"வாங்க மாப்பிள்ளை"
சற்றும் எதிர்பாராமல் விஜயம் செய்துள்ள சந்தோஷை வரவேற்றாள், ஆர்த்தியின் அம்மா.
"அத்தை… ஆர்த்தி"
தலை களைந்து, முகம் வாடி, பரிதவிப்பின் மொத்த உருவாய் நின்றிருந்தவனைக் கண்டு கவலை கொண்டாள் ஆர்த்தியின் அன்னை.
"என்ன ஆச்சு மாப்பிள்ளை? ஆர்திக்கு என்ன?" என்றாள் கலக்கமாய்.
அவளது கேள்வியில் மேலும் பதட்டமடைந்த சந்தோஷ்,
"ஆர்த்தி இங்க வரலையா?" என்றான் கண்கள் ஈரமாக.
"இங்க வரலையே, என்ன பிரச்சனை?"
"அத்தை… வீட்டுக்குப் போனேன். அவளைக் காணோம். ஃபோன் பண்ணா சுவிட்ச் ஆஃப்னு வந்துச்சு. இங்க வந்திருப்பாளோனு கிளம்பி வந்தேன்…"
"இங்க வரலையே… இருங்க நான் ஃபோன் பண்றேன்" என்றவள் உடனே ஆர்த்தியின் எண்ணிற்கு அழைத்தாள். அழைப்பு உடனே எடுக்கப்பட,
"ஆர்த்தி, எங்க இருக்க நீ? ஃபோன் எடுக்காம ஏன் சுவிட்ச் ஆஃப் பண்ணி வச்சிருந்த?" என்று படபடவென வினவினாள்.
"ஏன் அம்மா இவ்வளவு டென்ஷன் ஆகறீங்க? பக்கத்துல மாவு மிஷினுக்கு கோதுமை அரைக்க போயிருந்தேன். ஃபோன் சார்ஜ் போயிடுச்சுனு வீட்ல சார்ஜ் போட்டுவிட்டு போனேன்."
"போடி இவளே…" என்ற அவளது அன்னை, "மாப்பிள்ளை அவ மாவு மிஷினுக்குத்தான் போயிருந்திருக்கா… இந்தாங்க பேசுங்க" என்று அவள் கைப்பேசியை நீட்ட, அவன் அதனை கவனிக்காமல் ஓடிச்சென்று காரில் ஏறி, வண்டியை விரட்டினான்.
அவன் விரைந்ததைப் புதிராய் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ஆர்த்தியின் அன்னை, கைப்பேசியில் ஆர்த்தியின் குரல் கேட்டதும் நினைவிற்கு வந்தாள்.
"என்னமா நடக்குது அங்க?"
"என்ன நடக்குதா! உன்னைத் தேடி மாப்பிள்ளை இங்க வந்தாங்க. உன்னைக் காணோம்னு சொன்னாங்க… அங்க என்னடி நடக்குது?"
"அதெல்லாம் ஒன்னுமில்ல மா. ஃபோன் எடுத்துக்காம போயிட்டேன்."
"ஒரு மனுஷன் இவ்வளவு டென்ஷனா வந்து நிக்கும்போதே எல்லாம் புரிஞ்சுடுச்சு. உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு கேட்கமாட்டேன். உன்னால சரி செய்ய முடியும்னா செய். உதவி வேணும்னா சொல்லு. ஆனா பிரச்சனைய வளர்க்காத."
"இல்லமா அதெல்லாம் ஒன்னுமில்ல…"
அழைப்பைத் துண்டித்தவள் சந்தோஷின் செயல் புரியாமல் குழம்பியிருந்தாள்.
அவன் வந்துவிட்ட சப்தம் கேட்டு அவள் வெளியே விரைந்து செல்ல, காரைத் தெருவில் நிறுத்திவிட்டு அவன் உள்ளே ஓடிவந்தான். வந்தவன் வாயிற் படியருகே நின்றிருந்தவளைக் கண்டதும் அங்கே வாயிற்படி படிக்கட்டில் சரிந்து அமர்ந்தான். தோள்களின் அசைவில் அவன் மூச்சிரைப்பது அவளுக்கு விளங்கியது.
