இவ்வுலகில் ஒவ்வொரு ஜீவனும் மற்றொன்றைப் பற்றியே வாழ்கின்றன. தன்னைப் பற்றிக்கொள்ள, தானும் பற்றிக்கொள்ள எந்த ஜீவனும் இல்லாத தனிமைக்கு அவனின் விரல்களின் மத்தியில் சிக்கிக் கிடந்த சிகரெட் துண்டு தூபமிட்டது. மூவாயிரம் சதுர அடி வீட்டில், அவன் வசிப்பது அவனது அறையின் ஜன்னலோரத்தில். தோட்டத்தில் மலர்ந்து சிரிக்கும் மலர்கள் அவனுக்கு எந்த ஒரு சிலிர்ப்பையும் கொடுக்கவில்லை. வாழ்வில் வண்ணம் தொலைந்த பின் வசந்தமும், வறட்சியும் ஒன்றே! எதற்கும் அவனது மனம் சலனப்படவில்லை. இரண்டு மணி நேரமாக புகைத்துப் புகைத்து ஓய்ந்தவன், இருக்கையில் இருந்து எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினான். காரின் அருகே சென்றவனைக் கண்டு ஓடி வந்து பின்கதவினைத் திறந்துவிட்டான், கார் ஓட்டுனர். சில நொடிகள் நின்ற நிலையில் ஏதோ யோசித்தவனாய், கார் கதவினை சாத்திவிட்டு தோட்டத்து இருக்கையில் சென்றமர்ந்தான். மீண்டும் தனிமைக்கு தூபமிடத் தொடங்கினான். சில வருடங்களுக்கு முன் அவன் இந்நேரம் அழுது கொண்டிருப்பான். கையில் கிடைத்த பொருளை வீசியெறிந்து உடைத்து நொறுக்கியிருப்பான். ‘ஓ!’ என்றொரு ஓலம், சாலையில் செல்பவனைக் கூட ஒரு நொடி கவலையோடும், கருணையோடும் அந்த பங்களாவைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கும். இன்று அந்த அவலங்கள் இல்லை. மறுத்துப் போய்விட்ட மனதிற்கு அழுகை என்பது மறந்துபோயிருந்தது.
அந்த காம்பவுண்டுக்குள் நுழைந்த கருப்புக் கார் நின்றதும் உள்ளிருந்து இவனைக் கண்டு சிரித்தபடி ஒருவன் வந்தான்.
"என்னடா திவா, நல்லா இருக்கியா?" என்றபடி அவன் எதிரே வந்து அமர்ந்தவன் கையிலிருந்த நெகிழிப்பையினை எதிரே இருந்த சிறு மேஜையின் மீது வைத்தான்.
கண்களில் கொக்கிகள் மின்ன இவன் பார்க்க,
"இத்தாலி போயிட்டு வந்தேன்ல… அதான் உனக்கு வாங்கிட்டு வந்தேன்…" என்று பதில் கூறினான்.
நெகிழிப் பையின் உள்ளே ஸ்காட்சும், சில சாக்கலேட்டுகளும் இருந்தன.
ஒரு சாக்கலேட்டினை கையிலெடுத்த திவா எனும் திவாகர்,
"இது யாருக்குடா குணா?" என்றான்.
"சும்மா… சும்மாதான்…"
குணா முகத்தில் சங்கடமும், வருத்தமும் சிறிதளவு தோன்றி மறைய, விட்டேத்தியான புன்னகையோடு சாக்கலேட்டினை மீண்டும் பைக்குள் வைத்தான், திவா.
"போன காரியம் என்னாச்சு?"
"டீல் ஓகே ஆயிடுச்சு. நான் காண்பிச்ச சாம்பில்ஸ் எல்லாமே பிடிச்சிருக்குனு சொல்லிட்டாங்க. கையோட ஆர்டர் வாங்கிட்டு வந்துட்டேன். அடுத்த மாசம் முதல் பேட்ச் ஷிப்மன்ட் பண்ணனும்…"
தொழில் நிமித்தமாக தான் வெளிநாடு சென்றுவந்ததை அவன் விவரித்துக் கொண்டிருக்க, அதில் கவனம் கொள்ளாமல் ஏதோ ஒரு சூனியதில் திவாவின் மனம் சிக்கிக்கொண்டிருந்தது.
