Wednesday, 20 April 2016

மாதவம் - 6

அனைவரிடமும் இன்பம் பொங்க, கோதையின் மாமியாளுக்கு மட்டும், கோபம் பொங்கியது. முரளியின் சமரச முயற்சிகள் தோல்வியைத் தழுவின. கோதையின் நிலையை மனதில்கொண்டு, அவன் தன் தாயுடன் போராடும் தர்மயுத்தத்தை ஒத்தி வைத்தான். சில நேரங்களில், சில மனிதர்களுக்குத் தேவைப்படுவதெல்லாம் வெறும் காலம் மட்டுமே. காலத்திற்கு மட்டுமே, காயங்களைப் போக்கவும், மனிதர்களை மாற்றவும், வலிகளை நீக்கவும், மனச்சுமைகளை மறக்கவும் செய்யும் சக்தி உள்ளது.

ஒவ்வொரு நாளும் கோமதிக்கு இனிப்பாய் ருசித்தது. சிறு விரல்களும், மென்மையான ஸ்பரிசமும், நெஞ்சைக் கிள்ளும் பார்வைகளும், உயிரைக் கொல்லும் புன்னகையும், தேனைப் போன்ற அழுகுரலும், தெவிட்டாத முனகல்களும், கோமதிக்குப் பரவசங்களை அள்ளியள்ளி வழங்கின. ஆயிரம் தேசங்களுக்கு ராணி போல தோன்றியது, அவளுக்கு.

தாய்ப்பால் அருந்தும் நொடிகளைத் தவிர, மற்ற அனைத்து  மணித்துளிகளும், மகா கோமதியிடமே இருந்தாள். தாய்ப்பால் அருந்தும் பொழுது, கோதையின் காலடியில் அமர்ந்துகொண்டு, வெறித்து வெறித்துப் பார்த்திருப்பாள், கோமதி. குழந்தைக்கு பசி ஆறியவுடன், வெடுக்கென்று அள்ளிக்கொண்டு ஓடிவிடுவாள். ஏதேனும் சாக்கு சொல்லி குழந்தையை தன்னிடம் வைத்துக்கொள்ள கோதை முயற்சி செய்தாலும், கோமதி இனங்காமலே இருந்தாள். இவர்களின் பாசப்போராட்டம், இரு பிள்ளைகள் ஒரு பொம்மைக்கு சண்டையிடுவதுபோல இருந்தது.

மூன்று மாதங்கள், மூன்று நொடிகளாய்க் கரைந்தன. கிருஷ்ணனும், கோமதியும், தங்கள் செல்ல மகளை அழைத்துச் செல்ல ஆயத்தமானார்கள். கோமதி மிகுந்த பரபரப்புடன் பம்பரமாய் சுழன்றாள். கோமதியின் ஆரவாரம், கோதைக்கு சற்று எரிச்சலைத் தந்தன. 'பிள்ளையைப் பெற்றவள்' என்ற உரிமை கூட அவளுக்குக் கிடைக்கவில்லையே என்கின்ற ஆதங்கம். வாரியணைத்து, பிள்ளையை ஆசைத்தீர கொஞ்சவில்லை என்கின்ற ஏக்கம். 'தனக்கு உரிமையில்லை' என்று தெரிந்தும்கூட, இதயத்தின் ஓலங்கள் ஓயவில்லை. 

கைகளில் பிள்ளையை ஏந்திக்கொண்டு கோதையருகே கோமதி வந்தாள். பிள்ளையைப் பார்த்தவாறு நின்றிந்தருந்த கோதையிடம், "கோதை! உன் உடம்ப நல்லா பார்த்துக்க. உலகத்துல யாரும் செய்யாததை, நீ எனக்கு செஞ்சிருக்க! இதை நான் சாகறவரைக்கும் மறக்கமாட்டேன். அதோட, நீ எனக்கு இன்னொரு உதவியும் செய்யணும்", என்று பீடிகைப்போட்டாள் கோமதி.
"என்னது அது?"
"நான் சாகரவரைக்கும், மகா'வ பெத்தெடுத்தவ நீதான்னு அவளுக்குத் தெரியவே கூடாது. நீ எனக்கு இதைமட்டும் செஞ்சா போதும்", என்று கூறிவிட்டு, குழந்தையை அள்ளிக்கொண்டு, சென்றுவிட்டாள்.