“என்ன ஆச்சு?” என்றாள், நிதானமாக.
“தண்ணி…” என்றான் அவன் பெருமூச்சின் இடைவெளியில்.
உள்ளே விரைந்தவள் சொம்பு நிறைய நீர் எடுத்துக்கொண்டு வர, அவன் வரவேற்பறை சோபாவில் பின்புறம் தலைசாய்த்து கண்கள் மூடியபடி அமர்ந்திருந்தான்.
“இந்தாங்க…”
அவளது குரல் கேட்டு கண் திறந்து பார்த்தவன், தண்ணீரை வாங்கிப் பருகினான்.
“எதுக்கு அம்மா வீட்டுக்குப் போனீங்க?”
“என்னை விட்டுட்டு போயிட்டியோனு நினைச்சேன்…”
“என்ன??”
அவள் முகம் பார்த்தவன்,
“நீ வேற ஆம்பல் வேற பொண்ணா இருந்திருந்தா என்ன நடந்திருக்கும்னு எனக்குத் தெரியல ஆர்த்தி. It didn’t happen that way because it wasn’t meant to happen. விதிக்கப்படாத விஷயத்துக்கு என்கிட்ட விடை இல்லை. ஆனா, ஒன்னு மட்டும் நிச்சயம். எனக்கு ஆர்த்தியைப் பிடிச்சிருந்ததால தான் என் ஆம்பல தேடி அன்னைக்கு வந்தேன். எனக்கு ஆர்த்தியைப் பிடிக்கலேனா நான் ஆம்பல மறக்க முயற்சி செய்திருப்பேன்… என்னை மன்னிச்சு ஒரேயொரு சான்ஸ் கொடு ப்ளீஸ்… என் மனச புரிஞ்சுக்க முயற்சி பண்ணு… என்னை விட்டுப் போக நினைக்காத...”
அதன் பிறகு அவ்விடத்தில் சூழ்ந்திருந்த பலத்த மௌனத்தின் இடையே எழுந்து சென்றவன், மறுநாள் காலை வரை அறையை விட்டு வெளியே வரவில்லை.
காலை, அலுவலகத்திற்கு தயாராகி அறையை விட்டு வெளியே வந்தான். அடுக்களையில் அவள் வேலை செய்யும் சப்தம் கேட்டு, அடுக்களை கதவின் அருகே சென்று நின்றவன், குனிந்த தலை நிமிராமல்,
“ஆர்த்தி, நேத்து சாயங்காலம் ஏதேதோ பேசிட்டேன். உன் மேல உள்ள நேசத்துல அப்படி பேசிட்டேன். ராத்திரி முழுக்க யோசிச்சுப் பார்த்ததுல நான் திரும்பவும் இன்னொரு தப்பு பண்ணியிருக்கேன்னு புரிஞ்சுது. நமக்கு கல்யாணம் முடிஞ்ச ராத்திரி ‘உங்களுக்கு புடிச்ச மாதிரி நான் நடந்துக்கறேன்’னு சொல்ல வந்த. ஆனா, அப்போ நான் உனக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கல. இப்போ எனக்கு ஒரு சான்ஸ் வேணும்னு நான் கேட்கறது நியாயமில்லை. ஒருதடவை கூட உன் மனசுல உள்ள வேதனையை நான் புரிஞ்சுக்க முயற்சி பண்ணல. ஆனா என்னோட மனச புரிஞ்சுக்கோனு சொல்றது மிகப் பெரிய தவறா படுது. அன்னைக்கு ‘விட்டுட்டு போ’னு சொன்னேன். இப்போ போகாதனு சொல்றேன். உனக்கு இங்க இருக்க விருப்பமா இல்லையானு ஒருமுறை கூட நான் கேட்கல. நீ சொன்ன மாதிரி உன்னை மனுஷியாவே நான் நினைக்கலையோன்னு ரொம்ப குற்ற உணர்வா இருக்கு. எப்பவுமே என் முடிவை உன் மேல திணிக்கறேனோனு