ஊரின் எல்லையில் ஓர் விசாலமான பொட்டல் காடு… காடு அல்ல… களம்… போர்க்களம். அங்கே காற்றிலெங்கும் பிணவாடை. நிலம் முழுதும் குருதிக் குழம்பு. தலைகளும், கைகளும், கால்களும், சிதைந்தும் சிதையாமலும்… காண்போர் நெஞ்சம் பிளந்து ரத்தம் வடியும். அதிகார ஆக்ரோஷத்தின் கோர தாண்டவம். வளியவனின் பதவிக் கிறுக்கு. வைரங்கள் கொப்புலிக்கும் வஞ்சகம். மண்ணுள் கிடக்கும் புழு முதல், விண்ணில் வட்டமிடும் பருந்து வரை, அனைத்திற்கும் ராஜ விருந்து.
தூரத்தில் சில கொட்டகைகள். வெற்றிக்கொண்டாட்ட கூச்சல், எங்கும் எதிரொலித்தது. அந்த சிற்றூரைக் கைப்பற்றிய களிப்பு. வாகை சூடிய மன்னனின் முகத்தில் பெருந்திரளாய்ப் பெருமிதம் புரண்டோடியது. யாரும் அவனை வெல்வதற்கில்லை என்றொரு இறுமாப்பு. அந்த சிற்றூரின் அரசனை வீழ்த்தி, அந்த நகரத்தைத் தன் பிடிக்குள் கொண்டுவந்துவிட்டான். மண், பொன், பெண் பேராசைக் கொண்ட அந்த கொடூர மாமன்னன், சிற்றூர்களைப் பல வென்றும் பசி தீராது, இப்பொழுது இந்த ஊரையும் வென்றுவிட்டான்.
கம்பீரமாய் அவன் அமர்ந்திருக்க, அவன் எதிரே மண்டியிட்டு, கைகள் கட்டிய நிலையில் சிற்றரசன் அழுகிறான். சோம பானம் அருந்தியபடி அவனை உற்று நோக்கிய மாமன்னன், சடார் என தன் வாளை உருவி, பட்டென சிற்றரசனின் தலையைக் கொய்தான். அடுத்த சில மணித்துளிகள் சிற்றரசன் கூறுபோடப்பட்டு, அகண்ட அண்டாவில் குழம்பாய்க் கொதித்துக்கொண்டிருந்தான். இது மாமன்னனின், வெற்றியைக் கொண்டாடும் முறை. தோற்ற அரசனை குழம்பாக்கி, அவன் மாமிசத்தை உண்டு, தனது மனதை சாந்திப்படுத்திக்கொள்ளும் விந்தை. எதனாலோ அப்படி. ஏனென்று கேட்டிட யாருக்கும் நா எழவில்லை. அவனுக்கு மட்டுமல்ல அந்த விருந்து, அவனோடு போரிட்ட அனைத்து வீரர்களுக்கும் அதில் பங்குண்டு. கொன்றால் பாவம், தின்றால் தீரும்!
உண்ட களிப்பில் அனைவரும் ஆனந்தக் கூத்தாட, பட்டுக்கம்பளத்துள் சுற்றியிருந்த நெடிய வாளொன்றை எடுத்தான் அந்த மாமன்னன். நவரத்தினங்கள் ஜொலிக்கும் உறைக்குள்ளே, வைரத்தால் மெருகேற்றப்பட்டு, கைப்பிடியில் கர்ஜிக்கும் சிங்க முகத்தோடு கம்பீரமாய் காட்சியளித்தது அவ்வாள். அதைக் கண்டவர் கண்களிலெல்லாம் அவ்வாளே மின்னியது. தனது தளபதியை அழைத்தான் மன்னன். நிமிர்ந்த நெஞ்சத்தோடு, பெருகும் பெருமிதத்தோடு, வெற்றி என்பது பழகி சலித்துப்போன இறுமாப்பு முகத்தோடு, மன்னனின் முன்னே சென்று நின்றான், தளபதி. அவனை ஆரத்தழுவிய மன்னன், அந்த வாளை அவனுக்குப் பரிசளிக்க, மீண்டும் ஆனந்த ஆர்ப்பாட்டம் தொடங்கியது. அவன் கைகளில் வாளுக்குப் பெருமை கூடியதா?! அந்த வாளின் அம்சம் அவனுக்கு கம்பீரம் ஊட்டியதா?! அனைத்து கண்களும் அதிசயித்து அடங்கின.
