Ad Text

Wednesday, 3 June 2026

கண்ணம்மா

 அடர்த்தியாக படர்ந்து, வளைந்து, அந்த நுழைவாயிலுக்கு நிழல் கூட்டியிருந்தன இருபுறமும் இருந்த அரச மரங்கள். அகண்ட இரும்புக் கதவுகளை பாதுகாவலர் திறக்க, மெல்ல உள்ளே ஊர்ந்து சென்றது அந்த கார். வண்டியின் உள்ளே, பயணியர் இருக்கையில் அமர்ந்திருந்த கண்ணம்மா, இடப்பக்க நுழைவாயில் கதவின் பக்கவாட்டில் இருந்த பதாகையை பெருமையோடும், நன்றி உணர்வோடும் பார்த்திருந்தாள். 

“செயின்ட் தாமஸ் மெட்ரிகுலேஷன் ஸ்கூல்” - மெல்ல தனக்குள்ளே முனகிக்கொண்டாள். 


வண்டி நின்றதும் அவள் கீழே இறங்க, அவளை சூழ்ந்துகொண்டு வரவேற்றனர் மற்ற ஆசிரியர்கள். சால்வைகளையும், பூங்கொத்துகளையும் வாங்கிக்கொண்டவள், தலைமை ஆசிரியர் அறைக்கு சென்றாள். ஆசிரியர்கள் விடைபெற்றுக்கொள்ள, ஒரு நிமிடம் அந்த அறையின் அமைதியை உள்வாங்கிக்கொண்டாள். மேசைக்கு எதிரே மாட்டப்பட்டிருந்த மறைந்த முன்னாள் தலைமை ஆசிரியர் மேரியின் படத்திற்கு முன் சென்று நின்றாள். 

‘கண்ணம்மா உன்னால முடியாதுன்னு யாரு சொன்னா?’ என்று சிரிப்போடு மேரி வினவும் குரல் அவளுக்கு மட்டும் கேட்டது. அந்த குரல் மட்டுமே அவளை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது. 


அருகே இருந்த ஜன்னலின் வழியே அகண்டிருந்த பள்ளியின் மைதானத்தைக் கண்டாள். ஒட்டியிருக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில், தனியே விட்டது போல், இரண்டு அடுக்கு கட்டிடம், ‘அப்துல் கலாம் நூலகம்’ என்ற பதாகையை தாங்கிக்கொண்டு நின்றது. 


“ஏன்டி வாரம் ஒரு தடவையாவது காசு வேணும்னு இந்த குழந்தைகளை தூக்கிட்டு வந்து நிக்கறியே, உன் புருஷன் வீட்லயும் போயி கேட்கவேண்டியது தான?” என்று நொடித்துக்கொண்டாள், அண்ணி.

ஐந்து வயதில் ஒரு மகன், மூன்று வயதில் ஒரு மகள். பெரிய வசதிகள் இல்லாமல் போனாலும், குறைபட்டுக்கொள்ள முடியாதளவு குடித்தனம். குடோனில் கணக்கு வழக்கு பார்க்கும் வேலையில், கணவனுக்கு போதிய வருமானம். சேமிப்பு என்பது சிரமம் தான். ஆனால் கடன் வாங்கும் நிலையில்லை. இது நிலைத்தாலே போதும் என்று நிதமும் அவள் வேண்டிக்கொண்டாள். ஒரு நாள் தலைவலி காய்ச்சல் என்று தொடங்கி, ஆறு மாதங்களாக படுக்கையில் கிடக்கும் கணவன். தன்னிடம் இருந்தவற்றை அத்தனையும் விற்றாகிவிட்டது. கணவனின் நிலை தேறுவதாக இல்லை. ஒரு வேளை உணவிற்கே சிரமம் என்றாகிப் போனது. ஆறு மாதத்தில் குடித்தனம் தலைகீழாகிப் போனது. உடன் பிறந்த அண்ணனை தவிர வேறு வழியில்லை. கணவனின் உடன் பிறந்தோர் யாரும் கண்டுகொள்வதாய் தெரியவில்லை. வேறு வழியின்றி அண்ணியின் ஏச்சுகளுக்கு நாசூக்கு பார்க்காமல், அவளிடம் சென்று நின்றாள். ‘தம்படி காசு இல்லாத அம்மா அப்பாவை அவன் பார்த்துக்கொள்கிறான். இதில் நான் வேறு ஏழரை போல’ என்ற வருத்தம் அவளுக்கு இல்லாமல் இல்லை. அவன் பெற்ற மூன்று குழந்தைகளின் பொறுப்புகளும் அவனை நசுக்கத்தானே செய்யும். 