தோணுது. ஒருவேளை நீயும் ஆம்பலும் வேற பொண்ணா இருந்திருந்தா, நிச்சயம் நான் உன்னை விட்டு விலகியிருப்பேன். உன் நல்ல மனசுக்கு உனக்கு கண்டிப்பா சந்தோஷமான வாழ்க்கை அமைஞ்சிருக்கும். நான்… பெத்த அப்பாகிட்ட பேச துப்பில்லாதவன். ஒரு பொண்ணப் பார்த்து பேசி கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சு… அதெல்லாம் நடக்க வாய்ப்பில்லை… நாதியத்து நின்னிருப்பேன். நீயும் ஆம்பலும் ஒன்னு’ங்கறது எனக்கு அதிர்ஷ்டம். ஆனா, உனக்கு துரதிர்ஷ்டம். நான் நெருங்க நெருங்க நீ விலகிப் போற. இப்படியே எத்தனை நாளைக்கு உன்னை நான் இம்சை பண்றது. எனக்கே என்னை நினைச்சு ஆறுவறுப்பா இருக்கு. நீ என்ன முடிவெடுக்கறியோ அதுக்கு நான் உடன்படறேன். நேத்து காலைல சொன்ன மாதிரி, தயவு செஞ்சு கொஞ்சம் சுயநலமாவே முடிவெடு. அப்போதான் நீ சந்தோஷமா இருப்ப!!”
ஒரே மூச்சில் பேசி முடித்தவன், அவள் முகத்தைக் காண முடியாமல் குறுகுறுப்பில் அவ்விடம் விட்டுச் சென்றான்.
அவனைப் பின் தொடர்ந்தவள்,
“ஒரு நிமிஷம் இருங்க, டிஃபன் சாப்டுட்டு போங்க…” என்றாள்.
“வேண்டாம்…”
“பால்கோவா மட்டுமாவது சாப்டுட்டு போங்க…”
விறுவிறுவென வாயில் வரை வந்தவன், அவள் கூறியதைக் கேட்டு மெல்ல திரும்பினான்.
“ஒரு நிமிஷம் இருங்க பால்கோவா எடுத்துட்டு வரேன்” என்றவள் அடுக்களைக்குள் செல்ல, அடுத்த நொடி, அவன் அவள் எதிரில்.
"ஆர்த்தி…" என்று வாயடைத்துப்போனவன் அவளை மேலும் கீழும் பார்த்திருந்தான்.
அவனுள் அழுதுகொண்டிருந்த காதல் மன்னன், குதூகலம் ஆனான்.
"செல்லம் இந்தப் புடவை .."
"சும்மா இன்னைக்கு முகூர்த்த நாள்னு புதுப்புடவை கட்டினேன்…"
"என்ன முகூர்த்தம்? சாந்தி முகூர்த்தமா?"
சற்றுமுன் வரை அழாத குறையாக பக்கம் பக்கமாய் வசனம் பேசியவன் தற்பொழுது மீண்டும் தனது சேட்டைகளை அவிழ்த்து விட்டதைக் கண்டு சிரித்துக்கொண்டாள்.
"பேபி நியாயமா நீ இப்போ முறைக்கற சீன். ஆனா…" என்றவன், நெற்றி சுருங்க அவளது கன்னங்களைக் கண்டான்.
"இது என்னது உன் கன்னத்துல சிகப்பா? ஓ! இதுதான் வெட்கமா?!!"
"ப்ச்... நான் டிஃபன் எடுத்து வைக்கறேன். நீங்க சாப்பிட்டு ஆஃபிசுக்கு கிளம்புங்க."
வெடுக்கென தனது ஐடி கார்டை கழட்டியவன்,
"நான் இன்னைக்கு ஆஃபிஸ் போகல பேபி. சிக் லீவ்" என்றான், சிரித்துக்கொண்டே.
அவள் யோசனையாய் அவனைக் காண,
"என்னன்னு பார்க்கறியா?" என்றவன், தனது நெஞ்சின் மீது கை வைத்து, "இங்க தான் பேபி… லவ் சிக்" என்றான்.
