Sunday, 8 January 2017

விலை மாது

ஆடவர் கலையும்
காமக்கழிவுகளின்,
கழிவறை!

ஒற்றைக்கண் பாம்புகள்
கால்களிடையே ஊற,
ஆயிரம் நகங்கள்
மார்பினைக் கீற,
வெள்ளையும் கருப்புமாய்
ரோமங்கள் சூழ,
உயிருள்ள மெத்தையாய்
கட்டிலின்மேல் கிடப்பவள்!!

தினமும் ஒரு அலங்காரம்
தினமும் ஒரு அகமுடையான்
தினமும் ஒரு அரங்கேற்றம்
தினமும் ஒரு அவமானம்!

கண்களில் காதலைக்
கண்டதில்லை
ஸ்பரிசத்தில் மென்மையைக்
கண்டதில்லை
பேச்சிலே இனிமையைக்
கண்டதில்லை
மொத்தத்தில் மனிதர்களைக்
கண்டதில்லை

உதட்டுச்சாயம் நீக்கிட
வழியில்லை
சீராய் உடையுடுத்த
வாய்ப்பில்லை
வயிறார பசித்தீர்க்க
உறவில்லை
ஓர் இரவாவது உறங்கிட
தனிமையில்லை!

கடவுள் வரைந்த
விதியோ!
காலம் சமைத்த
சதியோ!
மானம் பஞ்சத்தின்
பலியோ!
பெண்மை காமத்தின்
குறியோ!

திரௌபதியை மீட்டவன்,
இவளை ஏன் மறந்துவிட்டான்!
மனிதகுலம் படைத்தவன்,
மனிதம் ஏன் மறுத்துவிட்டான்!!

No comments:

Post a Comment