கண்ணீரோடு நின்றிருந்தாள். அம்மா கொடுத்த காபியும், பிள்ளைகளுக்கு தலா இரண்டு பிஸ்கெட்டுகளும் தான் அன்றைக்கான பயணத்தின் வரவு. வீட்டிற்கு திரும்புகையில் ஏதேதோ யோசனைகள் அவளை அழைக்கழித்தன. பாவம், மேலும் பல துயரங்கள் அவளை துரத்த காத்து நிற்கின்றன என்பதை அறியாதவளாய்.


அன்று இரவே தன்னால் இனி எந்த பயனும் இல்லை என்று உணர்ந்தவன் போல, கண்ணம்மாவின் கணவன் இறந்து போனான். மீண்டும் அண்ணனிடம் தஞ்சம். அண்ணியின் கொடுக்கு பேச்சு. வேறுவழியின்றி அமைதியாகிப் போன பெற்றோர். ‘அப்பப்பா! மனித ஜீவிதம் இத்தனை குரூரங்கள் நிறைந்ததா?’ என்று பேதலித்துப்போனாள். 


என்ன வேலை செய்வது, எப்படி பிழைப்பது என்று புரியாமல் தவித்து போனாள். ஒரு கை சோற்றினை தொண்டைக்குழிக்குள் தள்ளுவது பெரும்பாடாக இருந்தது, அதனோடு பல அவமானங்களையும் முழுங்க வேண்டியிருந்ததால். ‘போதும்’ என்று முடிவு செய்தவளாய், பிள்ளைகளோடு பாலத்தின் மேல் சென்று நின்றவள், ‘உயிர் பிழைத்து என்ன ஆகப்போகிறது? இத்தனை பெரிய உலகில் மூன்று உயிர்கள் தொலைவதால் எதுவும் ஸ்தம்பித்து விடப்போவதில்லை’ என்ற எண்ணத்தில் நீருக்குள் பாய்ந்திட அவள் நினைக்க, அவளை தடுத்து நிறுத்தியது, மேரி.


அவளது கதையைக் கேட்டறிந்த மேரி, உதவிக்கரம் நீட்டினாள்.

“ஒருநாள் சாகத்தான் போறோம். அதுவரைக்கும் வாழ்ந்து பார்த்துட்டுத்தான் போவோமே. என்னதான் இந்த வாழ்க்கை வச்சிருக்குனு தெரிஞ்சுக்க வேண்டாமா?” 

அவள் தற்போது நின்றிருக்கும் அதே அறையில், தலைமை ஆசிரியர் இருக்கையில் மேரி அமர்ந்தபடி வினவ, எதிரே பிள்ளைகளோடு அமர்ந்திருந்தவள், அமைதியாகிப் போயிருந்தாள். 

“வாழ வழியில்லை மேடம். காசு இல்லாதவனுக்கு இந்த உலகத்துல இடமில்லை மேடம்.”

“காசை கடவுள் படைக்கல. அது மனுஷ கண்டுபிடிப்பு. அதை நம்பி இறைவன் நம்மள இங்க அனுப்பி வைக்கல”

“வேற நான் என்ன பண்ணட்டும் மேடம்? போக்கிடம் இல்லை. இந்த புள்ளைங்களுக்கு எதிர்காலம் இல்லை.”

“அதை நீங்க எப்படி தீர்மானிக்கலாம்? காசில்லாம இருக்கற உங்க மகன் நாளைக்கு கர்னனா வாழலாம். உங்களுக்கும் எனக்கும் தெரியாது. பிள்ளைகளோடு கண்களை பாருங்க. எவ்வளவு நம்பிக்கை! வாழ்க்கை மீது எவ்வளவு வேட்கை!! அதை அணைச்சுடாதீங்க. இதெல்லாம் கடந்து போகும்.”