மவுனமாய் தன் மெத்தையின் மூலையில் அமர்ந்தபடி, ஜன்னலின் வழியே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள், கோதை. யாருக்கும் அறியாதவாறு, ரகசியமாய் அழுதுகொண்டிருந்தாள். குழந்தை பிறக்கும் வரை வள்ளலாய்  இருந்த மனம், குழந்தையின் முகம் பார்த்தபின், சுயநலம் சூழ்ந்துகொண்டது. பெற்ற நெஞ்சம் பித்தல்லவா!

இவளின் மனக்குமுறல்களை அறிந்தவளாய், இவளின் தாய் சிறிது நாட்கள் உடன் தங்க முடிவு செய்தாள். இவளின் மனதையும், உடலையும் முடிந்தளவு திடமாக்கினாள். ஆயினும், கோதைக்கு தன்னுடைய ஒரு பகுதியை யாரோ பறித்துக்கொண்டு போனது போல் இருந்தது.


மும்பையில், கோமதியின் வீட்டில், குழந்தையின் வருகையையொட்டி அமர்க்களப்படுத்தப்பட்டது. ஏழைகளுக்கு அன்னதானங்கள், கோவில்களில் அபிஷேகங்கள், உற்றார் சுற்றாருக்கு விருந்து உபசரிப்புகள் என, கிருஷ்ணன் அனைத்து ஏற்பாடுகளையும் அசத்திவிட்டான். கூச்சலும், குமுறலுமாய் இருந்த வீடு, இப்போது சிரிப்பொலியும், குதூகலமுமாய்க் கலைக்கட்டியது. கோமதிக்கும், மாமியாளுக்கும் இருந்த பனிப்போர் முறிந்து, அனைவரின் சிந்தனையும், செயலும், மகாவைச் சுற்றியே இருந்தது. 

கோமதி, தன் தங்கையிடம் உரையாடுவதைக் கூட வெகுவாகக் குறைத்துக்கொண்டாள். கோதையின் அழைப்புகளை அவ்வப்போது தவிர்த்தாள். ஒரு சில முறை பேசும்போது கூட, முன்பிருந்த நேசம் சற்று வற்றிப்போனதாய் உணர்ந்தாள், கோதை.

மகாவைப் பெற்றெடுக்க, கோதை பூண்டிருந்த ஒருவருடத் தவக்கோலம் களைந்து, மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்ப முயற்சித்தாள். ஆயினும், ஒரு சிறிய ஏக்கம் இவளை அறுத்துக்கொண்டே இருந்தது . 


ஒரு நாள், கோதைக்கு, கோமதியிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
"ஹலோ! கோதை எப்படி இருக்க?"
"நல்லா இருக்கேன்கா. நீ எப்படி இருக்க? மகா எப்படி இருக்கா?"
"அவளுக்கென்ன?! இந்த வீட்டு ராஜகுமாரி. நல்லா இருக்கா. லதா, சுதா எப்படி இருக்காங்க? அண்ணன் வேலைக்குப் போய்ட்டாங்களா?", என்றாள் பரிவாய்.
"எல்லாரும் நல்லா இருக்காங்க."
"மகாவுக்கு முதல் பிறந்த நாள் வருதில்ல. அதை விமர்சையா கொண்டாடலாம்னு இருக்கோம். சென்னைல தான், ஒரு ஹோட்டல்ல செய்யலாம்னு இருக்கோம். இந்த வாரம் சனிக்கிழமை சென்னைக்கு எல்லாரும் வந்துடுவோம். ஞாயிற்றுக்கிழமை மதியம் தான் பிறந்தநாள் விழா. நீங்க எல்லாரும் நிச்சயமா வந்துடணும்."
"கண்டிப்பாகா. என் பிள்ளை பிறந்தநாளை விட, என்ன முக்கியமா வந்துடப்போகுது?"
சற்று அமைதியாய்ப்போன கோமதி, "சரிடி. என் பிள்ளை அழுவுறா. நான் அப்பறம் பேசறேன்", என்று கூறிவிட்டு, தொடர்பை துண்டித்தாள் .

