ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இந்த வீட்டில் நான் வசிக்கிறேன். வீடு கட்டி முடித்தவுடன், புது வீட்டில் முதலில் எனக்கொரு ஆஸ்தான இடம் வழங்கிய பெருமை இவ்வீட்டுக் கிழவரின் மூத்த மகனையே சேரும்.
அதோ அந்த வராந்தாவின் மூன்று படிகட்டுகளில் இரண்டாவது படியில் அமர்ந்துகொண்டு, செய்தித்தாள் வாசிப்பார், தியாகராஜன். மனைவி கனகாம்பாள் தரும் காபியைக் குடித்து முடிக்கும் வரை தான் செய்தித்தாளின் நட்பு அவருக்குத் தேவை. கலைந்த செய்தித்தாளின் அருகே காலியான டம்பளரை வைத்துவிட்டு, தோள் துண்டினை முண்டாசாக்கி, வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, அன்றைய தோட்டப் பணிகளைத் தொடங்கிவிடுவார். பத்து ஆண்டுகளாக, அதாவது பணி ஓய்வு பெற்ற நாள் முதல், அவரது தினசரி விடியல் இப்படியாகத்தான் தொடங்குகிறது. ஒண்ணரை கிரவுண்ட் இல்லத்தில், அரை கிரவுண்ட் நிலத்தினை தோட்டத்திற்கு என்று ஒதுக்கி வைத்த பெருமை அவரையே சேரும்.
"காலைல எழுந்ததும் அந்த மரத்தையும், மட்டையையும் நோண்டலேனா பொழுதே விடியாதே…"
கனகாம்பாளின் தினப்படி சுப்ரபாதம். ஒரு நொடி, தான் செய்துகொண்டிருக்கும் காரியத்தினை நிறுத்தி, வீட்டு வாயிலைப் பார்ப்பார், தியாகராஜன். கனகாம்பாள் வீட்டினுள் இருந்து குரல் கொடுத்தால் பணி தொடரப்படும். அவள் வாசல் கதவின் அருகே வந்துவிட்டால்,
"இப்ப என்னத்த பண்ணிட்டாங்கன்னு கத்தற? சும்மா தோட்டத்தைத்தானே பெருக்குனேன்…" என்று அதட்டலாய்க் கூறிவிட்டு, அமைதியாய்ப் படியில் சென்று அமர்ந்துகொள்வார். அவள் உள்ளே சென்றதும் மீண்டும் வேலைகள் தொடரப்படும். மழை நாட்களில் கூட மப்ளரை மாட்டிக்கொண்டு தோட்டத்து சஞ்சாரம் தான் கிழவருக்கு. அடுத்த மூன்று நாட்களுக்கு மருந்து மாத்திரைகளோடு, கனகாம்பாளின் அர்ச்சனைகளையும் ஒரு மிடறு தண்ணீர் பருகி விழுங்கிவிடுவார். மூன்றாம் நாள் மாலை குரலை செருமிக்கொண்டு தோட்டத்தில் உலா போவார், பின்வரும் நாட்களுக்கான வேலைகளைக் குறித்தபடி.
“சின்னவன் தில்லியிலிருந்து ஃபோன் பண்ணான்…” என்றபடியே, மாலை நேரத்துத் தொடக்கத்தை ரசித்தபடி, மல்லிகைப் பந்தல் அருகே அமைக்கப்பட்ட சிமெண்ட் பெஞ்சின் மீது அமர்ந்திருந்த தியாகராஜனிடம் வந்து அமர்ந்தாள், கனகாம்பாள்.
ஆறடி உயரத்திற்கும் மேல் எழும்பியிருந்த பந்தலில் படர்ந்திருந்த கொடியின் சின்னஞ்சிறு இடைவெளிகளின் வழியே ஆரஞ்சு நிறம் பரப்பி, அஸ்தமிக்கத் தொடங்கிய சூரியனைக் கண்டு லயித்திருந்தவருக்கு, கனகாம்பாளின் குரல் செவி சேரவில்லை.
“உங்களைத்தான்…” என்று அவள் அவரது கையைப் பற்றி இழுக்க, அப்பொழுதே உணர்ந்தார் அவள் அருகில் அமர்ந்திருப்பதை.
“என்னா வேணும்? சிவனேனு தான உட்கார்ந்திருக்கேன்?! இதுவும் குத்தமா?”
“இப்போ யாரு இங்க குத்தம்னு சொன்னா? சின்னவன் ஃபோன் பண்ணியிருந்தான்.”
“என்னவாம் அவனுக்கு?”
“எப்படி இருக்கான்னு கேட்காம, என்னவாம்’னு கேட்கறீங்க?”
“நீ சொல்லவே வேண்டாம்” என்றவர், அண்ணாந்து வானத்தை நோக்கியபடி, அடர்த்தியாகிப்போன ஆரஞ்சு நிறத்தில் குழைந்துபோனார்.
“சின்னவன் நம்ம ரெண்டு பேரையும் கிளம்பி தில்லிக்கு வரச் சொல்றான்.”
முகத்தினைத் திருப்பி மனைவியை எரிச்சலோடு கண்டவர்,
“நீ போ… நான் எங்கயும் வரல…” என்றார்.
