Wednesday, 20 April 2016

மாதவம் - 7 (Final)

நாட்கள் செல்லச்செல்ல, கோதைக்கும், கோமதிக்கும் பெரிய இடைவெளி உண்டானது. அவ்வப்போது பேசிய உறவு கூட, எப்போதாவது என்றாகிவிட்டது. கோமதி, மகா கோதையிடம் பேசுவதைக் கூட முடிந்தவரை  தவிர்த்துவந்தாள். மகா வளர்ந்து பள்ளிக்குச் சென்றபின், ஒரு முறை பேசுகையில் ஆங்கிலத்தில் உரையாடினாள். அதைக் கேட்டு கோதைக்கு அவ்வளவு ஆனந்தம். மகாவைப் பற்றி கோமதியின் பெருமை கூச்சலுக்கு அளவில்லாமல் போனது . 

"அக்கா இந்த வருஷம் லீவுக்கு எப்போ இங்க வர? மகாவ பார்த்து எவ்வளவு நாள் ஆச்சு!" என்றாள் கோதை, மிகவும் ஆர்வமாக. 
"இந்த வருஷம் நாங்க வரலடி. அவ சம்மர் கேம்ப் போக போறா. நாட்டியமும் கத்துக்கிட்டிருக்கா. அதான் வரல" என்றாள் கோமதி, பெருமிதமாக.
"என்ன அக்கா இது? அவ பச்சைக்குழந்தைக்கா. இப்பவே அவள எதுக்கு கஷ்டப்படுத்துற? இங்க ஒரு மாசம் கூட்டிக்கிட்டு வாகா. லதா, சுதா கூட அவ சந்தோஷமா இருந்துட்டு போகட்டும். அம்மாவையும் வரச்சொல்றேன்.”
"என்னடி கஷ்டப்படுத்திட்டேன்? அம்மாவுக்குத் தெரியாதா பிள்ளைக்கு எது நல்லது கெட்டதுனு?!! எம்பிள்ளையை வளர்க்க எனக்கு தெரியும். அவ இங்க ரொம்பவே சந்தோசமா இருக்கா. நான் வச்சுடறேன்", என்று கூறி, ‘டமால்’ என்று தொலைபேசியை கோமதி வைத்தது, இவளுக்கு காதிலே யாரோ அடித்தது போல இருந்தது.

கோதை எதார்த்தமாக சொன்னது, கோமதிக்கு சற்றும் பிடிக்கவில்லை. அவளுக்கு கோதை மேல் அளவு கடந்த கோபம் பொங்கியது. தனக்கு கோதை செய்த நன்மைகளை மறந்துவிட்டவள் போல், தன் தாயிடமும், ஆத்திரங்கள் அடங்கும்வரை கோதையைத் திட்டித்தீர்த்தாள் .

இதைக் கேள்வி பட்டு கோதை மிகவும் மனம் நொந்தாள். தன் அக்காவிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும், அவளது கோபம் பெரிதாக குறையவில்லை. ஆயினும், கோதை அவளோடு நல்லுறவு பாராட்டியே வந்தாள். அவளுக்கு, தன் அக்காவும் வேண்டும், மகளும் வேண்டும் என்ற அன்பு மட்டுமே பெரிதாய் இருந்தது .

மிகப்பெரிய இடைவெளி வளர்ந்த காரணத்தால், கோதை அக்காவிடம் சற்று நிதானமாகவே பழகினாள். அவள் மகாவோடு பேச வாய்ப்புக்கிடைப்பது, வருடத்திலொரு முறை, அவளுடைய பிறந்த நாள் அன்று.

