"என்ன மாமா, தினமும் வேலை முடிஞ்சு எட்டு மணிக்கெல்லாம் வந்துடுவ. இன்னிக்கு ஏன் இவ்ளோ லேட்டு? பசங்க ரெண்டும் உன்னை எதிர்பார்த்து, இப்போ தான் தூங்கப்போச்சுங்க."
இரவு பத்து மணிக்கு வீடு திரும்பிய மாமனிடம், பதில் வேண்டி கவலையாய் அவள் நின்றிருந்தாள்.
"டவுனுக்கு போய் வர நேரம் ஆயிடுச்சு புள்ள" என்றவன், "இந்தா இது உனக்கு தான்" என்று ஒரு பையை நீட்டினான்.
யோசனையாய் பையைப் பிரித்தவளுக்கு, உள்ளிருந்த புதுப் புடுவையைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் நா எழவில்லை. இத்தனை வருடங்களில் முதன்முறையாக அவன் அவளுக்கு பரிசு வாங்கி வந்திருப்பதைக் கண்டு ஆனந்தத்தில் விக்கித்துப்போயிருந்தாள்.
அவளது மனவோட்டத்தை உணர்ந்துகொண்டவன், அவனே பேசத்தொடங்கினான்.
"எங்க சூப்பர்வைசர் கல்யாணம் முடிஞ்சு இன்னிக்கு தான் டூட்டில வந்து சேர்ந்தாரு. அவருக்காக எங்க மேனேஜரு சாயங்காலம் ஃபாக்டரிலயே சின்னதா ஒரு பார்ட்டி ஏற்பாடு பண்ணியிருந்தாரு. சிக்கன் பிரியாணி, சூப்பு, சுவீட்டு எல்லாம் போட்டாங்க. எல்லாரும் எங்க சூப்பர்வைசர பத்தி ரெண்டு வார்த்தை பாராட்டி பேசி, வாழ்த்து சொன்னோம். அப்போ எங்க மேனேஜரு, 'நான் ஒரு கேள்வி கேட்ப்பேன். யாரு சரியா விளக்கம் தரீங்களோ அவங்களுக்கு இருநூறு ரூவா பரிசு'னு சொன்னாரு."
"என்ன கேள்வி மாமா?"
"'காதல்னா என்ன?'னு கேட்டாரு."
"அது சரி, நல்லா கேள்வி கேக்குறாரு பாரு..."
"ஏன், அது நல்ல கேள்வி தான? நாங்க மொத்தம் இருபத்து மூணு பேரு. எல்லாரும் என்னாமா பதில் சொன்னாங்க தெரியுமா! அம்பிகாவதி, அமராவதி, தேவதாஸ், காவியம்னு என்னென்னமோ சொன்னாங்க. சில பேர் சொன்னது எனக்கு புரியவே இல்லனா பார்த்துக்க. ஒரு ஃபிட்டரு கவிதையே படிச்சுட்டாரு. அப்புறம் என் முறை வந்துது…"
"நீ என்ன சொன்ன?" என்றாள் ஆவலாக.
"எழுந்து நின்னு முதல்ல எல்லாருக்கும் வணக்கம் சொன்னேன்."
"அப்புறம்?"
"சார், நான் ஏழாங்க்ளாசோட படிப்ப நிறுத்தினவன். எனக்கு அழகா பதில் சொல்ல தெரியாது. எனக்கு தெரிஞ்சத சொல்றேன். என் முத புள்ள பொறக்கும்போது, என் சம்சாரம் ரெண்டு நாளா இடுப்பு வலியில துடிதுடிச்சு, ஒரு வழியா புள்ளைய பெத்தெடுத்தா. அவள வார்டுல பார்க்க போனப்ப, சக்கையா பிழிஞ்சுபோட்ட மாதிரி கிடந்தா. என்ன தான் புள்ள பொறந்தது சந்தோசம்னாலும், அவள பார்க்க என்னவோ போல இருந்துது. அரை மயக்கத்துல மெல்ல கண்ணை தொறந்து பாத்தவ என்னை பாத்து என்ன கேட்டா தெரியுமா? 'சாப்பிட்டியா மாமா?'னு கேட்டா. அது தான் சார் எனக்கு தெரிஞ்சு காதல். எனக்கு ரெண்டு ஆம்பளப்புள்ளைங்க. என் அம்மா ஒரு பொம்பளப் புள்ளைய பெத்து கொடுக்க சொல்லி சதா நச்சரிக்கும். ஆனா, என் சம்சாரத்துக்கு விருப்பம் இல்லை. 