“அவன் ரெண்டு வருஷமா கூப்பிட்டுக்கிட்டே இருக்கான். தில்லிக்கு போய், அப்படியே காசி, ஹரித்துவார், ரிஷிகேஷ், வைஷ்ணோ தேவின்னு எல்லா இடமும் போயிட்டு வந்துடுவோம். அவன் ரெண்டு மாசத்துல பத்து நாள் லீவுல இங்க வரானாம். பேத்திக்கும் ஸ்கூல் லீவு வருதாம். அவங்களோடவே திரும்ப வந்துடுவோம். இன்னும் ஆறு மாசத்துல டிரான்ஸ்பர் வந்துடும், அதுக்குள்ள ரெண்டு பேரும் இங்க வந்து சுத்திப்பார்த்துடுங்கன்னு சொன்னான்.”
ஆர்வமாய் கனகாம்பாள் கூறிமுடிக்க,
“நான் வரல, நீ போ” என்று பாடிய துதியை மீண்டும் பாடினார், தியாகராஜன்.
“ஏன் வரல? எவ்வளவு நாளா கேட்கறேன்?”
கனகாம்பாளின் பொறுமை கையளவே.
“ரெண்டு மாசம் தோட்டத்தை விட்டுட்டு வந்தா செடியெல்லாம் என்ன ஆகறது?”
“செடி, கொடி, மரம், மட்டையைத் தவிர வேற ஒன்னும் தெரியாதா?”
“தெரியாது…”
“இந்த வயசுலயும் அப்படி என்ன விதண்டாவாதம்?”
தலையைத் திருப்பி அவர் வானத்தை நோக்க, மெலிதாய் கருமை படரத் தொடங்கியிருந்தது. கனகாம்பாள் பேசிக்கொண்டிருக்க, அவர் காதில் வாங்கியும் வாங்காமலும் மல்லிகை மொட்டுகளைக் கொய்யத் தொடங்கினார். கையளவு சேர்ந்ததும், அதைக் கனகாம்பாளின் மடியில் கொட்டிவிட்டு,
“பூவைத் தொடுத்து உன் கொண்டையில சொருகிக்க” என்றுவிட்டு, தோட்டத்தில் மாலை நேரத்து உலாவிற்குச் சென்றுவிட்டார். முணுமுணுத்தபடி, அதாவது வால்யூம் குறைவாக அவரைத் திட்டியபடி உள்ளே எழுந்து சென்றாள், கனகாம்பாள்.
*****
“என்னம்மா இவ்வளவு பைகளைத் தயார் செஞ்சு வச்சிருக்கீங்க? எப்படி சுமந்துக்கிட்டு போவீங்க?”
“நானா தில்லி வரை சுமக்கப்போறேன்? ரயில் தான சுமக்கப்போகுது…”
இரண்டு மணி நேர தூரத்தில், பக்கத்து நகரத்தில் பணிபுரிகிறான் மூத்த மகன். தில்லிக்கு வழியனுப்ப வந்துள்ள மூத்த மகனும், கனகாம்பாளும் பேசிக்கொள்வதைக் காதில் வாங்கியபடியே வீட்டினுள் நுழைந்தார், தியாகராஜன்.
“வாங்கப்பா…” என்றபடி தந்தையிடம் மூத்தவன் வந்து நிற்க,
“ஏன் இவ்வளவு நேரம்?” என்று வினவியபடியே வெளியே வந்த கனகாம்பாள் வராந்தாவில் பக்கவாட்டில் சென்று பார்க்க, அங்கே கட்டைப்பையில் நான்கைந்து செடிக் கன்றுகள் இருந்தன.
“அப்பவே நான் சொல்லல?! உன் அப்பாவை பணம் எடுத்துட்டு வர பேங்க்குக்கு அனுப்பினா, பக்கத்துல இருக்கற நர்சரில மொய் எழுதிட்டு வந்து நிக்கறாரு. எப்பவும் இதே கூத்துதான்…”
மகனிடம் குறைபட்டுக்கொண்டு வீட்டினுள் சென்றாள், கனகாம்பாள்.
“அவ கிடக்கறா… மருமக எங்க? பிள்ளைங்களை கூட்டிட்டு வந்திருக்கியா? எப்ப வந்த?”
“எல்லாருமே தான் வந்திருக்கோம். நீங்க பேங்குக்கு கிளம்பி ஒரு பத்து நிமிஷத்துல வந்திருப்போம்…”
மகனிடம் பேசியபடி உள்ளே நுழைந்தவரை, பேரப்பிள்ளைகள் “தாத்தா” என்று அழைத்துப்படி ஓடிவந்து கட்டிக்கொள்ள, இருவருக்கும் தான் வாங்கி வந்திருந்த சாக்கலேட்டுகளைக் கொடுத்தார்.
“மாமா, ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ணியிருந்தீங்கன்னா நாங்க வீட்டுக்கு வந்ததும், இவரே பேங்குக்கு போயிட்டு வந்திருப்பாரு…” என்றபடியே மருமகள் மோர்க் குவளையை நீட்ட, அதை வாங்கிப் பருகியவர்,
“இருக்கட்டும்மா, அவனுக்கு எதுக்கு சிரமம்…” என்றார், பரிவாக.
“அதெல்லாம் ஒன்னும் இல்ல… மாசம் ஒரு தடவை அந்த நர்சரிக்குப் போயிட்டு வரலேனா தூக்கம் வராது…”
இம்முறை மருமகளிடம் குறைபட்டுக்கொண்டாள், கனகாம்பாள்.
