Thursday, 10 January 2019

உன் வர்ணங்கள் எங்கே?

விடியலில் சிரிக்கும் கதிரொளி பட்டு
தூக்கம் கலைந்தது, வண்ணத்துப்பூச்சி!
“நாள் தந்த ஆதவனுக்கு நன்றி!
உணவு தந்த மலர்களுக்கு நன்றி!
இடம் தந்த பூமிக்கு நன்றி!
அனைத்தும் தந்த சாமிக்கு நன்றி!!”

பறப்பதற்கு ஆயத்தமாய்
பிரித்துப்போட்டது சிறகை
அவிழும் மலர் நோக்கி
குறிவைத்தது இலக்கை

“உனது சிறகின் வர்ணங்கள் எங்கே?”
வழிமறித்தான் நண்பன்
“சிறகின் சித்திரத்தை சிதறிவிட்டாயோ?”
விழிவிரித்தான் அவன்

சூரியனுக்கும் தனக்கும் மத்தியிலே
சிறகை உயர்த்தியது வண்ணத்துப்பூச்சி
முகமெல்லாம் வண்ண வண்ண
கோலம் வரையும் பேரொளி
சாயம் தீர்ந்து சாம்பல் நிறம் தந்து
அதன் கடுகு விழிகளில் கண்ணீர் தந்தது

வர்ணங்களைத் தேடி
வெகுண்டெழுந்தது!!
செடியின் காம்பில் தேடியது
அங்கில்லை...
தரையில் துள்ளி துழாவியது
அங்கில்லை...
இலையின் அடியில் நோக்கியது
அங்குமில்லை...
திசை நான்கும் அலைகிறது
எங்குமில்லை...

சுக ராகம் பாடும் குயிலிடம் சென்றது
“குயிலே… கருங்குயிலே…
என் சிறகினைக் கண்டாயா!!
பொலிவிழந்து துவள்வதைக் கண்டாயா!!
மஞ்சளும், சிகப்பும் அழிந்தது கண்டாயா!!
தொலைந்த வர்ணங்களை எங்கேனும் கண்டாயா?”
“அந்தோ பரிதாபம், அழகு பூச்சியே!!
வர்ண சொத்துக்கள் தொலைத்து
விகாரமாய் நிற்கிறாய்
கருணை மட்டுமே உள்ளது
உன்னிடம் கொடுக்க…”
வண்ணத்துப்பூச்சிக்காக சோக ராகம் பாடியது…

நிறை மாத வயிற்றுக்காரியாய்
அசமஞ்ச நடை போட்டது நத்தை
“நத்தையே, நில் நத்தையே!”
தழுதழுத்தது வண்ணத்துப்பூச்சி
“கடவுள் கையொப்பம் இட்ட என் சிறகு
இன்று காலியாய்க் கிடக்குது பாரும்
களவு போன வர்ணங்களை
எங்காவது கண்டீரா கூறும்?”
“கலியுக சண்டாளர்கள்
இதையுமா களவாடுவர்?
இன்று உன் சொத்து
நாளை எவன் சொத்தோ?!!
வழிவிடு,
என் கூட்டைக் காக்க வேண்டும்
உறுதி கொடு
அந்த கள்வனைக் காட்ட வேண்டும்...”
அசமஞ்ச நடை ஆர்ப்பாட்டம் கூட்டியது.

“அய்யா, சிலந்தியாரே!
வலை விட்டு வாரும்...
சிறகு செத்துக்கிடக்கிறேன்
தெரிந்தவற்றைக் கூறும்!”
“தம்பி வர்ணனா?!!
நிறம் குன்றியதால்
தடுமாறினேன்
உரம் இருந்திருந்தால்
துணை வருவேன்
மனம் வலு கொண்டால்
துப்பு கிடைக்கும்
அவன் அருள் ஒன்றே
தடை உடைக்கும்”
கண்ணீர் துடைத்தபடி
கடந்து சென்றது வண்ணத்துப்பூச்சி

கைகளுக்குள் கண் பொத்தி
கரைந்திருந்தது
நெஞ்சுக்குள் அபயம் ஒலிக்க
தலை நிமிர்ந்தது
‘இவனா,
கடவுளின் உயரிய படைப்பு
கருணையின் உயிர்க்கூடு
உண்மைகளின் உறைவிடம்
உலகத்தின் ஒளிவிளக்கு!!’

அவனைக் கண்டு கைகூப்பியது
நம்பிக்கை அதன் மனதில் பொங்கியது

“மனிதா, ஓ மனிதா!
என்னைப் பாராயோ!!
என் பாபங்களினின்று
விடுதலை தாராயோ?!

மனிதா, ஓ மனிதா!
என்னைத் தீண்டாயோ!!
உன் ஞானத்தால்
வர்ணம் மீட்பாயோ?!”
மனிதனின் முகத்தில்
அழகாய்ப் பிறை முறுவல்
“வர்ணங்களா… நான் அறிவேன்…
வா வா வா!”
தனது விழி நீர் துடைத்து
அவனது வலிய தோள்களில் அமர்ந்தது
கவலைகள் விடுத்து
மற்ற உயிர்களின் வியப்பைக் கவர்ந்தது

‘ஓ! இதுதான் இவனது வீடா?
புண்ணியவான்கள் மனிதர்கள்!!
கூட்டிலும் கலை நயம்!!
ரசனைக்காரர்கள் மனிதர்கள்!!’

“அதோ பார்!”
என்றான் அவன்,
“எனது கை ஜாலம் பார்!”

சுவரின் நடுநாயகமாய் சித்திரம்
வண்ணத்துப்பூச்சியின் கண்களில் விசித்திரம்
“உன்னைப் போல் ஒருவன்”
என்றான் அவன்,
சித்திரத்தில் சிரித்தது ஒரு வண்ணத்துப்பூச்சி!!

“வரைந்த பின்னே உணர்ந்தேன்
மஞ்சளும், சிகப்பும் இல்லை என்னிடம்
சுற்றும் முற்றும் திரிந்தேன்
இறுதியில் அவற்றைக் கண்டேன் உன்னிடம்
சாமர்த்திய யுக்தி கொண்டு
உனது வண்ணங்களை வழித்தெடுத்தேன்
தூரிகையால் அவை நனைத்து
எனது ஓவியத்தை முடித்து வைத்தேன்!!”

கண்களில் நீர் கோர்த்த வண்ணத்துப்பூச்சி
சரிந்த சிறகை இழுத்துக்கொண்டு,
தளர்ந்த கால் கொண்டு நடந்தது...
அழகற்ற சிறகு
அர்த்தமற்றது!!
சிறகுகள் வெட்டி எறிந்தது
இதயத்தில் இரத்தம் சொரிந்தது
வண்ணத்துப்பூச்சி
வெறும் பூச்சியானது,
மண்ணுக்குள் சிரசை

மூழ்கிக்கொண்டது...

No comments:

Post a Comment