Wednesday, 20 April 2016

மாதவம் - 3

நாட்களும், வாரங்களும், மாதங்களும் உருண்டோடின. ஆனால், கோமதிக்கு மட்டும் விடிவெள்ளி விடியவில்லை. அவள் கணவனுக்கு வைத்தியங்கள் பலனளிக்காமல் போகவே, வாழ்வதே விரக்தியாய் ஆனது அவளுக்கு. மேலும், அவள் மாமியாளும், கோமதியின் துரதிஷ்டமே இதற்கெல்லாம் காரணமென்றும், அவளை விவாகரத்து செய்யாமல் தன் பிள்ளையின் வாழ்வு செழிக்காது என்றும் பேசிவந்தாள். அவளுக்கு, தன் மகனின் வேதனையைக் காட்டிலும், அவளின் வெறுப்பே பெரிதாய் இருந்தது. காலை முதல் மாலை வரை அவளின் வசை மொழிகளைக் கேட்டுகேட்டு சலித்தே விட்டது, கோமதிக்கு. அவளின் கணவன் கிருஷ்ணனும் தன்னை நினைத்து மட்டுமே வருந்தினானே தவிர, கோமதி என்ற ஒரு ஜீவனைப் பற்றி அவன் யோசிக்கக் கூட இல்லை.


"இல்லடி, இதுக்கும் மேல எனக்கு நல்லது நடக்கும்னு நம்பிக்கை இல்லை. ஒரு நாளா? ரெண்டு நாளா? பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்கு", என்று தழுதழுக்கும் குரலில் கூறினாள், கோமதி .
அரை மணி நேரமாக தன் அக்காவுக்கு தன்னால் முடிந்தவரை தைரியம் கூறினாள், கோதை. தொலைபேசி சூடாகிப்போனதே தவிர, வேறு எந்த பலனும் இல்லை. 
"அக்கா, இவ்வளவு நாள் நம்பிக்கையோட இருந்த நீ, இப்போ எதுக்கு மனம்  தளர்ந்து பேசற? இன்னும் கொஞ்ச நாள் பொறுமையா இரு", என்று கோதை கூறி முடிப்பதற்குள்,
"இல்ல கோதை, என்னோட முடிவுல எந்த மாற்றமும் இல்ல. இவ்வளவு நாளா இவங்க என்னை விவாகரத்து பண்ணபோறதா பூச்சாண்டி காமிச்ச கதையெல்லாம் போதும். உறுதியா சொல்றேன், நான் விவாகரத்துக்குத் தயாராயிட்டேன். அவர், அவங்க அம்மா இஷ்டப்படி நடந்துக்கட்டும். எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் காஞ்சிபுரம் போய், அம்மா, அப்பா கூட இருந்துக்கறேன். ஏதோ எனக்கு தெரிஞ்ச தையல் வேலை பார்த்து, என் செலவுக்கு பணம் சம்பாதிச்சு கொடுத்திடறேன். இவங்க கிட்டயிருந்து செட்டில்மெண்ட்னு சொல்லி ஒரு ரூபா கூட எனக்கு வேண்டாம். ஒரு கைப்பிடி சோறு நிம்மதியா சாப்பிட்டு, ராத்திரி நிம்மதியா தூங்கினா போதும்ங்கற மன நிலைக்கு வந்துட்டேன். போராட இதுக்கு மேல தெம்பும் இல்ல, விருப்பமும் இல்ல. இதையெல்லாம் அம்மா, அப்பா கிட்ட சொல்ல எனக்கு தைரியம் இல்ல. நீ தான் அவங்க கிட்ட சொல்லி, சமாதானப்படுத்தணும். அதுக்கு தான் உனக்கு போன் பண்ணேன். என்ன சமாதானப்படுத்தறத நிறுத்திட்டு, நீ அம்மா, அப்பாகிட்ட பேசிட்டு, எனக்கு  போன் பண்ணு. நான் வச்சுடறேன்", என்று கூறி தொலைபேசி தொடர்பை துண்டித்தாள், கோமதி .
தொடர்பு துண்டித்ததைக் கூட உணராமல், தன் காதில் தொலைபேசியை வைத்தவாறு உறைந்து இருந்தாள், கோதை. தன் அக்கா கூறியது எதுவும் கோதையால் நம்ப முடியவில்லை. ஏறக்குறைய ஒரு வருடத்திற்கு முன், தன் கணவனை எண்ணியெண்ணி உருகியவள், இன்று அவனைப் பிரிவதைப்பற்றி கூறுவது வியப்பாக இருந்தது. அப்படி ஒன்று நடக்கக்கூடாது என்று தோன்றியது, நடக்கவும் விடக்கூடாது என்று தோன்றியது கோதைக்கு.