“மாமா, நீங்களும் அத்தை கூட தில்லிக்குப் போயிட்டு வரலாமே! விட்டா நாங்க ரெண்டு பேரும் கிளம்பிடுவோம். பிள்ளைங்க ஸ்கூலு, இவங்களுக்கு ஆபிஸ்ல லீவு இல்லனு ஏகப்பட்ட தலைவலி. நீங்க ஒரு தடவை போயிட்டு வாங்களேன்.”
“இல்லமா, செடியெல்லாம் வாடிடும்…”
“அடுத்தத் தெருவுல இருக்கற மாமாகிட்ட சொன்னா, வாரம் ஒரு முறை தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சப்போறாங்க. நீங்க ஏன் கவலைப்படறீங்க?”
“இல்லமா…”
“இல்லேனா, எங்களோட வந்து ரெண்டு மாசம் இருங்களேன் மாமா…”
“இல்லையில்லை மா…”
“நீ ஏன் அவரை கெஞ்சிக்கிட்டு இருக்க? அவரு எங்கயும் வரமாட்டார். இன்னைக்கு வேற நாலு புதுவரவு வந்திருக்கு. மனுஷன் இந்த இடத்தை விட்டு நகரமாட்டார்.”
மீண்டும் கனகாம்பாள் தனது ஆதங்கத்தை மருமகளிடம் கொட்ட, அமைதியாகிப்போனாள், அவள்.
“செல்லங்களா, தோட்டத்துல விளையாடுவோம் வாங்க” என்றபடி பேரப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தியாகராஜன் தோட்டத்திற்குச் செல்ல,
“கால்ல மண்வெட்டி போட்டுக்காம பத்திரமா இருங்க…” என்று உள்ளிருந்து பேரப்பிள்ளைகளுக்கு குரல் கொடுத்தாள், கனகாம்பாள்.
“அம்மா, விடுங்கம்மா… ரிட்டையர் ஆகி அவருக்குப் பொழுது போக வேண்டாமா?”
“நான் என்ன வேணும்னேவாடா கோபப்படறேன்? உங்கப்பாவுக்கு சர்க்கரை ஏகமா இருக்கு. கைல, கால்ல அடிபட்டா சட்டுனு குணமாகாது. அப்பப்ப லோ சுகர் வந்துடுது. மருந்து மாத்திரை ஒழுங்கா சாப்பிடறது இல்லை. முக்கியமா வாக்கிங் போறதே இல்லை. கடைக்கு அனுப்பினா கூட மனுசன் நல்லபடியா வீடு வந்து சேரும்வரை பயமா இருக்கு. இதுல எப்பொழுதும் தோட்டத்திலேயே நின்னுட்டு இருந்தா உடம்பு என்ன ஆகிறது? சின்னதா கால்ல புண்ணு வந்தா கூட அது தேவையில்லாத பிரச்சனை தானே… எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் ஊருக்கு என்கூட வரமாட்டேன்னு சொல்லிட்டாரு. சரி, உன் கூடவாவது அனுப்பிவைக்கலாம்னு பார்த்தா அதுவும் முடியாதுன்னு ஒத்தக்கால்ல நிக்கறாரு. உன் தம்பி கோவிச்சுக்கிறான். அதனால நான் மட்டுமாவது போகலாம்னு கிளம்பிட்டேன். அடுத்தத் தெருவுல இருக்கற அண்ணா அடிக்கடி வந்து பார்த்துக்கறதா சொல்லியிருக்காரு. அவரை நம்பித்தான் ரெண்டு மாசம் ஊருக்குப் போறேன்.”
“நீங்க கவலைப்படாம போய்ட்டு வாங்க மா. மாமா பார்த்துப்பாங்க. நானும் அடிக்கடி வந்து பார்த்துக்கறேன். முடிஞ்சா எப்படியாவது அப்பாகிட்ட பேசி கொஞ்ச நாள் என்கூட கூட்டிட்டுப் போய் வச்சுக்கறேன். நீங்க கவலைப்படாதீங்க. இந்த வீட்டை வாடகைக்கு விட்டுட்டு என்னோட வந்துடுங்கனு நானும் சொல்றேன், அதை நீங்க ரெண்டு பேருமே கேட்கமாட்டேங்கறீங்க. இந்நேரம் அங்க இருந்திருந்தா உங்களுக்கு இந்தத் தேவையில்லாத கவலை வந்திருக்குமா?”
“என்னடா பண்ண சொல்ற? பத்து நாளைக்குக்கூட இந்த வீட்டை விட்டு நகரமாட்டேங்கறார். அவர் நிரந்தரமா அங்க வருவாரா? ரெண்டு மாசம் ஓடுற ஓட்டம் சீக்கிரம் வந்துடுவேன்…”
கனகாம்பாளின் வருத்தமும், கோபமும் நியாயமே என்பது மகனுக்கு உரைத்தது.
குடும்பம் மொத்தமும் கிளம்பி ரயில்வே நிலையத்திற்கு சென்றது. மூத்தவனின் நண்பனின் பெற்றோரும் தில்லி வரை பிரயாணம் செல்லவிருப்பதால், அம்மாவிற்குத் துணையாக அவர்கள் செல்லும் ரயிலிலேயே டிக்கெட் பதிவு செய்யப்பட்டது. கனகாம்பாள் கிளம்பும் தருவாயில் கூட தியாகராஜனுக்கு அறிவுரைகளும், கட்டளைகளும் வழங்க, ‘சரி’ என்ற தலையசைப்போடு, அமைதியாகக் கேட்டுக்கொண்டார்.