ஒரு முறை மகாவின் பிறந்தநாளன்று ,
"ஹலோ! நான், கோதை பேசறேன். கோமதி அக்கா இருக்காங்களா?", என்றாள் கோதை, எதிர்முனையில் யாரென்று விளங்காமல்.
"அம்மா , அம்மா ...", என்று மகாவின் குரலைக் கேட்டவுடன், கோதைக்கு நாடி நரம்பெல்லாம் சிலிர்த்தது. தன்னை 'சித்தி' என்று அவள் அழைக்கும்பொழுதெல்லாம், இவளுக்கு நெஞ்சினில் பெரிய பிரளயமே வந்துவிடும் போல் இருக்கும். முதல் முறை 'அம்மா’ என்று அவள் கூறியதைக் கேட்கும்பொழுது, உச்சி முதல் உள்ளங்கால் வரை சிலிர்த்துப்போனாள்.
"அம்மா, கம் சூன். சித்தி காலிங்", என்று மகாவின் குரலை மீண்டும் கேட்டபொழுதுதான், அவளுக்குப் புரிந்தது, தன்னுடைய முட்டாள்தனம்.

அதன் பின்னர், ஒவ்வொரு நாளும், மகா தன்னை 'அம்மா' என்று அழைக்கவேண்டும் என்கிற ஏக்கம், அவளுக்கு பெருகிக்கொண்டே போனது. இந்த ஏக்கத்தில் வருடங்கள் உருண்டோடின. லதாவும், சுதாவும் திருமணமாகி இல்வாழ்க்கை தொடங்கினர். வாழ்வில் எத்துனை சம்பங்கள் நிகழ்ந்தாலும், கோதையின் ஏக்கம் மட்டும் குறையவில்லை. மகாவும் வளர்ந்து, மிகவும் அழகானவளாய், அறிவானவளாய், பார்ப்போர் பெருமிதம் கொள்ளும்படியாய்த் திகழ்ந்தாள். 


"என்னடி லதா, சுதா எப்படி இருக்காங்க? லதா பிள்ளை எப்படி இருக்கான்? பயங்கர சுட்டியாமே!", என்றாள் கோமதி, கோதையிடம், தொலைபேசியில்.
"ஆமா அக்கா. சமாளிக்கவே முடியலயாம்..."
"அது சரி. ஆண்பிள்ளைன்னா வாலு தான்."
"அடுத்தது மகாவுக்கு கல்யாணம் தானே? இந்த வருஷம் படிப்பு முடியுதில்ல?", என்றாள் கோதை.
"படிப்பு முடியது. ஆனா, கல்யாணம் எல்லாம் இப்போ பண்ணல. அவ மேற்படிப்பு படிக்க அமெரிக்கா போராடி. எதோ மசக்கையோ, மசச்சியோ என்னமோ அந்த ஊரு பேரு சொன்னா. ஒரு வருஷமாம். இவை மைக்ரோ பயாலஜி சம்பந்தமா என்னமோ ஆராய்ச்சிக்காக போறா. மெரிட்லயே வாங்கிட்டா. எனக்கு தடுக்க மனசில்லை. ஊரு பேரு கூட சொல்ல வரல நமக்கு. இவளாவது நல்லா படிச்சு முன்னுக்கு வரணும். கல்யாணம் பண்ணி என்ன சாதிக்கப்போறா?"
"உண்மை தான்கா. சரியா சொன்ன. அவ நல்லா படிக்கட்டும். நீயும் ஒரு வருஷம் கூட போகப்போறியா?"
"நானா? அதெல்லம் இல்லை. அவமட்டும் தனியா போறா. அவங்கப்பா தெரிஞ்சவங்க மூலமா எல்லா ஏற்பாடும் பண்றங்க."

கோதைக்கு மகளை எண்ணி பெருமிதமாக இருந்தது. அவள் நன்கு படித்து , அவள் செய்த, செய்யப்போகும் சாதனைகளை நினைத்து, மிகவும் பரவசமானாள். 

அவ்வப்போது அக்காவிடம், மகாவின் நலன் குறித்து விசாரித்துக்கொண்டாள். ஒரு முறை அமெரிக்காவிலிருந்து மகாவின் அழைப்பு வந்தது, கோதைக்கு. அன்று பொழுதெல்லாம் பேரானந்தக் கடலிலே மூழ்கினாள்.


