Ad Text

Wednesday, 3 June 2026

அப்பா எனும் கடவுள்!!

தனது மகனை கைகளில் ஏந்தியபடி அந்த மருத்துவமனைக்குள் ஓடினான், வருண். அவனைத் தொடர்ந்து அழுதபடி ஓடிவந்தாள், அவனது மனைவி மதி. மருத்துவ பணியாளர் அவனை வழிமறித்தான்.

“சார், என் புள்ளைக்கு நேத்துலேர்ந்து ஜுரம். மருந்து கொடுத்தும் கேட்கல. தூக்கி தூக்கி போட ஆரம்பிச்சுடுச்சு. அதான் தூக்கிட்டு ஓடி வந்தேன். இந்த ஏரியாவுக்கு புதுசா குடிவந்திருக்கோம். டாக்டர் யாரையும் தெரியாது…” என்று மூச்சிரைக்க கூறி முடித்தான். 

“பயப்படாதீங்க சார், ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் இருக்காங்க, கவலைப்படாதீங்க” என்ற பணியாளர், “ஏன்பா ஸ்ட்ரச்சர் எடுத்துட்டு வா!” என்று குரல் கொடுக்க, உடனே அவனது மகன் உள்ளே சிகிச்சைக்காக எடுத்துச் செல்லப்பட்டான். மதி விடாது அழுதுகொண்டிருக்க, வருணிடம் மகனை குறித்த தகவல்களை பணியாளர் பெற்றுக்கொண்டார். சிகிச்சை நடக்கும் அறையின் வெளியே பெற்றோர் இருவரும் கலங்கியபடி காத்து நிற்க, உள்ளிருந்து வெளிப்பட்டார் பெண் மருத்துவர் ஒருவர். 


“டாக்டர், என் புள்ள…” என்று வருண் கலங்க, 

“நான் டாக்டர் அஞ்சலி. தைரியமா இருங்க வருண், உங்க பையன ஐ.சி.யூ.ல வச்சிருக்கோம். சீஃப் டாக்டர் இப்போ வந்துடுவாரு. கவலைப்பட ஒண்ணுமில்ல…” என்றவர் அவன் பதிலை எதிர்பாராமல் தனது அறைக்கு சென்றார்.

“சார், வெயிட்டிங் ஏரியால இருங்க, இங்க ஐ.சி.யூ. பக்கத்துல நிக்க கூடாது” என்று பணியாளர் ஒருவாறு அவர்களை சமாதானம் செய்து, அத்தளத்தில் இருக்கும் காத்திருப்பு அறைக்கு அழைத்துச் சென்றான். 


ஏறத்தாழ ஒரு மணி நேர காத்திருப்பின் முடிவில் பொறுமை இழந்தவனாய், தனது மகன் இருக்கும் அறையின் வாசலில் சென்று நின்றான், வருண். மீண்டும் அதே பெண் மருத்துவர் வெளிப்பட, “என் புள்ள எப்படி இருக்கான்னு யாராவது ஏதாவது சொல்லுங்க ப்ளீஸ். துவண்டு கண்ணு சொருகி கிடந்தான் டாக்டர். ப்ளீஸ் இப்போ எப்படி இருக்கான்?” என்று அழத்தொடங்கினான்.

“எங்க சீஃப் டாக்டர் ட்ரீட்மெண்ட் கொடுத்திருக்கார். பையனுக்கு ட்ரிப்ஸ் போட்டிருக்கோம். நீங்க பயப்பட தேவையில்லை வருண். கொஞ்ச நேரத்துல நார்மல் வார்டுக்கு மாத்திடுவோம்.”

“அவனை ஒரு தடவை பார்க்கலாமா?” என்றபடி கையெடுத்து வணங்கினான்.

“கண்டிப்பா” என்ற மருத்துவர், ஒரு செவிலியரை அழைத்து வருணை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறினார். 

தலைக்கு கவசம், முகக்கவசம், மேல் கவசம் என்று தொற்று ஏற்படாதிருக்க முழுவதுமாய் தன்னை தயார் செய்து கொண்டு உள்ளே சென்றான். தளர்ந்தும், சோர்ந்தும் உறங்கிக்கொண்டிருந்த மகனைக் கண்டு மனம் வெதும்பினான், வருண். ‘கடவுளே என் குழந்தைய நான் இப்படியா பார்க்கணும்?’ என்று கண்கள் கலங்கினான். அவனைத் தொட வருண் கைகள் நீட்ட, “சார் தொடாதீங்க, இன்பெக்ஷன் ஆகிடும்” என்று அங்கிருந்த செவிலியர் கூற, அவன் அமைதியாகிப்போனான். மன வருத்தத்துடன் மகனை பார்த்து நின்றிருந்தவனை, அவகாசம் முடிந்துவிட்டது என கூறி வெளியே காத்திருக்கும்படி செவிலியர் அனுப்பி வைத்தாள்.


