மகனே,
என்னவரோடு நான் கொண்ட
நேசக் கூத்தின் வித்து நீ
விண்ணோர் எல்லாம் ஒன்றுகூடி
எனக்களித்த வெகுமதி நீ
எனது பிறப்பின் காரணத்தைக்
கள்ளச்சிரிப்பால் உரைத்தவன் நீ
நான் போகும் வழிதனை
அழகாய் செதுக்கும் சிற்பி நீ
‘பெற்றவள்’ என்றொரு பேனா கொண்டு
அடிமை சாசனம் எழுதிடமாட்டேன்
பத்துமாதக் கதையினைக் கூறி
பணிவிடை செய்ய பணித்திடமாட்டேன்
வளர்த்த கடனைப் பட்டியலிட்டு
வட்டியும் முதலுமாய் வசூலிக்கமாட்டேன்
பாப-புண்ணிய தத்துவங்கள் பேசி
உன் தோள்மீது பெரும்பாரம் ஆகிடமாட்டேன்
இவ்வுலகின் அழகை
விழியால் அளந்திட
மனதின் ஆற்றலால்
மாயங்கள் புரிந்திட
இமை மூடாது
கனவுகள் கண்டிட
வள்ளுவன் கூற்றுபடி
செவ்வனே வாழ்ந்திட
பயிற்றுவிப்பேன்!!
வாழ்வின் நிலையான
இன்பத்தைத் தேடிட
நிறங்களைத் தாண்டி
மனங்களைப் படித்திட
அன்பினைப் பெருக்கி
வன்மத்தைச் சுருக்கிட
எண்ணங்கள் உயர்ந்து
நற்குணம் சேர்த்திட
ஓதிடுவேன்!
என்னால் வந்தவன்
எனக்காக வந்தவன் அல்ல
உன் விழிகள்
என் கனவை சுமந்திட அல்ல
உன் வாழ்க்கை
என் வெறுமையை நிறப்பிட அல்ல
உன் பயணம்
என் பாதையைப் பற்றிட அல்ல
துன்பத்தில் அன்னையாய்
அரவணைத்திடுவேன்
இன்பத்தில் தோழனாய்க்
கொண்டாடிடுவேன்
தவறில் ஆசானாய்
அறிவுரைப்பேன்
உயிருள்ளவரை உனக்கு
துணை நிற்பேன்!!!
No comments:
Post a Comment