Sunday, 9 December 2018

அனைத்தும் அழகு!!

சித்திரங்கள் ஏந்தி நிற்கும் ஒவியனின் முத்தம் 
மத்தளங்கள் வாய் திறந்து கொட்டுகின்ற சிரிப்பு 
ராட்டினத்து குதிரையின் மேல் அரசனாகும் பிள்ளை
ராத்திரியில் ரகசியம் பேசும் தென்னைகளின் ஓலை

காலையில் சிரித்து நிற்கும் நந்தவனத்து ரோஜா
காற்றலையை இசையாக்கும் துளையிட்ட மூங்கில்
மழைக்கரு சுமந்து செல்லும் தென்கிழக்கு மேகம்
அந்தியிலே அருள் சேர்க்கும் மாடத்து விளக்கு

மார்கழி வர்ணங்களை ரசித்திருக்கும் பூசணிப்பூ
மான்விழி கண்டு மகிழ்ந்து நெளியும் மீசைப்பூ
இனிப்பு நினைவுகள் தரும் கண்ணோரக் கசிவு
இனிய நாள் என குறி சொல்லும் நாள் காட்டி

எங்கும் எதிலும் அழகின் ஆடம்பரம்
காண்பவை யாவிலும் அவனின் தோரணம்
கண்களும் பழகட்டும் அழகினைத் தேடிட
உள்ளமும் வாழட்டும் அனைத்தையும் போற்றிட!!

No comments:

Post a Comment