இரண்டு மாதங்கள் உருண்டோடின. கோதையிடமிருந்து நற்செய்தி எதிர்நோக்கியே கோமதியின் நாட்கள் நகர்ந்தன. அவளின் தவிப்பும், ஆர்வமும் பொங்கி வழிந்தன. பல நாள் வேதனையின் பலனாய், அவள் எதிர்பார்த்த செய்தி வந்தது. கோமதியும், கிருஷ்ணனும் உடனே அவளைக் காண சென்றனர். உயர் ரக உலர் பழங்கள், பருப்பு வகைகள் முதல் குங்குமப்பூ வரை, கோதைக்குத் தேவையான அனைத்தையும் வாங்கிச் சென்றாள், கோமதி.
அக்காவின் ஆனந்த ஆர்ப்பாட்டம், கோதைக்கு இனிப்பாய் இனித்தது. அவள் மும்பை திரும்பச் சென்றும், தொலைபேசியில் அவளது பரிவும், பாசமும் தொடர்ந்தது. அனைவருக்கும், தொலைந்து போன நிம்மதியும்,சந்தோஷமும் கிட்டிவிட்டது. கோதைக்கும் தான். ஆனால், மனதில் மூலையில் ஒரு படபடப்பு. அவளின் மாமியாளுக்கு, கோதையின் இந்த செய்கையில், துளியும் இஷ்டமில்லை. தன் மீது கடுங்கோபத்தில் இருக்கும் மாமியாளை சந்தித்து, சமாதானம் செய்ய முடிவெடுத்தாள். முரளி, வேண்டாமென்று தடுத்தும் கேளாமல், அவனை பிடிவாதமாய் அழைத்துக்கொண்டு சென்றாள், கோதை .
இவளைக் காணக்கூட, மாமியாளுக்கு விருப்பமில்லை. பேசவும் இல்லை. நவகிரகங்களாய், அனைவரும் அமர்ந்திருந்தனர். பொறுமை இழந்த முரளி,
"அம்மா, இப்படியே எவ்வளவு நேரம் அமைதியா இருக்கப்போற? எல்லாம் எடுத்துச்சொல்லியும் நீ புரிஞ்சுக்க மறுத்தா நான் என்ன செய்யறது?"
"நான் நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். எட்ட இருந்தாளும், நீ என் பிள்ளையா இருந்த. இப்போ அதுவும் இல்லனு ஆயிடுச்சு."
"என்னமா இப்படி பேசற? உன் பிள்ளை தான்மா நான்!"
"இல்லடா. இல்லவே இல்லை. அப்படி இருந்திருந்தா, என்கிட்ட முன்கூட்டியே ஒரு வார்த்தை கேட்டிருக்கணும். எல்லா முடிவும் எடுத்த பின்னாடி, தகவல் தானே சொல்ற."
"அம்மா நீ சம்மதிக்க மாட்டியோன்னு நினைச்சேன்..."
"அப்போ, இப்ப மட்டும் எதுக்கு வந்திருக்க? உனக்கு உன் மாமனார், மச்சினி எல்லாரும் இருக்காங்கல்ல, நான் எதுக்கு?"
"நான் அப்படி என்ன தப்பு பண்ணிட்டேன்?"
"இல்லடா. ரொம்ப நல்ல காரியம் பண்ணிட்ட. இந்த குடும்ப சொத்தை எடுத்து, இன்னொருத்திக்கு படியளப்ப. அதுக்கு நான் பெருமை பட்டுக்கறேன்.”
"அம்மா?!"
"நிறுத்துடா. கோடி கோடியா காசு இல்லனாலும், இந்த குடும்ப கௌரவத்துக்கு குறைச்சல் இருந்ததில்லை. இப்ப, உன் பொண்டாட்டி மொத்தமா எல்லாத்தையும் குழி தோண்டி புதைச்சுட்டா. கையாலாகாதவன் தான் பெத்த பிள்ளைய தத்து கொடுப்பான். நீ என்ன சோடைபோய்ட்டியா?"
"இந்த பிள்ளைய பெத்தெடுக்கறதே, தத்து கொடுக்கதான்மா..."
"உனக்கென்னப்பா! ஊரு உலகம் என்னதான் காறித்துப்பும்."