கோதைக்கு அன்று முழுதும் வருத்தமாக இருந்தது. கோமதியின் மாற்றங்கள் இவளை மிகவும் வேதனைப்படுத்தின. ஆனால், தன் பிள்ளையை சில தினங்களில் காணப்போகிறோம் என்கின்ற ஆனந்தம், அவளின் வருத்தங்களை மறைத்தது.

தனது பிள்ளையின் வருகைக்காக கோதை பல ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினாள். வீட்டை சுத்தம் செய்தாள். அவர்கள் தங்க ஏதுவாய், தனி அறை தயார் செய்தாள். பிள்ளைக்கு அழகாய் ஒரு பாவாடையும், மோதிரமும் வாங்கி வந்தாள். சனிக்கிழமை மதியம், பெரிய விருந்தே தயார் செய்திருந்தாள். 

அன்று மதியம், சுமார் இரண்டு மணி இருக்கும். ‘அக்கா இன்னும் வரவில்லையே’, என்று கவலையுற்ற கோதை, அவளை கைபேசியில் அழைத்தாள்.
"அக்கா! எப்படி இருக்க? சென்னைக்கு வந்துட்டீங்களா? உங்களுக்காக காத்துக்கிட்டிருக்கோம்"
"நாங்க காலைலயே சென்னைக்கு வந்துட்டோம்டி."
"காலையிலேயே வந்துட்டீங்களா? அப்ப வீட்டுக்கு வராம, எங்க  இருக்கீங்க?"
"நாங்க, உன் மாமாவோட தாய் மாமா வீட்ல இருக்கோம், கோதை."
"ஏன் அக்கா! இங்க வரக்கூடாதா?"
"அங்க வரலாம்னு தான் நினைச்சேன். ஆனா, அங்க ஏ.சி. இல்லையே. மகா ஏ.சி. இல்லாம தூங்கமாட்டா. மேலும், வீடு வசதி பத்தாது. அதான், இங்க வந்துட்டோம். நாளைக்கு மறக்காம வந்துடு. மகா தூங்கியெழுந்துட்டா. நான் அப்பறம் பேசறேன்", என்றுவிட்டு அழைப்பினைத் துண்டித்தாள், கோமதி.

கோதை சற்றும் இதனை எதிர்ப்பார்க்கவில்லை. தன் அக்காவின் பகட்டும், பேச்சும் கோதையால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதைத் தாங்க முடியாமல், 'ஓ' என்று கதறினாள், கோதை.