ரயில் வண்டி மெல்ல ஊர்ந்து நடைமேடையைக் கடந்ததும், இரு கைகளையும் உயர்த்தி “என் பொண்டாட்டி ஊருக்குப் போயிட்டா” என்று வாய்விட்டுச் சிரித்தவர், தனது பாக்கெட்டிலிருந்து இரு சாக்கலேட்டுகளை எடுத்து பேரப்பிள்ளைகளுக்குக் கொடுத்து, விடுதலைக் களிப்பினைக் கொண்டாடினார்.
அடுத்து வந்த நாட்களில், வீட்டு வாயிற் கதவின் இருபுறமும் புதிதாக இரண்டு பூந்தொட்டிகள் முளைத்திருந்தன. வராந்தா படிக்கட்டுகளின் கோடியில், கற்பூரவள்ளி, புதினா, கருந்துளசி செடிகள் சிறு தொட்டியில் வைக்கப்பட்டன. ‘பேப்பர் படிக்கும்போது நல்ல வாசம் வரும், உடம்புக்கு நல்லது!’ என்று பெருமிதம் கொண்டார், தியாகராஜன். வீட்டு காம்பவுண்டின் வெளியே கிடக்கும் சிறு இடத்தினைக் கூட அவர் விட்டுவைக்கவில்லை. நித்யகல்யாணிக்கு நித்தியமாய் ஓர் இடம் வழங்கினார். செடிகளின் எண்ணிக்கை ஏறிக்கொண்டே போக, அவரின் வயதில் இருவது குறைந்தது.
இரண்டு மாதங்கள் கழித்து, இளைய மகனின் குடும்பத்தினரோடு ஊர் திரும்பினாள், கனகாம்பாள். அவர்களை அழைத்துச் செல்ல ரயில் நிலையத்திற்கு மூத்தவன் வந்திருக்க,
“எப்படி இருக்க? உங்கப்பா வரலையா? ஸ்டேஷன் வரக்கூட நேரமில்லாம அப்படி அந்த பிருந்தாவன் கார்டான்ஸ்ல என்னதான் பண்றார்?” என்று கேள்விகளை அடுக்கத் தொடங்கினாள். வீட்டிற்கு செல்லும் வழி நெடுகிலும் இது தொடர்ந்தது.
வீட்டு வாயிலில் வந்திறங்கியதும், காம்பவுண்டின் உள்ளும், வெளியும் முளைத்திருந்த ஏகப்பட்ட செடிகளைக் கண்டு வாயடைத்துப்போனாள், அவள்.
“என்னடா உங்கப்பா பண்ணி வச்சிருக்காரு?” என்று மகனிடம் வினவ,
“முதல்ல உள்ள வாங்க…” என்றபடியே அவன் முன்னே செல்ல, மற்றவர் அவனைத் தொடர்ந்தனர்.
இறுதியாய் உள்ளே நுழைந்த கனகாம்பாள், தியாகராஜன் அமர்ந்திருந்த நிலையைக் கண்டு, அதிர்ச்சியில் கையிலிருந்த கைப்பையைத் தவறவிட்டாள்.
“என்னங்க என்ன ஆச்சு?” என்று அழுதபடி தியாகராஜனின் காலருகே சென்று அமர்ந்தவள், அவரது வலது காலில் சுற்றப்பட்டிருந்த கட்டினைத் தொட்டுப்பார்த்தாள்.
இரண்டு மாதங்கள் கழித்து மனைவியைக் கண்டவரின் மனம், அவளது அழுகையைக் கண்டதும் துவண்டது. கனகாம்பாளின் கோபத்தைத் தாங்கிக்கொள்பவருக்கு, அவளது சில கண்ணீர்த்துளிகளைத் தாங்கிக்கொள்ளும் திராணி என்றுமே இருந்ததில்லை.
“என்னடா இது?”
இம்முறை மூத்தவனை வினவியபடி கண்கள் கலங்கினாள், கனகாம்பாள்.
“அம்மா, பத்து நாள் முன்னாடி செடி தொட்டியை நகர்த்தி வைக்கும்போது, அது தவறி கால்ல விழுந்து அடிபட்டிருக்கு. அப்பா அதைக் கண்டுக்காம விட்டிருக்காங்க. மூணு நாள் கழிச்சு புண்ணு பெருசானதும் பயம் வந்து மாமாவைக் கூட்டிக்கிட்டு ஆஸ்பத்திரிக்குப் போய் கட்டு போட்டுட்டு வந்திருக்காங்க.”
“எத்தனை முறை ஃபோன் பண்ணேன், ஏன் என்கிட்ட சொல்லல?”
“அம்மா, எனக்கே யாரும் சொல்லல. எனக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு மாமாவை சொல்ல வேண்டாம்னு அப்பா சொல்லிட்டாங்களாம். நான் மாமாவைக் கோவிச்சுக்கிட்டேன்.”
“உங்கப்பா பண்ணதுக்கு என் அண்ணன் என்னடா பண்ணுவாரு?”
“ப்ச், ரொம்ப பயந்துட்டேன் மா. இன்னைக்கு காலைல வந்திறங்கினதும் அப்பாவை இப்படிப் பார்க்க பதறிடுச்சு…”
தியாகராஜனை நோக்கியவள்,
“இப்ப சந்தோஷமா? இதுக்குத்தான் தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன்” என்றவள் மீண்டும் அழுகையைத் தொடர,
“சின்ன காயம்தான் கனகு, ரெண்டு நாள்ல கட்டைப் பிரிச்சுடுவாங்க” என்று தியாகராஜன் சமாதானம் கூறியும், மேலும் அவருக்கு அர்ச்சனைகளே வழங்கப்பட்டன.
