Monday, 7 January 2019

ஆரஞ்சு நிற பலூன்

சற்று தொலைவில் அவர் வந்து கொண்டிருப்பதைக் கண்டவுடன் கையில் ஆரஞ்சு நிற பலூனோடு தயாராய் நின்றிருந்தான், பலூன்காரன்.
முகம் நிறைய புன்னகையோடு அதை வாங்கிக்கொண்டவர் பலூன்காரனிடம் பணத்தை நீட்ட,
“அய்யா, பேரப்புள்ளைக்கு ரெண்டு பலூனா வாங்கிப் போங்களேன். புள்ள சந்தோஷப்படுமே!!” சில்லறையை திருப்பிக்கொடுக்க மனமில்லாமல் நீட்டியபடி வினவினான்.
“ஒன்னு போதும் தம்பி. இது என் பேரப்புள்ளைக்கு இல்லை. என் பொண்ணுக்கு!” பெருமிதமாக வந்தது பதில்.
தலை நரைத்து, நடை தளர்ந்து நிற்பவரைக் கண்டவன் கண்களில் கொக்கிகள் தென்பட்டன.
தெய்வீகமாய் சிரித்தவாறு, “என் பொண்ணுக்கு பதினெட்டு வயசு ஆயிடுச்சு. ஆனாலும், இன்னைக்கும் அவ குழந்தைதான். நான் உயிரோட இருக்குற வரை தினமும் ஒரு ஆரஞ்சு பலூன் அவளுக்காக வாங்குவேன். பதினஞ்சு வருஷ பழக்கம்!!”
கடந்து சென்றவரை கனிவோடு கண்டு நின்றான் பலூன்காரன்.

பலூனை மிகக் கவனமாகப் பற்றிக்கொண்டு தனது வீட்டிற்குள் நுழைந்தவர், மின் விளக்கினை எரிய விட்டு, அந்த அடுக்குமாடி குடியிருப்பில் முதல் தளத்தில் இருக்கும் தனது வீட்டின் வராந்தாவில் வந்து நின்றார். மாலை இளந்தென்றல் அவரின் கன்னச் சுருக்கங்களுக்கிடையே சில்லிட்டுச் சென்றது. இரு கைகளுக்குள் அடங்கியிருந்த பலூனிற்கு ஒரு முத்தம் கொடுத்து, கைகளை உயர்த்தி காற்றோடு அதை தவழவிட்டார். அசைந்து அசைந்து பறந்து மறைந்தது, ஆரஞ்சு பலூன்.

வானை நோக்கியபடி அவர் வராந்தா இருக்கையில் அமர்ந்திருக்க, வீட்டினுள்ளே மின்விளக்கின் கீழே அவருடைய மூன்று வயது மகள் பால் பற்கள் பளிச்சிட சிரித்திருந்தாள், புகைப்படத்தில். அந்தி வானம் ஆரஞ்சு நிறம் பூசிக்கொள்ள, அமைதியாய் சிரித்துக்கொண்டார் அவர்.

No comments:

Post a Comment