கோதை திடீரென்று அழுவதைக் கண்டு, பதறிப்போனான் முரளி.
"என்ன கோதை? என்ன ஆச்சு? ஏன் அழற? சொல்லுமா..."
கோதை தேம்பிக்கொண்டே, "அக்கா இங்க வரலயாம். மாமாவோட தாய் மாமா வீட்டுல இருக்காங்களாம். இங்க பிள்ளைக்கு வசதி பத்தாதாம். ஏ.சி. இல்லாம மகா இருக்கமாட்டாளாம். அதனால, இங்க வரலயாம்", என்று கூறிவிட்டு, மீண்டும் அழத்தொடங்கினாள்.
"இதுக்கா இப்படி அழற?”, என்று ஆச்சரியமாய் வினவினான்.
"என்ன பேசறீங்க? நான் பெத்த பிள்ளைக்கு, என் மடியவிட பெரிய வசதி இந்த உலகத்துல என்ன இருக்கு? என்னோட அக்கா, இப்படி மாறுவானு கொஞ்சம் கூட நினைக்கல. அவளோட பணமும், பகட்டும், அவளையும் மாத்திடுச்சு. என் பிள்ளைய, என் கண்ணுல கூட காட்டமாட்டேங்கறா..."
"நீ பேசறது எதுவும் சரி இல்ல."
"என்ன சரி இல்ல?"
"மகா, அவங்க குழந்தை. அவங்க இஷ்டப்படி அவங்க வளர்க்கறாங்க. அந்த வீட்டுல தங்குறது அவங்க இஷ்டம். அதுல எந்த தப்பும் இல்லை."
"அப்போ, பெத்த எனக்கு எந்த பந்தமும், பாசமும் இருக்கக்கூடாதா?"
"இதைத்தான் நான் ஆரம்பத்துலயே சொன்னேன். இந்த குழந்தை மேல ஆயுசுக்கும் நீ உரிமை கொண்டாடக்கூடாதுனு சொன்னேன். நீயும் சம்மதிச்சு, மகா’வ பெத்தெடுத்து, தத்தும் கொடுத்த. இப்போ திடீர்னு வந்து, ‘நான்தான் பெத்தவ’னு உரிமை கொண்டாடுறது நியாயமில்லை."
"நான் என்ன, ‘பிள்ளைய திருப்பிக்கொடு’னா கேட்டேன்? குழந்தையோட இரண்டு நாள் தங்க தானே ஆசைப்பட்டேன்?!!"
"நீ அதையும் கேட்கமாட்டேனு என்ன நிச்சயம்?"
"அப்போ, அக்கா பணக்கார புத்திய காட்டுறது, சரின்னு சொல்றீங்க. அதானே?"
"அவங்க எந்த புத்தியையும் காட்டல. அவங்க ரொம்ப பயப்படறாங்க. அவங்களுக்கு இன்னொரு பிறப்பு மாதிரி, இந்த வாழ்க்கை கிடைச்சிருக்கு. இது பறிபோயிடக்கூடாதேன்னு பயம். தன்கிட்ட பரிவு காட்டுற மாமியார் மாறிடக்கூடாதுனு பயம். மனம் மாறியிருக்குற கணவன், திரும்பவும் தன்னை வெறுத்துடக்கூடாதுனு பயம். தன் வாழ்க்கைல கிடைச்ச நிம்மதி, சந்தோஷம் எதுவும் கைவிட்டுப் போயிடக்கூடாதுனு பயம். எல்லாத்துக்கும் மேல, இது எல்லாம் கிடைக்கக் காரணமா இருக்கற மகா தன்னைவிட்டு போயிடக்கூடாதுனு பயம். மொத்ததுல அவங்களுக்கு உன்னைப் பார்த்து பயம். மகாவ பெத்தவங்கற உரிமையில, அவளை நீ பறிச்சுப்பியோனு பயம். அதான், உன்னைவிட்டு தூரமா ஓடிப்போக பார்க்கறாங்க. நீயும் அதுக்கு ஏத்தாப்ல, ‘என் குழந்தை’னு உறவாடப்பார்க்குற. ரொம்ப பக்குவமா இருந்த நீயா, இப்படியெல்லாம் பேசற?”

கோதைக்கு சுரீரென்று ஏதோ உச்சியில் விளங்கியது. அக்காவின் மாற்றத்திற்கு, தான் தான் காரணம் என்று விளங்கியது. செய்வதறியாது குழம்பிப்போனாள், கோதை!


மறுநாள், பிறந்தநாள் விழா, மிகவும் கோலாகலமாக இருந்தது. வெண்பட்டு ஆடையில், தங்கமும், வைரமும் ஜொலிக்க, உண்மையிலேயே மகாலட்சுமி போல மிளிர்ந்தாள், மகா. மேடையின் அருகே செல்ல தயங்கிக்கொண்டு, விருந்தினரோடு ஒருவராய், ஒரு நாற்காலியில் அமர்ந்தவாறு, மகாவை ரசித்துக்கொண்டிருந்தாள், கோதை. குழந்தை சென்ற இடமெல்லாம், கோதையின் கண்களும் பின்தொடர்ந்தன. அவளை அள்ளி அணைத்திட, கோதைக்கு ஆசை பெருகியது. ஆயினும், அவள் குழந்தையை நெருங்க எந்த முயற்சியும் செய்யவில்லை. அப்படியே அவள் நெருங்கினாலும், அவளின் அக்கா அடுத்த கணமே குழந்தையைக் கவர்ந்து செல்வாள் என்று அறிந்திருந்தாள். 

"என்ன கோதை, யாரோ மாதிரி இங்க மூலையில உட்கார்ந்திருக்க? நீ போய் மேடையில நில்லும்மா", என்றான் கிருஷ்ணன்.
"இல்ல பரவால்ல மாமா", என்று கோதை தயங்கினாள்.
"என்னம்மா நீ ! உன் பிள்ளை பிறந்த நாளு, நீ இப்படி தயங்கினா என்ன அர்த்தம்?"
கோதைக்கு , கிருஷ்ணன் கூறியது தேனாய் வந்து பாய்ந்தது. எழுந்து செல்ல கால்கள் எத்தனித்தது. சற்று தயங்கியவளாய், "நீங்க போங்க மாமா, நான் வரேன்", என்று கூறி, தப்பித்துக்கொண்டாள்.