“வருண், குழந்தை?” என்று கலங்கியபடி அவனது கைகளை பற்றினாள், மதி.

“இருக்கான்… பார்க்க முடிலடி… ஒரு இடத்துல அஞ்சு நிமிஷம் மேல உட்காரமாட்டான். துருதுருன்னு ஓடி விளையாண்ட புள்ள, இப்படி கிடக்கறத பார்க்கமுடில” என்றவன் அவளது கைகளை கண்களில் ஒத்தியபடி அழுதான். 


அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தள்ளி ஏதோ குரல் கேட்டு இருவரும் திரும்பிப் பார்க்க, அங்கே வயது முதிர்ந்த மருத்துவர் ஒருவர், மருத்துவர் அஞ்சலியிடமும் மேலும் இரு செவிலியரிடமும் உரையாடிக்கொண்டிருந்தார். அவரது பரிச்சயப்பட்ட முகத்தைக் கண்டு வருண் சினம் கொள்ள, நடப்பதை புரிந்துகொண்டவளாய் மதி அவனது கைகளை பற்றினாள்.


“இந்தாளு இங்க?” என்று வருண் மதியை நோக்க,

“இது ஹாஸ்பிடல் வருண், உன் கோவத்தை ஒதுக்கி வச்சிடு ப்ளீஸ். புள்ளை உள்ள இருக்கான்” என்று கெஞ்சினாள்.

“அதுக்கு? என் நேரம், இங்க கொண்டு வந்து என் புள்ளைய சேர்த்திருக்கேன் பாரு…” என்றவன், நேரே பேசிக்கொண்டிருந்தவர்களிடம் சென்றான்.    


அந்த மூத்த மருத்துவரைக் கண்டு முறைத்தவன்,

“டாக்டர் அஞ்சலி, நான் என் பையனை கூட்டிட்டு கிளம்பறேன். இனிமேல் ஒரு நிமிஷம் இங்க இருக்கமுடியாது” என்றுவிட்டு அவன் செல்ல, மருத்துவர் அஞ்சலி மற்றும் செவிலியர் இருவரும் அவனை ஐ.சி.யூ.வில் நுழைய விடாமல் தடுத்தனர். மதி அவனை பிரயத்தனப்பட்டு தடுத்து, அனைவருமாக அருகே இருந்த மருத்துவர் அஞ்சலியின் அறைக்கு அவனை அழைத்துச் சென்று, அமரச் செய்தனர்.


செவிலியர் இருவரையும் அனுப்பிவைத்த மருத்துவர் அஞ்சலி,

“மிஸ்டர் வருண், நீங்க என்ன பண்ண பார்த்தீங்கன்னு உங்களுக்கு புரியுதா?” என்றார்.

அவரைக் கண்டு முறைத்தவன்,

“நான் யாரை இனி என் வாழ்க்கைல பார்க்க கூடாதுனு நினைச்சேனோ, ஒதுங்கி இருக்கணும்னு நினைச்சேனோ, அந்த ஆளே என் முன்னாடி வந்து நிக்கும்போது வேற என்ன பண்ணுவாங்க?” என்றான்.

“யாரை சொல்றீங்க? சீஃப் டாக்டரையா?”

“ஆமா, அந்த ஆளு தான்”

“ஆளா? அவர் எவ்வளவு பெரிய டாக்டர்னு உங்களுக்கு தெரியுமா? இதென்ன மரியாதை இல்லாத வார்த்தை?!”

“அவர் என்னென்ன பண்ணியிருக்காருனு உங்களுக்கு தெரியுமா?” என்றான், ஆத்திரம் குறையாமல்.

“அப்படி என்ன பண்ணிட்டாரு? வருஷக்கணக்கா எத்தனையோ உயிர்களை காப்பித்தனவரு”

“ஆனா என்னோட அம்மாவை சாக விட்டு வேடிக்கை பார்த்தவர்”

“??”

