Monday, 30 July 2018

குப்பைக்காரன்

‘கோபம் தான் எனக்கு. ரொம்ப கோபம். பணமென்ன மரத்துலையா காய்க்குது?! பொன் முட்டையிடும் வாத்துக்குதான் வலி தெரியும். வெயில் மழை பார்க்காம வேலைக்குப் போன எனக்கு தான் கஷ்டம் தெரியும். இவ தங்கச்சி புருஷனுக்கு ஆப்ரேஷனுக்கு நான் ஐம்பதினாயிரம் தரணுமா? நல்ல கதையா இருக்கு. இவ அம்மா வீட்ல வழி இல்லனா நான் தான் கிடைச்சேனா? என் பொண்ணு, புள்ளையெல்லாம் செட்டில் ஆயிடுச்சுன உடனே கெளம்பி வரானுங்க இவனுக்கு இந்த பிரச்சனை அவனுக்கு அந்த பிரச்சனைனு சொல்லிக்கிட்டு. எல்லாம் இவள சொல்லணும். ஒழுங்கா பதில் சொல்லி அனுப்பறத விட்டுட்டு என் கிட்ட வந்து காசுக்கு நிக்கறா. இன்னைக்குப் போட்ட சத்தத்துல இனி ஜென்மத்துக்கும் எவனுக்கும் சிபாரிசு பண்ணிக்கிட்டு வந்து நிக்க மாட்டா. அந்த வகையில நல்லதா போச்சு’ என்று மனதிற்குள் எண்ணியபடியே மிகுந்த எரிச்சலோடு கடைவீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார் சுவாமிநாதன். பணி ஓய்வு பெற்று, பென்ஷன், இரண்டு வீட்டு வாடகை என்று தாராளமாகத் தான் பணம் புழங்கியது அவரிடம். ஆனால் இந்த நிலை அவருக்கு அவ்வளவு சுலபத்தில் கிட்டவில்லை என்பது நிதர்சனமான உண்மை. தனியார் நிறுவனத்தில் சூபர்வைசராகப் பணியமர்ந்து மெல்ல மெல்ல முன்னேறி, பணி ஓய்வு பெறும்போது அந்நிறுவனத்தின் மேலாளராக இருந்தார். யார் தயையும் இன்றி பிள்ளைகளின் படிப்பு, திருமணம், சொத்து என்று தனது கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளை எண்ணி அவ்வப்போது பெருமிதம் கொள்வார். ஆனால் இதெல்லாம் தனது மனைவி மக்களுக்கு எங்கே விளங்கிடப் போகிறது என்று ஒரு சலிப்பும் அவர் மனதில் தவறாமல் தோன்றும்.

தலை கவிழ்ந்து நடந்து வந்தவரின் கால்கள் தன்னிச்சையாக வேகம் குறைக்க, முகத்தை சுழித்துக்கொண்டு நிமிர்ந்து பார்த்தவரின் எதிரே, ஒரு இருபது அடி தள்ளி குப்பை வண்டி ஒன்று நின்றுகொண்டிருந்தது. அதனருகே இருந்த குப்பைத்தொட்டியில் கிடந்த குப்பைகளை இரண்டு ஊழியர்கள் மடமடவென்று அள்ளி கொட்டிக்கொண்டிருந்தனர்.

குப்பைத்தொட்டியின் சமீபத்தில் இருந்த பிரியாணி கடையின் வாயிலில் அந்த இரண்டு ஊழியர்கள் தலை சொரிந்துகொண்டு நிற்க, உள்ளிருந்து வந்த கடை ஊழியன் ஒருவன் அவர்களிடம் நான்கு பொட்டலங்கள் கொடுக்க, சலாம் வைத்துவிட்டு நகர்ந்தனர். அவ்விருவரில் ஒருவன் ஓட்டுநர் புறம் ஏறிக்கொள்ள, மற்றொருவன் வண்டியின் பின்புறம் தொத்திக்கொண்டான். அவன் ஒரு கையால் வண்டியைப் பற்றிக்கொண்டு, மற்றொரு கையால் சற்றுமுன் அள்ளிப் போட்ட குப்பையைத் துழாவினான். அவனின் செய்கையைக் கண்ட சுவாமிநாதன் தலையில் அடித்துக்கொண்டு, முகத்தை சுழித்துக்கொண்டு நின்றிருந்தார்.

குப்பை வண்டி கிளம்பி சிறிது தூரம் செல்ல, வண்டியின் பின்னே தொங்கிக் கொண்டிருந்தவன், தெருவோரம் படுத்துக்கிடந்த சில நாய்களுக்கு எதோ வீசிவிட்டுச் சென்றான். அவை இறைச்சி துண்டுகள் என்று தொலைவில் இருந்த சுவாமிநாதனுக்கு விளங்காமல் இல்லை. அக்காட்சியைக் கண்ட நொடி அவர் பேய் அறைந்தார் போல் நின்ற இடத்தில் உறைந்து போனார். குப்பைவண்டி பார்வையினின்று  மறைந்த பின் நினைவிற்கு வந்தவர், திரும்பி வீட்டை நோக்கி நடந்து சென்றார்.

ஒரு லட்ச ரூபாய்க்குக் காசோலையை மனைவியிடம் கொடுத்துவிட்டு, அருகிலிருந்த சிவாலயத்திற்கு சென்றுவிட்டார். சுவாமி தரிசனம் முடிந்து மண்டபத்தில் வந்து அமர்ந்தவர் கண்களை மூடி சுவாமியின் திருவுருவை நினைவுக்கூற முற்பட, அவரின் மனக்கண்ணில் தோன்றியது அக்குப்பைக்காரனின் முகமே!!

No comments:

Post a Comment