அவள் முகத்தைக் கவிழ்த்துக்கொள்ள,
"நீ முறைச்சாலும் அழகா இருக்க, சிரிச்சாலும் அழகா இருக்க, வெட்கப்பட்டாலும் அழகா இருக்க, கோபப்பட்டாலும் அழகா இருக்க… எப்படி செல்லம் இப்படியெல்லாம் உன்னால என்மேல தாக்குதல் நடத்த முடியுது?" என்றான் குழைந்தபடி.
அவள் அமைதி காக்க,
"எதாவது பேசு பேபி" என்றான் கெஞ்சலாக.
"உனக்கு என் மேல கோவம் போயிடுச்சா?"
அவன் குரல் தாழ்த்தி வினவ,
“ம்ம்… முக்கால்வாசி கோவம் போயிடுச்சு…” என்றாள்.
“இது என்ன கணக்கு?”
“நீங்க முக்கால்வாசி ஆம்பல்’அ மறந்துட்டீங்க…”
“ஆர்த்தி…”
“நடக்காத ஒரு விஷயம் நடந்திருந்தா என்ன ஆகியிருக்கும்னு நினைச்சு, அதையே யோசிச்சு, குழப்பி, கவலைப்பட்டு அடுத்தவங்களை வருத்தப்பட வைக்கறது ஒருவித பைத்தியக்காரத்தனம் தான். ஓவர் திங்கிங் - இதால இருக்கற பிரச்சனை ரொம்பப் பெருசா ஆகிடுது. நேத்து நீங்க சொன்னதும் நான் உணர்ந்த விஷயம்…”
“இல்லை ஆர்த்தி… உன்னோட உணர்வுகள் அது. ஓவர் திங்கிங் இல்லை. இவ்வளவு நாள் எனக்கு எதுவும் புரியல. ஏன்னா நான் நானா இருந்து யோசிச்சேன். நேத்து ராத்திரி நான் உன் இடத்துல இருந்து யோசிச்ச போது தான் உன் வலி எனக்குப் புரிஞ்சுது. அதான், கொஞ்ச நேரம் முன்னாடி உன்னை உன் இஷ்டப்படி முடிவெடுக்கச் சொன்னேன்.”
அவள் இன்பமும் அல்லாது துன்பமும் அல்லாது ஒருவித கலக்கத்தோடு சிரித்தாள்.
“நான் தைரியம் வரவழைச்சு சொல்லிட்டேன். இருந்தாலும் மனசுக்குள்ள நீ போகக்கூடாதுனு தான் எண்ணம். எங்க நீ என்னை விட்டுட்டு போய்டுவியோ, விவாகரத்து கொடுத்துடுவியோன்னு இவ்வளவு நேரமா என் மனசுக்குள்ள ஒரு உதறல்.”
“நான் விவாகரத்து பண்றதுக்காக உங்கள கல்யாணம் பண்ணல.”
அவளை மலரென மாரோடு சேர்த்துக்கொண்டான்.
பிறகு யோசனை வந்தவனாய், அவளது முகத்தினை கையிலேந்தி,
“முக்கால்வாசி கோவம் குறைஞ்சுடுச்சுனு சொன்னியே… மீதிக் கோவமும் மறைய நான் என்ன செய்யணும்?” என்றான்.
“நீங்க ஆம்பல்’அ முக்கால்வாசி மறந்துட்டீங்க.”
“புரியல…”
“நான் திரும்பி வந்த போது, கட்டிலெல்லாம் என் புடவை கிடந்தது. அதைப் போர்த்திக்கிட்டு தூங்கினதா சொன்னீங்க. கதை எழுத ஆரம்பிச்ச பொழுது ஒன்னு ரெண்டு எபிசோட் மட்டும் தான் வாசிச்சீங்க. அப்புறம் உங்களுக்கு அந்த நினைப்பே இல்லை. ஆம்பல் பத்தி ஒரு வார்த்தை கூட தப்பா பேசாத நீங்க, அன்னைக்கு என்னை, அதாவது நீங்க காதலிச்ச ஆம்பல்’அ ரொம்ப கேலி பேசுனீங்க. கல்யாணம் ஆன புதுசுல ஆம்பலுக்கு பிடிக்கும்னு மஞ்சள் நிறத்துல புடவை வாங்கிக்கொடுத்த நீங்க, இப்போ எனக்குப் பிடிக்கும்னு இதோ நான் கட்டியிருக்கற இந்தப் பச்சை நிறப் புடவையை வாங்கிக் கொடுத்திருக்கீங்க. எல்லாத்துக்கும் மேல, நீங்க ஒருமுறை கூட என்னை ‘ஆம்பல்’னு கூப்பிடவே இல்லை.”