“என்ன பார்க்கறீங்க? இவரு என்னை பெத்தவரு தான். நான் பத்து வயசா இருக்கும்போது என் அம்மா படுத்த படுக்கையா இருந்தாங்க. இவரு வேலை வேலைனு ஓடிடுவாரு. சாகர நேரத்துல கூட ஏதோ அவசரமா எமெர்ஜென்சி கேஸ்னு சொல்லி போயிட்டாரு. அவருக்கு மனசாட்சியே கிடையாது. என் கண்ணு முன்னாடி என் அம்மா இறந்து போனாங்க. ஆறுதல் சொல்ல கூட இவர் பக்கத்துல இல்லை. அன்னைக்கு முடிவு செஞ்சேன் இனி ஜென்மத்துக்கும் இவரை பார்க்க கூடாதுன்னு. என்னோட மாமா தான் என்னை வளர்த்தது. இவர் ஒரு தடவை கூட என்னை வந்து பார்க்கல. இப்ப சொல்லுங்க நான் இருக்கட்டுமா, இல்லை என் புள்ளைய தூக்கிட்டு கிளம்பட்டுமா?”

மெலிதாய் சிரித்த மருத்துவர் அஞ்சலி,

“உங்க மகனை நீங்க கொண்டுவந்து சேர்த்ததும், அவன் ரொம்ப சீரியஸ் கண்டிஷன்ல இருக்கான்னு புரிஞ்சது. உடனே நான் சீஃப் டாக்டருக்கு ஃபோன் பண்ணேன். வர வழியெல்லாம் டிராபிக்ன்னு சொல்லி, உடனே ஒரு சைக்கிளை எப்படியோ ஏற்பாடு செய்து, அவர் வயசுக்கு அஞ்சு கிலோமீட்டர அரக்கப்பரக்க ஓட்டிட்டு வந்தாரு, ‘உங்க’ மகனை காப்பாத்த. அவர் இப்படி செய்யறது முதல் தடவை இல்லை வருண். பல பிஞ்சு உயிர்களை காப்பாத்தி, பல குடும்பங்களை தழைக்க வச்சவர்”

“அவ்வளவு ‘நல்லவர்’ எதுக்கு என் அம்மா சாவுல, கூட இல்லை?” என்றான் கண்கள் கலங்கியபடி, கோபம் குறையாமல்.

“எனக்கும் இந்த கேள்வி மனசுல உருத்திட்டு இருந்தது வருண். ஒரு தடவை அவர் கிட்டயே கேட்டேன். ‘என்ன செய்தாலும் பிழைக்கமாட்டேன்னு தெரிஞ்சும், சாகப்போறவ பக்கத்துல நின்னு என்ன பண்ண போறீங்க? வாழவேண்டிய குழந்தைய போய் காப்பாத்துங்க. உங்களால முடிஞ்சளவு எல்லா உயிரையும் காப்பாத்துங்க. என்னோட இழப்பு உங்களுக்கு என்ன வலிய கொடுக்குமோ அந்த வலி வேறொருத்தர் அனுபவிக்க கூடாது. இதுதான் என் கடைசி ஆசை. வருணை பத்தி கவலைப்படாதீங்க, அவன் உங்களை புரிஞ்சுப்பான்’ - இதான் உங்கம்மா கடைசியா அவர் கிட்ட சொன்னது.” 


வருண் கலங்கி அமைதியாய் அமர்ந்திருக்க, “டேக் கேர்” என்றுவிட்டு மருத்துவர் அஞ்சலி செல்ல, “உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்ற வருணின் கேள்வி மருத்துவர் அஞ்சலியை தடுத்து நிறுத்தியது.

மீண்டும் அவன் எதிரே வந்து நின்றவர், 

“அவர் காப்பாத்தின அந்த குழந்தை நான் தான். நான் என்னோட பெற்றோருக்கு பத்து வருஷம் கழிச்சு பிறந்த குழந்தை. இதே மாதிரி ஒரு நாள் கையில என்னை தூக்கிட்டு ஹாஸ்பிடல் வாசல்ல என் அப்பா வந்து நின்னாங்க. உங்க அப்பா அன்னைக்கு தன்னோட வேதனையை மறைச்சுக்கிட்டு என்னை காப்பாத்தலேன்னா, இன்னைக்கு நான் இல்லை! என்னோட அம்மாவும் அப்பாவும் இன்னைக்கும் என்னை நினைச்சு அழுதுட்டு இருந்திருப்பாங்க. உங்க அம்மா சொன்ன ஒரு வார்த்தைக்காக மகனோடு ரெண்டு வார்த்தை பேச முடியாம, பேரனை தூக்கி கொஞ்ச முடியாம, மூணாவது மனுஷன் மாதிரி எட்டி நின்னு வேடிக்கை பார்க்கற வேதனை அவ்வளவு சாதாரணம் இல்லை. அவர் இத்தனையும் பொறுத்திக்கிட்டது உங்க கோபத்துல இருக்கற நியாயத்துக்கு கட்டுப்பட்டு தான். எந்த தகப்பனாலயும் தாங்கிக்க முடியாத விஷயம், பிள்ளை தன் மேல காட்டற வெறுப்பு தான். அதைக்கூட அவர் பக்குவமா ஏத்துக்கிட்டாரு. என்னை பொறுத்தவரை அவர் கடவுளில்ல, அதை விட ஒருபடி மேல” என்றுவிட்டு, தனது பணியைத் தொடர சென்றார்.