குழப்பத்தின் மத்தியில் ஏதோ சன்னமான குரல் கேட்டு அனைவரும் அமைதியாக, “மறந்தேபோயிட்டேன்…” என்றபடியே மூடி போட்டு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கூடையினைத் திறந்தான், இளையவன். உள்ளிருந்து மிக லாவகமாக சிறு நாய்க்குட்டி ஒன்றினைத் தூக்கி, தந்தையிடம் நீட்டினான். இமைக்க மறந்து அதை விசித்திரமாய் பார்த்திருந்தார், தியாகராஜன்.
“அப்பா, தில்லியில பக்கத்து வீட்ல ஒரு பஞ்சாபி இருக்காரு. அவர் வீட்டி போமெரேனியன் அஞ்சு நாளைக்கு முன்னாடி குட்டி போட்டுச்சு. ஒன்னு எனக்குக் கொடுத்தாரு. நான் உங்களுக்கு எடுத்துட்டு வந்தேன்.”
“ட்ரெய்ன்லயா எடுத்துட்டு வந்த?”
“ஆமா பா… இதைக் கூடைக்குள்ள வச்சு, டவல் போட்டு மறைச்சு, வேளாவேளைக்கு பால் கொடுத்து… பெரிய பாடாச்சு…”
“ஏண்டா நான் நாலு செடி வாங்கிட்டு வரச்சொன்னா, ட்ரெயின்ல எடுத்துட்டு வந்தா ஃபயின் போடுவான்னு கதை சொன்ன. அப்போ இதை மட்டும் எடுத்துட்டு வர உன்னால முடிஞ்சுதா?”
தியாகராஜனை முறைத்தபடி எழுந்து நின்ற கனகாம்பாள்,
“ஏன் அந்தக் கால்லயும் கட்டு போட்டுக்கணும்னு ஆசையா இருக்கோ? கால் குணமானதும் தினமும் ரெண்டு வேலை இந்த நாய்க்குட்டியைக் கூட்டிக்கிட்டு ஒரு மணி நேரம் வாக்கிங் போறீங்க. தோட்டத்துக்கு நான் ஆள் ஏற்பாடு பண்றேன்” என்று தடாலடியாகக் கூறிவிட்டாள்.
ஏறத்தாழ மூன்று வாரங்கள் பேரப்பிள்ளைகளோடு தியாகராஜன் நேரம் கழிக்க, தோட்டத்தினைப் பராமரிக்க கனகாம்பாள் தோட்டக்காரன் ஒருவனை ஏற்பாடு செய்ய, ஓரளவு ஓய்வில் இருந்ததால், தியாகராஜனின் காயம் மறைந்து, குணமடைந்தார்.
பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் சென்றபின் அமைதியாகிப் போன வீட்டில், சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி வரவேற்பறை சாளரத்தின் வழியே தோட்டத்தினை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவரின் கவனத்தை ஈர்த்தது, கை கால் முளைத்த வெள்ளைப் பந்து போல் நின்றிருந்த நாய்க்குட்டி.
எழுந்து, வாசல் கதவின் அருகே வந்து நின்றவர், எதையோ கண்டு தனது மழலைக் குரலால் குறைத்துக்கொண்டிருந்த அக்குட்டியைக் கண்டார். தன்னையும் அறியாமல் சிரித்துக்கொண்டார்.
“அழகா இருக்குல்ல இந்தக் குட்டி?!” என்றபடி வந்து நின்ற கனகாம்பாளிடம்,
“இதுக்கு இந்தப் பிள்ளைங்க சேர்ந்து என்னமோ பேரு வச்சாங்களே, என்னது?” என்றார்.
“ஸ்னூபி…”
“ஸ்னூபி’யா?” என்றவர், சில முறை சொல்லிப் பார்த்து, அதன் பெயரை மனதில் நிறுத்திக்கொண்டார்.
காலையில் அவர் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்க, அவரது காலின் அருகில் வந்து நின்ற ஸ்னூபி, வேகவேகமாய் தனது வாலினை ஆட்டியது. அவர் திரும்பி அதன் முகத்தைப் பார்த்ததும், அதுவும் தலை சாய்த்துப் பார்க்க, ஓர் குழந்தையைக் காணும் கனிவோடு அதனைக் கண்டார். கனகாம்பாள் கிண்ணத்தில் பால் கொடுத்ததும் விறுவிறுவென விழுங்கிய ஸ்னூபி, அதனை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த தியாகராஜனின் முன்னே வாலாட்டி நின்றிருந்தது.
“இரு வரேன்” என்றவர், எழுந்து உள்ளே சென்று சட்டையை அணிந்துகொண்டு வந்து, “வா போகலாம்…” என்று அதன் சங்கிலியைக் கழற்றி, உடன் நடைபழக அழைத்துச் சென்றார்.
அன்றிலிருந்து காலையும், மாலையும் அதனை அழைத்துக்கொண்டு அருகிலிருக்கும் பூங்காவிற்கு சென்றுவிடுவார். பூங்காவில் விளையாட வரும் குழந்தைகளோடு ஸ்னூபி விளையாட, அதனைத் தந்தையைப் போல் பார்த்துக்கொண்டு இவர் அமர்ந்திருப்பார்.