"இந்த உலகம், நாம என்ன பண்ணாலும் அதுல நாலு தப்பு சொல்லும். மனசாட்சிக்கு விரோதமில்லாம வாழ்ந்தாபோதும். ஊரை பத்தி கவலைப்பட்டா, நம்ம நிம்மதி போயிடும்."
"நாம ஒன்னும் ஊரு எல்லையில இருக்கற ஒத்த மரமில்லடா. தோப்புக்குள்ள இருக்கற மாமரம். பூச்சி படாம, கரையான் படராம இருந்தாதான் வாழமுடியும். இல்லேனா தீயள்ளி வச்சிடுவாங்க."
"அத்தை ஒரு நிமிஷம்", என்று கோதை குறுக்கிட்டாள்.
"நீ செத்தாலும் என்கிட்ட பேசாத. எனக்கில்லேனாலும், ஊருக்காக உன்னை மருமகளா நினைச்சேன். இப்போ அதுவும் இல்லனு ஆயிடுச்சு. உன் புருஷன கூட்டிக்கிட்டு, வெளிய போயிடு."
முரளி, கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் விருட்டென எழுந்து சென்றான். நிறைய பேச எண்ணியவளுக்கு ஒன்றும் பேச வார்த்தை இல்லாமல், கோதையும் பின்தொடர்ந்தாள்.
"இங்க பாருடி, கடைசியா ஒன்னு சொல்றேன். நீ பெத்தெடுக்கறது ஆண் பிள்ளையா இருந்தா, என் தலையே போனாலும், அத கொடுக்க விடமாட்டேன். இதுவே பொட்டயா இருந்தா, அந்த புள்ளயோட நீயும் உங்கக்கா வீட்டுக்கு போயிடு", என்று கர்ஜித்துவிட்டு உள்ளே சென்றாள், கோதையின் மாமியாள்.
முரளியின் மன வேதனை, அவன் முகத்தில் அப்பட்டமாய் தெரிந்தது. ஆயினும், அவன் கோதைக்கு சமாதானம் கூறிவிட்டு, உறங்கிப் போனான். மனதில் பதட்டம் குறையாமல், தூக்கமின்றி தவித்திருந்தாள், கோதை. தனது கணவணை எண்ணி வருந்தினாள். அவனை பணயமாய் வைத்ததையெண்ணி மனம் நொந்தாள். என்றுமில்லாத ஒரு மெல்லிய குற்ற உணர்வு சற்று எட்டிப்பார்த்தது. ஒரு புறம் கணவனையெண்ணி துன்பமும், மறுபுறம் அக்காளையெண்ணி இன்பமும், அவளை மத்தாய்க் கடைந்தது.
மறுநாள், எப்பொழுதும் போல தன் அக்காவிடம் இனிமையாய்ப் பேசினாள், கோதை. இவளின் சோகத்தை அவளுக்குச் சொல்லிட விரும்பவில்லை. அக்காளின் குரலில் தெறிக்கும் ஆனந்தக் கூச்சல், இவளுக்கு போதையாய் இருந்தது.
தன் தாய், அரசல் புரசலாக கோதையின் மாமியாளின் தாண்டவத்தைத் தெரிந்துகொண்டு வினவிய போதும், ஒன்றுமே பெரிதாய் நடக்காததைப் போல பாவனைகள் செய்தாள். தன் தாயிடம் மிளிரும் ஆனந்தத்திற்கும், இவள் அடிமைதானே!
கோமதியின் ஆர்வமும், எதிர்பார்ப்புகளும் நாளுக்கு நாள் பெருகின. முக்கிய மருத்துவ ஆய்வுகளின் போது, அவள் கோதையோடு இருந்தாள். ஸ்கேனில் குழந்தையைக் கண்டபோது, சிறு குழந்தையாய் தேம்பித் தேம்பி அழுதாள். தங்கையின் வயிறு மேடு தட்ட, இவளின் வயிற்றுக்குள் பட்டாம்பூச்சிகள். ஆயினும், தனக்கு இந்த இனிமையான அனுபவங்களை அனுபவிக்க ஆண்டவன் வழி வகுக்கவில்லை எனும் உண்மை, நிதர்சனமாக அவள் மனதில் தொத்திக்கொண்டிருந்தது. அந்த உண்மையின் காயங்கள் அவ்வப்போது வலிக்கத்தான் செய்தன. அந்த வலிகளோடு, மெல்ல மெல்ல வாழப் பழகிக்கொண்டாள்.
