Wednesday, 29 July 2015

என்ன தவம் செய்தனை?

கலாம் - இந்த காந்த பெயரின் உருவாய் வாழ் மாமனிதரின் பெருவாழ்வு, முடிவு பெற்றது. முடிவு கொண்டது உருவம் தானே தவிர உணர்வு அல்ல. துணிவும், மனவலிமையும், நேர்மையும், நேயமும் ஒன்று சேர்ந்த, உயர்ந்தவர். கனவுகளுக்குப் புதிய இலக்கணம் கொடுத்தவர்.

அக்னி குஞ்சொன்று கண்டேன் - அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு, தழை
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

அவரை பற்றி முன்னமே அறிந்ததனாலேயே, பாரதி முன்னுரை எழுதிவிட்டான் போலும்.

பாரதியின் அக்னி அன்றோ - அவர்
விஞ்ஞானம் பயின்ற பாரதியன்றோ!
அந்த அக்னியின் சிறகுகள்,
பாரதத்தையே புரட்டிபோட்டனவே!!

அவருடைய சிந்தனைகளும், வழி காட்டுதலும், எண்ணங்களும், வெறும் ஏட்டிலே ஏத்திட அல்ல. பல இளைய நெஞ்சங்களில் தைத்திட. இந்தியா மட்டுமின்றி, இவ்வுலகமே அவருக்காக இரங்குகிறது . அவர் ஜாதிகளை, மதங்களை, மொழிகளை, அரசியல் சாயங்களை மட்டுமின்றி எல்லைகளையும் கடந்தவர்.

அவர் பெயரில் அரசு சாரா நிறுவனம் நிறுவிட வேண்டும். வெவ்வேறு வயதுடைய மாணவர்கள், பல அறிவியல் கண்டுபிடிப்புகள் புரிய, ஆய்வு கூடங்கள் அமைத்திட வேண்டும். அவர்களின் தனித்துவமான  கண்டுபிடிப்புகளுக்கு பேடன்ட் உரிமம் வழங்கிட வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஒன்றிணைந்து இதனை செய்திட வேண்டும்.

சிறந்த மாணவர்களுக்கும்,  படைப்புகளுக்கும், அவரது பெயரில் விருது வழங்கிட வேண்டும். இவை அனைத்தும், அரசியில் நிழல் படாமல் இருந்திட வேண்டும்.

இந்தியத்தாயே, என்ன தவம் செய்தனை? உலகம் போற்றும், ஓர் உன்னத மகனைப்  பெற்றிட!!! தலை வணங்குகிறோம்!!!





No comments:

Post a Comment