வெகு நேரம் அப்படியே அமர்ந்திருந்தான். மதி அவனையும் தங்களது பிள்ளையையும் எண்ணி மானசீகமாக கடவுளிடம் மன்றாடிக்கொண்டிருந்தாள். 

“சார் உங்க பையன் கண்ணு முழிச்சுட்டான்,நார்மல் வார்டுக்கு மாத்தியாச்சு” என்று செவிலியர் வந்து கூறிய பின் நினைவிற்கு வந்தவன், எழுந்து சென்று குழந்தையை பார்த்தான். சன்னமான குரலில் குழந்தை “அப்பா…” என்றழைக்க, உடைந்து அழுதவன், மகனை மெல்ல வாரி தனது மடியில் கிடத்திக் கொண்டான்.


குழந்தையை பரிசோதிக்க வந்த வருணின் தந்தை, மகனின் மடியில் பேரன் அமர்ந்திருப்பதைக் கண்டு சற்று கலங்கித்தான் போனார். அவனது மடியில் இருந்தபடியே குழந்தையை பரிசோதித்தவர், தன்னைக் கண்டு சிரிக்கும் குழந்தையைக் கண்டவரின் கண்கள் ஈரம் கொண்டன. குழந்தையின் கைகளையும், கேசத்தையும் வருடிப் பார்த்தவர், மிக அருகில் இருக்கும் தனது மகனை ஒரு முறை ஆசை தீர பார்த்துவிட்டு நகர்ந்தார். மதியிடம், “குழந்தைக்கு உடம்பு சரியில்லைன்னா ரொம்ப அஜாக்கிரதையா இருந்துடாதீங்க. நாலு வயசு புள்ளைக்கு என்ன சொல்ல தெரியும்? இனி பயப்பட எதுவும் இல்லை” என்றவர், மீண்டும் ஒரு முறை மகனையும், பேரனையும் பார்த்துவிட்டு அவ்விடம் விட்டுச் சென்றார்.


வெகு நேரமாக ஏதோ சிந்தனையில் தொலைந்தவனாய் அமர்ந்திருந்தான், வருண். மதி பேசியது, மகன் சிணுங்கியது என்று எதுவும் அவனது செவி சேரவில்லை. அவனால் தனது ஆர்ப்பரிக்கும் மனதை கட்டுப்படுத்த முடியவில்லை. 


எழுந்து சென்று, தந்தையின் அறையின் முன்னே நின்றான். சற்று தயங்கியவனாய், அறையின் கதவைத் தட்டினான். “எஸ் கம் இன்” என்று உள்ளிருந்து குரல் வந்ததும், கதவை திறந்து உள்ளே சென்றான். வருணின் தந்தை முதுகை காட்டியபடி ஜன்னலின் வழியே வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். கண்களை துடைத்தபடி திரும்ப, மகனைக் கண்டதும் உறைந்து போனார். வருண், அவரது அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களைக் கண்டான். அவனது சிறு வயது முதல், பள்ளி நாட்கள், கல்லூரி நாட்கள், திருமணம், அவனது மகனின் ஒரு வயது படம் வரை அனைத்தும் அங்கே இருந்தன. அதோடு, அவனது தாயின் மிகப்பெரிய படம் ஒன்றும், சந்தன மாலை அணிவிக்கப்பட்டு இருந்தது. அனைத்தையும் பார்த்தவன், கண்கள் கலங்கியபடி அவரின் நேரெதிரே சென்று நின்றான். தலையுயர்த்தி அவரைக் காண தவித்தவன், தன்னையும் மீறி ஓடிச்சென்று அவரைக் கட்டிக்கொண்டான். மகனின் அரவணைப்பில் நெகிழ்ந்து போனவர், வார்த்தைகளின்றி தடுமாற, வருண் கூறியதெல்லாம் ஒரு வார்த்தை மட்டுமே - “அப்பா!” 

No comments:

Post a Comment