குழந்தைப் பிறப்பதற்கு ஒரு மாதம் முன்பே, அவள் கோதையின் வீட்டில் தங்கி, அவளுக்கு அனைத்து பணிவிடைகளையும் செய்தாள். ஒரு நொடி மறவாது, கடவுளையெண்ணி பிரார்த்தனை செய்தாள். மருத்துவர் குறித்த நாள் நெருங்கநெருங்க, இவளுக்கு பிரசவ வலி வந்துவிடும்போல் இருந்தது.
குறித்த தேதியின் முன்தினம் மாலை, கோதைக்கு உண்மையாக பிரசவ வலி வர, அனைவரும் ஆஸ்பத்திரிக்கு விரைந்தனர். கிருஷ்ணனுக்கும் செய்தி சொல்லப்பட்டு, அவனும் சில மணிநேரங்களில் சென்னை வந்து சேர்ந்தான். கோதையின் அலறலுக்கு மத்தியில், ஓர் மழழையின் அழுகுரல் கேட்டது. தனது கரங்களை நெஞ்சத்துள் இறுகிக்கொண்டு உறைந்துபோனாள், கோமதி. கண்கள் கலங்க, உடம்பு நடுங்க, உயிர் துடிக்க, இவள் பிரசவித்ததாய் ஒரு மாயை கவ்வியது.
"வாழ்த்துக்கள்! பெண் குழந்த பிறந்திருக்கா. தாயும், சேயும் நலமா இருக்காங்க. அவங்க ரூம்ல போய் பாருங்க", என்று டாக்டர் கூறிவிட்டுச் செல்ல, அனைவருக்குமே பேரானந்தமாக இருந்தது.
அறையில், கோதை மயக்க நிலையில் தளர்ந்திருந்தாள். அவள் அருகே, தொட்டிலில் ஓர் அழகிய வெந்தாமரை. கோமதி, ஒரு மெல்லிய தயக்கத்தோடும், பதட்டத்தோடும், குழந்தையை அள்ளினாள். பொங்கும் இன்பம் கட்டுக்கடங்கவில்லை, அவளுக்கு. கண் சிமிட்டாமல், அந்த அழகு முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள். அவளை சுற்றி அனைத்தும் சூனியமாய்ப் போனது. இந்த ஒரு ஜீவனை கையிலேந்திட, அந்த ஜீவன் தாங்கிய வலியெல்லாம் தரிசாய்ப் போனது. வெம்மைப் பூசிய வாழ்வில், புதிதாய் ஒரு வானவில்!
கோமதி, தனது விழியின் மணியான மகளை, கண்ணின் இமைப்போல பேணினாள். மூன்று மாதங்கள் வரை தாய்ப்பால் கொடுத்துவிட்டு, பிறகு குழந்தையை தன் வீட்டிற்கு அழைத்துச் செல்ல எண்ணினாள்.
கிரிஷ்ணனுக்கு, தான் தந்தையாகிய உணர்வு மிகவும் புதிதாக இருந்தது. தன் செல்ல மகளை எண்ணி, அவ்வப்போது பூரித்துப்போனான்.
கோமதியின் மாமியாளுக்குக்கூட ஒருவித பூரிப்புதான். தனது பேத்தியின் ஜாதகம் மிகவும் அமோகமாக உள்ளதென ஜோசியர் கூற, அந்த மகாலட்சுமியே தன் வீட்டிற்கு வந்திவிட்டதாய் தோன்றியது அவளுக்கு. 'மகாலட்சுமி' என்று குழந்தைக்கு பெயரும் சூட்டினாள். அவளின் கோபமும், மூர்க்கமும் அடங்கி, தன்மையாய் அவள் இருப்பதைக்கண்டு, கோமதியின் பெற்றோரும், கோதையும் நிம்மதி கொண்டனர்.
No comments:
Post a Comment