Wednesday, 1 March 2017

சொர்க நிமிடங்கள்!!

உருவாக உள்புகுந்து
உயிராக மாறிநின்றாய்
உணர்வெல்லாம் நீபடர்ந்து
காதல் உபன்யாசம் தினம் சொன்னாய்

கணம் ரெண்டு உனைக்காண
மணிக்கணக்காய் காத்திருப்பேன்
காலிரண்டும் நோகுதடி
மனம் மட்டும் சிலிர்க்குதடி!

உனக்காக வாங்கிவந்தேன்
மல்லியும் முல்லையும்
உணைக்கண்டு மலர்ந்திடவே
முகம் மூடி இருப்பதுவே!

காத்திருக்கும் பொழுதுகளில்
மனம்,
உனை நினைத்து அசை போடும்
காலமெல்லாம் சேர்ந்திருக்க
தினம்,
அவனிடம் மனு போடும்

மேகமெல்லாம் அள்ளிவந்து
உன்னை தரையிறக்கி விட்டதுபோல்
மெல்ல தவழ்ந்துவருகையிலே
என்னை மொழி மறக்கச் செய்கின்றாய்

நீ என்னைக்கண்டு சிரிக்கையிலே
நாடி நரம்பெல்லாம் உறையுதடி
என் கைகளில் உள்ள மலர்கூட்டம்
தன் முகம் மலர்ந்து சிரிக்குதடி

மல்லியை அள்ளி நீ சூடயிலே
என் தலை தாண்டி கர்வம் உயருதடி
உன் மெல்லிய வெட்கத்தை காணயிலே
எனக்கும் ரகசிய வெட்கம் துளிர்க்குதடி

இரண்டு நிமிடங்களில்
இருநூறு கதை பேசினாய்
கதையின் முடிவிலே
கேள்வி ஒன்று வினவினாய்

கோதையின் அழகில் மயங்கிவிட்டால்
பேதை பேச்சுக்கள் கேட்டிடுமோ?
கதையே அறியாத என்னிடம்தான்
விடை மட்டும் கிட்டிடுமோ?!

உன் பொய்கோபமும்,
செல்ல சினுங்களும்,
காதலை இன்னும் தூண்டுதடி,
குழந்தையாய் உன்னை காட்டுதடி!

ஒரு நொடியில் வந்த கோபம்
மறு நொடியில் மறைந்திடுதே
அந்த சூட்சுமத்தை சொல்வாயா
நானும் கொஞ்சம் அறிந்திடவே!

மொழியால் கதைகள் பேசிய பின்னே
மௌனத்தால் காதலை பேசுகின்றாய்,
உன் கண்களின் ஆயிரம் அபிநயம் கண்டு
என் நெஞ்சு தாண்டவம் ஆடுதடி!

போய் வருகிறேன் என்று கூறி
என் கிள்ளை பறந்து போனதுவே,
சொர்க நிமிடங்கள் நிறம் மாறி
நிஜம் என்னை சூழ்ந்ததுவே!

நாளை உன்னை காணும் வரை
யுகங்கள் கோடி கடக்க வேண்டும்
உன்னைப்போல் காதலி பெற
தவமாய் தவம் கிடக்க வேண்டும்!!

No comments:

Post a Comment