கடற்கரையில் அமர்ந்திருக்கிறேன். ஆர்ப்பரித்துக்கொண்டு பாய்ந்துவரும் அலைகள், கல கல வென சிரித்துக்கொண்டு தொட்டு தொட்டு மீளும் சிறு குழந்தையைப்போல், என் கால் விரல்களை வருடிச்சென்று போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது. நீயும் இந்த அலைகள் போல் தானடா - ஒரு முறை சிரிப்பாய், மறு முறை முறைப்பாய்… போக்கு காட்டும் என் காதல் போக்கிரி!! ‘ஏன் அப்படி முறைக்கிறாய்?’, ‘எனக்காகவா சிரிக்கிறாய்!!’, என்று ஒவ்வொரு முறையும் சிந்தித்தேன். பிறகு உன்னைப் பற்றி சிந்தித்தேன். உன்னைப் பற்றி சிந்தித்தவை உருமாறி உன்னை மட்டுமே சிந்திக்கலானேன். சிந்தை சூறையாடிய என் செங்கதிரோன்!!
உச்சி வெயிலில் ஜொலிக்கும் கடல் நீர் உன் சிரிப்பல்லவா! வெயிலில் அனல் கக்கும் மணல் பரப்பு உன் கோபம் அல்லவா! இதோ கண்முன்னே விரிந்துகிடக்கும் கடல் என் காதல் அல்லவா!! என்னால் நீ… உன்னால் நான்…
நீ சிரிக்கையில் கைக்கோர்த்து நிற்கும் அலையின் நுரை போல், மனதில் இன்பங்கள் படையெடுத்து நிற்கிறது. உன் கோபம் கண்டால், பட்டென வெடித்து மரிக்கும் நீர் குமிழி போல், சட்டென என் மனம் துன்பத்தில் துவள்கிறது.
கடல் மேல் மிதக்கின்றன ஆயிரம் கப்பல்கள். அவற்றுள் ஓர் படகாய் நான். கலங்கரை விளக்கமாய் உன் ஒளி - எனக்குமா? எனக்கு மட்டுமா??
எதுவாயிருப்பினும் எனது காதல் கடலில் ஆசை அலைகள் ஓய்வதாய் இல்லை.
கரையோரம் ஒதுங்கும் கிளிஞ்சல்களை சேர்த்து வைக்கிறேன். உனக்கும் எனக்குமாய் ஓர் அழகிய சிறு கிளிஞ்சல் கூடு கட்டிக்கொள்வோம்... சம்மதமா??!!
முத்துக்குளிப்போம் நீயும் நானும். சிப்பிகளை அள்ளி வந்து முத்து மாலை கோர்த்திடுவோம். உனக்கு நான் சூட, எனக்கு நீ சூடுவாய். கடல் சாட்சியாய் ஓர் கந்தர்வ திருமணம்… சம்மதமா??!!
அதோ தொலைதூரத்தில் கடலும் வானும் முத்தமிட்டு சங்கமித்துக்கொள்கின்றன. அது போல், உன்னுள் நான், என்னுள் நீ … முப்பொழுதும்… எப்பொழுதும்… சம்மதமா??!!
நம் பிள்ளை இரவில் உறங்கிட, பிறை நிலவினை தூளியாய் கடன் வாங்கிடுவோம்… தூளியை நீ ஆட்ட, தாலாட்டு நான் பாடுவேன்… சம்மதமா??!!
காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்தும் வாழ்வு நிறைந்தபின், கடற்கரை காற்றோடு காற்றாய் மாறி காலம் தாண்டியும் கை கோர்த்து நாம் கிடப்போம்… சம்மதமா??!!
கண்கள் மூடி உன் முகம் காண்கிறேன். உன்னை எண்ணும்பொழுதெல்லாம் இதழோரம் சிரிப்பு, உடலெங்கும் சிலிர்ப்பு, காற்றில் உன் வாசம், காலடியில் சொர்க்கம். இது மட்டும் போதும்…
மடி மீது ஏதோ கனம்… விழி திறந்து பார்த்தால், உன் முகம். எப்பொழுது வந்தாய்? எதற்கு வந்தாய்? என் மடி மீது பள்ளி கொண்டுள்ளாய், மன்மத ராஜனைப் போல்!
