Saturday 4 April 2020

காபியும், சர்க்கரைக்கட்டியும்

தினமும் மாலை, நகரம் பரபரப்பாகத் தத்தம் வீட்டிற்குள் புகுந்துகொள்ள விழைய, நான் மட்டும் ஒரு கோப்பை காபியோடு அந்தக் கடையின் கண்ணாடிச் சாளரம் அருகே போடப்பட்டிருந்த மேசையில், டால்ஸ்டாயின் எழுத்துக்களில் தொலைந்துகொண்டிருந்தேன். சூடு பறக்கும் காபியின் ஆவி என் நாசி தீண்டியது. டால்ஸ்டாயின் எழுத்துக்கள் என் உயிரை உரசியது. ஒன்றரை அங்குலம் தடிமனான கண்ணாடிச் சாளரத்தின் வெளியே கொட்டிக்கிடக்கும் அவசரங்கள் எதுவும் உள்ளே இல்லை. மெல்லிய சாக்ஸபோன் இனிமை மட்டும் மங்கிய விளக்கொளி தனிமைக்குத் துணையாயிருந்தது. ஒரு நாளும் வெளியே வேடிக்கை பார்க்காதவனின் கவனத்தை ஈர்த்தது கண்ணாடிச் சாளரத்திற்கு கோடி முத்தங்கள் கொடுத்தபடி வழிந்த மழைத்துளிகள். மழைத்துளிகளின் இடையே கடந்து சென்ற எனது பார்வை எதிரே பேருந்து நிறுத்தத்தில் சென்று நின்றது. வெள்ளை நிற சுடிதாரில் அவள் நின்றிருந்தாள். ‘யார் அவள்??’ என்று என்னுள் எழுந்த வினா, ‘யாரோ அவள்!!’ எனும் வியப்பில் திகைத்து நின்றது. என் எதிரே மேசை மீது வைக்கப்பட்டிருந்த சர்க்கரைக்கட்டிகளை ஒன்றின் மீது ஒன்றாக அடுக்கி வைத்தது போல் அவள் அங்கே நின்றிருந்தாள். எனக்காகவே மழை மேகம் சட்டென வாய்ப் பொத்திக்கொண்டது போல், மறு நொடி நின்று போனது பெரும் மழை. சர்க்கரைக்கட்டி, குடைக்குள் சௌக்கியமாய் இருந்தாள்.        

முன்பை விட அதி சிரத்தையுடன் அந்தக் கடைக்கு நாள் தவறாது விஜயம் செய்தேன். உலகை மறந்து நான் ருசிக்கும் காபியும், ரசிக்கும் எழுத்துக்களும் என் நினைவிலிருந்து என்றோ தப்பிவிட்டதை உணர்ந்தேன். சர்க்கரைக்கட்டி பெண்ணானவள் என் சிந்தையில் நிதமும் தேன்மழை பொழிந்தாள். தினமும் வெள்ளை நிறம் மட்டுமே அணிந்து வருபவள், என் கனவுகளுக்கு வானவில் வர்ணம் பூசினாள். கண்ணாடியின் வழியே அவளைக் காணும் தருணங்களில், கண்ணாடிச்சுவரில் தெரியும் எனது பிம்பம் கூட ஒளி கூடி மிளிரத் தொடங்கியது.

தொலைவில் கண்ட முகம் அருகில் நெருங்கி வர ஆசை கொண்டேன். எழுந்து செல்ல என் கால்கள் ஏனோ தயங்கி நடுங்கின. தினமுமான இந்தத் தவிப்புகள் அன்று முடிவிற்கு வரும் என்று எனது தினசரி ராசிப்பலன் கூட எச்சரிக்கவில்லை. அவசர அவசரமாய் அவள் சாலையைக் கடக்க, எனது இதயம் எம்பி எம்பி குதித்தது, படபடப்பில். சாலையைக் கடந்தவள் எனது சோர்வுற்ற இதயத்திற்கு மற்றுமொரு சோதனை வைத்தாள். சர்க்கரைக்கட்டி என் எதிரே மற்றொரு மேசையின் இருக்கையில்  வந்து அமர்ந்தாள். என் விழிகள் இமைக்க மறந்தது… என் இதயம் துடிக்க மறந்தது…

