Ad Text

Friday, 2 March 2018

புது ராகம்

சன்னமாய் ஒரு இசை, என் செவியைச் சேர்ந்து மறைகிறது. எனது பரபரப்புகளின் மத்தியில், வலுவிழந்த அந்த சன்னமான இசை, என்னைக் கடிவாளமிட்டு முடக்கவில்லை. அவ்வப்போதே தோண்றி மறையும் இசை. வலு பெற்று, இப்பொழுது தெளிவாய்க் கேட்கிறது. ஆஹா!! அது யாழின் இசை... கற்கண்டுகளால் நாவினை நனைத்தது போல், தேனமுது! எங்கிருந்து வந்தது இந்த இசை… எதனால்? கோபுரத்தின் உச்சியில் நின்றுகொண்டு, உலகைப் பார்க்கும் பறவையைப் போல், நானும் என் மனதின் சிகரத்தில் நின்றுகொண்டு என் எண்ணங்களை ஆராய்கிறேன். ஒன்றும் புதிதாய் இல்லை!! ஓ! அதென்ன மூலையில் ஒரு ரத்தின மொட்டு. எத்தனை ஜொலிஜொலிப்பு!!

யாழின் இசையோ இப்பொழுது மிகவும் உரக்கமாய்!! ரத்தின மொட்டு மலர்ந்து, நவமணிகள் சிதறிக்கிடக்கின்றன. எனது பரபரப்புகள் பறந்துவிட்டன. சில நாழிகைகள் யாழ் இசையின் ரசனையில். மீதி காலங்கள் ‘எதனாலோ இந்த இசை’ என்ற சிந்தனையில். மத்தொன்று மனதைக் கடைந்து கொண்டிருந்தது.

நவமணிகள் பிணைந்துகொண்டு, கொடியென எழும்பத் தொடங்கியது. மனதை விசாரணை செய்கிறேன். பாவம்! காரணம் தெரியாமல் அழுகிறது. எனது கோபத்தைக் கண்டு நடுங்கி, இந்த கண்களே காரணம் என்று போட்டுடைத்தது. கள்ளக்கண்கள் என்னிடம் சிக்கினர். ‘அதோ, அவன்தான்!’, என்று இமை திறந்து கூறினர். உண்மைதான்!! இப்பொழுது என் காதுகள் செவிடாகும் அளவிற்கு யாழின் இசை ஒலிக்கிறது.

அவன் கண்களின் பார்வை அலைகளே, யாழினை மீட்டுகிறது. அவன் இல்லாவிடில், எங்கும் அமைதி. அவன் வந்துவிட்டால், கண்களால் என்னை வருடிவிட்டால், யாழின் ருத்ரம் ஆரம்பம்!! இதுவரை நான் கேட்டிராத, ஒரு புது ராகம். நான் மட்டுமே உணர்ந்த, புது ராகம். என்ன பெயர் வைக்கலாம், அந்த ராகத்திற்கு?! ம்ம்… அவன் பெயர் தான்… என்னவன்… என் ராகமானவன்… ஜீவ தாளமும் ஆனவன்!

அய்யோ! என்னை பார்த்தபடி என்னருகே மெல்ல வருகிறான். மயங்கி விழப்போகிறேன். இன்னும் அருகே வருகிறான். வேண்டாம்! வேண்டாம்! பாதி மயங்கிவிட்டேன். கைத்தொடும் தூரத்தில் அவன். முக்கால் மயக்கம். அவன் மூச்சுக்காற்று என் கன்னங்களில். போடா, முழுதும் மயங்கி விழுந்துவிட்டேன். சில நொடிகளே! அவன் நகர்ந்து செல்ல, என் மயக்கம் கலைந்தது. தினமும் நெருக்கம். தினமும் மயக்கம்.

ஒரு நாள், நெருக்கத்தின் மத்தியில் ஆழமான பார்வை, அவனிடமிருந்து. இனி மயக்கம் இல்லை, மரணம் தான். அந்த மீளமுடியாத ஆழமான பார்வை எனும் குழிக்குள்ளே விழுந்துவிட்டேன். என்னை சுற்றி நூறு யாழ்கள் மீட்டி நின்றன. அடடே, இந்த ஆனந்தக்கூத்துக்கு தான், இத்தனை கண்ணாமூச்சியா?!

கையில் ஏதோ கொடுத்துவிட்டு, விலகி நிற்கிறான். வழவழவென்று மிருதுவாய்!! என்னவென்று உற்று நோக்கினால், அவனின் இதயம். என்னுள் பொங்கிய, அதே புது ராகம் பாடியபடி, அவனின் இதயத்திலும் ஒரு யாழ். “உன் இதயத்தை என் நெஞ்சுக்கூட்டுக்குள் புதைக்கப்போகிறேன். திரும்பி நில்! ஓரக்கண் சில்மிஷம் வேண்டாம். நாணம் கவ்வினால், படபடப்பில் பரிதவிப்பேன்.”

“ம்ம்… இதோ என் கைகளைப் பற்றிக்கொள்! வருகிறேன், எல்லைக்கோட்டின் இறுதி புள்ளி வரை, உன்னோடு! இதோ என்னுள் படர்ந்து பெருகும் நவமணிகளின் கொடி, இனி என்றும் உன் தோள்களின் மேல் தொடர்ந்து படர்ந்திடும். ஒரு உதவி மட்டும் செய்திடு. உன்னைக் கண்டு, நான் என்னை மறந்து உறைந்து நிற்கும் நொடிகளில், பெருமிதத்தால் என் விழியோரம் அவிழும் நீர்த்துளிகளை, உன் விரல்களால் துடைத்துவிடு!!!”

No comments:

Post a Comment