இரவு, தனது கணவனிடம், தன் அக்கா கூறிய அனைத்தும் ஒப்புவித்தாள் கோதை. முரளிக்குக் கூட ஆச்சர்யமாக இருந்தது. அதே நேரத்தில், பரிதாபமாகவும் இருந்தது.
"கோதை, அக்கா வாழ்க்கை பாழாயிடக்கூடாதுனு யோசிக்கற, ஆனா அவங்க மனசுல இருக்கற வலிய பத்தி யோசிச்சியா? அவங்க எந்த அளவுக்கு மனம் நொந்திருந்தா இப்படி ஒரு முடிவெடுத்திருப்பாங்க? இனியும் அவங்கள பொறுத்துப்போக சொல்றதுல அர்த்தம் இல்லை."
"அப்போ, அவ எடுத்த முடிவு சரின்னு சொல்றீங்களா?"
"நான் அப்படி சொல்லல. அவங்க இருக்கற மன நிலையை நினைச்சாதான் கொஞ்சம் கவலையா இருக்கு. அவங்க வெறுத்துப்போன ஒரு விஷயத்தை, மேலும் மேலும் அவங்க மேல திணிக்கறதால, அவங்க மனசு இன்னும் பலவீனம் ஆகும். அவங்க வேற ஏதும் தப்பான முடிவு எடுத்துடக்கூடாது..."
"அய்யய்யோ! என்ன சொல்றீங்க?" பதறினாள் கோதை .
"பயப்படாதே கோதை. நல்லது நடக்கும், நல்லது நடக்கும்னு சொல்லி அவங்கல எல்லாத்தையும் அனுசரிக்க சொல்றதுக்கும் ஒரு அளவிருக்கு. மனசு சோர்ந்துபோய் இருக்கும்போது ஏற்படற நெருக்கடிகள் தான், ஒன்னு தற்கொலைய தூண்டும், இல்ல மனநல பாதிப்பு உண்டாக்கும். இதுக்கு மேல, ஒன்னு அவங்க சொல்றத செய்யணும். இல்ல அவங்க வாழ்க்கை மாறி ஒரு சந்தோஷம் பிறக்க வழி செய்யணும். அத விட்டிட்டு நாம எல்லாரும் எட்டி நின்னு வருத்தப்படறதுல, எந்த அர்த்தமும் இல்ல.”
"நாம என்னங்க செய்யமுடியும்?"
"அவங்களுக்கு பிரச்சனையே ஒரு குழந்தை தான். அவங்க வாழ்க்கைல ஒரு குழந்தை வந்துட்டா, எல்லா கஷ்டமும் தீர்ந்துடும்."
"உண்மைதாங்க. ஆனா, எந்த வைத்தியமும் பலன் தரல. டெஸ்ட் டியூப் பேபி கூட தங்கல. அவ மாமியாரும் தத்தெடுத்துக்கறத ஒரு கொலை குத்தமா நினைக்கறாங்களே!”

சற்று நேரம் மௌனமாய் சிந்தித்தவன், எதோ ஒரு பொறி தட்டியது போல, கோதையிடம், “கோதை, எனக்கு ஒரு யோசனை. மனசுல பட்டத சொல்றேன். நீ என்ன தப்பா நினைக்கக்கூடாது!", என்று தயங்கினான்.
"என்னது? சொல்லுங்க, நான் ஒன்னும் தப்பா நினைக்க மாட்டேன்", என்று ஆர்வம் பொங்கக் கேட்டாள், கோதை.

"நாம ஒரு குழந்தைய பெத்தெடுத்து, அந்த குழந்தைய உன்னோட அக்கா, மாமாவுக்கு தத்து கொடுத்திடலாமா?"
கோதைக்கு ஒன்றும் விளங்கவில்லை.
"நானும் ரெண்டு பெண் குழந்தைகளுக்குத் தகப்பன். உங்க எல்லாரோட வலி, எனக்கு நல்லா புரியுது. இப்போ நான் சொன்னது ஒன்னும் சாமான்ய விஷயம் இல்ல. இதுலயும் ஆயிரம் சிக்கல் இருக்கு. எல்லாரோட சம்மதம் வாங்கறது ஒரு இமாலய சாதனை. அப்பறம், ஒரு குழந்தைய பெத்தெடுக்கற அந்த  ஒரு வருஷம், ஒரு பெரிய தவம். இதுல உன் மனசும், உடம்பும் பணயம் வைக்கணும். காலத்துக்கும், அந்த குழந்தை மேல நீ உரிமை எடுக்காம இருக்கணும். இன்னும் பல சிக்கல் இருக்கு. ஏதோ மனசுல தோணிச்சு. சொன்னேன். உனக்கும் வேற ஏதாவது நல்ல யோசனை வந்தா சொல்லு. இந்த விஷயத்துல ஏதாவது செஞ்சே ஆகணும். இப்படி புலம்பிக்கிட்டே இருக்கறதுல எந்த பலனும் இல்ல", என்று கூறி விட்டு கண்ணயர்ந்தான் முரளி.

அந்த இரவு முழுதும், கோதை உறங்காமல், முரளி கூறியதனைத்தையும், மனதுள் அசைப்போட்டுக்கொண்டிருந்தாள். மறுநாள் காலை, ஏதோ ஒரு இனம் புரியா பரவசம், கோதையிடம். முரளியின் வாக்கு, அவளுக்கு தெய்வ வாக்காய்த் தோன்றியது.
"நான் எல்லாரோடும் பேசி சம்மதம் வாங்கறேன். நாம இன்னைக்கே டாக்டர் கிட்ட ஒரு தடவ என்னை செக்-அப் பண்ணிடலாம். நான், ஒரு ஆரோக்கியமான குழந்தைய பெத்து, அக்கா கிட்ட கொடுக்கணும்", என்று பரவசம் குறையாது கூறினாள், முரளியிடம்.

சற்று யோசித்துவிட்டு, "சரி, நீ இப்போ வரைக்கும் எதுவும் கேட்டதில்லை. முதல் முறையா நீ கேட்கற. நிச்சயமா நான் உனக்கு துணையா இருக்கேன்", என்று உறுதியளித்தான், முரளி .

No comments:

Post a Comment