அவள் சிரிக்கிறாள்... காற்றிலே கற்கண்டுகளைத் தூவியபடி. எறும்பென நான் அவற்றை சேகரித்தேன்... இதயக் குடுவைக்குள். நினைவுகள் சுவைக்குமா? என் நாவில் எச்சிற் சுரக்கும் அவள் நினைவு எட்டிப்பார்த்தால்… அத்தனை தித்திப்பு!!

அவள் ஏதேதோ மொழிந்தாள். எதுவும் என் செவி சேரவில்லை. நளினமாய் தலையில் அடித்துக்கொண்டாள். எதற்கென்று புரியவில்லை. ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மலரும் கமலமென அவள் முகம் புன்னகைத்து மலர்கிறது. அதன் காரணம் விளங்கவில்லை. எனக்குச் சித்தப்பிரம்மையோ என்று பயந்து கண்களை அழுந்தத் தேய்த்துவிட்டு மீண்டும் அவளைப் பார்த்தேன். அவள் சிரித்ததும் சிணுங்கியதும் அவளுடன் இருந்த தோழியரோடு. அவை எனக்கான சிமிஞை அல்ல என்ற உண்மை உணர்ந்தேன்.

தினம் தினம் கனவுகள் என்னைத் துரத்தின. தினம் தினம் நான் காலத்தைத் துரத்தினேன். அவளது தரிசனம் மட்டுமே தினமுமான எனது தவனைமுறை ஆத்ம சாந்தி.

அன்று சக்கரைக்கட்டி மான்குட்டியென துள்ளிக்கொண்டு சாலையைக் கடந்தாள். எனது மனதினை ஒப்புவிக்க எண்ணி நான் செய்திருந்த ஒத்திகைகள் அனைத்தும் என் நெற்றியில் ஆங்கொன்றும் இங்கொன்றுமாய் முளைத்த வியர்வைத்துளிகளில் கரைந்து கொண்டிருந்தன. ‘இவனது படபடப்பில் நாம் எங்கே நசுக்கப்பட்டு விடுவோமோ’ என்ற அச்சத்தில் எனது கையில் ஒற்றை ரோஜா. துள்ளிகொண்டு வந்த மான்குட்டி தூக்கி எறியப்பட்டது காலனாய் வந்த வாகனத்தால். என் விழிகள் இமைக்க மறந்தன… என் இதயம் துடிக்க மறந்தது...

ஓடிச்சென்று கூட்டத்தினுள்ளே புகுந்தேன். சர்க்கரைக்கட்டி செஞ்சேற்றில் நனைந்திருந்தாள். கூட்டத்தில் ஓர் மருத்துவர் அவளது நாடி பிடித்தார். அவளைக் காக்க கடவுள் அவசரமாய் செய்த ஏற்பாடு என்று எண்ணினேன். ஆனால், அவள் இறந்துவிட்டாள் என்று கூறி இரங்கள் வாசிக்க காலன் செய்த ஏற்பாடு என்று அப்பொழுதே உணர்ந்தேன். அவள் உயிர் நீங்கி சவமானாள்... நான் உயிருள்ள சவமானேன்...
            

தினமும் மாலை, நகரம் பரபரப்பாகத் தத்தம் வீட்டிற்குள் புகுந்துகொள்ள விழைய, நான் மட்டும் ஒரு கோப்பை காபியோடு அந்தக் கடையின் கண்ணாடிச் சாளரம் அருகே போடப்பட்டிருந்த மேசையில், காற்றில் கரைந்துவிட்ட எனது சர்க்கரைக்கட்டியை எண்ணி, எனது காபியில் உவர்ப்பு கூட்டினேன், கண்ணீரின் வழியே...

No comments:

Post a Comment