"திவா…"
தலை நிமிர்ந்து பார்த்தான்.
"நான் பேசறது காதுல விழுந்ததா?"
மீண்டும் விட்டேத்தியான சிரிப்பு.
"எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கப்போற?"
"இருக்கற வரைக்கும்…"
"இன்னும் காலம் இருக்கு உனக்கு…"
"ஹ்ம்ம்…"
"அடுத்த சனி ஞாயிறு உனக்கு எதுவும் முக்கியமான வேலை இருக்கா?"
"ஏன்?"
"ஹார்ஸ்லே ஹில்ஸ்ல (Horsley hills) ரிசார்ட் புக் பண்ணப்போறேன். நீ போய்ட்டு வா…"
"நான் தனியா போய் என்ன பண்ணப்போறேன்?"
"தனியா இல்லை…"
என்றவன், "நான் கிளம்பறேன்" என்றுவிட்டு தனது காரில் சென்றமர்ந்து, மறைந்து போனான்.
ஐம்பது வயதை தொடவிருக்கும் திவா, ஒவ்வொரு விடியலும் தனக்கான அஸ்தமனமாக இருக்க வேண்டும் என்ற பேராசையோடு நித்திரை கொள்வான். இன்று வரை வாழ்க்கை நீண்டுகொண்டே போக, ஒவ்வொரு நாளையும் பெரும் பாரத்தோடு பிடித்துப் பிடித்துத் தள்ளுகிறான். நெருங்கிய நண்பன் குணாவின் சலிப்புத்தட்டிய அக்கறையும், பிறரின் எரிச்சலூட்டும் கருணையும் தனது வாழ்வின் வெற்றிடத்தை மேலும் விகாரமாய் அவனுக்குக் காட்டியது.
வெள்ளிக்கிழமை மாலை ஆறு மணிக்கு பரபரப்பாய் திவாவின் அலுவலக அறைக்குள் நுழைந்த குணா, "கிளம்பு திவா, நேரம் ஆகுது…" என்றான்.
"எங்க? கிளப்புக்கா?"
"இல்ல, ஹார்ஸ்லே ஹில்ஸ்க்கு!"
"எதுக்கு?"
"போன வாரம் சொன்னேனே. மறந்துட்டியா?"
திவா யோசனையாய் அமர்ந்திருப்பதைக் கண்டு தான் கூறியது எதுவும் அவனது நினைவில் இல்லை என்பதனை குணா புரிந்துகொண்டான்.
"சரி கிளம்பு."
"வேலை இருக்கு…"
"நீ இந்த கம்பெனி எம்.டி…"
"சோ?"
"உன் வேலைகளை அப்புறமா கூட செய்துக்கலாம். யாரும் கேள்வி கேட்க மாட்டாங்க…"
"நீ கிளம்பு குணா"
"நீ கிளம்பு திவா… ஹார்ஸ்லே ஹில்ஸ்க்கு…"
எங்காவது சென்றுவர பலமுறை குணா ஏற்பாடு செய்ததுண்டு. பெரும்பாலும் திவா அவற்றை தவிர்த்ததுண்டு. ஆனால், இம்முறை குணாவின் பிடிவாதம் திவாவிற்குப் புதிதாக இருந்தது. தனது மடிக்கணினியை மூடிவிட்டு எழுந்தவனோடு உடன் நடந்த குணா, விடாப்பிடியாக திவாவின் இல்லம் வரை சென்றான்.
"ஏன் குணா உனக்கு திடீர்னு இவ்வளவு பிடிவாதம்?"
"உனக்கு ஆசையைத் தூண்டத்தான். அப்பத்தான் வாழ்க்கை மேல மோகம் வரும்"
திவா உரக்கச் சிரித்தான்.
"ஆசையைத் தூண்ட என்ன செய்யப்போற?"
சிரிப்பின் மத்தியில் வினவினான்.
"பொன், பெண், மண் - இதுல பொன்னும், பொருளும் உன்கிட்ட கொட்டிக்கிடக்கு; மண்ணும், மாளிகையும் தேவைக்கு அதிகமாகவே இருக்கு. பெண்ணாசையைத் தூண்டிவிடப்போறேன். பட்டுப்போன செடிய உரம் போட்டு உயிர்பிக்கப் போறேன்."
"என்னடா சொல்ற?"
