Wednesday, 15 May 2019

என்றென்றும் நான் நீயாக...

மரக்கிளையில் தாவிடும் அணில் போல்
மனம் தத்தித்தாவிடும் உன்னால்
சிறைவைக்கும் சிரிப்பினைக் கண்டு
என் இதழும் சிரிக்கும் தன்னால்

முழு நிலவு உலவிடும் இரவில்
உலவிடுவோம் விரல்கள் கோர்த்து
மலர் வனத்தைப் போர்த்திடும் பனியில்
நனைந்திடுவோம் முத்தம் தீர்த்து

மழை மேகம் குடையாய்ப்போக
நதி நீரில் அலையாடிடுவோம்
சிறு குருவி கூட்டினை நெய்து
அதில் நிதமும் உறவாடிடுவோம்

அகல் விளக்கின் ஒளி நீயாக
முகம் தோன்றும் வெளி நீயாக
விழி நீரின் தெளி நீயாக
என்றென்றும் நான் நீயாக...

Tuesday, 7 May 2019

சிரிக்கின்றேன் கல்லறையில்!!

எனது பெயரை
உனது உள்ளங்கையில்
தினம் கிறுக்கும் உன் பேனா...

கோபத்தில் நரநரக்கும்
உன் பற்களின் பிடியினின்று
உயிர் பிழைக்கும் 'போடா'...

சாலையைக் கடக்கையில்
வெட்கத்தைப் புறந்தள்ளி
என் கைப்பற்றும் உன் விரல்கள்...

ஒரு முத்தம் கொடுத்ததற்கு
ஒரு வாரம் நீ அழுததும்
ஒரு மாதம் சண்டையிட்டதும்...

நான் அறிந்தும் அறியாமல்
ரகசியமாய் என்னை ரசிக்கும்
உனது கன்னி கள்ளத்தனம்...

முதல் முறை புடவை
எட்டுவைத்து என் முன்னே வர
உனது அரைமணி நேர தயக்கம்...

இதில் ஏதோவொன்று நினைவு வர,
நான் மரித்துவிட்டேன்
என்பதையும் மறந்து
சிரிக்கின்றேன், கல்லறையில்!!