'எனக்கு மூணாவது பெத்து வளக்க திராணி இல்ல மாமா'னு சொன்னா. பெத்துதான் ஆகணும்னு நானும் கட்டாயப்படுத்தல, என் அம்மாவையும் அதுக்குமேல அதை பத்தி பேச விட்டதில்லை. இதுவும் காதல் தான் சார். நாள் முழுக்க நின்னுகிட்டே வேலை செய்யறேன்னு ராத்திரியில அவ எனக்கு கால் பிடிச்சு விடுவா. காலைல அவ எனக்கும், புள்ளைங்களுக்கு மதிய சாப்பாடு கட்டும்போது, நான் புள்ளைங்கள குளுப்பாட்டி, யூனிஃபார்ம் போட்டுவிடுவேன். மாசாமாசம் சம்பளம் வந்ததும் அவ கைல கூட கொடுக்கமாட்டேன், சாமி மாடத்துல வச்சுடுவேன். தினமும் அவளே என் சட்டை பாக்கெட்டை செக் பண்ணி, கை செலவுக்கு காசு வச்சு வைப்பா. எப்ப சண்டை போட்டாலும், எக்காரணம் கொண்டும் அவ எனக்கு சோறாக்கிப் போடாம இருந்ததில்லை, என் கோபமும் ராத்திரி தாண்டுனதில்ல. ஏழு வருசத்துல, ஒரு தடவ கூட எங்க கல்யாண நாளு எனக்கு ஞாபகம் இருந்ததில்ல, அவளும் வருசாவருசம் தவறாம எனக்கு புடிச்ச பால் பாயசம் செஞ்சு, 'என்ன மாமா இந்த வருசமும் கல்யாண நாள மறந்துட்டியா?!'னு சிரிச்சுக்கிட்டே கொடுக்க மறந்ததில்லை. இதுவரைக்கும் அவளுக்கு நான் ஒரு பரிசும் வாங்கித் தந்ததில்லை. அதே போல, என் தேவை என்னனு எனக்கே தெரியாது, அவளுக்கு தான் தெரியும். இவ்வளவு ஏன் சார், இத்தனை வருசத்துல நான் ஒரு தடவ கூட 'ஐ லவ் யூ'னு சொன்னதில்லை. இத்தனை வருசத்துல ஒரு தடவ கூட அவளுக்கும் என் மேல பாசம் குறைஞ்சதில்ல. எனக்கு தெரிஞ்சு இதெல்லாம் தான் சார் காதல்!" என்று, நண்பர்கள் முன்னிலையில் பேசியதனைத்தையும் வார்த்தை மாறாமல் ஒப்புவித்தான். அவளோ, ஆச்சரியத்தில் இமைக்கவும் மறந்து அவன் கூறியதைக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
"என்ன புள்ள அப்படி பார்க்குற?"
"மாமா, எனக்கு பேசத்தெரியாதுன்னு சொல்லிட்டு, இவ்வளவு அழகா பேசியிருக்கியே நீ…"
"அதனால தான் எனக்கு இருநூறு ரூவா பரிசு கொடுத்தாங்க. நானும் அடுத்த வாரம் வர நம்ம கல்யாண நாளுக்காக உனக்கு புடவை வாங்கியாந்தேன்."
"புடவை ரொம்ப நல்லா இருக்கு மாமா, ஆனா…"
"என்ன புள்ள?"
"ரொம்ப நாளா இத்துப்போன செருப்பையே தச்சு தச்சு போட்டுக்கிட்டு இருக்க, உனக்கு ஒரு புது செருப்பு வங்கணும்னு நினைச்சேன். இப்ப எனக்கு புடவை அவசியமா? வேலைக்கு போற உனக்கு நல்ல செருப்பு வாங்கியிருக்கலாம்..."
"பார்ரா… இதுக்கு பேரு தான் புள்ள காதல்"
"போயா…"
"ம்ம், உன்னை விட்டு எங்க போறதாம்?? புள்ள, இத்தனை நாளா உன்கிட்ட சொல்லாம விட்டத இப்ப சொல்லட்டுமா?"
"என்னது?"
"ஐ லவ் யூ…"
"போ மாமா" என்றவள் உள்ளங்கைகளுக்குள் முகம் புதைத்து நாண, அவளது மாமனோ மனம் நிறைந்து, உரக்கச் சிரித்தான்.
Ala vechuteenga achu akka. loved it. wow. YES.! its LOVE.
ReplyDeleteThank you so much ma ☺️☺️
Deleteகாதல் உணர்கிறேன்
ReplyDeleteமிக்க நன்றி ☺️☺️
Delete