"ரெண்டு நாளைக்குத் தேவையான துணிமணி எடுத்துக்கிட்டு கிளம்பு. ராத்திரி பத்து மணிக்கு அவ வந்துடுவா… ரிசார்ட் விவரம் இதுல இருக்கு"
ஒரு தாளினை நீட்டினான், குணா.
"எவ?"
"பெண்ணாசையைத் தூண்டப்போற மோகினி…"
"ச்சீ…"
முகம் சுழித்தான், திவா.
"திவா, நீ யோக்கியனா வாழறதால உனக்கு வாழ்க்கையில எதுவும் கிடைக்கப்போறதில்லை. ரெண்டு நாளைக்கு ஒருத்தி கூட ரிசார்ட்டுக்குப் போறதால நீ எதுவும் இழக்கப் போறதில்லை. எனக்காக ஒரே ஒரு தடவை போயிட்டு வா."
"எனக்கு இதெல்லாம் தேவைப்படல குணா…"
"நீ அவளோட போ. உன் தேவை என்னனு அப்புறம் உனக்குப் புரியும்."
"குணா… I am not a bastard…"
"You are a bloody human… இந்த மூச்சு இருக்கரவரைக்கும் நீ வாழ்ந்தே ஆகணும்."
"வாழ்ந்துட்டு தானே இருக்கேன்?!"
"இல்லை… நீ உயிரோட இருக்க. அவ்வளவுதான்!!"
"அதுக்கு?"
"மணி ஒன்பது ஆகப்போகுது. குளிச்சுட்டு கிளம்பு."
தலைக் கவிழ்ந்து அமர்ந்திருந்தான், திவா.
"போடா டேய்…"
குணாவை ஆழ்ந்து நோக்கியவன், மெல்ல எழுந்து தனது அறைக்குச் சென்றான்.
குளித்து முடித்து வந்தவன், செல்வதா வேண்டாமா என்ற தயக்கத்தோடு ஒரு பையில் தனக்குத் தேவையான துணிமணிகளை எடுத்து வைத்தான். வரவேற்பறைக்கு வந்தவனின் மனம் இடப்பக்கச் சுவரில் மாட்டிவைத்திருந்த புகைப்படத்தை மிகக் கவனத்தோடு மறந்தும் நோக்காமல் கடந்து செல்லச் சொன்னது. அவனும் அதையே செய்தான்.
குணாவைத் தேடி வெளியே வந்தவன், கார் நிறுத்தத்தின் பக்கவாட்டில் படர்ந்திருந்த புல் தரையில் புகைத்தபடி அவன் நடை பழகிக்கொண்டிருப்பதைக் கண்டான். ஜீன்ஸ் டிஷர்ட்டில் வந்து நின்ற திவாவைக் கண்டவன், “எப்படிடா ஒரு மணி நேரத்துல பத்து வயசைக் குறைச்ச?” என்றபடி அவன் அருகே வந்தான்.
“இதெல்லாம் வேண்டாம் குணா…” நெற்றியைப் பரபரவென தேய்த்துக்கொண்டான், பதட்டமாக.
“போடா முட்டாள்… அவ வந்துட்டா. கார்ல இருக்கா. அட்வான்ஸ் கொடுத்திருக்கேன். நீ எதுவும் கொடுத்துடாத. திரும்ப வந்ததும் செட்டில் பண்ணிக்கலாம்.”
“சீப் அண்ட் சில்லி…”
“இட்ஸ் பிசினெஸ்… போ, போய் உட்காரு.”
காரின் உள்ளே பார்த்தான், திவா. வயதில் மிகச்சிறியவளாய், உடல் மெலிந்து, விரித்துவிட்ட கூந்தலும், ஜீன்ஸ் பாண்ட், டி-ஷர்ட்டுமாய் ஜன்னலோரம் அமர்ந்திருந்தாள். வேண்டா வெறுப்பாய் அவன் குணாவை நோக்க, அவனோ மறுபக்க கதவைத் திறந்து “ம்ம்… கிளம்பு” என்றான். அவனது கையிலிருந்த பையினை ட்ரைவர் வாங்கிக்கொள்ள, புகுந்தவீட்டிற்குச் செல்லும் புதுமணப் பெண் போல் அவன் கதவின் அருகே குணாவைப் பார்த்துக்கொண்டு தயங்கியபடி நின்றான்.
