Thursday, 2 March 2017

தமிழ் கவிதைகள்

அண்டம் யாவிலும்
தேடிக்கிடைக்காத
பிண்டமற்ற
உயர் ஜோதி நீயடி!

நான்,
உயிர் பெற்று
வென்றெழுவதும் உன்னாலே!
உயிர் கசிந்து
மடிந்தொடுங்குவதும் உன்னுள்ளே!

உன் தாய்மைப்பார்வையால்
என் விரகதாபங்கள் ஓயுமடி
உன் மெல்லியபுன்னகையால்
என் கோபச்சீற்றங்கள் மடியுமடி
உன் நுனிவிரல் ஸ்பரிசத்தால்
என் துன்பமெல்லாம் மறையுமடி
உன் நல்வாக்கு மொழியால்
என் எதிர்காலம் மிளிருமடி!

-----------------------------

கொற்றவை சூடிய
கொன்றை மலர்களை
பொத்திவைப்பேன் இதயத்துள்
பத்திரமாய்!

கயல்விழி பாடிய
கமல மொழிகளை
செதுக்கிவைப்பேன் நரம்புகளில்
சித்திரமாய்!

செவ்விதழ்கள் சிந்திய
புன்னைகைப் பூக்களை
கலந்துவைப்பேன்  உதிரத்தில்
தந்திரமாய்!

வான்மகள் தூவும்
காதல் மழைகளை
ஊற்றிவைப்பேன் உயிருக்குள்
நித்தியமாய்!

–------–---  

உன் மீது நான் காதல் கொண்டேன்
காமம் கடந்த மோகம் கொண்டேன்
கிளர்ச்சிகள் அனைத்தையும் தகர்த்துக் கொண்டேன்
ஆவி கலக்கவே ஆசை கொண்டேன்

மோகமுல் கீறுகின்ற நெஞ்சுக்குள்ளே
மோகனமாய் நீ வந்தாய் மெல்ல மெல்ல
தாகங்கள் தீர்ப்பதர்க்கா காதல் என்றாய்
மௌனத்தில் மோனத்தை அறிய வைத்தாய்

கைகோர்த்து நடைபோட எத்தனித்தேன்
உணர்வால் கிரங்கள் தாண்டி கூட்டிச் சென்றாய்
கன்னத்தில் முத்தம் வைக்க இச்சை கொண்டேன்
காமத்தின் கருவறுத்து என்னை மீட்டாய்

ஜென்மங்கள் தொடர்ந்து வரும் உறவிற்கு
பஞ்சணையில் வேலி செய்தல் நியாயமன்று
உள்ளத்திலே மொட்டு விட்டு முளைத்த காதல்
ஜீவனிலே நட்டு வளர்க்க வேண்டும் என்றாய்

தேக்கிவைத்த சபலத்தை ஒழித்துவிட்டேன்
தேகத்தின் தேடல்களை ஒதுக்கிவிட்டேன்
உயிர் கொண்டு உரையாட அடிமையானேன்
காதல் என்பதென்னவென்று புரிந்துகொண்டேன்!!

-----------

No comments:

Post a Comment