“எங்க கிளம்பிப் போயிட்டீங்க? அதுவும் ஸ்னூபிய கூட்டிட்டு போகாம?”
அன்று காலையில் எங்கோ சென்றுவிட்டு வீடு திரும்பிய கணவனை வாசலிலேயே வழிமறித்தாள், கனகாம்பாள்.
“ஸ்னூபிக்கு வாங்கி வர போயிருந்தேன்…”
“என்னது?”
அவர் கையில் இருந்து கருப்புப்பையை குழப்பமாய் நோக்கினாள், கனகாம்பாள்.
“கறி கடைல கொழுப்பு வாங்கப் போனேன்…”
“அய்யய்ய, நான் அதை சைவமா வளர்க்கறேன்…”
உடனே கனகாம்பாள் மறுக்க,
“வெறும் பால்சோறு தின்ன அது என்ன பச்சைக்குழந்தையா? நீ உள்ள போ, நான் பார்த்துக்கறேன்” என்றவர், கனகாம்பாள் உள்ளே சென்றதும், ஸ்னூபியின் தட்டினைக் கழுவி, அதில் தான் வாங்கிவந்ததை வைக்க, அது முகர்ந்துவிட்டு உண்ணத் தொடங்கியது. அன்று முதல், மழையோ வெய்யிலோ, ஸ்னூபியின் ஞாயிறு விருந்து தடைபடாது அவர் பார்த்துக்கொண்டார்.
அன்று ஏதோ ஒரு வாக்குவாதம், தியாகராஜனுக்கும், கனகாம்பாளுக்கும். விருட்டென வெளியே வந்தவர், “உன் சாப்பாடும் வேணாம், ஒன்னும் வேணாம்” என்று கத்திவிட்டு செருப்பினை மாட்டிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். அவர் சென்று ஒரு மணி நேரம் கழித்து வெளியே வந்த கனகாம்பாள், ஸ்னூபியின் தட்டில் பால்சோறு இட்டபடி, “காடு வா வாங்கற வயசுலயும் கோபத்துக்கு குறைச்சல் இல்லை” என்று முணுமுணுத்தவள், அவரை எதிர்நோக்கி, அருகே படியில் அமர்ந்துவிட்டாள். கைப்பிடி கம்பியைப் பற்றியபடி அவள் கண்ணயர, அவளது காலடியில் ஸ்னூபி முடங்கிக்கொண்டது. சிறிது நேரத்தில் கண்விழித்தவள்,
“நீ ஏன் பட்டினி கிடக்கற? சாப்பிடேன்…” என்றாள், காலடியில் கிடந்த ஸ்னூபியிடம். தலையுயர்த்தி அவளை நோக்கிய ஸ்னூபி, மீண்டும் படுத்துக்கொள்ள, உள்ளே நுழைந்தார் தியாகராஜன். பொங்கும் ஆத்திரத்தை ஒன்றிரண்டு கண்ணீர்த் துளிகளால் வெளிக்காட்டியவள்,
“நான் சாப்பிடாம இருப்பேன், பசி பொறுத்துப்பேன். இதுவும் எதுக்கு பட்டினி கிடக்கணும்?” என்றுவிட்டு அவள் உள்ளே சென்றுவிட, அப்பொழுதே அவர் சீண்டப்படாமல் கிடக்கும் ஸ்னூபியின் தட்டினைக் கண்டார். தினமும் அது உண்ணும் பொழுதுகளில் அருகில் அமர்ந்திருப்பவர், அவ்வப்போது வருடிக்கொடுப்பவர், இன்று மறந்துவிட்டு சென்றுவிட்டதால் அதுவும் உண்ணாவிரதம் பூண்டது. அவர் படிக்கட்டில் அமர்ந்ததும் அருகே வந்து குழைந்த ஸ்னூபி, தட்டினை நீட்டியும் உண்ண மறுத்தது.
“சாப்பிடு ராஜா…” என்று அவர் கூறியும், கவலைக்குரல் கொடுத்தபடி அவர் அருகேயே கிடந்தது.
“வேகாத வெய்யில்ல எங்க போனீங்க?” என்றபடி கனகாம்பாள் மோர் குவளையை நீட்ட, அதை அவர் பருகி கீழே வைத்த பின்னர், பரபரவென தனது உணவினை உண்ணத் தொடங்கியது, ஸ்னூபி.
அதன் அன்பைக் கண்டு சிலிர்த்துப்போனவர் ஈர விழிகளோடு கனகாம்பாளை நோக்க, அவளும் அவரைப் போல் சிலிர்ப்பில் உறைந்திருந்தாள்.
*****
இரண்டு வருடங்கள் கடந்திருந்த நிலையில், அடுத்த இரு தினங்களில் தியாகராஜன் எழுபதாம் வயது நிறைவு விழாவைப் பொருட்டு இரு மகன்களும், குடும்பத்தோடு வருகைத் தந்திருந்தனர்.
விழா ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க, வரவேற்பறையில் அமர்ந்து ஆலோசித்துக்கொண்டிருந்த மகன்களின் எதிரே வந்து அமர்ந்தாள், கனகாம்பாள்.
“அப்பா எங்கம்மா?”
வினவினான், மூத்தவன்.
“பேரப்பிள்ளைகளோட பார்க்குக்கு போயிருக்காங்க. நீங்க ரெண்டு பேரும் ஒண்ணா வந்திருக்கும்போது இதைப் பேசணும்னு நினைச்சேன்…”
பீடிகை போட்டாள், கனகாம்பாள்.