அந்த அறையே விருந்தினரால் நிரம்பியது. வந்திருந்தோரில் பலரும்,  மிகவும் செழிப்பாகத் தோன்றினர். மகாவிற்கு வந்த பரிசுப்பொருட்கள், ஒரு பக்கம் மலையாய் குவிந்திருந்தன. பரிமாறிய விருந்தும், ராஜ விருந்தாய் இருந்தது.

அனைத்து கொண்டாட்டமும் ஓய்ந்த பின்னர், கோதை கோமதி அருகே சென்றாள். அவள் மடியில், மகா ஒரு பொம்மையை வைத்துக்கொண்டு சமர்த்தாய் அமர்ந்திருந்தாள். கோமதியின் அருகே கிருஷ்ணனும் அமர்ந்திருந்தான். தான் வாங்கி வந்த மோதிரத்தை குழந்தைக்கு அணிவித்து, பட்டாடையை அக்காவிடம் கொடுத்துவிட்டு, "மாமா, அக்கா நாங்க கிளம்பறோம். ரொம்ப நாழி ஆயிடுச்சு", என்றாள் மகாவை கண்களால் உச்சி முதல் உள்ளங்கால் வரை முகர்ந்தபடி.
"என்ன கோதை நீ? மேடை பக்கமே வரல. இப்போ உடனே கிளம்பறேன்னு சொல்ற?"
"இல்லை மாமா, சுதாவுக்கு உடம்பு சரி இல்லை. அதான் நான் முன்னாடி நின்னு, உங்களுக்கு எந்த உதவியும் செய்ய முடியாம போயிடுச்சு", என்றாள் தயக்கமாய்.
"பரவால்லமா, இதுல என்ன இருக்கு? குழந்தைய பத்திரமா பார்த்துக்கோ!!"
"சரிங்க மாமா, முடிஞ்சா வீட்டுக்கு வாங்க மாமா..."
"இல்லமா. இன்னைக்கு 6 மணிக்கு மும்பைக்கு பிளைட்ல திரும்பறோம். இந்த வாரம் முக்கியமான வேலைகள் எல்லாம் இருக்கு. அடுத்த ஞாயிற்றுக்கிழமை, திரும்பவும் மகா குட்டிக்கு மும்பையில் வேண்டியவங்கள கூப்பிட்டு, பிறந்தநாள் கொண்டாடறோம். அதனால, அடுத்தமுறை சென்னை வரும்போது கண்டிப்பா வரேன். சரியா?"
"சரிங்க மாமா", என்று கூறிவிட்டு திரும்பிவிட்டாள். மகாவிற்கு ஒரு முத்தம் வைக்க ஆசைப்பட்டாள். ஆனால் கோமதியைக் கண்டவுடன் ஏதோ ஒரு வித பயமும், தயக்கமும் சூழ்ந்துகொள்ள, தன் ஆசைகளைக் கசக்கி தூர எறிந்துவிட்டு, கண்கள் ஈரமாக வீடு திரும்பினாள்.

மகாவை எண்ணியெண்ணி உருகினாள் கோதை. ஒரு புறம் சிறு மனவருத்தம் என்றாலும், மறுபுறம், அவளுக்கு ஆனந்தமாகத்தான் இருந்தது. இத்தகைய பெரிய பிறந்தநாள் விழாவை அவள் எதிர்பார்க்கவில்லை. 'எவ்வளவு ஆடம்பரம், எவ்வளவு ஏற்பாடுகள்! நிச்சயம் பல லட்சங்கள் செலவு செய்திருப்பார்கள். நம்மால் இதெல்லம் சாத்தியமில்லையே. சாதாரண க்ளார்க்கின் மனைவி, இதெல்லாம் கனவில் கூட நினைக்க முடியாது. மகா என்னிடமே இருந்திருந்தால், இதெல்லாம் நிச்சயம் இந்த பிறவியில் அவளுக்கு கிடைத்திருக்காது. அவள் அதிர்ஷ்டசாலி தான். என்னுடைய பைத்தியக்காரத்தனத்திற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இனியாவது நிம்மதியா இருக்க வேண்டும்’, என்று தனுக்குத்தானே முனகிக்கொண்டாள்.

No comments:

Post a Comment