Sunday, 17 December 2017

முகமூடி

கண்ணாடி முன் நின்று
தன்னை உற்று நோக்கினான்
அவனது முகத்தை
இரு கைகளால் வருடினான்
நெஞ்சிலே வெட்டப்பட்டு
குருதி வழிவதைக் கண்டான்
முகம் காண சகியாமல்
தலை குனிந்து நின்றான்

அவனின் எதிரிலே
அவனது ஆவி நின்றிருந்தது
தலைநிமிர்ந்து இவன் பார்த்திட
அது முகம் சுளித்தது
அருகில் இருந்த பலகையில்
பல முகங்கள் கண்டான்
‘தற்போதைய தேவை எது?’
ஆழ்ந்த சிந்தனை கொண்டான்

தன் வாழ்வில் உள்ள பிறருக்காக
அவன் சமைத்த நூறு முகம்
தேடித்தேடிப் பார்த்திடினும்
ஒன்றிலும் இல்லை அவனின் நிஜம்
பிறருக்காக வாழ்வதாய் எண்ணி
பொய்முகத்தினுள் ஒளிகின்றான்
என்றாவது மெய்முகம் கண்டால்
நெஞ்சு பிளக்க அழுகின்றான்

பொய்முகம் ஒன்றை போர்த்திக்கொண்டு
நிஜத்தினை அதனுள் பூட்டிவைத்தான்
மேனி மூடிட ஆடைக்கொண்டு
குருதியின் கூச்சலை மறைத்துவைத்தான்
இவனைக் கண்டு நொந்த ஆவி
கண்கள் குளமாக நின்றிருக்க
கண்கள் கலங்கும் ஆவிக்கு
சிரிப்பினைத் தந்து மறைந்துபோனான்

No comments:

Post a Comment