“என்ன விஷயம் அம்மா?”
“உங்கப்பாவுக்கு ரொம்ப வயசாயிடுச்சு. முந்தியிருந்த சுறுசுறுப்பு இப்ப இல்லை. சோர்ந்து உட்கார்ந்துடறாங்க. அந்த ஸ்னூபிக்காக கொஞ்ச தூரம் நடைபழகறாங்க. மத்தபடி ஈஸி சேர் தான் கதியா இருக்காங்க…”
“ஆமாமா, ரெண்டு வருஷம் முன்னாடி இருந்த அப்பா இப்ப இல்லை. ரொம்ப இளைச்சுப் போயிட்டாங்க.”
இளையவனும் வருந்தினான்.
“அம்மா, அப்பாவுக்கு வயசாகுது. இதெல்லாம் சகஜம் தான… வருத்தப்படாதீங்க...”
மூத்தவன் ஆறுதல் கூறினான்.
“அதுக்கில்லபா, அவர் நல்ல உடல் நிலையில இருக்கும்போதே உயில் எழுத சொல்லலாம்னு நினைக்கறேன்.”
“என்னம்மா நீங்க, வீட்ல நல்ல காரியம் நடக்கப்போற நேரத்துல இப்படி பேசறீங்க. இப்போ இது ரொம்ப முக்கியமா?”
“கோபப்படாம கேளுங்கப்பா. அவர் திடகாத்திரமா இருக்கும்போதே சொத்து, நகை, டெபாசிட் அப்புறம் எல்.ஐ.சி. இதெல்லாம் விவரத்தைக் கேட்டுக்கிட்டு கையோட ரெண்டா பிரிச்சு எழுதிடலாம்.”
“ரெண்டு இல்லை, மூணு பாகம்…”
மகன்கள் பதில் கூறும் முன், தியாகராஜன் பதில் கூறிக்கொண்டே வீட்டினுள் நுழைந்தார்.
“எதுக்கு நமக்கு ஒரு பாகம்? என் பிள்ளைங்க இருக்காங்க செய்ய…”
கனகாம்பாள் மறுதலித்தாள்.
“நமக்குனு யார் சொன்னா?”
“பின்ன?”
“ஸ்னூபிக்கு!”
அவர் கூறியதைக் கேட்டு மொத்த குடும்பமும் சிரித்து ஓய்ந்தது.
“வராந்தாவுல ஸ்னூபிக்கு கட்டி வச்சிருக்கற டென்ட்டு, நைட்டு தூங்க ஏ.சி. ரூம்ல போட்டு வச்சிருக்கற பெட்டைப் (Bed) பார்த்தே புரிஞ்சுடுச்சு அதுக்கு ராஜ வாழ்க்கை தான்னு. இதுல சொத்து வேறயா… தூள்!!” - இளையவன் சிரித்தான்.
இவர்கள் பேசிக்கொண்டு சிரிப்பது எதுவும் புரியாமல், தியாகராஜனின் காலடியில் அமர்ந்திருந்தது நன்கு வளர்ந்து கொழுகொழுவென்று அழகாய் இருந்த, ஸ்னூபி.
இல்லத்திலேயே விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்க, விழாவன்று அறிந்தோர், தெரிந்தோர், உறவுகள் என பலரும் வருகைத்தந்தனர். பல புதுமுகங்கள் வருகைத் தந்ததால், விடாமல் குறைத்துக்கொண்டிருந்தது, ஸ்னூபி.
“பிள்ளைங்களா, ஸ்னூபிய கொஞ்சம் மாடில விட்டுட்டு, மாடி கேட்டை தாழ்போட்டுட்டு வாங்க” என்று பேரப்பிள்ளைகளிடம் கனகாம்பாள் கூற,
“அடிக்கற வெயிலுக்கு எதுக்கு இப்ப மாடியில விடச்சொல்ற?” என்று வினவியபடி வந்து நின்றார், தியாகராஜன்.
“கொஞ்ச நேரம் அது மேல இருக்கட்டும். அப்புறம் கூட்டிட்டு வரச்சொல்றேன்” என்று அவரைக் கனகாம்பாள் சமாளிக்க, வேறுவழியின்றி அமைதியாகிப்போனார்.
ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜைகள் முடிந்து, தியாகராஜன்-கனகாம்பாளிடம் ஆசி பெற்று, மதிய விருந்து முடிந்து ஒவ்வொருவராகக் கலைந்து செல்லத் தொடங்கினர். வந்திருந்தோரை கவனித்து, அவர்களுடன் உரையாடி, ஆசி வழங்கி, நிழற்படம் எடுத்துக்கொள்வதில் தியாகராஜன் பரபரப்பாய் இருந்தாலும், ஸ்னூபி அவரது எண்ணத்திலிருந்து நீங்கவில்லை. அன்றைய விழாவின் பரபரப்பால் சோர்ந்து அமர்ந்துகொண்டவர், தனது இளைய மகனை அழைத்து, ஸ்னூபிக்கு உணவும், நீரும் கொடுத்து, தோட்டத்தில் மர நிழலில் கட்டிப்போடும்படி கூறினார்.
