Sunday 18 October 2020

கா… கா… கா…

'எங்க இவள இன்னும் காணோம்? வீட்டைப் பூட்டிட்டு எங்க போனாளோ?!' என்று சலித்துக்கொண்டு பூட்டப்பட்ட வீட்டு வாயிலின் முன் நின்றிருந்தவன், அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டியின் கண்ணாடியில் தனது முகத்தினைப் பார்த்தபடி, விரல்களால் கேசத்தை சீராய்க் கோதியவன், முழுக்கை சட்டையை முக்கால் நீளத்திற்கு மடித்துவிட்டு, இரு தோள்களையும் விறைப்பாக்கி, நெஞ்சை நிமிர்த்தித் தன்னைத்தானே ரசித்துக்கொண்டு, தனக்குள்ளே சிரித்துக்கொண்டான்.

'வயசானாலும் உன் ஸ்டைலும், அழகும் இன்னும் உன்னைவிட்டு போகல. அதான் பொண்ணுங்க இன்னமும் உன்னையே சுத்தி சுத்தி வராங்க. அழகன் டா நீ!' என்று அவன் தனக்குள்ளே முணுமுணுத்துக்கொள்ள, வீட்டிற்கு வந்து சேர்ந்தாள், மனைவி.
"வீட்டைப் பூட்டிட்டு எங்க போயிட்ட?"
என்றான் அவளைக் கண்டதும்.
"பஸ் ஸ்டாண்டுக்கு காய்கறி வாங்கப் போயிருந்தேன்" என்றாள் அவள், பூட்டினைத் திறந்தபடி.
"நானும் அந்த ரோட்ல தான் வந்தேன். நான் வந்து பத்து நிமிஷம் தான் இருக்கும். உன்னைப் பார்க்கவே இல்லையே?!"
"ஆனா நான் உங்களைப் பார்த்தேன். ஏதோ ஒரு பொண்ணை பஸ் ஸ்டாண்டில இறக்கிவிட்டீங்க…"
"அது…"
"உள்ள போய் பேசிக்கலாம்…"

உள்ளே சென்றதும், கையிலிருந்த பைகளை அவள் கீழே வைத்துவிட்டு நிமிர, அவன் தயங்கியபடி அவள் எதிரே நின்றிருந்தான்.
"அந்தப் பொண்ணு யாருனு எனக்குத் தெரியாது. சும்மா லிஃப்ட் கொடுத்தேன்…"
"அது இருக்கட்டும், உங்க பர்ஸ் எங்க?"
கால்சராய் பாக்கெட்டுகளைத் துழாவியவன் பர்ஸ் இல்லாமல் போக, அதிர்ச்சியானான்.
"இந்தாங்க…" என்று அவனது பர்சினை அவள் நீட்டினாள்.
அவன் வியப்பாய்ப் பார்த்திருக்க,
"லிஃப்ட் கொடுக்கறதுக்கு முன்னாடி உதவி கேட்கறவங்க யாரு எப்படின்னு முகத்தைப் பார்த்து ஓரளவு கணிக்கத் தெரியாதா? நீங்க லிஃப்ட் கொடுத்த பொண்ணு இந்தப் பர்ஸ அடிச்சுட்டு, ஆட்டோ ஸ்டாண்ட் பக்கத்து சந்து வழியா எஸ்கேப் ஆக பார்த்தா. நான் போய் மிரட்டுன மிரட்டுல கொடுத்துட்டா."
"அய்யய்யோ… அவ ரொம்ப அவசரமா போகணும்னு சொல்லி லிஃப்ட் கேட்டா. பாவமா இருந்ததுன்னு உதவி பண்ணேன். பஸ் ஸ்டான்ட் வந்ததும் தேங்க்ஸ்னு சொல்லி இறங்கிக்கிட்டா…"
"அவசரமா போறவ முகத்துல எந்தப் பதட்டமும் இல்லை. நின்னு நிதானமா உங்கக்கிட்ட பேசிட்டு போறா. அதை வச்சே உங்களுக்கு சந்தேகம் வரலையா?"
"அது…"
"இனியாவது ஜாக்கிரதையா இருங்க…"

அடுக்களைக்குள் செல்ல எத்தனித்தவளை இழுத்துக் கட்டிக்கொண்டவன்,
"பர்ஸ் கிடக்கட்டும். நீ என்னை சந்தேகப்படறியோனு ஒரு நிமிஷம் பயந்துட்டேன். உன் இடத்துல இன்னொருத்தி இருந்திருந்தா இந்நேரம் என்னை அந்தப் பொண்ணோட சேர்த்துப்பேசி, சந்தேகப்பட்டு, சண்டை போட்டிருப்பா. உனக்கு என் மேல இவ்வளவு நம்பிக்கையா?" என்றான் உளமார.
அவனைக் கண்டு சிரித்தவள், "அது அப்படி இல்லீங்க. வடையே வாலன்டியரா வந்தாக்கூட, அதைத் தூக்கற திறமை கூட இந்தக் காக்காவுக்கு இல்லைனு எனக்கு நல்லாத் தெரியும். எமோஷன் ஆகாம உட்காருங்க, காபி எடுத்துட்டு வரேன்."
உள்ளே சென்றவள் ஏதோ யோசித்தவளாய் மீண்டும் அவனிடம் வந்து, "இன்னும் எவ்வளவு நேரத்துக்கு மூச்சைப் பிடிச்சுக்கிட்டு இப்படி விறைப்பா நிக்கப்போறீங்க? அப்புறம் தோள்பட்டை வலி வந்தா நான்தான் அம்ருதாஞ்சனம் தேய்ச்சுவிடணும்" என்றுவிட்டு செல்ல, அழகன் ஆஃப் ஆகிப்போனான்.

No comments:

Post a Comment