அவள் கூறியதைக் கேட்டு அதிசயித்து நின்றான்.
“ஆர்த்தி… என்ன சொல்றதுன்னு தெரியல… உன்னால எப்படி இதெல்லாம் யோசிக்க முடிஞ்சுது?”
“கணவன் மனைவி உறவு ரொம்பவே சிக்கலானது. தாலி ஏறினதும் காதலும், நம்பிக்கையும் வந்துடாது. அதுக்கு உழைக்கணும். இந்த உறவை தக்க வச்சிக்கணும்னு நினைக்கணும். வெட்டி விடறதும், பிரிஞ்சு போறதும் ரொம்ப சுலபம். தப்பு பண்ணாலும் துணை இருந்து தப்ப திருத்திக்க சப்போர்ட் பண்ணனும். இதுதான் என்னோட பிலாசபி. ஆனா, இதுல யாருடைய தன்மானமும், சுய கவுரவமும் பாதிக்கப் படக்கூடாது, அவங்க எதிரியாவே இருந்தாலும்.”
“ம்ம்… நான் பண்ண தப்பு அதுதான்.”
“முதல் தப்பு. ஒரே தப்பு…”
“??”
“நீங்க ஒரு பொண்ண காதலிச்சது தப்பு இல்லை. வேற வழியில்லாம கட்டாயப்படுத்தி கல்யாணம் நடந்ததும் தப்பில்லை. ஆனா, கல்யாணத்துக்குப் பிறகு நீங்க என்னை ஒரு நல்ல தோழியா நினைச்சு எனக்கான மரியாதையை கொடுத்திருந்தா நாம ரெண்டு பேரும் பேசி இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கண்டிருக்கலாம். ஒருவேளை நான் கற்பனை செய்தது போல ஆம்பல் வேறு ஒரு பொண்ணா இருந்திருந்தா, நான் நிச்சயம் உங்களை விட்டு விலகிப் போகத் தயங்கியிருக்க மாட்டேன். தாலி கட்டிட்டா நீங்க என்கூடத்தான் வாழ்ந்தாகணும்னு சொல்ற பொண்ணு நான் இல்லை. என்னால வேற ஒரு வாழ்க்கையை அமைச்சுக்க முடியும். அதே நேரத்துல நாம நல்ல நண்பர்களா இருந்திருக்க முடியும்.”
“நீ சொல்றது நூத்துக்கு நூறு கரெக்ட். ஆனா, இதெல்லாம் யோசிக்கற அளவுக்கு எனக்கு மெச்சூரிட்டி இல்லை.”
“தெரியும். மெச்சூரிட்டி இருந்திருந்தா இன்டர்நெட்ல முன்னபின்ன தெரியாத பொண்ண காதலிச்சிருப்பீங்களா? எவ்வளவோ தவறுகள் தினமும் நடக்குது. உங்களுக்குத் தெரியாதா?”
“நீ பேசுனதுல மயங்கிட்டேன்…”
“யாரு இப்படி பேசியிருந்தாலும் மயங்கி இருப்பீங்க. தெரியாமத்தான் கேட்கறேன், சோஷியல் மீடியாவால பெண்கள் மட்டும் தான் பாதிக்கப்படறதா நினைக்கறீங்களா? ஆண்கள் பாதிக்கப்படறது இல்லையா? பொண்ணுங்க பேர்ல எத்தனையோ பேர் ஏமாத்தி பணம் பறிக்கறாங்க. அப்படி ஒரு சம்பவம் நடந்தா உங்களால உங்க குடும்பத்துல உள்ளவங்ககிட்ட இதைச் சொல்ல முடியுமா? வேற ஏதாவது சிக்கல்ல மாட்டினா உங்களால உங்க குடும்பமும் பாதிக்கப்படும் இல்லையா? ரெண்டு தலைமுறையா உங்க பாட்டியும், அப்பாவும் சேர்த்து வச்ச பேரும், மரியாதையும் நிமிஷத்துல காத்துல பறந்துடாதா?”
