Sunday, 25 February 2018

குழல்காரன்

அதோ, அந்த மலையின் உச்சியிலே, தனது புல்லாங்குழலின் துளை வழி, தனது உயிரில் ஊற்றெடுக்கும் இசையை, ஆகாயமெங்கும் அலையவிட்டான். ஒலியலைகள் தீண்டிய வெண்மேகங்கள் எல்லாம், ‘யாரோ அவன்?!’ என்று ஆர்வங்கொண்டு, அவன் எதிரே திரண்டனர். முதல் முறையாக, மேகங்கள் நனைந்தன மழையில்… இசை மழையில்! தூரத்து தேசத்திற்கு நீர் வார்க்க, தன்னுள் அடைகாத்து வைத்திருந்த நீர்த்துளிகளை, அவன் மேல் தூவி, இசை கசியும் உயிருக்கு, சில்லென சுகம் கூட்டினர். அதனை சப்புகொட்டி ருசித்துவிட்டு, புல்லாங்குழலை முண்டாசுக்குள் சொருகி வைத்து, மலையை விட்டு மெல்ல இறங்கி, ஆற்றங்கரையருகே வந்தான்.

சலசலக்கும் நீரோடையில், ஜொலிஜொலிக்கும் சூரியன், இவனை சிலுசிலுவென சீண்டியது. முண்டாசுக்காரனின் புல்லாங்குழல், அவனின் பெருமிதத்தை மொழி பெயர்த்துக் கொடுத்தது. ஓடையினோடே ஓடும் மீன் கூட்டம், தலை தூக்கி இவனைப் பார்த்துச் சென்றது. நாரைக் கூட்டத்தின் தலைவன், நன்றி மறவாமல், இவனுக்கு மீன்கள் இரண்டினைப் புசித்திடத் தந்தது.

உண்ட களைப்பில் உறங்கி எழுந்து, மெல்ல நடந்து வனத்துள்ளே சென்றான். காலின் நோவை நீக்க, நெடிய மரத்தின் அடியில் அமர்ந்தான். அந்த மந்தகாச வனத்தின் வதனம் அவனை மயக்கிட, மீண்டும் புல்லாங்குழழே அவனின் காதல் கவிதையை வாசித்தது. அவன் மேல் காதல் வயப்பட்ட அந்த மரம், அதன் கனிகளில் மிகவும் ருசியான ஒன்றை, அவன் மடியில் கிடத்தியது. அவன் தலை உயர்த்தி அந்த மரத்தினைக் கண்டு சிரிக்க, அதுவோ நாணத்தினால் தனது கிளை எனும் கைகளால், முகத்தை மூடிக்கொண்டது. அமுது சொட்டும் கனியை ருசித்துட்டு, மீண்டும் நடக்கலானான், சந்தையை நோக்கி.

பரபரப்பான சந்தையின் மத்தியில், தேனீக்களைப்போல பரபரக்கும் மனித கூட்டத்தைக் கண்டான். கவலை, அச்சம், சோர்வு, பதட்டம், சினம், பொறாமை, சோகம், வெற்றி, உழைப்பு, தோல்வி என்றனைத்தையும் அந்த முகங்களில் கண்டான். சட்டென சுணங்கிய அவன் மனம், புல்லாங்குழலை எடுக்கச் சொன்னது. இசை வழியே தனது கைகளை நீட்டி, சிலரது தோள்களில் தட்டிக் கொடுத்தான். சிலரோடு கை குலுக்கினான். சிலரின் தலையை கோதினான். சிலருக்கு, கை தட்டினான். வாடிய மனம் மெல்ல புத்துணர்வு பெற்றது. அந்த புத்துணர்வு முழுவதுமாய் அவனைக் கவரும் முன்னே, முண்டாசுக்காரனின் உரிமையாளன் அவனைக் கடிந்து பாடல் பாடலானான். அவன் கையிலிருந்த குழலைப் பிடிங்கிக்கொண்டு, கோலினைக் கொடுத்தான். அதோடு நில்லாது, அவனை தரதர வென இழுத்துச் சென்று, வெள்ளாட்டுப் பட்டிக்குள் தள்ளினான்.

