சு. கேள்விக்கு பதிலா தலையாட்டிட்டு போறவ, இன்னைக்கு ‘நல்லா இருக்கியா’னு கேட்டுட்டா. இன்னைக்குத்தான்டா நான் உண்மையாவே நல்லா இருக்கேன்" என்றவர், நெஞ்சில் தொங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பாரம் குறைந்துபோனதில் மீண்டும் கண்கள் கலங்கினார்.


"ஆத்தா…"

கத்திக்கொண்டே அவள் பின்னே ஓடிவந்தான், செபாஸ்டின். எப்பொழுதும் போல இன்றும் அவனது கையில் நெகிழிப் பையில் இறால் இருந்தது. அவன் அமைதியாய் நீட்ட, அதை வாங்கிக்கொண்டவள்,

"எனக்கு எதுக்கு செபாஸ்டினு இத்தினி எடுத்துட்டு வந்திருக்க? வேலை முடிஞ்சதும் வீட்டுக்கு வா. நான் சோறாக்கி வைக்கறேன். உனக்கு எறா தொக்கு ரொம்பப் பிடிக்கும்ல? ரொம்ப நாளாச்சு ஆத்தா கையாள நீ சாப்ட்டு. கரைக்குப் போயிட்டு வரேன்யா" என்றவள், அவனது தலையை வருடிவிட்டு விலகிச்செல்ல, இத்தனை நாட்களாக அவன் வேண்டிய பாவமன்னிப்பு கிட்டியது. ஓடோடிச் சென்றவன், தேவாலயத்தில் தேவதூதன் காலடியில் மண்டியிட்டு அழுது தீர்த்தான்.


கரைக்குச் சென்று மீன் விற்று முடித்தவள், நேரே சேவியரின் மளிகைக் கடைக்குச் சென்றாள். அவள் கேட்ட சாமான்கள் அனைத்தையும் ஆச்சரியம் குறையாமல், அமைதி கலைக்காமல் எடுத்துக் கொடுத்தான், சேவியர். 

"எவ்வளவு ஆச்சுயா?"

"வேணாம் ஆத்தா. நீ எடுத்துட்டு போ. ரொம்ப நாள் கழிச்சு நீ கடை பக்கம் வந்திருக்க. சந்தோசமா இருக்கு ஆத்தா."

அவனது கண்கள் ஈரம் கொண்டிருந்தன.

சிரித்துக்கொண்டவள், "வேணாம்னு சொல்லாதய்யா. காசு வாங்கிக்க…" என்று பரிவோடு கூற,

"சரியாத்தா…" என்று வாங்கிக்கொண்டான்.

அவள் சாமான்களை எடுத்துக்கொண்டு கிளம்ப எத்தனிக்க,

"ஆத்தா, இந்தப் பிரியாணி பொட்டலமாவது வாங்கிக்க… இப்பத்தான் கடைப்பையன் எனக்கு மதியத்துக்கு வாங்கியாந்தான்… நீ சாப்பிடு ஆத்தா…" என்றான் உரிமையோடு.

"சாப்பிடறேன்யா… சாப்பிடறேன்..." என்று வாங்கிக்கொண்டவள், ஆர்ப்பரிக்கும் அலைகடலை அமைதியாய் நோக்கியபடி வீடு வந்து சேர்ந்தாள். 


உண்டு முடித்தாள். உடை மாற்றினாள். ஆசையையும் சற்று மாற்றிக்கொண்டாள். சூசைக்குக் கல்லறை கட்ட வேண்டும் என்று ஓடியவள், இனி ஏதோ ஒரு சூசையைக் காப்பாற்ற வேண்டும் என்று ஓடத் தொடங்கினாள். எப்பொழுதும் போல் இன்றும் எட்டியெட்டிப் பார்த்த கடலலைகள், வேகவேகமாய் ஓடின, சூசையிடம் செய்தி சொல்ல!! 






No comments:

Post a Comment