Wednesday, 4 July 2018

பருவத்தின் வசந்த காலம்...

அது ஒரு வசந்த காலம். துளிர்த்து சிலிர்க்கும் மரங்களைப்போல், மனதின் ஆழத்தில் அதுவரை அறிந்திடாத, அழகான, ஆத்மார்த்தமான, ஆனந்தமான எண்ணங்கள் முட்டி முளைத்து, நரம்புகளோடு வேரூன்றும் பருவ காலம். அவனை முதல் முறை காண்கிறேன். சட்டென என் நெஞ்சில் பதிந்தது அவனது காந்தக் கண்கள். அந்த அரை நொடிப் பார்வை, என் உயிர் வரை தீண்டியது. படபடக்கும் பட்டாம்பூச்சி சிறகுகள், என் நெஞ்சுக் குழிக்குள் துடிப்பது போல் ஒரு உணர்வு. அன்று என் நெஞ்சின் ஓரத்தில் ஒரு ரகசியப் பெட்டியைத் திறந்து வைத்தேன், அவனின் நினைவுகளை அதற்குள் சேகரிக்க. நான் மட்டுமே அறிந்த ரகசியப்பெட்டி!!

போகிறபோக்கில் அவன் சிந்திச் செல்லும் சிரிப்புகளுக்கு, எனக்குப் பிடித்த அர்த்தங்களைக் கொடுத்து அப்பெட்டிக்குள் அடுக்கிவைத்தேன். அவ்வப்போது அவற்றை மீட்டெடுத்து மகிழ்ந்தும் போனேன். எப்பொழுதாவது என்னிடம் அவன் பேசினால், என் கால்களின் நடுக்கத்தை என்னவென்று நான் சொல்ல!! பதில் கூறமுடியாமல் என் தொண்டைக்குழிக்குள் சிக்கிக் கிடக்கும் வார்த்தைகளைப் பிடித்து இழுத்து வெளியே தள்ளுவதற்குள் என்னுள் ஒரு உலக யுத்தமே அரங்கேறிடும்.

அவனது குரல், இரவும் பகலும் என் காதுக்குள் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மதுரமாய்… அமிர்தமாய்… என் பெயர் சொல்லும்பொழுது செந்தேனாய்… வார்த்தைகள் சிந்தும்பொழுது கற்கண்டாய்… நினைவுப்பெட்டகத்தில் அனைத்தும் கிடக்கின்றன. என்னிடம் எண்ணியெண்ணி அவன் பேசிய வார்த்தைகள், எண்ணிக்கை மாறாமல் என் உள்ளே வாழ்கின்றன.

எதேச்சையாக அவன் என் அருகில் நின்றால், என் விரல்களுக்குள் சிக்குண்ட என் துப்பட்டாவின் நுனியைக் கேட்டால் தெரியும் என் நிலை. அந்த நுனி, என் விரல்களுக்குள் சுருண்டு, விரிந்து, கசங்கி, குழைந்து, தோய்ந்து போவது போல், அந்த சில நொடிகளில் என் மனமும் ஆயிரம் அவஸ்தைக் கொள்கிறது.

அவனிடமிருந்து வரும் பிறந்தநாள் வாழ்த்துச் செய்திக்காக, வருடம் முழுதும் தவம் கிடக்கிறேன். விறுவிறுவென காலண்டர் பக்கங்களைக் கிழித்து வீச கைகள் பரபரக்கிறது. அந்த குறுஞ்செய்தியில் அவன் இட்ட முற்றுப்புள்ளியைக் கூட மணிக்கணக்காய் ரசித்திருக்கிறேன். அந்த முற்றுப்புள்ளியிலும் அவன் முகம் தெரிகிறதே!!

ஒரு ரகசியம் கூறவா? என்னுள் இப்பொழுது நூறு பெட்டிகள் சேர்ந்துவிட்டன. நெஞ்சை முட்டும் அளவு..  மூச்சு திணறும் அளவு… தனிமைதான் எத்தனை சுகம்! அவனது ஒவ்வொரு நினைவையும் அசைபோட்டுக்கொண்டு காலம் மறந்து கிடப்பது தான் எத்தகைய தவம்!! இப்படியும் ஒரு மாயம் உண்டா?!! இது தான் பருவத்தின் வசந்த காலமா?!!

No comments:

Post a Comment