கண்ணம்மா அழுது தீர்த்தாள்.


“என்ன படிச்சிருக்கீங்க கண்ணம்மா?”

“பத்தாவது மேடம். எனக்கு ஏதாவது வேலை கிடைக்குமா? எப்படியாவது பிழைச்சுப்பேன்..”

சிரித்துக்கொண்ட மேரி, “இப்போ உங்க கண்ணுலயும் நம்பிக்கை லேசா மின்னுது” என்றவள், சற்றே யோசித்துவிட்டு, “இப்போதைக்கு ஆயாம்மா வேலைதான் இருக்கு, நீங்க…” என்று கூறி முடிப்பதற்குள்,

“நான் செய்யறேன் மேடம்” என்று அவசரமாக கண்ணம்மா பதிலுரைத்தாள்.

“சரி” என்ற மேரி, உடனே அவளை பணியில் அமர்த்தினாள். 


“என்னாச்சு மேடம் கவலையா இருக்கீங்க?” 

ஒரு நாள் வழக்கம் போல் கண்ணம்மா அனைத்து ஆசிரியர்களுக்கும் மதிய தேநீர் வழங்கியவள், மேரி ஏதோ கவலையாக இருப்பதைக் கண்டு மனம் தாளாமல் வினவினாள்.

“ஆங்… ஒண்ணுமில்ல கண்ணம்மா… அது…”

“சொல்லுங்க மேடம்”

“வெள்ளிக்கிழமை நம்ம ஸ்கூல்க்கு இன்ஸ்பெக்ஷன் வராங்க. புதுசா திறந்திருக்கற லைப்ரரில இருக்கற புத்தகங்களுக்கு லைப்ரரி கார்ட் ஒட்டணும். இன்னைக்கு செவ்வாய்க்கிழமை. இன்னும் மூணு நாள்ல… டீச்சர்ஸ் யாரும் பெருசா ஒத்துழைக்கல… எப்படி செய்து முடிக்கறதுனு…”

“நான் ஒட்டித் தரேன் மேடம்…”

“ஆயிரம் புத்தகங்கள் இருக்கு கண்ணம்மா…”

“அதனால என்ன மேடம், பகல்ல வேலையை முடிச்சுட்டு, சாயங்காலம் பசங்க போனதுக்கு அப்புறம் நான் ஒட்டிடறேன்”

“நீ நினைக்கற மாதிரி…”

“கவலைப்படாதீங்க மேடம்” என்றவள், அன்றிரவு பிள்ளைகளோடு விளையாடியபடி ஓரளவு ஒட்டி முடித்தவள், அங்கேயே உறங்கிப்போனாள்.


மறுநாளும் பணி முடிந்து நூலகத்தில் தனது பணியைத் தொடங்கியவள், இரவு உணவினை பள்ளிக்கூட அடுக்களையில் பிள்ளைகளுக்கு சமைத்து கொடுத்து உறங்க வைத்துவிட்டு, தொடர்ந்தாள். 


வெள்ளிக்கிழமை காலை, ஆய்வு செய்யும் குழுவினர் வருகை தந்திருந்தனர். அனைத்து ஆசிரியர்களும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்க, கண்ணம்மா தனது அன்றாட பணிகளை செய்துகொண்டிருந்தாள். முன் மாலைப்பொழுதில் அவளை மேரி அழைத்ததாக உடன் பணிபுரிபவர் கூற, சற்றே பதட்டத்துடன் மேரியின் அறைக்குள் நுழைந்தாள், கண்ணம்மா.


அவளைக் கண்டதும் ஓடி வந்து கட்டிக்கொண்ட மேரி, “கண்ணம்மா, இன்னைக்கு இன்ஸ்பெக்ஷன் ரொம்ப நல்லபடியா முடிஞ்சுது. நம்ம ஸ்கூலை பத்தி ரொம்ப பெருமையா கமிட்டீல சொன்னாங்க. லைப்ரரிய எவ்வளவு அழகா மாத்தி வச்சிருக்க! புத்தங்கங்களை சீரா அடுக்கி வச்சு, அந்த இடத்தை சுத்தம் செய்து… ப்பா… ரொம்ப சந்தோஷமா இருந்தது… எப்படி இவ்வளவும் செய்த?”