என் காதல் பெண்ணே, உன்னை நீங்கிச் சென்றால் தானடி உனைத் தேடி மீண்டும் வர… என் பைங்கிளிக்கு நான் என்ன போக்கிரியா? எனது சிரிப்புகள் மட்டும் போதுமா? எனது கோபங்களும் உனக்கே… எனது நட்பும் உனக்கே… எனது பகையும் உனக்கே… எனது கர்வமும் உனக்கே… எனது பணிவும் உனக்கே… எனது நொடிகளின் உணர்வுகள் அனைத்தும் உனக்கே உனக்காய்… என்னை நீ அறிந்துகொள்ள… நான் அறியாத என்னை நீ அறிந்துகொள்ள!!
எனது சிரிப்பும் கோபம் சில நாழிகையே… அழகே, அந்த கடல் போல் உன் மனம் தான் முடிவிலியன்றோ! நீ சீறினால் என் சிரிப்பு தான் உன்னை தடுத்திடுமோ… என் கோபம் தான் உன்னை நிறுத்திடுமோ… இந்த மண்மேடும் உன்னுள் புதைந்துபோகமாட்டேனா…
அடி பெண்ணே, உன் கலங்கரை விளக்கம் நானா? உன் படகின் லாந்தர் ஒளியில் உயிர் வாழும் ஈசல் நான். உன்னால் நான்… உன்னால் மட்டுமே நான்…
உன் ஆசைகள் அனைத்தும் தேனாய் தித்திக்கிறது. ஆயினும், எனக்கு எதிலும் சம்மதம் இல்லை.
கிளிஞ்சல்களால் செய்த கூடு எதற்கு? என் உயிர்கொண்டு மாட மாளிகை செதுக்கிவைத்துள்ளேன். அதன் சிம்மாசனத்தில் நீ வந்து அமர்ந்திடுவாய். உன்னைக் கவர்ந்த கிளிஞ்சல்களை வெறுக்கிறேன்!
முத்துமாலை மாற்றி திருமணமா? உன்னுள் நாள் நுழைந்தவேலை, என்னுள் நீ புகுந்த வேலை, மனங்கள் இடம் மாறி திருமணம் முடிந்துவிட்டது. இந்த முத்துக்கள் மரத்தில் காய்த்தால் என்ன?… என் கண்மணி மூச்சடக்கி முத்துக்குளிப்பதா??… முடியாது!
பேதை பெண்ணே, கடலும் வானும் கானல் கூடல் கொண்டுள்ளன. உனது தந்திரங்கள் என்னிடம் வேண்டாம். இந்த கடலும் கரையும் போல் நமது சங்கமங்கள் இருக்கும்… முப்பொழுதும்… எப்பொழுதும்…
பிள்ளைக்கு எதற்கு பிறை நிலா? என் தோள்கள் அவனுக்கு தூளியாகட்டும்… என் நெஞ்சத்துத் துடிப்பு தாலாட்டு பாடட்டும்… நீயும் தூங்கடி கண்மணி, எனது மறு தோள் சாய்ந்து!
காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்தும் வாழ்வு நிறைந்தபின், மீண்டும் பிறந்திடுவோம் காதலாகியும்… காதல் கொண்டும்… காதல் செய்வதற்கே, பல கோடி முறை!!
கண்களைத் திறந்து என்னை பார். உன் இதழோரம் சிரிப்போடு, உன் வெட்கமும் தா... எனக்கும் சிலிர்க்கட்டும். உன் வாசம் மட்டுமே என் சுவாசமாய், நம் காலடியில் சொர்க்கம். இது போதும்...இது மட்டும் போதும்!!
No comments:
Post a Comment