“வா சார்…”
உற்சாகமாய் உள்ளிருந்து குரல் வர, குணா நமட்டுச் சிரிப்பு சிரித்து வைக்க, ஓங்கியடித்து கதவைச் சாத்தியவன், ஓட்டுனர் அருகே உள்ளே முன்னிருக்கையில் சென்றமர்ந்தான். காரின் முன்னே வந்து நின்ற குணா, “கிளம்பலாம் ரைட்” என்றுவிட்டு வழிவிட்டு திவாவின் பக்கம் நகர்ந்து நிற்க, வண்டி புறப்பட்டது. “டாட்டா” என்று குணா கையசைக்க, திவா முறைத்திருக்க, அப்பெண் “டாட்டா சார்” என்று உரக்கக் கூறியபடி பலமாய்க் கையசைத்தாள்.
இத்தனை வருடங்களில் ஒருபொழுதும் அவன் விழைந்திடாத தவறினை செய்திட அவன் மனம் ஒப்பவில்லை. விரல்களின் நடுவே புகைந்துகொண்டிருந்த சிகரெட் அவனுக்கு முடிந்தளவு ஆறுதல் கொடுக்க முயற்சித்தது. ஒருமுறை பின் இருக்கையில் இருப்பவளைத் திரும்பிப் பார்த்தான். வெளியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள், இவன் திரும்பியதும், இவனது முகத்தினைக் கண்டு, பெரிதாய் புன்னகைத்தாள். அவன் கூச்சப்பட்டு திரும்பிக்கொண்டான். ‘ப்ளடி குணா’ என்று நண்பனைத் திட்டினான். அவள் மீண்டும் வேடிக்கை பார்க்க, அவன் நெளிந்துகொண்டு வந்தான்.
அவர்கள் ஏறத்தாழ ஹார்ஸ்லே ஹில்ஸ் நெருங்கியதும், பூமி விடியலுக்கு ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. தேநீர் பருகிட வண்டி நிறுத்தப்பட்டது. அந்தச் சிறு கடையின் வாசலில், காரின் அருகே திவா நின்றிருக்க, ஓட்டுனர் இருவருக்குமாய் தேநீர் வாங்கிவந்தான்.
கையிலிருக்கும் தேநீர் கோப்பையின் இதம் உள்ளங்கைகளில் பரவிக்கொண்டிருக்க, கோப்பையிலிருந்து தப்பித்து மேலெழும்பிய ஆவியை நோக்கியபடியே,
“நான் செய்யறது தப்பா?” என்றான் ஓட்டுனரிடம்.
பாவம் நிகழ்வதற்கு முன்னமே திவாவிற்கு பாவமன்னிப்பு தேவைப்பட்டதாய் இருந்தது. அவ்விடத்தில், அச்சமயத்தில், அந்த ஓட்டுனரே அவனுக்கு கருணாமூர்த்தியாகத் தெரிந்தான்.
“இல்லை சார்…”
உடனே வந்தது பதில்.
தன்னை அதிசயித்துப் பார்க்கும் திவாவைக் கண்டு மெலிதாய் சிரித்தவன், “கஷ்டத்தைக் கொடுக்கறதுக்கு முன்னாடி அந்த சாமி, ‘சரியா’, ‘தப்பா’னு யோசிக்கறதில்லை. நாம மட்டும் ஏன் சார் சந்தோஷத்தை எடுத்துக்கறதுக்கு, ‘சரியா’, ‘தப்பா’னு யோசிக்கணும்?” என்றான்.
“சார், புத்தர் அவரே விருப்பப்பட்டு தான் பொண்டாட்டி, புள்ளையை விட்டுட்டு ஞானத்தைத் தேடிப் போனாரு. இதே அவர் சம்சார வாழ்க்கையில சந்தோஷமா இருக்கும்போது, பொண்டாட்டி, புள்ளையைப் பறிச்சுக்கிட்டு, ‘போய் புத்தனா வாழு’னு சொன்னா, அவர் போதி மரத்தைத் தேடியிருப்பாரா?”
தனது பதிலை வினாவாகக் கொடுத்துவிட்டு திவாவின் கையிலிருந்து காலியான தேநீர்க் கோப்பையை வாங்கிச் சென்றான்.