“நீ சொல்றதெல்லாம் சரிதான் ஆர்த்தி. என் பிரெண்டு கூட ரொம்ப திட்டினான். நான் தான் ரொம்ப எமோஷனலா அட்டாச் ஆயிட்டேன்.”
“இது தப்பு இல்லையா?”
“நூறு சதவிகிதம் தப்பு.”
“இனியாவது கவனமா இருங்க ப்ளீஸ்…”
“ம்ம்…”
“என்னாச்சு? ஏன் முகம் தொங்கிப்போச்சு? நான் எதுவும் காயப்படுத்திட்டேனா?”
“ச்சச்ச… அதெல்லாம் ஒண்ணுமில்ல. நான் வேற சிக் லீவ் போட்டிருக்கேன். இன்னைக்கு வேற முகூர்த்த நாள். பரீட்சை வந்ததும் ஒரே நாள்ல மொத்த சிலபஸையும் நடத்துற வாத்தியார் மாதிரி லெக்ச்சர் கொடுக்கற. அதான்…”
“உங்க நல்லதுக்குத்தான் சொல்றேன்…”
“அது புரியுது. இப்படி எட்டி நின்னு சொல்றதுக்கு பதிலா என் மேல சாஞ்சுக்கிட்டே சொல்லலாம்ல?!!” என்றவன் அவளை மீண்டும் நெஞ்சோடு சேர்த்துக்கொண்டான்.
மௌனமாய் சில நிமிடங்கள் கடந்து செல்ல,
“உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்” என்றாள் அவள், அவனது தோளில் சாய்ந்தபடி.
“என்ன?”
“உங்களுக்கு ஆர்த்திய பிடிக்குமா இல்ல ஆம்பல்’அ பிடிக்குமா?”
“இப்போ இந்த நிமிஷம் என் மேல சாய்ஞ்சு, உலகத்துல உள்ள மொத்த சந்தோஷத்தையும் ‘இந்தா வச்சுக்கோ’னு எனக்கே எனக்கு அள்ளிக்கொடுக்கற இந்தப் பேரழகியைத்தான் பிடிக்கும்!”
அவள் அவன் மீது கண்மூடி சாய்ந்துகொள்ள, அவனும் அரணென அவளைத் தழுவிக்கொண்டான்.
************************************
எங்கள் இருவரது பொருத்தமானது
ஜாதகக் கட்டங்களுக்குள் அடங்காதது…
அவளுக்கு கடல் அலை பிடிக்கும்
எனக்கு அலையின் நுரை பிடிக்கும்
ஆகையால் கைக்கோர்த்து கடற்கரையில் நடப்போம்!!
அவளுக்கு மலரின் வாசம் பிடிக்கும்
எனக்கு வண்டின் பாஷை பிடிக்கும்
ஆகையால் காலம் மறந்து தோட்டத்தில் கிடப்போம்!!
அவளுக்குப் புடவைகள் வாங்கிடப் பிடிக்கும்
எனக்குப் பைகளைச் சுமந்திடப் பிடிக்கும்
ஆகையால் கடைகள் பலவற்றை விஜயம் செய்வோம்!!
அவளுக்கு எனக்காக வேண்டிடப் பிடிக்கும்
எனக்கு அவளுக்காக வேண்டிடப் பிடிக்கும்
ஆகையால் நெஞ்சில் நேசத்தோடு ஆலயம் செல்வோம்!!
எங்கள் இருவரின் பொருத்தமானது…!!
************************************
வாழ்க வளமுடன்!!
**முற்றும்**
No comments:
Post a Comment