Wednesday, 20 December 2017

அரை பிறந்தநாள்!!

என் அருமை காதலனுக்கு
அரை பிறந்தநாள் வாழ்த்து!
புரியாமல் முழிக்கிறாயோ?!
விளக்குகிறேன், விளங்கிக்கொள்!!

முன்பொரு மாலை வேளையிலே
பெண்ணின் இலக்கணம் சொன்னாயே,
‘பூப்பெய்தும் போது கால் பெண்
காதலியானால் அரை பெண்
மனைவி எனும் போது முக்கால் பெண்
தாயென ஆகும்போது முழு பெண்’ என்றாய்!!

இரவெல்லாம் கண்விழித்து
ஆணின் இலக்கணம் படைத்துள்ளேன்
ஒழுங்காகப் படித்துவிட்டு
குறிப்புகளையும் எடுத்துக்கொள்!
அரும்பு மீசை துளிர்க்கையிலே
கால்வாசி ஆணாகிறாய்
கன்னியின் மனதைக் கவர்கையிலே
அரை ஆணாய் ஆகின்றாய்
கவர்ந்தவளின் கரம் பற்ற
முக்கால் ஆணென ஆகின்றாய்
பேர்சொல்ல ஓர் பிள்ளைப் பெற்று
முழு ஆணென மிளிர்கின்றாய்!!!

என் மனதைக் கவர்ந்ததாலே
அரை ஆணாய் ஆகிவிட்டாய்
தங்கத்தாலி ஒன்று போதும்
அடுத்த நிலையை அடைந்திடுவாய்
அதற்குமேலே மற்றவைகளை
அழகி நான் பார்த்துக்கொள்வேன்
முழு ஆணாய் உனை மாற்றிட
பொறுப்பையும் நானே ஏற்றுக்கொள்வேன்!!

அட,
இது என்ன இதழோரம் வெட்கப்புன்னகை!!
ஆணின் வெட்கம் அழகன்றோ!!
போதும் போதும் நிறுத்திக்கொள்
பேதை மனம் தடுமாறும்
பெண்ணென்பதையும் மறந்துவிட்டு
உன் கன்னங்கள் இரண்டையும் கடித்திடுவேன்
அய்யோ! அம்மா! என்று நீ அளறினாலும்
நிச்சயம் உன்னை விடமாட்டேன்!!

No comments:

Post a Comment