அந்தக் கடையின் வாயிலில் திவாவிற்கு ஞானம் வந்ததோ இல்லையோ, ஏதோ தெளிவு பிறந்தது போல் உணர்ந்தான். காரின் உள்ளே எட்டிப்பார்த்தான். பின் இருக்கையில் அவள் நீட்டிப்படுத்து உறங்கிக்கொண்டிருந்தாள். கார் கதவினைத் திறந்தவன்,
“உனக்கு டீ வேணுமா?” என்று குரல் கொடுக்க, தூக்கம் களைந்து அவள் மெல்ல கண் விழித்து எழுந்து அமர்ந்தாள். இரவு அவள் பூசியிருந்த அரிதாரம் அனைத்தும் எங்கோ தொலைந்திருந்தது. பிசிறின்றி விரிந்திருந்த அவளது கூந்தல், குருவிக் கூடாய் சிக்குண்டிருந்தது. இதழோரம் வழிந்திருந்த உமிழ்நீர் தடத்தைத் துடைத்துக்கொண்டவள், இரு கைகளையும் நீட்டி சோம்பல் முறித்தாள். அவன் அனைத்தையும் அமைதியாய்ப் பார்த்துக்கொண்டிருந்தான். அவனது புத்திக்குள் தேவனும் இல்லை, சாத்தானும் இல்லை.
மீண்டும் வண்டி புறப்பட, அடுத்து ஒரு மணி நேரத்தில் அவர்கள் தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தனர். மலை மீது கட்டப்பட்டிருந்த அந்த வளாகத்தை வாய் பிளந்து ரசித்தபடி வந்தாள். அவர்கள் தங்கவிருக்கும் அறையைக் கண்டவளுக்கு அதிசயம் தாளவில்லை.
“என்ன சார், ஹோட்டல் ரூம்னு பார்த்தா, வீடு மாதிரி இவ்வளவு பெருசா இருக்கு?” என்றவள், திரைச் சீலைகளை விலக்கிவிட்டு வெளியே படர்ந்து விரிந்திருந்த இயற்கை எழிலினை ரசித்தாள்.
“இந்த இடம் ரொம்ப நல்லா இருக்கு சார்” என்றவள், திரும்பி திவாவை நோக்க, அவன் கட்டிலின் மேல் உறங்கிவிட்டிருந்தான்.
ஒரு மணி நேரம் கழித்து எழுந்தவன், தனது கட்டிலின் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த சோபாவில், முந்தின இரவு போல், அவள் மீண்டும் அரிதாரம் பூசிக்கொண்டு, குளித்து உடை மாற்றி, புன்னகை பூக்க அமர்ந்திருந்தாள்.
அன்று அருகிலிருந்த சுற்றுலா தலங்களுக்கு சென்றுவிட்டு இரவு கவ்விய நேரத்தில் மீண்டும் அறைக்குத் திரும்பினர்.
“சார், இந்த ஊரு ரொம்ப நல்லா இருக்கு சார். சினிமாவுல வர வாட்டர் ஃபால்ஸ் மாதிரியே இன்னைக்குப் போன இடமும் ரொம்ப அழகா இருந்தது.”
அவன் சிரிப்பில் ‘சரி’ என்றான்.
இரவு, அவள் கட்டிலின் ஒருபுறம் அமர்ந்தபடி தனது கைப்பேசியை ஏதோ நோண்டிக்கொண்டிருக்க, சாளரம் அருகே புகைத்துக்கொண்டிருந்தவன், சிகரெட் தீர்ந்ததும், சாளரத்தை சாத்திவிட்டு, கட்டிலின் மறுபுறம் வந்து படுத்தான்.
“லைட்ட அணைச்சுடட்டுமா?”
“உன் இஷ்டம் சார்.”
‘சார்’ என்ற விளிப்பைத் தவிர அவளது வாக்கியங்களில் வேறு எந்தவித மரியாதையும் இல்லை.
சில நிமிடங்களில் அவனிடமிருந்து குறட்டை சத்தம் வர,
“சார், என்ன சார் தூங்குற?” என்று அவனது தோளினைத் தட்டினாள். விழித்து எழுந்தவன், மின்விளக்கினைப் போட, அவள் புன்னகை சிந்தினாள்.
“உனக்குத் தூக்கம் வரலையா?”
“என்ன சார்?” என்று குரல் வாடியவள், “வேணும்னா ஐநூறு குறைச்சுக்கோ” என்றாள்.