“மூணு நாளா, ராத்திரியில பிள்ளைகள தூங்க வச்சுட்டு நான் செஞ்சேன் மேடம்…”

“ராத்திரியில ஸ்கூல்லயே தங்கிட்டியா?”

“ஆமா மேடம்…”

”வீட்ல ஒன்னும் சொல்லலையா?”

“அவங்களும் நிம்மதியா இருந்தாங்க, கொஞ்ச நேரமே ஆனாலும், நானும் ரொம்ப நாள் கழிச்சு நிம்மதியா தூங்கினேன்…”

“கண்ணம்மா…”

“மேடம், நான் ஸ்கூல்லயே தங்கிக்கவா?”

மேரி அவளது கேள்வியால் அதிர்ந்து போனாள்.

“அது அது… நான் யோசிச்சு சொல்றேன்…”


மறுவாரமே கண்ணம்மா எதிர்பார்த்த ஏற்பாடுகள் தயாராகின. பள்ளி வளாகத்தில் அல்லாது, அரை கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தனது இல்லத்தில், மாடியில் இருக்கும் ஒற்றை அறையை கண்ணம்மா தங்கிக்கொள்ள ஏற்பாடு செய்து கொடுத்தாள், மேரி. 

“இங்கயே தங்கிக்கோ. என் கணவர் வெளிநாட்டுல வேலை செய்யறாரு. நானும், என் பொண்ணும் தான் இருக்கோம். இது சின்ன இடம் தான், பிடிச்சிருக்கா? ரூல்ஸ் படி ஸ்கூல்ல தங்கக்கூடாது கண்ணம்மா” என்று மேரி, கண்ணம்மாவின் கைகளை பற்றிக்கொண்டு கூற, 

“சின்ன இடமா? இல்ல மேடம், இந்த உலகமே எனக்கு கிடைச்ச மாதிரி இருக்கு. இதுக்கெல்லாம் நான் என்ன கைமாறு செய்யப்போறேன்னு தெரியல…” என்று நெகிழ்ந்து போனாள், கண்ணம்மா.

“என் மனசுல ஒரு எண்ணம் இருக்கு, சீக்கிரமே அதை பத்தி பேசுவோம்” 

வெகு காலம் கழித்து குறையா மகிழ்ச்சிகளை வாழ்க்கை அள்ளித்தந்தது போல் இருந்தது கண்ணம்மாவிற்கு. வாழ்க்கை, குரூரங்களை மட்டுமல்ல குறிஞ்சி மலர்களையும் பரிசளிக்கத் தான் செய்கிறது. பிள்ளைகளோடு விளையாடுவதும், நிம்மதியாக உறங்குவதும் அவளது வெகு நாட்களின் ஏக்கங்கள். எல்லாம் கிடைத்துவிட்டதை போல, மனம் அமைதி கொண்டாள்.


ஓர் நாள் மாலை, கண்ணம்மாவின் அறைக்கு வந்த மேரி, 

“கண்ணம்மா, இடமெல்லாம் வசதியா இருக்கா?” என்றாள்.

“ரொம்ப வசதியா இருக்கு மேடம். இது போதும்.”

“அப்படி சொல்லக்கூடாது”

“??”

“இன்னும் வாழ்க்கை ரொம்ப தூரம் இருக்கு கண்ணம்மா…”

“புரியல…”

“நீ பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு எழுது. மேலே படி. டீச்சருக்கு படி. இன்னும் பெரிய வேலைக்கு போ. இதுதான் நீ எனக்கு செய்யற நன்றிக்கடன்”

“மேடம், நானா? என்னால முடியாது மேடம்…” - சற்றே தயங்கினாள், கண்ணம்மா.