தள்ளப்பட்ட வேகத்தில் தடுமாறி சருக்கியவனின் முழங்கையில் சிராய்ப்புகளும், ரத்தமும். மெல்ல எழுந்து தனது நிலையை உள்வாங்கி, ஆடுகளை மேய்க்கத் தொடங்கினான். மலையின் உச்சியில், விரும்பாத வெள்ளாடுகளும், விரக்தியாய் குழல்காரனும். வானில் ஒரு மேகம் கூட இல்லை. முழுதும் நீலம் மட்டுமே. இங்கும் அங்கும் ஓடியோடித் தேடி நின்றான். மேகத்தின் குழந்தைக்குட்டி கூட கண்ணில் அகப்படவில்லை. நொந்து சரிந்த மனதோடு, மலையினின்று உருண்டு நிலம் சேர்ந்தான்.

ஆற்றங்கரையில் ஆடுகள் தாகம் தீர்க்க, இவன் தாகம் மட்டும் தீர்ந்தபாடில்லை. முழங்கை குருதியினைக் கழுவினான். வலி விண்ணென்று தெறித்தது. ஒடுங்கிய வயிரோடு அமர்ந்திருந்தான். இவனைக் கண்டும் காணாதது போல் நாரைகள் இவனைக் கடந்து சென்றன.

அழுகின்ற மனதை தடவிக் கொடுத்தபடி, வனத்திற்குள் சென்று, காதலாகிய மரத்தின் நிழலில் அமர்ந்தான். இவனைக் கண்ட நொடியே, அந்த மரம், தனது கையெனும் கிளைகளை தனது நெஞ்சின் குறுக்கே கட்டிக்கொண்டு நின்றது. “பழம் தான் இல்லை… நிழல் கூட எனக்கு இல்லையா?” என்று மன்றாடினான். பதில் கூறாது மரமாய் நின்றது அந்த மரம். அவனின் மனதிற்குக் கூரான நகங்கள் முளைத்து, துடிக்கும் இதயத்தைக் கீரத்தொடங்கியது.

எழுந்தான். நடந்தான். ஆடுகளைப் பட்டியில் அடைத்தான். உரிமையாளன் அரைஞாண் கயிற்றில் சொருகியிருந்த குழலை உருவினான். அவன் தந்த கோலை உடைத்து, குப்பையில் வீசிவிட்டு, ஓடினான். அதிசயத்திலும் அதிசயமாய், அவன் கால்கள் நோகவில்லை. ஓடியோடி, நிலங்கள் அனைத்தையும் கடந்தான். அவன் முன்னே, இமயம் போன்றதொரு உயர்ந்த மலை எழும்பியது. அதன் மேலே ஏறினான். உச்சிக்கு ஓடிச்சென்று, ஆகாயத்திற்குள் தாவினான்.

அவன் சிந்தையின் கூற்றோ! விந்தையின் விடியலோ! ஊழின் உதவியோ! அண்டம் சமைத்தவனின் அன்போ! தாவியவன் பறந்து சென்று வேறொரு உலகில் விழுந்தான். அகண்ட வெளியில் ஆயிரம் மனிதருக்கு மத்தியில் விழுந்தான். ஆயிரம் முகமும் கொண்ட கண்கள் அனைத்தும், இவனை நோக்கின. அவனது கை, குழலை அவனது இதழோடு உரச, உயிர் பெற்றது, அவனது ‘இசை’ உயிர். குழல் தந்த கானத்தில் மந்தைகளாய் மக்கள் மயங்கினர். பில்லி சூனியம் வைத்தது போலே, சின்ன சிணுங்கள் கூட இன்றி, இவனையே தொடர்ந்தனர் அனைவரும். இவன் கண்களில் பெருகிய நீர், கன்னத்தில் வழிந்து, நெஞ்சைக் குளுப்பாட்டிய பின்னரே வாசிப்பை நிறுத்தினான். மதி மயங்கி, கிறங்கிய கூட்டம், இரு கைகளையும் உயர்த்தி ஆர்ப்பரித்தது. தரையில் நின்றிருந்தவன், தோள்களின் மேல் ஏற்றப்பட்டான். அவன் தலையில் மட்டும் பொற்காசு மாரி பொழிந்தது. அவன் கந்தல் துணி, பட்டானது. அவன் நாவிற்கு அக்ரூட்டுகளும், தேனில் குழைத்த பிஸ்தாக்களும், பாலும், பழச்சாறும் படைக்கப்பட்டது. எங்கிருந்தோ பறந்து வந்து, இவன் கழுத்தில் விழுந்தது வைர மாலை. அந்த ஆரவாரம் தாலாட்டாய் அவன் செவி சேர, அந்த கூட்டத்தில் ஒரு மனிதரின் மடியில் உறங்கிப்போனான்!!

No comments:

Post a Comment