“கம்முனு படு” என்றவன் கட்டிலை விட்டு எழ,
“எங்க சார் போற?” என்றாள் அவள் கேள்வியாய்.
“நான் சோபாவுல படுத்துக்கறேன். நீ தனியா தூங்கு. நிச்சயம் தூக்கம் வரும்.”
அவனை சந்தேகமாய் நோக்கியவள், “சார், மாத்திரை வேணுமா?” என்றாள், சிறிதும் தயக்கமின்றி.
“என்ன?”
“அது ஃப்ரீ தான் சார். அதுக்கு காசு வேணாம்.”
முதலில் முறைத்தவன், அவள் அமர்ந்திருந்த தோரணையைக் கண்டு சிரித்துக்கொண்டே,
“உனக்கு ஆயிரம் ரூபா கூடத்தறேன். தயவு செஞ்சு என்னைத் தொந்தரவு பண்ணாம தூங்கு. எனக்குத் தூக்கம் வருது” என்றவன், அடுத்த ஐந்து நிமிடங்களில் குறட்டையால் தான் உறங்கிவிட்டதை உணர்த்தினான். அவனை விசித்திரமாய்ப் பார்த்தபடி அமர்ந்திருந்தவள், குனிந்து தனது அரைகுறை ஆடையைக் கண்டுவிட்டு மீண்டும் அவனை நோக்கினாள். அவன் ஆழ்ந்த நித்திரையில் கிடக்க, “லூசு” என்று முணுமுணுப்பாய் அவனைத் திட்டிவிட்டு இவளும் படுத்துக்கொண்டாள்.
மறுநாளும், மேலும் சில சுற்றுலா தலங்களை சுற்றிவிட்டு, ஊருக்குப் புறப்பட்டனர். அவள் வழக்கம் போல் பின் இருக்கையில் அமர்ந்துகொள்ள, இவன் முன் இருக்கையில் இருந்தான். இம்முறை நெளியாமல், தயங்காமல் அமர்ந்திருந்தான். வழிநெடுகிலும், அவனும் வேடிக்கை பார்த்தபடி சிகரெட் தூபமின்றி பயணப்பட்டான்.
விடியற்காலை வீட்டிற்குத் திரும்பியதும், தனது பையினை எடுத்துக்கொண்டு இறங்கியவள் வாசலிலேயே நிற்க, அவனோ விருட்டென உள்ளே சென்றான். அவனிடம் பணம் பெற்றுக்கொள்ளத் தயங்கியவள், அவ்விடம் விட்டு புறப்பட எத்தனிக்க,
“ஏன் இங்கேயே நிக்கற? உள்ள வா” என்றான்.
“இருக்கட்டும் சார், நான் கிளம்பறேன்.”
“உடனே போகணுமா? ஒரு வாரம் தங்கியிருந்துட்டுப் போயேன்…”
சற்றே யோசித்தவள்,
“சரி சார்!” என்றாள்.
வீட்டினுள் நுழைந்தவள், அங்கு கொட்டிக்கிடந்த ஆடம்பரத்தைக் கண்டு வாயடைத்துப் போனாள். வீட்டுப் பணியாளர் ஒருவன் அவள் தங்கவிருக்கும் அறையைக் காட்ட, சுருக்காய்த் தயாராகி வந்தாள்.
உணவு மேஜையின் மீது வந்தமர்ந்தவனின் எதிரே வந்து நின்றாள்.
“ம்ம், நீயும் உட்கார்ந்து சாப்பிடு” என்றான். வீட்டுப் பணியாளர்களின் பார்வையும், கவனமும் அவர்கள் மீது இருந்தாலும், அவ்விடத்தில், அச்சமயத்தில், அவனுக்குக் கருணாமூர்த்தியாக யாரும் தோன்றவில்லை; பாவமன்னிப்பும் தேவைப்படவில்லை.
அவளது தட்டில் பரிமாறப்பட்ட இட்டிலிகளைக் கண்டாள்.
“என்ன யோசனை? வேணும்கறத கேட்டு வாங்கிச் சாப்பிடு” என்றான்.
எதிரே பழக்கூடையில் இருந்த ஆப்பிளைக் காட்டி,
“ஒரேயொரு ஆப்பிள் வேணும்” என்றாள்.
“நீயே எடுத்துக்கோ” என்றவன், உண்டு முடித்து எழுந்து சென்றான்.
