Saturday, 17 October 2020

மனைவி அமைவதெல்லாம்...

 "என்னங்க ஒரு முக்கியமான விஷயம்…"

காலையுணவு உண்டு முடித்து, தனது அறையில் மடிக்கணினி பையைச் சரிபார்த்தபடி அலுவலகத்திற்குத் தயாராகிக் கொண்டிருந்த கணவனிடம் வந்து நின்றாள், மனைவி. அவளது முகத்தினை நோக்கினான். என்றுமில்லா பொலிவுடன், புன்னகை ஏந்தி நின்றாள்.

"என்ன செல்லம் சொல்லு…"

குழைந்தான், அவன்.

"அது வந்து… எனக்கு ஒன்னு வேணும்..."

"ஒன்னென்ன, ஒரு டஜன் தரேன்!!"

அவன் நெருங்கி நின்றான்.

"அதில்லை… எனக்கு ஒரு பேபி வேணும்…"

புடவைத் தலப்பை விரல்களில் சுற்றி அவிழ்த்தபடி, தலைக் கவிழ்ந்து நின்றவளைக் கண்டு அவன் மன்மதனானான்.

"நீயா செல்லம் கேட்கற? ‘நம்ம குழந்தைக்கு ஒரு வயசு தான் ஆகுது, அடுத்தக் குழந்தையைப் பத்தி இன்னும் ரெண்டு மூணு வருஷம் கழிச்சு யோசிச்சுக்கலாம்’னு சொன்ன?"

"அது…"

"சரி, ஊட்டிக்கு டிக்கெட் போடட்டா?"

சிந்தனையாய் அவனைப் பார்த்திருந்தாள்.

"என்ன யோசனை செல்லம்? ஊட்டி நமக்கு ராசியான இடமாச்சே?"

சிரித்துக்கொண்டவள், "இதுக்கு எதுக்குங்க அவ்வளவு தூரம் போகணும்?" என்றாள்.

"பின்ன வீட்லையேவா? நாலு நாள் லீவு போடறதுன்னு முடிவு பண்ணிட்டேன். 'அத்தை மாமா இருக்காங்க'ன்னு சொல்லி பகல்ல என்கிட்ட வந்து உட்கார கூட மாட்ட. லீவு வீணாகிடுமேன்னு தான் ஊட்டி போகலாம்னு சொல்றேன்."

விழுந்து விழுந்து சிரித்தவள், "இருந்தாலும் உங்களுக்கு ரொம்பத்தான் ஆசை. இப்படி அசடு வழியறீங்க! நான் குழந்தை பொம்மை வேணும்னு சொன்னேன். குழந்தை வேணும்னு சொல்லல" என்றுவிட்டு தொடர்ந்து சிரித்தாள்.

சற்றே அதிர்ந்து விலகி நின்றவன், அவளைப் புரியாமல் பார்த்திருந்தான். 

"நம்ம பக்கத்து வீட்டு மாமி கொலு வைக்கப்போறாங்கல்ல, அதுல வைக்க நான் ஒரு கிராப்ட் வொர்க் பண்ணிட்டு இருக்கேன். குழந்தை கிருஷ்ணன் பிறந்ததும் கோகுலம் முழுக்கக் கொண்டாட்டமா இருக்கறத செஞ்சிருக்கேன். வீடு, மாளிகை, அது, இதுனு நிறைய செஞ்சு வச்சிருக்கேன்... குழந்தை கிருஷ்ணர் மற்றும் கொஞ்சம் தத்ரூபமா வேணும். எனக்குக் கிளே’ல பண்ண வரல. அதான் உங்கள ஒரு குழந்தை பொம்மை வாங்கிட்டு வரச் சொன்னேன்."

பெருமூச்செடுத்து ஏமாற்றத்தைத் தாங்கிக் கொண்டவன், 

"அப்புறம் எதுக்கு மா ஒரு மார்கமா என்கிட்ட வந்து பேசின?" என்றான், பரிதாபமாய்.