மாடிக்குச் சென்றவன், தடதடவென கீழே ஓடிவரும் சத்தம் கேட்டு அவர் வராந்தாவிற்கு வர, ஸ்னூபி விறைத்துப்போய் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
“என்னடா ஆச்சு ஸ்னூபிக்கு?” என்று பதறியவர், “ஸ்னூபி... ஸ்னூபி…” என்று அழைக்க, ஒருவர் தண்ணீர் தெளிக்க, அதன் கழுத்தில் சுற்றப்பட்டிருந்த சங்கிலியை இருவர் கழற்ற முயல, ஸ்னூபியிடம் எவ்வித அசைவும் இல்லை.
“அண்ணே, வெட்னரி டாக்டர் கிட்ட போவோம்” என்று இளையவன் கூற, அண்ணன் - தம்பி இருவரும் உடனே ஸ்னூபியைத் தூக்கிக்கொண்டு நொடி தாமதிக்காது விரைந்தனர்.
கைகள் மெலிதாய் நடுங்க, நெஞ்சு பதைபதைக்க, முகமெங்கும் கவலை ரேகைகள் ஓட, ஈரமான கண்களோடு வாயிலின் இரும்புக்கதவின் அருகே தளர்ந்து நின்றபடி, மகன்கள் சென்ற திசையையே வெறித்துக்கொண்டிருந்தார், தியாகராஜன். பட்டு வேஷ்டி, சட்டையும், கழுத்தில் மாலையும், உச்சியில் கனன்றுகொண்டிருக்கும் சூரியனும், அனைத்திற்கும் மேலான பயமும் அவரை மேலும் சோர்வுறச் செய்ய, வாயிலில் இடப்பட்டிருந்த வண்ணக்கோலத்தின் மீதே அமர்ந்துகொண்டார்.
அவர் அருகே செல்ல கனகாம்பாள் கூட துணியவில்லை. காத்திருப்பின் முடிவில் தொங்கிய முகத்தோடு இரு மகன்களும் வந்து சேர்ந்தனர். கையில் ஸ்னூபி அதே நிலையில் இருந்தது.
“அப்பா, வெய்யில் தாங்காம சன் ஸ்ட்ரோக் வந்துடுச்சு. போதாத குறைக்கு, சங்கிலியோட குறுக்கும் நெடுக்கும் ஓடுனதுல, சங்கிலி கழுத்தைச் சுத்தி இறுக்கமாயிருக்கு. முடிஞ்சு போச்சுன்னு டாக்டர் சொல்லிட்டாரு…”
குரல் தழுதழுக்க மகன் கூறிமுடிக்க, ஸ்னூபியை மெல்ல வருடினார் அவர்.
ஆழ்ந்த மூச்செடுத்து எழுந்தவர், தனது கழுத்தில் கிடந்த மாலையைக் கழற்றி வீச, அது பறந்து சென்று மரக்கிளையில் சிக்கிக்கொண்டது. வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, ஒரு மண்வெட்டி எடுத்து, தோட்டத்தில் ஆழக் குழி தோண்டினார். உதவ மகன்கள் முன்வந்தும் பார்வையாலேயே அனைவரையும் எட்டி நிறுத்தினார். தள்ளாடிப்போன கிழவனுக்கு இத்தனை வேகமா என்று அனைவரும் அசந்துபோயினர். வெறிபிடித்தவர் போல், ஆத்திரம்கொண்டவர் போல், விரக்தியடைந்தவர் போல், அவர் தனது மொத்த வலியையும் மண்வெட்டியின் வழியே பூமிக்குக் கிடத்தினார்.
தனது புழுதி படிந்த கைகளால் ஸ்னூபியை அள்ளியவர், இறுதியாய் ஒரு முத்தமிட்டு, அக்குழிக்குள் படுக்க வைத்து, மண் வாரியிறைத்து, கண்ணீர் தெளித்து, மலர்களைத் தூவினார். வராந்தா படிக்கட்டில் வந்தமர்ந்தவர், ஜீவனற்றுப்போன அவ்விடத்தைக் கண்டார். வியர்வையைத் துடைக்கையில், நிற்காமல் பொங்கும் கண்ணீரையும் துடைத்துக்கொண்டார்.
அன்று முதல் அந்த முதிர்ந்த ஜீவனும் ஓய்ந்துபோனது. நிற்காமல் ஒளிக்கும் டி.வி. சத்தமும், இடையிடையே கேட்கும் இருமலும், செருமலும் மட்டுமே வாயிற்படியைத் தாண்டியது.
ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இந்த வீட்டில் தான் நான் வசிக்கிறேன். வீடு கட்டி முடித்தவுடன் புது வீட்டில் முதலில் வாயிலின் அருகே எனக்கொரு ஆஸ்தான இடம் வழகிய பெருமை இவ்வீட்டுக் கிழவரின் மூத்த மகனையே சேரும். வாயிலின் இரும்புக் கதவுகள் என்னை உரசிக்கொண்டு திறந்து நிற்கும். எனது கிளையில் சிக்குண்டிருந்த, அவர் வீசிய மாலை, இன்று காய்ந்து முற்றிலும் உலர்ந்துபோய்விட்டது. வெய்யிலில், என் அருகே அமர்ந்து அக்கிழவர் இளைப்பாறுவார். நித்திய நித்திரையை ஸ்னூபி என் மடியில் தான் கொண்டுள்ளது. நான்... வேப்பமரம். இவ்வீட்டின் மனிதர்களின் வாழ்வுகளை, வீசும் காற்றில் தலையாட்டியபடி பார்த்துக்கொண்டு நிற்கின்றேன், ஊமை சாட்சியாய்.
*** முற்றும் ***
No comments:
Post a Comment