எங்கோ சென்றவன், மாலை வீடு திரும்ப, தோட்டத்தில் பட்டாம்பூச்சிகளைத் துரத்திக்கொண்டிருந்தவளைக் கண்டான். தோட்டத்தில் போடப்பட்டிருந்த இருக்கையில் அவன் வந்தமர, எதிரே அவள் வந்து நின்றாள்.
தயங்கிக்கொண்டு நிற்பவளைக் கண்டு அவன் “என்ன?” என்க,
“நான் வந்த வேலை முடிஞ்சா போயிடுவேன் சார்…” என்றாள்.
“போகணும்னா தாராளமா போ.”
“சார்… வேலை முடியாம காசு…”
“எவ்வளவு காசு வேணுமோ வாங்கிக்கோ…”
“ஏன் சார் என்னைப் பிடிக்கலையா?”
சிரித்துக்கொண்டவன்,
“எட்டு வருஷத்துக்கு முன்னாடி என் மனைவியும், ஒரே பொண்ணும் கார் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க. என் பொண்ணுக்கு ஏறத்தாழ உன் வயசு தான்…”
“ஓ! ஹால்ல போட்டோ பார்த்தேன் சார். என்னைப் பார்த்ததும் உன் பொண்ணு நியாபகம் வந்துடுச்சா சார்?”
“ம்ம்…”
“ஆனா, நீ என் அப்பா இல்லை சார்…”
அவன் சிரித்துக்கொண்டான்.
“சிரிக்காத சார். காசுக்கு தன்னை விக்க வந்தவளை, செத்துப்போன பொண்ணு மாதிரி இருக்கான்னு சொல்லி எட்டி நிறுத்திவைக்கற அப்பனுங்க வாழற இந்த நாட்டுல, காசுக்காகப் பெத்த பொண்ணை விக்கற அப்பனுங்களும் இருக்கானுங்க சார். சார், நீ சாராவே இரு.”
அவள் அமைதியாய் நின்றிருக்க,
“நீ கிளம்பறதுனா தாராளமா போ. நான் தடுக்கல. என்ன வேணுமோ கேளு” என்றான், நிலவியிருந்த அமைதியை உடைத்தபடி.
“ரெண்டு ராத்திரி தனியா, நிம்மதியா தூங்கினேன் சார்.”
தனிமைக் கிட்டியதால் அவளுக்கு நிம்மதி பிறந்தது. தூக்கம் கிடைத்தது. தற்காலிகம் என்றாலும் ஏதோ ஒரு துணை கிடைத்ததால், வெகு நாட்கள் கழித்து அவனுக்கும் தூக்கம் ஆசீர்வதிக்கப்பட்டது.
“என்ன படிச்சிருக்க?”
“எட்டாம் வகுப்பு சார். டீச்சர் ஆகணும்னு ஆசை.”
“அவ்வளவுதான? படிச்சு டீச்சர் ஆயிடு. நான் படிக்க வைக்கறேன். நீ இங்கயே தங்கிக்க.”
“நிஜமாவா சார்?”
“நிஜமாத்தான்…”
“ஆனா நான் இங்கயே நிரந்தரமா தங்கமாட்டேன். படிச்சு முடிச்சு வேலை கிடைச்சதும் போயிடுவேன் சார். நீ எனக்குப் பண்ற செலவெல்லாம் கடன் தான். அதை எழுதி வச்சுக்கிட்டு திருப்பிக்கொடுத்துடுவேன்.”
“சரி…”
புன்னகை பொங்க ஓடியவள், மீண்டும் பட்டாம்பூச்சிகளைத் துரத்தத் தொடங்கினாள்.
“உன் பேரு என்ன?” என்று அவன் வினவ, ஓடோடி அவன் முன்னே வந்து நின்றவள் பதில் கூறும் முன்னே,
“இனிமேல் உன் பேரு பட்டர்ஃப்ளை” என்றான்.
“சரிங்க சார்!!”
அவள் விளையாடிக்கொண்டிருக்க, இவன் செய்தித்தாள் வாசித்துக்கொண்டிருக்க, வெகு ஆண்டுகள் கழித்து முதன்முறையாக அவன் எதிரே இருந்த ஆஷ் ட்ரே, இறந்துபோன சிகரெட் சடலங்கள் இன்றி, காலியாகக் கிடந்தது.
*** முற்றும் ***
No comments:
Post a Comment