"நான் சாதாரணமாத்தான் பேச வந்தேன். நீங்களே தப்பா புரிஞ்சுக்கிட்டு அசடு வழிஞ்சீங்க. காமெடியா இருந்தது. அதான் பேசவிட்டு வேடிக்கை பார்த்தேன்..."

"பேசவிட்டு வேடிக்கை பார்க்கறதுக்கு நான் என்ன பட்டிமன்றத்துலயா பேசிக்கிட்டு இருக்கேன்? ரைட்டு…" என்று வாடிய முகத்தோடு பையை எடுத்துக்கொண்டு அவன் கிளம்ப,

"பேபிய மறந்துடாதீங்க" என்றாள் அவனைத் தொடர்ந்தபடி.

எதோ நினைவிற்கு வந்தவனாய் நடையை நிறுத்தியவன்,

"நம்ம பிள்ளையார் கோவில் வாசல்ல கொலு பொம்மை கடை பார்த்தேனே. அங்க இருக்குமே?" என்றான் தனது துக்கத்தை மறைத்துக்கொண்டு. 

"அது எனக்குத் தெரியாதா? எத்தனை யூடியூப் வீடியோஸ் பார்த்து இதை செஞ்சிருக்கேன் தெரியுமா? கிருஷ்ணனுக்குத் தலைப்பாகை, டிரஸ், புல்லாங்குழல் கூட செஞ்சுட்டேன். நம்ம ஏரியா ஃபேன்ஸி கடைல எனக்கு பொம்மை கிடைக்கல. ஒரே ஒரு பொம்மை நீங்க வாங்கிட்டு வந்தா போதும், நான் அதுக்குக் கிருஷ்ண அலங்காரம் பண்ணிடுவேன்."

"ஓ!… ஆமா, இந்த யூடியூப்ல ‘புருஷன் மனசை புரிஞ்சு நடந்துக்கணும்’னு அட்வைஸ் பண்ற மாதிரி வீடியோலாம் பார்க்கமாட்டியா?"

அவனைக் கண்டு முறைத்தவள்,

"நான் பயனுள்ள வீடியோஸ் மட்டும் தான் பார்ப்பேன்…" என்றாள்.

"புரிஞ்சிடுச்சு மா!!" என்றவன், ‘குறையொன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா…' என்று முணுமுணுத்துக் கொண்டே வாகனம் நோக்கிச் செல்ல,

"என்னங்க பாட்டெல்லாம் பாடறீங்க?" என்றாள், மீண்டும் முகம் மலர்ந்தபடி.

"கொலுவுல பாட்டு பாடினா மாமி சுண்டல் தருவாங்கல்ல, அதான் ரிகர்சல் பார்க்கறேன்.." 

"ச்ச என்னங்க நீங்க? உங்களுக்கு வேணுங்கறத செய்யத்தான் நான் இருக்கேன். உங்களுக்காக எது வேணும்னாலும் செய்வேன். ஒரு கப் சுண்டல் செஞ்சுத் தர மாட்டேனா? சாயங்காலம் நீங்க ஆஃபிஸ் முடிஞ்சு வரும்போது சூடா சுண்டல் தயாரா இருக்கும். ரிகர்சல் பண்ற ஜோருல பேபிய மறந்துடாதீங்க."

"பேபி?? மறக்கமாட்டேன் மா… மறக்கவே மாட்டேன்…"

அவன் வண்டியைக் கிளப்ப, மாமி வீட்டு ரேடியோ 'மனைவி அமைவதெல்லாம்…' என்ற பாடலை உரக்கப் பாடிக்கொண்டிருந்தது. வண்டியின் இடப்பக்க கண்ணாடியை அவன் நோக்க, அதில் அவனது காதல் மனைவி பலமாய்க் கையசைத்து ‘டாட்டா’ காட்டிக் கொண்டிருந்தாள்.




அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்!!


No comments:

Post a Comment