கட்டழகிகள் புடை சூழ மன்னன் ராஜ லீலைக்கு வேறு புறம் செல்ல, வாள் ஏந்திய தளபதியின் செருக்கு அடங்குவானேன் என்று பொங்கிப் பெருகியது. ஆடிப் பாடி ஓய்ந்த கூட்டம் அங்கங்கே கிடக்க, தனது கொட்டகையுள் கட்டிலின் மேல் அமர்ந்த தளபதியின் மூளை, அடுத்த களம் எதுவென்று ஆராயத் தொடங்கியது.
வாயிலைப் பார்த்தபடி சிந்தித்திருந்த தளபதியின் சிந்தனையை தடை செய்தது அச்சிருவனின் வருகை. அவன் பின்னே ஓடி வந்த இரு காவலர்கள் அவன் கைகளைப் பற்ற, அவன் திமிறிக்கொண்டு நின்றிருந்தான். அவனை விடுக்கும்படி தளபதி கை அசைக்க, நிமிர்ந்த நெஞ்சோடு, கூறிய பார்வையோடு, தளபதியின் முன்னே வந்து நின்றான், அச்சிறுவன்.
“யாரடா நீ?” என்று கர்ஜித்த தளபதியின் குரலுக்கு, சிறிதும் கலங்கவில்லை அச்சிறுவன்.
“என் தந்தை எங்கே?” என்றான் தீர்க்கமாக.
அவன் கேள்வியைக்கேட்டு, கொட்டகையின் கூரை பிளந்து போகும் அளவிற்கு வாய்விட்டுச் சிரித்தான் தளபதி.
“அங்கே குவிந்து கிடக்கும் பிணங்களில் உன் தந்தையின் கையோ, காலோ, சிரசோ, எது கிடைத்ததோ அதை அள்ளிக்கொண்டு செல்” என்றான்.
சிறுவனின் பார்வை மேலும் கூறானது. அவனது முகம் சினம் ஏறியது.
“என்னடா பார்வை?” என்று சினம் கொண்ட சிங்கமென கர்ஜித்தான், தளபதி.
“தினமும் என் தந்தை வழங்கிய நீரும், பருப்பும், பழமும் உண்ட நீரெல்லாம் மனிதனா?” என்றான் சிறுவன், முகத்தை சுழித்துக்கொண்டு.
“யார் நீ? என்ன திமிர் உனக்கு?” என்று கழுத்து நரம்பு புடைக்க வினவினான், தளபதி.
“நானா?! உன் எதிர் கால சந்ததி… தினமும், வண்டியிலே உமக்கு உணவைக் கொண்டு வந்து குவித்தது என் தந்தை. அவரை ஏன் கொன்றாய்? தின்றதற்குக் கூட நன்றி இல்லையா உன்னிடம்? அவரை நம்பியே நாங்கள் பிள்ளைகள் எத்தனை பேர் உள்ளோம் என்று நீ அறிவாயோ? எங்கள் தந்தை இல்லாது நாங்கள் பிழைப்பதெப்படி? இனி தாகத்திற்கு, குருதியைக் குடி. பசிக்கு, பொற்காசுகளைத் தின்று களி. உன் குடல்களை உருவியெடுத்து, அங்கே வைரத்தையும், வைடூரியத்தையும் பதுக்கிக்கொள்” என்று கூறிக்கொண்டே, சற்றுமுன் தளபதி வென்ற வாள் அச்சிருவனின் கண்களில் பட, நொடியில் அதை உயர்த்தி, தனது தலையினை துண்டித்துக்கொண்டான்.
கோடிக்கோடி கொலைகள் செய்தவன், நர வேட்டை ஆடிய மாமிச நாயகன், ரத்த வாடை சுவாசிக்கும் மிருக மனிதனான அந்த தளபதியின் முகத்தில் தெறித்தது, அச்சிருவனின் ரத்தம். முதன் முறையாக, அந்த செங்குறுத்தின் இளரத்த வாடையால் தளபதியின் கைகள் நடுங்கியது!!
No comments:
Post a Comment