“உன்னால முடியாதுன்னு உனக்கு யார் சொன்னா? நெஞ்சு நிறைய வைராக்கியத்தை வச்சிருக்கியே, அது ஒன்னு போதும். தனி ஒரு ஆளா ஆயிரம் புத்தகத்தை ராத்திரி முழுக்க கண்ணு முழிச்சு ஒட்டினியே. சின்ன வேலையா இருந்தாலும் ஸ்கூல்ல நல்ல பேரு வாங்கியிருக்கியே. எப்படியாவது வாழ்ந்துடணும்னு ஒரு நம்பிக்கையோட இருக்கியே. இதெல்லாம் தான் தேவை. எதையும் சாதிச்சுடலாம்!!”

“மேடம்…”

“என் பொண்ணு டீச்சர் ட்ரைனிங் பாஸ் பண்ணிட்டா. அவளே நீ படிக்க உதவி பண்ணுவா. நீ படிக்கற. யாருக்கு தெரியும், ஒரு நாள் நீ என் இடத்துக்கு வந்தாலும் வரலாம். வாழ்க்கை என்னென்ன ஆச்சர்யங்களை ஒளிச்சிவச்சிருக்குன்னு தேடினாத்தான் தெரியும்”


அதன் பிறகு கண்ணம்மாவின் வாழ்வு ஏறுமுகம் மட்டுமே. பன்னிரண்டாம் தேர்வு முடித்து, பி.ஏ. மற்றும் எம்.ஏ. தமிழ் படித்து முடித்து, எம்.எட். படித்து முடிக்கையில், பால்வாடி ஆசிரியராக தொடங்கிய அவளது பயணம் பன்னிரண்டாம் வகுப்பு ஆசிரியராக அவளை உயர்த்தியிருந்தது. 


சில மாதங்களுக்கு முன் மேரி இறைவனடி சேர, தற்காலிக தலைமை ஆசிரியராக வேறு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், நிரந்தர தலைமை பொறுப்பை கண்ணம்மாவிற்கு வழங்கிட பள்ளியின் மேலாண்மை குழு முடிவு செய்ததை அடுத்து, இன்று பதவியேற்பு ஏற்பாடுகள் தயாராகின.


மாணவர்கள் அனைவரும் அணிவகுத்து நிற்க, உதவி தலைமை ஆசிரியர் ஒலிபெருக்கியில் பேசத் தொடங்கினார்.

“அனைவருக்கும் காலை வணக்கம்! இன்று நமது பள்ளியின் வரலாற்றில் ஆகச்சிறந்த மற்றுமொரு பொன் நாள். இன்று, நமது பள்ளியின் தலைமை ஆசிரியராக மதிப்பிற்குரிய கண்ணம்மா அவர்கள், பதவியேற்றுள்ளார். கடை நிலை ஊழியராக தொடங்கிய அவரது வாழ்க்கை பயணம் இன்று அதே பள்ளியின் தலைமை பொறுப்பினை ஏற்கும் அளவிற்கு அவரை உயர்த்தியது, தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் மட்டுமே. அவர் நமக்கு வழிகாட்டியாகவும், உத்வேகத்தோடு நாம் செயல்பட உறுதுணையாகவும் இருக்க வேண்டுமென்று அனைவரின் சார்பாக நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த பொன்னான நிகழ்வை சிறப்பிக்கும் விதம், தலைமை ஆசிரியரின் மகனும் மகளும் வருகை தந்துள்ளனர். திரு குமரன் அவர்கள், பன்னாட்டு நிறுவனமொன்றில் மென்பொறியாளராக பணியாற்றுவதோடு, பல சமூக சேவை அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டு, தன்னால் ஆன பங்களிப்பை இந்த சமூகத்திற்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். நமது பள்ளியில் ஏறத்தாழ ஐந்து பிள்ளைகளின் கல்வி செலவினை ஏற்றுக்கொண்டுள்ளார். தலைமை ஆசிரியரின் மகள், நான்காம் ஆண்டு முதுகலை மருத்துவ படிப்பு மேற்கொண்டுள்ளார். தனது அண்ணனோடு இணைந்து சமூக ஆர்வலராக தொண்டாற்றி வருகிறார். இவர்களை வரவேற்கும் விதமாக, அனைவரும் கை தட்டவும்!” கை தட்டல்களின் ஒலி விண்ணை பிளந்தது!!


 

No comments:

Post a Comment