"அக்கா மகா வந்துட்டாளா?"
அமெரிக்காவிலிருந்து திரும்பியிருந்த மகாவோடு பேசும் ஆவலில் கோமதியை தொலைபேசியில் அழைத்தாள், கோதை. 
"நேத்து காலையிலேயே வந்துட்டா. நல்லா சாப்பிட்டு, நல்ல தூக்கம் அவ. குளிச்சிக்கிட்டு இருந்தா. இரு கூப்பிடறேன்..."
சிறிது நொடிகள் கழித்து,
"ஹலோ! அம்மா எப்படி இருக்கீங்க?", என்றாள் மகா தழுதழுத்த குரலில்.
கோதைக்கு ஒன்றுமே புரியவில்லை. 
"ஹலோ அம்மா?"
"ஆஹ்ன்.. மகா இப்போ என்ன சொன்ன?", என்றாள் கோதை பதட்டத்தோடு. 
"'அம்மா'னு சொன்னேன்..."
கோதையால் ஒன்றும் பேச முடியாமல், அழத்தொடங்கினாள்.
'அம்மா அழறாங்க', என்று மகா, கோமதியிடம் கூறியது, கோதைக்குக் கேட்டது. ஆயினும் அவளால் ஒன்றும் கூற முடியவில்லை. அவள் நா உறைந்ததுபோல் இருந்தது. 
"கோதை அழறியா?"
"அக்கா..." என்று கூறிவிட்டு மீண்டும், அழுதாள்.
"அழாதடி. அழாத. இத்தனை வருஷமா நீ பட்ட பாடு, இப்ப தான் எனக்கு விளங்குச்சு. ஒரு வருஷம் மகா என்னை விட்டு இருந்தபோது தான் உன்னோட வலி எனக்கு புரிஞ்சுது. இவளை உன் கண்ணுல கூட காட்டாம, உன்னை எவ்வளவு வேதனை படுத்திட்டேன். ஒரு வருஷமே என்னால தாங்கமுடியல. இத்தன வருஷம் நீ எப்படி தான் இருந்தியோ? என்னை பத்தி மட்டுமே யோசிச்சேனே தவிர, உன் நிலைமையை புரிஞ்சுக்க முயற்சி கூட நான் பண்ணல. என்னை மன்னிச்சுடு!! நேத்து மகாகிட்ட எல்லா உண்மையையும் சொல்லிட்டேன். உண்மைய மறைச்சு பெரிய பாவம் பண்ணிட்டேன். இனியாவது அவளுக்கு உண்மை தெரியணும்னு எல்லாத்தையும் சொல்லிட்டேன். என்னை மன்னிச்சிடு கோதை", என்று குரல் குழைந்துபோனாள், கோமதி.
"அக்கா என்ன நீ? பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிக்கிட்டு. மகா என்னை 'அம்மா'னு கூப்டுட்டா. காலத்துக்கும் அது போதும் எனக்கு!!"
"அப்படி சொல்லிட்டா எப்படி? வர ஞாயிற்றுக்கிழமை மகா சென்னைக்கு வரா. அவ மட்டும் தான் வரா. ஏர்போர்ட்ல போய் அவள அழைச்சுக்கோ. ரெண்டு மூணு மாசம் அவ உன்கூட இருக்கட்டும். சரியா?"
"சரிகா சரி. ரொம்ப நன்றிக்கா!!"
"பைத்தியக்காரி, அத நான் சொல்லணும்."

கோதைக்கு இவையனைத்தும் கனவோ, நிஜமோ என்று இருந்தது. பல வருடங்களுக்கு முன், மகாவின் வருகையையொட்டி அவளுக்கு ஏற்பட்ட ஆனந்தக் குதூகலம், மீண்டும் பிறந்தது. பொலிவிழந்த வீட்டிற்கு கலை சேர்க்க எத்தனித்தாள். தளர்ந்த உடலும், நொந்த மனமும் புத்துயிர் பெற்றன. மகா, 'அம்மா' என்று அழைக்கமாட்டாளா என்ற கோதையின் தவம்... அல்ல... மாதவம், ஈடேறியது!!!


வாழ்க வளமுடன்!!

No comments:

Post a Comment